கடந்த அக்டோபர் 15-ம் தேதி, கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், விழாவைத் துவக்கி வைத்து பட்டங்களை வழங்கினார். விழாவில், 1,869 மாணவர்களுக்குப் பட்டம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய குஜராத் மாநில மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மைய பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் கு.ந.மகேசன்,“மண் வள மேலாண்மைதான் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தும். மண் வளமானால், விளைச்சல் நலமாகும்” என்றார்.

தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கித் தலைவர் முனைவர் ஹர்ஷ் குமார் பன்வாலா மற்றும் கனடா மானிடோபா பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் திக்வீர் எஸ்.ஜெயாஸ் ஆகியோருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் ரா.துரைக்கண்ணு பேசும்போது, “வேளாண்மைக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2011-16 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 1,429 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது” என்றார்.
துரை.நாகராஜன்.
