Published:Updated:

நேரடிநெல் கொள்முதல் கோல்மால்....

அலைக்கழிக்கும் அதிகாரிகள்...அலறித்துடிக்கும் விவசாயிகள் !கு.ராமகிருஷ்ணன், நீரை.மகேந்திரன் படங்கள்: கே. குணசீலன்

நேரடிநெல் கொள்முதல் கோல்மால்....

அலைக்கழிக்கும் அதிகாரிகள்...அலறித்துடிக்கும் விவசாயிகள் !கு.ராமகிருஷ்ணன், நீரை.மகேந்திரன் படங்கள்: கே. குணசீலன்

Published:Updated:

பிரச்னை

##~##

'சேர்ந்தே இருப்பது எதுவோ..?' என்று கேட்டால்...  'விவசாயிகளும் பிரச்னைகளும்' என்றுதான் சிவபெருமான்கூட சந்தேகம் இல்லாமல் சொல்வார். அந்த அளவுக்கு ஆண்டுதோறும் நெல் கொள்முதல் சமயங்களில்... இயற்கையின் சதி... அதிகார வர்க்கத்தின் சதி... என்று பல வகைகளில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள்... நெல் விவசாயிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ஆண்டு, காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூரின் ஒரு பகுதியில்... குறுவை சாகுபடியின் அறுவடை நடந்து கொண்டிருக்கிறது. விளைந்து வந்திருக்கும் நெல்லை விற்று காசாக்கலாம் என்று எல்லோரும் சந்தோஷமாகக் காத்திருக்க... கொட்டித் தீர்க்கும் வடகிழக்குப் பருவமழை, அதற்கெல்லாம் வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் மீறி அறுவடை நடத்தியவர்கள், நெல்லை வண்டி கட்டிக்கொண்டுச் சென்றால்... 'ம்ஹூம்... ஈரப்பதம் 20% அளவுக்கும்மேல இருக்கு', 'எங்ககிட்ட கையிருப்பு பணம் இல்ல', போதுமான சாக்கு இல்லை' இப்படி வகை வகையாகக் காரணங்களைச் சொல்லி, விவசாயிகளை நோக அடித்துக் கொண்டுள்ளனர்... அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் ஊழியர்கள்!

ஈரப்பத இம்சை!

நேரடிநெல் கொள்முதல் கோல்மால்....

இதைப் பற்றி கோபம் பொங்க பேசும் தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன், ''கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பதம் 17% இருக்க வேண்டும் என்று மத்திய அரசு விதிமுறை வைத்திருந்தது. இதை, 24 சதவிகிதமாக மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக, கடந்த அக்டோபர் 28-ம் தேதி 20% வரை ஈரப்பதம் இருக்கலாம் என்று சொல்லியிருக்கிறது மத்திய அரசு. ஆனால், தொடர்ந்து மழை பெய்யும் நிலையில் நெல்லை எப்படிக் காய வைப்பார்கள் என்பதை அரசு கவனத்தில் கொள்வதில்லை. டெல்டா மாவட்டங்கள் முழுவதுமே இந்த அவல நிலைதான். என்ன செய்தாலும், 24% ஈரப்பதத்துக்குக் கீழ் குறைக்க முடியாமல் திணறுகின்றனர், விவசாயிகள்.

ஈரப்பதம் என்ற பெயரில் கட்டுப்பாடு விதிப்பது விவசாயிகளுக்கு விரோதமானது. இந்தக் கட்டுப்பாட்டை முழுமையாகவே மத்திய அரசு நீக்க வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழக அரசும் இதை வலியுறுத்தி மத்திய அரசிடம் குரல் கொடுக்க வேண்டும்.

நேரடிநெல் கொள்முதல் கோல்மால்....

ஈரப்பதத்துடன் இருக்கும் நெல்லை நவீன உலர்த்துவான்கள் மூலம் அரசே உலர்த்திக் கொள்ள முடியும். தனியார்அரிசி ஆலைகள், ஈரப்பதத்தை ஒரு பிரச்னையாகவே கருதுவதில்லை. எவ்வளவு ஈரப்பதம் இருந்தாலும், வாங்கிக் கொள்கிறார்கள். தனியார் ஆலைகளே மிக எளிதாகச் சமாளிக்கும்போது, அரசால் முடியாதா?'' என்று சீறலாகக் கேட்டார்!

வியாபாரிகளிடம் மட்டும் கரிசனம்!

'விவசாயிகளிடம் மட்டும்தான் ஈரப்பத விஷயத்தில் கெடுபிடி காட்டுகிறார்கள், கொள்முதல் நிலைய அதிகாரிகள். ஆனால், வியாபாரிகள் கொண்டு போகும் நெல்லை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கொள்முதல் செய்து கொள்கிறார்கள். இதில் பெரிய முறைகேடு நடக்கிறது'' என்று குமுறுகிறார், தஞ்சாவூர் மாவட்டம் திருவலாம்பொழில் கிராமத்தைச் சேர்ந்த ஜான்பீட்டர்.

சாக்கு ஒரு சாக்கா...?

அடுத்து பேசிய டெல்டா மாவட்ட பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சாமி நடராஜன், ''குறுவை நல்லா விளைஞ்சிருக்கு, ஆனா, கொள்முதல் நிலையங்கள்ல முன்னேற்பாடுகளை சரியா செய்யல. முதல்ல கொள்முதல் செய்றதுக்கு போதுமான சாக்கு கிடையாது. பணப்பட்டுவாடாவும் லேட்தான். இந்தக் காரணங்களால நெல்லை கொள்முதல் பண்றதுக்கு பத்து, பதினைஞ்சு நாள் காக்க வெக்கறாங்க. படாத பாடுபட்டு விளைவிச்சு கொண்டு வந்தா... இத்தனை நொம்பலம்'' என்று நொந்துகொண்டார்.

பழைய நெல் பயமுறுத்தல்!  

திருவலாம்பொழில் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி, ''நான் 5 ஏக்கர்ல ஏ.டி.டீ.-37 ரக நெல்லை சாகுபடி செஞ்சேன். 'இது பழைய ரகம், கொள்முதல் செய்ய முடியாது’னு எங்க ஊர் கொள்முதல் மையத்துல சொல்றாங்க'' என்று புதிதாக ஒரு பிரச்னையை சொல்லி வேதனைப்பட்டார்.

நாம், சம்பந்தப்பட்ட கொள்முதல் நிலையத்துக்குச் சென்று பட்டியல் எழுத்தர் ரவி சாஸ்திரியைச் சந்தித்தோம். ''இடப்பற்றாக்குறை, வாகனப் பிரச்னை, அது.. இது..'' என்று மாற்றி மாற்றி நம்மிடம் காரணம் சொல்லி மழுப்பினார். அங்கிருந்தபடியே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சாவூர் மண்டல மேலாளர் பிச்சை கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு சென்றபோது, ''உடனடியாக கொள்முதல் செய்யச் சொல்கிறேன்'’ என்று சொன்னார்.

தகவலை மூர்த்தியிடம் உடனே தெரிவித்தோம். அடுத்த இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அவரைத் தொடர்பு கொண்டபோது, ''பட்டியல் எழுத்தர் ரவி என்னை மிரட்டுறாரு. 'உன்னோட நெல்லை கொள்முதல் செய்யச் சொல்லி, மண்டல மேலாளர் உத்தரவு போட்டிருக்காரு. ஆனாலும், நான் கொள்முதல் செய்ய மாட்டேன். முடிஞ்சத பாரு'னு சொல்லிட்டார். வேற வழி இல்லாம, தனியார் வியாபாரிகிட்ட, மூட்டை 550 ரூபாய்னு நஷ்டத்துக்கு கொடுத்துட்டேன்'' என மனம் நொந்து போனவராகச் சொன்னார் மூர்த்தி.

இவ்விஷயத்தை மண்டல மேலாளர் பிச்சை கவனத்துக்கு மறுபடியும் கொண்டு சென்றபோது, ''அந்த விவசாயியை முறைப்படி மனு கொடுக்க சொல்லுங்க. பட்டியல் எழுத்தர் மேல சட்டப்படியான நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்றேன்'' என்று சொன்னார்.

நிறைவாக தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் வீரசண்முகமணியின் கவனத்துக்கு அனைத்துப் பிரச்னைகளையும் கொண்டு சென்றபோது, ''உடனடி நடவடிக்கைக்காக அதிகாரிகள் குழுவை அனுப்பச் சொல்லி மண்டல மேலாளருக்கு உத்தரவு போட்டிருக்கேன். அப்படியும் பிரச்னை தீரலனா... கண்டிப்பா நானே களத்துல இறங்கி நடவடிக்கை எடுக்கிறேன்'' என்று சொன்னவர்,

''அந்தப் பட்டியல் எழுத்தரை வேலை நீக்கம் செய்ய கட்டாயம் ஏற்பாடு செய்றேன்'’ என்று உறுதிமொழி கொடுத்தார்.

 இம்சையைக் கூட்டும் இயந்திரத் தட்டுப்பாடு!

தற்போது முடிந்திருக்கும் குறுவை சாகுபடி அறுவடையில் இப்பகுதி விவசாயிகளுக்கு இன்னுமொரு பிரச்னை வந்து சேர்ந்திருக்கிறது. அறுவடைக்குப் போதுமான அளவு அறுவடை இயந்திரங்கள் இல்லாததால், அறுவடைப் பணிகள் தடைபட்டிருக்கின்றன.

நேரடிநெல் கொள்முதல் கோல்மால்....

கீழத்திருப்பந்துருத்தி பகுதியைச் சேர்ந்த பஞ்சாபிகேசன் இதைப் பற்றி பேசும்போது, ''தஞ்சாவூர் மாவட்டத்துல இருநூறு அறுவடை மெஷினுக்கு மேல இருக்கு. அதுல பெரும்பாலான மெஷின் வெளி மாநிலத்துக்காரங்களோடது. அதனால, புரோக்கர் மூலமாத்தான் மெஷினைப் பிடிக்க முடியும். மாவட்டத்துல இருக்கற மொத்த நிலத்துலயும் அறுவடை பண்றதுக்கு இந்த மெஷின்களே போதுமானதுதான். ஆனாலும் செயற்கையா தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதிக பணத்தை வசூல் பண்ணிக்கிட்டு இருக்காங்க.

ரெண்டு மூணு மாசத்துக்கு முன்ன வரைக்கும் ஒரு ஏக்கர் நெல் அறுவடைக்கு 1,400 ரூபாய்தான் வாங்கிட்டிருந்தாங்க. இப்போ, 1,700 ரூபாய்ல இருந்து 2,400 ரூபாய் வரைக்கும் கட்டணம் வசூலிச்சுக்கிட்டிருக்காங்க.

நான் ரெண்டு ஏக்கர்ல நெல் சாகுபடி செஞ்சுருந்தேன். 120 நாள்ல அறுவடை செஞ்சுருக்கணும். ஆனா, 140 நாள் ஆகியும் மெஷின் கிடைக்கல. புரோக்கர்ங்கக்கிட்ட எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் வர மாட்டேங்குறாங்க. 'பத்து ஏக்கருக்கு மேல இருந்தாத்தான் அறுவடைக்கு வருவோம்’னு சொல்றாங்க. சரியான நேரத்துல அறுவடை பண்ணியிருந்தா... ஏக்கருக்கு 36 மூட்டை மகசூல் கிடைச்சுருக்கும். இப்ப அதுல கால்வாசி கூட தேறாது. கிட்டத்தட்ட 47 ஆயிரம் ரூபாய் நஷ்டம்'' என்றார், வேதனையாக.

அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம்!

திருவையாறு பகுதியைச் சேர்ந்த நடராஜன், ''இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணமே... வேளாண் பொறியியல் துறை அதிகாரிகளோட அலட்சியந்தாங்க.

இவ்வளவு நெல் விளையுற தஞ்சாவூர் மாவட்டத்துக்கு ஒரே ஒரு அறுவடை மெஷின்தான் கெவருமென்ட்ல வெச்சிருக்காங்க. அதுவும் டயர் வண்டி. குறுவை அறுவடை சமயத்துல மழை வந்துருங்கிறதால செயின் வண்டி இருந்தாத்தான் உபயோகப்படும். அதனால இருக்குற அந்த மெஷினும் யாருக்கும் பயன் இல்லாம கிடக்குது. அதிகாரிகங்கிட்ட பல தடவை சொல்லியும் கண்டுக்க மாட்டேங்குறாங்க. குறைஞ்சது தாலூகாவுக்கு செயின் மெஷின் ரெண்டாவது வாங்கி வெச்சாத்தான் இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும்'' என்று ஆலோசனை சொன்னார்.

அறுவடை இயந்திரத் தட்டுப்பாடு பற்றி வேளாண் பொறியியல் துறையின் தஞ்சாவூர் மாவட்ட செயற்பொறியாளரான ராஜேந்திரனிடம் கேட்டபோது, ''இது நியாயமான கோரிக்கை. இதை சரிசெய்வதற்கான முயற்சிகள் கண்டிப்பாக தீவிரப்படுத்தப்படும்'' என்று தன்னுடைய பதிலில் அக்கறையைக் கூட்டினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism