Published:Updated:

சிட்லிங்கி... இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை! - 3

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிட்லிங்கி...  இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை! - 3
சிட்லிங்கி... இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை! - 3

“அன்று 4 பேர்... இன்று 300 பேர்!”வெற்றிக்கதை க.சரவணன், படங்கள்: க.தனசேகரன், எம்.விஜயகுமார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
சிட்லிங்கி...  இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை! - 3

சேலம் மாவட்டம் கல்வராயன் மலைத்தொடருக்கும் சித்தேரி மலைத்தொடருக்கும் இடையில் அமைதியான சூழலில் அமைந்திருக்கும் பகுதி, சிட்லிங்கி பள்ளத்தாக்கு. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இப்பள்ளத்தாக்கு விவசாயிகள், ‘சிட்லிங்கி இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு’ என்ற அமைப்பின் மூலம் அறுவடை முதல் விற்பனை வரை அனைத்துப் பணிகளையும் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களின் வெற்றிப்பயணம் குறித்த குறுந்தொடர் இது...

கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார் முள்ளிக்காட்டைச் சேர்ந்த பழனிமுத்து. அவரிடம் பேசினோம்.

“20 வருஷமா ரசாயன விவசாயம்தான் செஞ்சேன். போன 7 வருஷமாத்தான், இயற்கை விவசாயம் செய்றேன். செங்கல்பட்டு, கோத்தகிரி, சீர்காழினு போய் இயற்கை விவசாயப் பயிற்சி எடுத்திருக்கேன். ராகி, கம்பு, சாமை, நெல், மஞ்சள், கொள்ளுனு பயிர் பண்றேன். எனக்கு 2 ஏக்கர் நிலம் இருக்கு. போன வருஷம், 50 சென்ட்ல மஞ்சள் போட்டேன். 9 ஆயிரம் ரூபாய் செலவு. 44 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைச்சுது. சில நேரங்கள்ல 80 ஆயிரம் ரூபாய்கூடக் கிடைக்கும். எங்கிட்ட 2 மாடு இருக்கு. விவசாய வேலைகள் இல்லாத சமயத்துல மண்புழு உரம் தயாரிச்சு வெச்சுப்பேன்.

எங்க குழுவுல 18 பேர் இருக்கோம். நாங்க எல்லாரும் டைரி எழுதறதைக் கடைப்பிடிக்கிறோம். வரவு செலவு கணக்கு பாக்கிறதுக்கு, செஞ்ச தப்பைக் கண்டுபிடிக்கிறதுக்கு அது உதவியா இருக்கு. மண்புழுத் தொட்டி அமைக்க, மாடு வாங்க வட்டியில்லாக் கடன் கிடைக்குது. பயிர்ச் சுழற்சிக்கான ஆலோசனை கிடைக்குது. இதுமாதிரி நிறைய பலன்கள் இருக்கு. மொத்தம் 30 குழுக்கள் இருக்கு. மாசாமாசம் ஒவ்வொரு குழுவும் கூட்டம் போட்டு அப்போதைய பிரச்னைகளைப் பேசுவோம். ஆறு மாசத்துக்கு ஒரு முறை, அனைத்துக் குழுக்களும் சேர்ந்து கூட்டம் நடத்தி முடிவுகள் எடுப்போம். கூட்டமைப்பிலேயே  வண்டி இருக்கு. எங்க விளைபொருட்களை மார்க்கெட்டுக்கு அனுப்ப அதைத்தான் பயன்படுத்துறோம். வர்ற லாபத்துல 3% கூட்டமைப்புக்குப் போயிடும்” என்றார், பழனிமுத்து.

குழுவின் பொறுப்பாளராக இருக்கும் நம்மங்காட்டைச் சேர்ந்த முருகுசுந்தரம், “நான் எட்டு வருஷமா இயற்கை விவசாயம் பண்றேன். எங்க அண்ணனுங்க 2 பேரும்கூட இயற்கை விவசாயம்தான். எனக்கு இரண்டரை ஏக்கர் நிலமிருக்கு. மஞ்சள், நெல், கரும்பு, எள், சிறுதானியங்கள்னு பயிர் பண்றேன். சிறுதானியங்களை எங்க பயன்பாட்டுக்கு வெச்சுக்குவோம். நம்மங்காடு பகுதியில, வேலனூர், வளத்தாம்பட்டி-கோம்பை, நாய்க்குத்தின்னு 3 கிராமங்கள்லயும் இயற்கை விவசாயிங்க இருக்காங்க. அமுத கரைசல், ஜீவாமிர்தம், மண்புழு உரம் எல்லாத்தையும் குழு மூலமாவே உற்பத்தி பண்ணிக் கொடுக்கிறாங்க. அதேமாதிரி விளைபொருட்களைக் குழுவே கொள்முதல் பண்ணிக்கும். இங்க இருந்து வாரத்துக்கு 3 நாள், வாழப்பாடி, தலைவாசல் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் போகுது. போன வருஷம் மஞ்சளை 50 லட்ச ரூபாய்க்கு கூட்டுறவு சங்கம் மூலமா விற்பனை செஞ்சோம்” என்றார்.

சிட்லிங்கியில் உள்ள நேரு உழவர் மன்றத்தில் 15 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பாலும் 2 ஏக்கர் முதல் 3 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்கள், இவர்கள். கடந்த 5 ஆண்டுகளாகக் கூட்டமைப்பில் இருக்கிறார்கள்
.
இக்குழு உறுப்பினர் செல்வி, “நெல், தக்காளி, வெண்டை, கத்தரி, சாமை, ராகி, கம்புனு சாகுபடி செய்றேன். எங்க தேவைக்குப் போக மீதியை விற்பனை செய்வோம். எல்லா செலவும் போக, ஒரு போகத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை கையில நிக்கும்” என்கிறார். இதைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆமோதித்தனர்.

காளியான் கொட்டாயைச் சேர்ந்த செல்வராஜ், சிட்லிங்கி இயற்கை விவசாயக் கூட்டமைப்பின் செயலாளராக இருக்கிறார். இவர், ஆரம்பத்திலிருந்தே கூட்டமைப்பின் வளர்ச்சிக்குச் சிறந்த பங்காற்றி வருகிறார்.
 
“இருபது வருஷத்துக்கு முன்னாடி இங்க நஞ்ச நிலமே கிடையாது. எல்லாமே வானம் பாத்த பூமிதான். அப்போ முழு இயற்கை வேளாண்மைதான். நிலத்த சமன்படுத்திதான் நன்செய் நிலமாக்கினோம். நான் ஆரம்பத்துல விவசாயத்தைக் கையிலெடுத்தப்ப, தொடர்ந்து ரசாயன உரம்தான் போட்டேன். மொத 5 வருஷம், நல்ல விளைச்சல் கிடைச்சது. அப்புறம் விளைச்சல் குறைய ஆரம்பிச்சுடுச்சு. அதோட 2000-ம் வருஷத்துல இருந்து 2005-ம் வருஷம் வரைக்கும் மழை இல்ல. அந்தச் சமயத்துல விவசாயத்தையே விட்டுடலாமானுகூட யோசிச்சேன்.

சிட்லிங்கி...  இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை! - 3

அப்போதான், டாக்டர் அம்மா, எங்க கிராமத்துல கூட்டம் நடத்தி இயற்கை விவசாயத்துக்கு மாறச் சொன்னாங்க. ‘10 சென்ட் நிலத்துல முதல்ல பண்ணுங்க, அப்புறம் உங்களுக்குத் திருப்தியா இருந்தா விரிவு படுத்துங்க’னு சொன்னாங்க. எனக்கு ஆரம்பத்துல நம்பிக்கை இல்ல. அப்போ எங்க ஊர்ல நான் மட்டும்தான் இயற்கை விவசாயம் செஞ்சேன். சிட்லிங்கி ஏரியாவிலேயே 4 பேர்தான் இயற்கை விவசாயத்துக்கு மாறியிருந்தோம். மனசு அடிச்சுக்கிட்டே இருக்கும். ரசாயன உரம் போடாம பயிர் வருமானு சந்தேகம் இருந்துகிட்டே இருக்கும். ரெண்டு, மூணு வருஷம் ஆன பின்னாடிதான் கொஞ்சம் கொஞ்சமா நம்பிக்கை வந்துச்சு. 10 மூட்டை வர வேண்டிய இடத்துல, 2 மூட்டை கூடுதலா மஞ்சள் விளைஞ்சது. ஆரம்பத்துல கேலி பேசினவங்க எல்லாம், இங்க வந்து கத்துக்க ஆரம்பிச்சாங்க. இந்த சுற்று வட்டாரத்திலேயே, இயற்கை முறையில 5-ம் நெம்பர் பருத்திய போட்ட மொத ஆள் நாந்தான். இப்ப எங்க அண்ணனோட நிலத்தையும் சேர்த்து, 10 ஏக்கர்ல இயற்கை விவசாயம் பண்ணிட்டு இருக்கேன்” என்ற செல்வராஜ், தொடர்ந்தார்.

“4 பேர்ல ஆரம்பிச்சு இரண்டு வருஷத்திலேயே 30 பேர் ஆகி, கூட்டுறவு சங்கம் ஆரம்பிச்சோம். அப்போ என்னைச் செயலாளரா தேர்ந்தெடுத்தாங்க. ஆரம்பத்தில, கூட்டுறவு சங்கத்துல பெரிசா லாபமில்ல. அப்பறம்தான் லாபம் வர ஆரம்பிச்சது. எலக்ட்ரானிக் எடை மெஷின்ல விவசாயிங்களே எடை போட்டுக்கலாம்னு சொன்னோம். நியாயமான விலை வாங்கிக் கொடுத்தோம். அப்புறம்தான் விவசாயிகள் எங்க பக்கம் வர ஆரம்பிச்சாங்க. 2008-ம் வருஷம் உறுப்பினர் எண்ணிக்கை 57. அப்புறம், இயற்கை சான்றிதழுக்கு ஏற்பாடு செஞ்சோம். வருஷத்துக்கு ஒரு தடவை 3 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகளுக்குப் பணமா தர ஆரம்பிச்சோம்.

