Published:Updated:

அய்யகோ...2,56,913...

தூரன் நம்பி

அய்யகோ...2,56,913...

தூரன் நம்பி

Published:Updated:

சாட்டை

##~##

இது, கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை. தொண்டு நிறுவனங்களோ... விவசாயச் சங்கங்களோ... சொல்லும் கணக்கு அல்ல இது. நம்மை ஆண்டு கொண்டிருக்கும் அரசாங்கம் சொல்லும் கணக்கு. அதாவது, தேசிய குற்றவியல் ஆவணங்களில் (National Crime Records Bureau) கூறப்பட்டிருக்கும் கணக்கு. ஆனால், உண்மையான கணக்கு, இதைவிட அதிகம் என்பதே நிதர்சனம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரசாங்கத்தைப் பொறுத்தவரை, தற்கொலை செய்துகொண்ட நபரின் பெயரில் நிலம் இருந்தால் மட்டுமே, அவர் விவசாயி என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறார். ஆனால், இங்கே பரம்பரை பரம்பரையாக தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலேயே நிலத்தை வைத்துக் கொண்டிருப்பவர்கள்தான் அதிகம். அத்தகையோரின் தற்கொலையை, 'விவசாயத் தற்கொலைப்' பட்டியலில் அரசு சேர்ப்பதில்லை.

அய்யகோ...2,56,913...

இந்தியாவைப் பொறுத்தவரை விவசாயத் தற்கொலைப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது... மகாராஷ்டிர மாநிலம், விதர்பா பகுதிதான். சமீபத்தில் அப்பகுதிக்கு சென்றபோது, இறந்துபோனவரின் பெயரில் நிலமில்லாததால்.... கணவனையும் இழந்து, இழப்பீடும் கிடைக்காமல், இத்துப்போன சேலையை இழுத்து கட்டிக் கொண்டு, ஒட்டிப்போன ஒரு சாண் வயிற்றுக்காக உழைக்கும் இளம் விதவைகள் பலரையும் சந்திக்க நேர்ந்தது. அங்கு நான் கண்ட காட்சியும், கேட்ட செய்திகளும் இதயத்துக்குள் இன்னும் இடறிக் கொண்டே இருக்கின்றன.

பி.டி.ரக விதைகளுக்கு எதிராக விதர்பா பகுதியில் பணியாற்றும் தன்னார்வலர்கள், 'அரசாங்கமும்... விஞ்ஞானிகளும் ஆஹா... ஓகோவென ஆராதிக்கும் பி.டி. பருத்திதான், விதர்பாவில் விவசாயிகளின் உயிரைக் குடிக்கக் காரணம்' என்று குற்றம்சாட்டுகிறார்கள்.

'நன்றாக விளையும் என்கிற பிரசாரத்தை நம்பி, அதிக விலைகொடுத்து பி.டி.ரக விதைகளை வாங்கி விதைத்துவிட்டு, கடைசியில் வரவுக்கும் செலவுக்கும் கட்டுப்படியாகாத நிலையில், வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், தற்கொலை செய்துகொள்கிறார்கள்' என்பதுதான் அவர்கள் முன் வைக்கும்வாதம்!

இதிலிருந்து நாடு தெரிந்து கொள்ள வேண்டியது... 'உற்பத்திச் செலவு கூடிக்கொண்டே இருப்பது, விவசாயிகளைத் தற்கொலைக்குத் துரத்துகிறது' என்பதைத்தான்.

ஆனால், அதைப் பற்றியெல்லாம் அக்கறை கொள்ளாமல், பன்னாட்டு பெருச்சாளிகளுக்கு, கதவைத் திறந்துவிட்டு, மண்டியிட்டு அவர்களின் கால்களில் விழுந்து கிடப்பதைத்தான் நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய சேவையாக தொடர்ந்து கொண்டிருக்கின்றனர் நம் அரசியல்வாதிகள்!

இதோ... உரத்தின் விலை 3 மடங்கு கூடிவிட்டது. இது, விவசாயத் தற்கொலைகளை இன்னும்கூட அதிகரிக்கவே செய்யும். தற்போது பல இடங்களில் உரத்தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால், இதைப் பற்றிய அக்கறையில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறார், மத்திய உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி.

பல்வேறு சிரமங்களுக்கிடையே நடவு செய்த நெல், அறுவடை சமயத்தில் கனமழையால் மூழ்கிக் கிடக்கிறது. காப்பீடு செய்த விவசாயிகள், இழப்பீடு கேட்டால்.. 'பிர்காவில் உள்ள எல்லா நெல் வயல்களும், நீரில் மூழ்கினால்தான் இழப்பீடு’ என்ற வறட்டு விதியைச் சுட்டிக்காட்டுகிறது காப்பீட்டு நிறுவனம்.

இயற்கை வளங்களை, இரும்புத் தாதுக்களை, பாறைகளை (கிரானைட்) வெளிநாட்டுக்கு விற்பவர்களுக்கு ஊக்கநிதி கொடுக்கிறது அரசு. ஆனால், ரத்தத்தை வியர்வையாக்கி... இயற்கைச் சீற்றங்களை எதிர்த்து நின்று, கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டு விவசாயி உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்தால், தடை விதிக்கிறது. தண்டனையாக வரியும் விதிக்கிறது.

விவசாயிகளுக்கு எதிராக நடைபெறும் அரசு அடக்குமுறைகளைப் பற்றி அரசியல்வாதிகள் வாயே திறப்பதில்லை. காரணம் இன்றைய அரசியல்வாதிகள்தானே... நாளைய அமைச்சர்கள். அவர்களை விடுங்கள், அடக்குமுறைக்கு எதிராக நெருப்பு மூட்ட வேண்டிய மீடியாக்களும்கூட சினிமா, கேடுகெட்ட அரசியல், தனிநபர் புகழ்பாடுவது... என்றே 95% கவனம் செலுத்துகின்றன. நாட்டில் 60% என்கிற அளவில் இருக்கும் விவசாயிகளைப் பற்றி, அவ்வளவாக வாய் திறப்பதில்லை. இதைத்தான் சமீபத்தில் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு.

அய்யகோ...2,56,913...

நாட்டின் மீது அக்கறை கொண்ட நிஜமான பொருளாதார வல்லுநர்கள், 'பொருளாதாரம் வளர்கிறது என்கிற மாயையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது நம்முடைய அரசும்... முதலாளி வர்க்கமும். இது, நாட்டை மிக மோசமான நிலைக்குக் கொண்டு சென்று விடும். கிரேக்க நாட்டுக்கு நேர்ந்த கதி, இந்தியாவுக்கும் வரும்’ என்று அலறுகிறார்கள்.

ஆனால், 'பொருளாதாரப் புலி' என வேஷம் போட்டுக் கொண்டிருப்போரின் காதுகளை, இந்த அலறல் எட்டவே இல்லை.

போனது போகட்டும்... அமெரிக்கா, கிரேக்கம், இத்தாலி என்று வரிசையாக பஞ்சப்பாட்டு பாட ஆரம்பித்திருக்கும் நாடுகளின் நிஜ நிலையைக் கண்ட பிறகாவது... வறட்டுக் கௌரவம் பார்க்காமல் உண்மையை ஒப்புக்கொண்டு, உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்த அரசு முன் வரவேண்டும். அன்னிய கம்பெனிகளுக்கு அள்ளிக் கொடுக்கும் சலுகைகளை, உள்ளூர் விவசாயிகளுக்குக் கொடுத்தால்... எதிர்பார்க்கும் உற்பத்தி கொழிக்க ஆரம்பித்துவிடும். இதைச் செய்தால் போதும்... எந்த நாட்டின் பொருளாதாரத் தேக்கமும் இந்தியாவைத் தொட்டுக்கூட பார்க்காது. ஏனென்றால்... நம்மிடம்தான் கோடானு கோடி உழைக்கும் கரங்கள் இருக்கின்றனவே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism