இயற்கைக்காக ஒரு ஓவியப் போட்டி!

##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உலக வன ஆண்டை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட வனத்துறை சார்பாக, மாவட்டத்திலிருக்கும் பள்ளி மாணவ-மாணவியருக்கான ஓவியப் போட்டி, நவம்பர் 5-ம் தேதியன்று நடைபெற்றது. மழலையர் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை 400-க்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்றனர். 'வனம் மற்றும் வன உயிரினம்', 'நீர்வளம் பெருக்கும் வனம் காப்போம்', 'மரக்கன்றுகள் நகரத்தை அழகுபடுத்தும்', 'புவி வெப்பமடைதலைத் தடுக்க வனங்களைக் காப்போம்' என்பது போன்ற தலைப்புகளில் ஓவியங்கள் வரையப்பட்டன.
இந்தப் போட்டி பற்றி பேசிய மாவட்ட வனப் பாதுகாவலர் ஆசிஸ்குமார் ஸ்ரீவஸ்தவா, ''இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், புவி வெப்பமடைதலைத் தடுத்தல் போன்ற விஷயங்களில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தவே ஓவியப் போட்டி நடத்துகிறோம்'' என்று குறிப்பிட்டார்.
-ப. பிரகாஷ் படங்கள்: தெ. அருண்குமார்
'ஆலை’ அழைத்து வரும் அறுவடை இயந்திரம்!
சென்னையில், நவம்பர் 4-ம் தேதி, ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை நிறுவனமும், வேளாண் இயந்திர உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் நியூஹாலந்து நிறுவனமும் கரும்பு அறுவடை தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

ஈ.ஐ.டி. பாரி நிர்வாக இயக்குநர் ரவீந்திர எஸ். சிங்வி பேசும்போது, ''இதன் மூலம் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலைக்கு கரும்பு விநியோகம் செய்யும் தமிழ்நாடு, புதுச்சேரி விவசாயிகளுக்கு, கரும்பு அறுவடை செய்யும் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்படும்.
அறுவடைச் செலவு மற்றும் கூலி கணிசமாகக் குறையும். ஆட்கள் பற்றாக்குறை என்கிற பிரச்னைக்கும் இது தீர்வாக அமையும். இத்திட்டத்துக்காக வரும்
3 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். இதன் மூலம் சுமார் 15,000 விவசாயிகள் பயன் அடைவார்கள்'' என்று குறிப்பிட்டார்.
-சா.வடிவரசு
நூற்றாண்டு கொண்டாடும் கரும்பு நிறுவனம்!
கோயம்புத்தூரிலிருக்கும் 'கரும்பு இனப்பெருக்கு நிறுவனம்’, அக்டோபர் 24-ம் தேதியன்று நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.

கடந்த 1912-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கரும்பு வல்லுநரான 'பார்பர்’ என்பவரால் துவக்கப்பட்டு, இன்று வரை விவசாயிகளுக்கு சேவை ஆற்றிக் கொண்டிருக்கிறது இந்நிறுவனம். இந்நிலையத்தால் உருவாக்கப்பட்ட 'கோ’ வகை கரும்பு ரகங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதியில் பயிரிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோ-86032 என்ற கரும்பு ரகம்தான் தமிழ்நாட்டில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக பயிராகிறது.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் டைரக்டர் ஜெனரலான ஐயப்பன், நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை துவக்கி வைத்தார். விழாவில், கலந்துகொண்ட வல்லுநர்கள், ''கரும்பு மகசூலைக் குறைப்பதில் மற்ற காரணிகளைவிட நீர்ப் பற்றாக்குறை, வறட்சித்தன்மை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. கரும்பு பார்களுக்கு இடையில், கரும்பு சோகையை பரப்பி மண்ணிலிருந்து நீர் ஆவியாவதைக் குறைக்கலாம்.

'அகல பார்’ முறை நடவினால், கரும்பின் ஆரம்பப் பருவத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் நீர்தேக்கத்தினால் ஏற்படும் மகசூல் குறைவினைத் தவிர்க்கலாம். கோடைக் காலத்தில் கிணற்றில் இருக்கும் நீர் எத்தனை ஹெக்டேர் கரும்பு சாகுபடிக்கு போதுமானதாக இருக்கும் என்பதைக் கணக்கிட்டு சாகுபடி செய்வது நல்லது'' என்று பயனுள்ளத் தகவல்களை வழங்கினர். விழாவில் கலந்துகொண்ட விவசாயிகள், ஆர்வத்துடன் அவற்றையெல்லாம் குறித்துக் கொண்டனர்.
- எஸ். ஷக்தி படங்கள்: எஸ். பாலநாக அபிஷேக்
பாரம்பரியமே பலம்!
தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் எ.பள்ளிப்பட்டி, கொங்கு நகரில் இயற்கை விவசாயம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி அக்டோபர் 30-ம் தேதி நடைபெற்றது. தமிழக இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான 'அரச்சலூர்' செல்வம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், சுலப வேளாண்மை, விவசாயிகளின் தற்சார்புத் தன்மை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.

இதில் பேசிய செல்வம், ''ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தின்போது, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மெக்காலே இந்தியாவை பற்றி நிறைய எழுதியிருக்கிறார். அதில் ஒரு குறிப்பில், 'மிக நேர்த்தியானத் தொழில்நுட்பங்களைக் கையாண்டு விவசாயம் செய்து வருகின்றனர் இந்தியர்கள். அவர்களை மிரள வைக்க, ஆச்சரியப்படுத்தும் வகையில் எதையாவது அங்கே இறக்குமதி செய்ய வேண்டும். வெளிநாட்டினரின் அறிவு, இந்தியர்களுக்கு உயர்வானதாகத் தெரியும்படி செய்யவேண்டும். அப்போதுதான் அவர்களை நாம் அடக்கி ஆள முடியும்’ என்று எழுதியிருக்கிறார்.
இது ஒன்றே போதும் இந்தியர்களின் திறமைகளை மெய்ப்பிக்க. எனவே நமது பாரம்பரிய முறையை கையாண்டு, நிலத்தில் கிடைக்கும் கழிவுகளைக் கொண்டே அற்புதமாக சாகுபடி செய்ய முடியும். அந்த நுட்பங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நம்மவர்கள் கொடிகட்டிப் பறந்தனர். அவ்வழி நின்று இயற்கை விவசாயத்தை மீட்டெடுப்போம்'' என்றார்.
-எஸ். ராஜாசெல்லம். படங்கள்: எம். தமிழ்ச்செல்வன்.
பல்கலைக்கழகத்தில் மலர் கண்காட்சி!
ஜனவரி 6 முதல் 8-ம் தேதி வரை, கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. நவம்பர் 1-ம் தேதியன்று, பல்கலைக்கழக வளாகத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு பேசிய துணைவேந்தர் முனைவர் முருகேசபூபதி,

''இந்தக் கண்காட்சி ஐந்தாவது முறையாக இங்கே நடைபெற இருக்கிறது. கொய்மலர்கள், வெளிநாட்டு மலர்கள், போன்சாய் வகைகள், உலர் மலர் அலங்கார கைவினைப் பொருட்கள், 'இக்கிபானா’ என்கிற ஜப்பானிய வகை மலர் அலங்காரங்கள் உள்ளிட்ட பலவகையான மலர்களும் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. இயற்கை வள பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு, அலங்கார மலர்களின் முக்கியத்துவம் மற்றும் வணிக மதிப்பை எடுத்துச் சொல்லும் வகையில்தான் இக்கண்காட்சி நடக்க இருக்கிறது. தோட்டக்கலை வல்லுநர்கள், மாணவர்கள், அலங்காரத் தொழில் புரிபவர்கள், மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் இது நிச்சயமாக பயன்படும்'' என்று குறிப்பிட்டார்.