
தமிழக விவசாயிகளின் வாழ்வியலுக்குப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சி வந்தவர், கோ.பாலகிருஷ்ணன். தன்னுடைய தம்பி ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வாருக்கு இணையாக மண்வளம், நுண்ணுயிர்கள் குறித்த நுட்பமான புரிதல்கள் மூலமாக மாற்றத்தைக் காட்டிய மனிதராக வாழ்ந்த கோ.பாலகிருஷ்ணன் (90), செப்டம்பர் 27-ம் தேதி இயற்கையுடன் கலந்துவிட்டார்.
நம்மாழ்வாரின் மூத்த சகோதரரான இவர், இந்தியாவின் பல பகுதிகளில் பொறியியலாளராகப் பணிபுரிந்துள்ளார். ஒருமுறை காவிரியில் வெள்ளம் வந்தபோது சுற்றுவட்டார நிலங்களில் ஆற்று மணல் மேவிவிட்டது. தனது பணி நிறைவுக்குப் பிறகும்கூட அந்த நிலங்களை மீட்டெடுக்கப் பல பணிகளை முன்னெடுத்தார். மணல் பரப்பாக இருக்கும் தனது நிலத்துக்கு ‘தபோவனம்’ என்று பெயரிட்டு... வேளாண் கழிவுகள் கொண்டு நுண்ணுயிரிகளைப் பெருக்கினார்.
விவசாயிகள் கழிக்கும் பொருட்களை எல்லாம் தன் நிலத்துக்குக் கொண்டு வந்து உயிர் உரங்கள், சாணக்கரைசல், மாட்டுச் சிறுநீர் ஆகியவற்றின் மூலம் அவற்றைச் சிதைத்து உரமாக்கி, தனது மணல் வயலில் இட்டார். அந்த நிலத்தைப் பயிர்கள் வளரும் சூழலுக்கு மாற்றி, ஒரு காட்டை உருவாக்கிக் காண்பித்தார். தபோவனத்திலேயே குடிசை போட்டுக் கொண்டு அங்கேயே தங்கி தனது ஆய்வுகளை மேற்கொண்டார். அவரது நுண்ணுயிரிகள் குறித்த அறிவைக் கொண்டு ‘தொல்லுயிரி’ என்ற புதிய நுண்ணுயிர் திரவத்தை உருவாக்கினார். அதை மண்ணில் சேர்த்தபோது பயிர்களின் இலைப்பரப்பு பெரியளவில் மாறியது. தனது நுண்ணுயிர்கள் குறித்த அறிவு உள்ளிட்ட அனைத்தையும் தன்னைச் சந்தித்துக் கேட்ட அனைவருக்கும் சலிப்பில்லாமல் சொன்னார்.
தள்ளாத வயதிலும் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று பயிற்சியளித்து வந்தார். தனது கட்டடப் பொறியியல், நுண்ணுயிரியல், சின்னச் சின்ன பண்ணைக் கருவிகள் தயாரிப்பு, கால்நடைகள், பறவைகள் வளர்ப்பு எனப் பன்முக அறிவாற்றலை இளைய சமூகத்துக்கு அள்ளிக் கொடுத்த பிதாமகன் அவர்.