5 வருஷத்துக்கு ஒருமுறை, கூட்டுறவு சங்கத்துக்கு தேர்தல் நடத்துறோம். வருஷத்துக்கு ஒருமுறை 300 பேர் கொண்ட பொதுக்குழு கூடும். 7 பேர் கொண்ட செயற்குழு மூணு மாசத்துக்கு ஒருமுறை கூடும். தேவைப்பட்டா மாசம் ஒருமுறைகூட கூடிப் பேசுவோம். இந்தச் செயற்குழுதான் விலை நிர்ணயம் செய்யும். இப்போ லாபம் அதிகமா வர ஆரம்பிச்சுருக்கு. கூட்டுறவு சங்கமா இருக்குறப்போ லாபத்தை எடுத்துக்க முடியாதுங்கிறதால இதை கம்பெனியா மாத்திட்டோம். 200 விவசாயிகளும் சேர்ந்து கம்பெனிக்கு சேர்மனைத் தேர்ந்தெ டுத்திருக்காங்க. விவசாயி, அவருடைய மனைவினு ஒரு குடும்பத்துல ரெண்டு பேருக்கு கம்பெனில ஷேர் இருக்கும். 5 பெண் இயக்குநர்கள், 5 ஆண் இயக்குநர்கள் இருக்காங்க” என்றார், செல்வராஜ்.

சிட்லிங்கி...  இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை! - 3

சிட்லிங்கி இயற்கை விவசாயக் கூட்டமைப்பின் தற்போதைய தலைவர் அண்ணாதுரையிடம் பேசினோம். “20 வருஷத்துக்கு முன்னாடி ஒவ்வொரு வீட்டுலயும் 50 ஆடு மாடு இருக்கும். ஆட்டுப் பட்டி, மாட்டுப் பட்டி இருக்கும். சாமை, ஆரியம்(கேழ்வரகு) பயிரிடுவோம். ஆனா அதெல்லாம் மாறிப்போச்சு. இப்போதான் திரும்பவும் கொஞ்சம் கொஞ்சமா இயற்கை விவசாயத்துக்கு மக்கள் மாறிட்டு இருக்காங்க.

நான் தலைவரா வந்தப்பறம், இன்னும் அதிகமான கிராமங்கள்ல வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கோம். மாசா மாசம் ஒவ்வொரு ஊர்லயும் கூட்டம் நடத்துறோம். அமைப்பை இன்னும் சிறப்பா கொண்டு போறதுல கவனம் செலுத்திட்டு இருக்கோம்” என்றார்.

கூட்டமைப்பின் பெண் உறுப்பினர்கள் மதிப்புக் கூட்டிய பொருட்களைத் தயாரிப்பது குறித்துப் பேசிய தகவல்கள் அடுத்த இதழில்....

‘‘பத்து ரூபாய்னாகூட சரியா கிடைச்சிடுது!’’

சிட்லிங்கி...  இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை! - 3

இங்கு, பெண்கள் விவசாயக் குழுக்களும் உள்ளன. நாம் அப்பகுதிக்குச் சென்றிருந்தபோது... ‘மேய்க்காமேடு மகளிர் இயற்கை விவசாயக்குழு’வின் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இக்குழுவில் 13 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான மல்லிகா, “நான் குழுவுல 11 வருஷமா இருக்கேன். 3 ஏக்கர் நிலமிருக்கு. கேழ்வரகு, கம்பு, கொள்ளு, எள், கடலை, மல்லி, பனிக்கடலைனு பயிர் பண்றேன். குழு மூலமா பொருட்களைச் சுலபமா விற்பனை செய்ய முடியுது. எடை சரியா இருக்குது. பத்து ரூபாய்னாகூட சரியா கிடைச்சிடுது. ஆஸ்பத்திரியில இலவச சிகிச்சையும் கிடைக்குது” என்றார்.

தொட்டி மூலம் வடிநீர்!

சிட்லிங்கி...  இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை! - 3

தான் மேற்கொள்ளும் விவசாய முறை குறித்துச் சொன்ன செல்வராஜ், “இந்தத் தொட்டியில மூணு பிரிவு இருக்கு. இடதுபுறம் உள்ள பிரிவில சாணியையும், மாட்டுச் சிறுநீரையும் போடுவேன். வலதுபுறம் உள்ள பிரிவுல, மாட்டுச் சிறுநீர், பனம்பழம், மத்த பழங்கள், கசப்பு இலைகளைப் போட்டிருவேன். நடுவுல கடுக்காயைப் போடுவேன். பாசனத் தண்ணி இந்தத் தொட்டியில விழும். இரண்டு பக்கத்தில இருந்தும் வர்ற வடிநீர், நடுவுல கடுக்காயோட கலந்து வெளியில வரும். இது அப்படியே நிலத்துக்குப் போகும். வாரத்துக்கு ஒருநாள் இத விடறப்போ பயிர்களுக்கு நல்ல பலன் கிடைக்குது. இந்த வடிநீர், பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், மண்ணை வளப்படுத்தவும், பூச்சி விரட்டியாகவும் செயல்படுது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு