Published:Updated:

ஏக்கருக்கு 3 லட்சம்...

புங்கன் கொடுக்கும் புதையல் !படங்கள்: வீ. சிவக்குமார் இரா.ராஜசேகரன், வனத்துறை உதவி வனப்பாதுகாவலர்.

ஏக்கருக்கு 3 லட்சம்...

புங்கன் கொடுக்கும் புதையல் !படங்கள்: வீ. சிவக்குமார் இரா.ராஜசேகரன், வனத்துறை உதவி வனப்பாதுகாவலர்.

Published:Updated:

பளிச்... பளிச்...

குறைந்த தண்ணீர் போதும்.
அதிக பராமரிப்பு தேவையில்லை.
5-ம் ஆண்டு முதல் வருமானம்.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறை 'குளுகுளு’ என சுகமாக இருக்க வேண்டும், என்று வசதி படைத்தவர்கள் குளிர்சாதனங்களைப் பொருத்திக் கொள்வார்கள். ஆனால், வசதியில்லாதவர்களுக்கு? கவலையே வேண்டாம். அவர்களுக்கும் 'குளுகுளு’ வசதியைக் கொடுக்கிறது ஏழைகளின் ஏ.ஸி. எனப்படும் புங்கன் மரம். குடியிருக்கும் இடங்களைச் சுற்றி புங்கன் மரங்களை நட்டுவிட்டால் போதும்... குளிர்ச்சியானக் காற்று எப்போதும் தாலாட்டும். அதனால்தான் 'புங்கன் நிழலும் சரி, பொண்டாட்டி மடியும் சரி’ என சொல்லி வைத்துள்ளனர் முன்னோர்கள்.

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் 'மிதைல் ஐஸோ சயனைட்’ எனும் கொடிய நச்சுள்ள காற்றையே உறிஞ்சிகொள்ளும் திறன்... புங்கன் மரத்துக்கு உண்டு. போபால் பகுதியில் விஷவாயு கசிந்தபோது, அந்த ஊரைச் சுற்றி நடப்பட்டிருந்த புங்கன் மரங்கள், விஷவாயுவை உறிஞ்சி பட்டுப்போயின.

அதேபோல நிறைய ஆக்சிஜனைக் கொடுக்கும் முள் இல்லா மூங்கில், ஆல், அரசு, பூவரசு வரிசையில் புங்கனும் ஒன்று. எனவே கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், குடியிருப்புப் பகுதிகள், சாலையோரங்கள், தோட்டங்கள்... என காலியாக உள்ள இடங்களிலெல்லாம் புங்கன் மரத்தை வளர்த்தால், செலவில்லாமல் காற்றைச் சுத்தப்படுத்த முடியும்.

ஏக்கருக்கு 3 லட்சம்...

வெப்பத்தை விரட்டும் இலை !

கடும்கோடையில் ஆடு, மாடுகளை மேய்ப்பவர்கள்... இரண்டு புங்கன் இலைகளை வாயில் போட்டு மென்று வெப்பத்தைக் குறைத்துக் கொள்வது, இன்றைக்கும் கிராமங்களில் நடைமுறை. ஆவாரம் இலை, புங்கன் இலை இரண்டையும் தலையில் வைத்து, மேலே தொப்பி அணிந்து கொண்டால்... வெயிலின் தாக்கம் கொஞ்சம் கூடத் தெரியாது.

பூச்சிக்கொல்லியாக... புங்கன் எண்ணெய் !

முற்காலங்களில் புங்கன் விதையிலிருந்து எண்ணெய் எடுத்து, அதை விளக்கெரிக்கப் பயன்படுத்தி வந்தார்கள். தற்போது புங்கன் எண்ணெய் சோப்பு தயாரிப்பதற்கு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுகிறது. உற்பத்தியாகும் எண்ணெயில் 90% சோப்பு தயாரிப்புக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது. தவிர, தோல் பதனிடும் தொழிலிலும், இயற்கை விவசாயத்தில் பூச்சிக்கொல்லியாகவும் இது பயன்படுகிறது. உலகளவில் புங்கன் எண்ணெய்க்கான தேவை அதிகளவில் உள்ளது. ஆனால், தேவையில் பாதி அளவு கூட உற்பத்தியாவதில்லை, என்பதுதான் நிதர்சனம். புங்கன் 5-ம் ஆண்டு முதலே பலன் கொடுக்கத் தொடங்கி விடுவதால், வருமானத்துக்காக நீண்ட நாட்கள் காத்திருக்கத் தேவையில்லை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த புங்கன் சாகுபடி முறைகளைப் பற்றிப் பார்ப்போம்.

ஏக்கருக்கு 3 லட்சம்...

ஏக்கருக்கு 540 கன்றுகள் !

புங்கன் அனைத்து மண்ணிலும் நன்றாக வளரும் என்றாலும், உவர் நிலங்களில் சரியான வளர்ச்சி இருக்காது. உவர் நிலத்தில் நடவு செய்பவர்கள், வேறு இடத்தில் இருந்து வளமான மண்ணைக் கொண்டு வந்து அதனுடன் மூன்றில் ஒரு பங்கு தொழுவுரத்தைக் கலந்து குழியில் இட்டு, நடவு செய்ய வேண்டும்.

ஒரு கன அடி குழியெடுத்து, ஒவ்வொரு குழியிலும் மண்புழு உரம்-1 கிலோ, வேர் வளர்ச்சி உட்பூசணம்-30 கிராம் (வேம்), தொழுவுரம்-1 கிலோ, அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா தலா 15 கிராம் ஆகியவற்றைப் போட்டு கன்றுகளை நடவு செய்ய வேண்டும். செடிக்குச் செடி 9 அடி, வரிசைக்கு வரிசை 9 அடி இடைவெளி இருப்பது போல் குழிகளை எடுக்க வேண்டும். மேற்கண்ட இடைவெளியில் நடும்போது ஏக்கருக்கு 540 கன்றுகள் வரை நடவு செய்யலாம்.

இந்த மரம், சுமார் 30 அடி உயரம் வரை மட்டுமே வளரும் தன்மையுடையது. நடவு செய்த முதல் ஆண்டில் மிதமாகத்தான் வளர்ச்சி இருக்கும். இரண்டாம் ஆண்டுக்குப் பிறகு வளர்ச்சி வேகமாக இருக்கும். நடு மரத்திலிருந்து குடைபோல பக்கக் கிளைகள் உருவாகி, படர்ந்து விரிந்து நிழல் பரப்பும். கோடைக் காலத்தின் தொடக்கத்தில் இலைகளை உதிர்த்து, அக்னி நட்சத்திர காலமான சித்திரை, வைகாசி மாதங்களில் அடர் பச்சை இலைகள் துளிர்த்து மரம் பூத்துக் குலுங்கும்.

மரத்துக்கு 600 ரூபாய் !

மழைக்கு முன்பாக நடவு செய்தால், பாசனத்தைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. நடவுக்குப் பிறகு தனிக் கவனமும் செலுத்தத் தேவையில்லை. ஆரம்பத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுத்தால் போதும். நன்கு வளர்ந்த பிறகு, அவ்வப்போது கிடைக்கும் மழைநீரைக் கொண்டே உயிர் வாழ்ந்து கொள்ளும்.

ஏக்கருக்கு 3 லட்சம்...

நடவு செய்த 5-ம் வருடத்தில் இருந்து விதையை அறுவடை செய்யலாம். ஒரு மரத்திலிருந்து வருடத்துக்கு சுமார் 45 கிலோ முதல் 50 கிலோ வரை விதை கிடைக்கும். இதை உடைத்தால், 15 கிலோ அளவுக்கு பருப்பு கிடைக்கும். இந்த பருப்பு தற்போது கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே, ஒரு மரத்தில் இருந்து பருப்பு மூலம் 600 ரூபாய் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. விதை ஓடுகள் உணவகங்களில் அடுப்பெரிக்கப் பயன்படுவதால், அதன் மூலமும் ஒரு சிறிய தொகை வருமானமாகக் கிடைக்கும்.

இந்தக் கணக்கின்படி, ஒரு ஏக்கரில் உள்ள 540 மரங்களில் இருந்து பருப்பு விற்பனை மூலம் ஒவ்வொரு வருடமும் 3 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். 20 வருடங்கள் வரை இப்படி வருமானம் எடுக்க முடியும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்... விதை உதிரும் காலங்களில் கவனமாக கீழே விழும் விதைகளைச் சேகரிக்க வேண்டும். பலர் புங்கன் விதையில் என்ன கிடைத்து விடப்போகிறது என அலட்சியமாக இருக்கிறார்கள். அந்த எண்ணம் உங்களுக்கு இருந்தால்... தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள்.

மீண்டும் சொல்கிறேன்... அடிக்கடி உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையும், அதிகரித்துக்கொண்டே போகும் புவி வெப்பமும் புங்கனுக்கானத் தேவையைக் கூட்டப் போகின்றன. எனவே, உங்களிடம் காலியாக உள்ள இடங்களிலெல்லாம் புங்கனை நடுங்கள். பூமிக்கும் நல்லது செய்து, உங்களது வருமானத்தையும் கூட்டிக் கொள்ளுங்கள்.

இது சுதேசி மரம் !

டெர்ரிஸ் இண்டிகா ((Derris Indica)) என்ற தாவரவியல் பெயரில் அழைக்கப்படும் புங்கன் மரத்தின் தாயகம்... இந்தியா. இங்கிருந்துதான் மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, ஹவாய் ஆகிய நாடுகளுக்கு பரவி இருக்கிறது.

மூலநோய்க்கு மருந்து !

புங்கன் எண்ணெய், டீசல் இன்ஜின்களில் உயிரி எரிபொருளாகப் (பயோ-டீசல்) பயன்படுகிறது. பாசன பம்ப்செட்டுக்குக்கூட டீசலோடு புங்கன் எண்ணெயைக் கலந்துப் பயன்படுத்தலாம். வேப்பமரத்துக்கு இணையான மருத்துவ குணங்கள் புங்கனிலும் உண்டு. இதன் இலை, பட்டை, வேர், பூ, விதை, எண்ணெய்... என அனைத்திலும் பல்வேறு வகையான 'ஃப்ளோவ்னாய்டு’ (Flavonoid) மூலக்கூறுகள் உள்ளன. இவற்றை முறையாக ஆராய்ச்சி செய்தால், பல அற்புதமான மருந்துகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சித்த மருத்துவத்தில், சூதக வலி, சூலை, வயிற்றுப்புண், ஈரல் நோய்கள், சருமநோய், ஆறாதப் புண்கள் ஆகியவற்றுக்கான மருந்துகளில் புங்கன் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. புங்கன் பட்டை கஷாயம் மூலநோய்க்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. நீரிழிவு நோயால் ஏற்படும் தாகத்தைத் தவிர்க்க... புங்கன் பூ ஊறவைக்கப்பட்ட நீரைக் குடிக்கும் வழக்கமும் உள்ளது.

 -தழைக்கும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism