Published:Updated:

மல்லிகை விளைச்சல் மாண்டுப் போச்சு...வாழை விளைச்சல் வாடிப் போச்சு...

காவு வாங்கும் காகித ஆலைகள்..! கி.ச.திலீபன்

மல்லிகை விளைச்சல் மாண்டுப் போச்சு...வாழை விளைச்சல் வாடிப் போச்சு...

காவு வாங்கும் காகித ஆலைகள்..! கி.ச.திலீபன்

Published:Updated:

பிரச்னை

##~##

திருப்பூர் சாயப்பட்டறைகளால் நோய்வாய்ப்பட்டு கிடக்கிறது, நொய்யல் ஆறும்... அதன் பாசனப் பரப்பிலிருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஈரோடு தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் கதி கலங்கிப் போயிருக்கின்றன, காளிங்கராயன் கால்வாய், காவிரி ஆறு மற்றும் இவற்றை நம்பியிருக்கும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!

இதேபோல... காகித ஆலைகளின் கழிவு நீர் களத்தில் புகுந்து, விவசாய நிலங்களை தரிசு நிலங்களாக்கிக் கொண்டிருக்கும் கொடுமை... ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பகுதியில் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.

இந்தக் கொடுமை குறித்து கொந்தளிப்போடு நம்மிடம் பேசிய 'பவானி ஆற்று குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்ப் பாதுகாப்பு இயக்க’த்தின் தலைவர் நடராஜ், ''பவானிசாகர், கொத்தமங்கலம் பகுதிகள்ல இருக்குற 12 காகித ஆலைகளால பலநூறு ஏக்கர் விளைநிலங்கள்... வீண் நிலங்களாகிடுச்சு. இங்க இருக்கற காகித ஆலைகள்ல, பழைய பேப்பரை மறுசுழற்சி மூலம் புது பேப்பராக்கறாங்க. இதுக்காக நிறைய கெமிக்கல்களைப் பயன்படுத்துறாங்க. 'இந்த முறையில பேப்பரை மறுசுழற்சி செய்றது... சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்'னு பல நாடுகள்ல இந்த முறைக்கு தடை போட்டிருக்காங்க. ஆனா, நம்ம நாட்டுல அதைப் பத்தியெல்லாம் கவலையே படாம, அனுமதிச்சுக்கிட்டிருக்காங்க.

மல்லிகை விளைச்சல் மாண்டுப் போச்சு...வாழை விளைச்சல் வாடிப் போச்சு...

அடுத்து... 'சவ்வூடு பரவல்’ மூலமா சுத்திகரிச்ச பிறகுதான் கழிவு நீரை வெளியேத்தணும்னு அரசாங்க விதிமுறை இருக்கு. அதையும் இந்தத் தொழிற்சாலைகள் கடைபிடிக்கறதில்ல. அப்படியே நிலத்துல கொட்டிடறாங்க. அதனால நிலத்தடி நீர் பாதிக்கப்படுது. கிணத்துத் தண்ணியெல்லாம் கலர் மாறிடுது. அந்தத் தண்ணியைப் பாய்ச்சின இடமெல்லாம் சுண்ணாம்பு மாதிரி ஆகி, விவசாயத்துக்கே லாயக்கில்லாமப் போயிடுச்சு. இதனால நிறைய நோய்களும் வருது. ஏற்கெனவே இருக்கற ஆலைகளால இப்படி நொந்து போய் கிடக்கறோம். இதுபோதாதுனு புதுசா ஆலைகளை திறக்கறதுக்கு அரசாங்கம் அனுமதி கொடுத்திருக்கு.

ஆலைக்காரங்களுக்கு தினமும் பவானியாத்துல இருந்து ஏழரை லட்சம் லிட்டர் தண்ணி எடுத்து, பயன்படுத்தத்தான் அரசாங்கம் அனுமதி கொடுத்திருக்கு. ஆனா, பல லட்சம் லிட்டர் தண்ணியை எடுக்கிறாங்க. இதை அதிகாரிங்க கண்டுக்க மாட்டேங்குறாங்க.

2006-ம் வருஷம் மாவட்ட நிர்வாகம் சார்பா, காகித ஆலைகளை சோதனை செஞ்சு, 'பல ஆலைகளில் சுத்திகரிப்பு நிலையங்கள் திருப்திகரமாக இல்லை. வெளியேறும் கழிவு நீரால் ரசாயனங்கள் நிலத்தில் கலந்து உவர் நிலமாகிவிட்டன. இதில் எந்தப் பயிரும் வளராது’னு அறிக்கையே வெளியிட்டாங்க. ஆனா, இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லைங்கறதுதான் வேதனை.

மல்லிகை, மஞ்சள், வாழைனு விளைஞ்ச மண்ணு... இப்ப மலடாகிப் போச்சு. இதுக்கெல்லாம் பதில் சொல்லப் போறது யாரு?'' என்று கேட்டார் பொங்கிவரும் கோபத்தை அடக்கியபடி!

மல்லிகை விளைச்சல் மாண்டுப் போச்சு...வாழை விளைச்சல் வாடிப் போச்சு...

இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிரி, ''மல்லிகைப்பூ சாகுபடியில மதுரைக்குத்தான் பெரிய பேரு. அதுக்கு அடுத்தது சத்தியமங்கலம்தான்னு சொல்ற அளவுக்கு ஒரு காலத்துல கொடிகட்டிப் பறந்திட்டிருந்தோம். ஆனா... இந்தக் காகித ஆலைகளால மல்லிகை விளைச்சலே மாண்டு போச்சு. மாசுக்கட்டுப்பாடு வாரியம்... காசுக்கு கட்டுப்பட்ட வாரியமா மாறிடுச்சு. இனியும் மனு கொடுத்துப் பயனில்லைனு போராடிக்கிட்டே இருக்கோம். அரசாங்கம் உடனே இந்த ஆலைகளை மூடணும். இல்லைனா, விவசாயிகள் எல்லாரும் தற்கொலை பண்ணிக்க வேண்டியதுதான்'' என்றார், உணர்ச்சிவசப்பட்டவராக.

அப்பகுதியில் இயங்கி வரும் காகித ஆலைகள் என்ன சொல்கின்றன?

''கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கலெக்டர் தலைமையில் காகித ஆலைகளை பார்வையிட்ட குழு, ஐந்து காகித ஆலைகளுக்கு சீல் வெச்சாங்க. அதுக்குப் பிறகு நிலைமை மாறிடுச்சு. கழிவுநீர்க் குழாய்களை அகற்றிட்டோம். கழிவு நீரைச் சுத்திகரிச்சு, அதை மறு சுழற்சி மூலமா திரும்பவும் பயன்படுத்துறோம். இதனால, பவானி ஆத்துல இருந்து அதிக அளவுக்கு தண்ணி எடுக்க வேண்டிய அவசியம் இல்லாம போயிடுச்சு. இப்ப எந்தவிதமான சுற்றுச் சூழல் பாதிப்பும் இங்க இல்லை'' என்கிறார், அங்குள்ள காகித ஆலைகளில் ஒன்றான 'அக்ஷரா பேப்பர் மில்ஸ்’ நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி சரவணன்.

இந்த விஷயத்தை ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகத்திடம் நாம் எடுத்துச் சென்றபோது, விவரங்களைத் தெளிவாகக் கேட்டுக் கொண்டவர், ''பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்'' என்று உறுதி அளித்தார்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism