Published:Updated:

நாட்டுக்கம்புக்கு நல்ல விலை... குவிண்டால் 4,500 ரூபாய்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நாட்டுக்கம்புக்கு நல்ல விலை... குவிண்டால் 4,500 ரூபாய்!
நாட்டுக்கம்புக்கு நல்ல விலை... குவிண்டால் 4,500 ரூபாய்!

சந்தைக்கேற்ற சாகுபடி! லாப ஊருக்கு ஒரு வழிகாட்டி!சந்தைதுரை.நாகராஜன் - படங்கள்: தே.சிலம்பரசன்

பிரீமியம் ஸ்டோரி

யல் விளைச்சலை அள்ளிக் கொடுத்திருந்தாலும், சந்தையில் விலை கிடைத்தால்தான், லாபம் கிடைக்கும். ‘ஒவ்வொரு பயிருக்கும் எந்தப் பருவத்தில் நல்ல விலை கிடைக்கும்... சந்தையின் தேவை என்ன?’ என்பது போன்ற அடிப்படையான சில தகவல்களைத் தெரிந்துகொண்டால், ‘விலை இல்லை’ என்ற கவலையே இருக்காது. ஒவ்வொரு பயிருக்குமான சந்தைத் தகவல்களை அலசுகிறது, இத்தொடர். சென்ற இதழில் பார்த்த கம்பு குறித்த தகவல்களின் தொடர்ச்சி இங்கே இடம்பெறுகிறது.

நாட்டுக்கம்புக்கு நல்ல விலை... குவிண்டால் 4,500 ரூபாய்!

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையைச் சேர்ந்த, விழுப்புரம் விற்பனைக்குழுவின் செயலாளர் சங்கர், கம்பு குறித்துச் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“தமிழ்நாட்டில் பரவலாக மானாவாரி சாகுபடியில் கம்பு அதிகளவு பயிரிடப்படுகிறது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. கம்பு அனைத்து வகை மண்ணிலும் வளரும். நெல், கோதுமைக்கு மாற்றாக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் தானியம் கம்புதான். இதில் குறைவான அளவு கார்போஹைட்ரேட்டும் அதிகளவு புரதமும் உள்ளன. மானாவாரி சாகுபடிக்கு ஜூன்-ஜூலை மாதங்கள் ஏற்ற பட்டம். இப்பட்டத்தில் விதைக்கும்போது, செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் அறுவடையாகும்.

நாட்டுக்கம்புக்கு நல்ல விலை... குவிண்டால் 4,500 ரூபாய்!இறவையில் கம்புச் சாகுபடி

டிசம்பர்-ஜனவரி மாதங்களில் துவங்கி, மார்ச் மாதம் அறுவடையாகும். மானாவாரி சாகுபடியில், 80% நாட்டுக்கம்பும், 20% வீரிய ரக கம்பும் பயிரிடப்படுகின்றன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட ஐ.சி.எம்.யூ ரக வீரிய விதையை, விவசாயிகள் அதிகமாகப் பயிரிடுகின்றனர். ஒரு ஏக்கர் விதைக்க 2 கிலோ கம்பு தேவைப்படும். 75 நாட்கள் முதல் 85 நாட்களில் அறுவடைக்கு வரும். மானாவாரி சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு 600 கிலோ முதல் 700 கிலோ வரை மகசூல் கிடைக்கும். இறவையில் 1,200 முதல் 1,500 கிலோ வரை மகசூல் கொடுக்கும்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 18 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில், 2013-2014-ம் ஆண்டில் 11 ஆயிரத்து 705 டன் அளவும்; 2014-2015-ம் ஆண்டில் 12 ஆயிரத்து 36 டன்னும்; 2015-2016-ம் ஆண்டில் 10 ஆயிரத்து 271 டன் கம்பும் விற்பனையாகியிருக்கிறது. நடப்பாண்டில் இதுவரை 15 ஆயிரத்து 73 டன் கம்பு விற்பனைக்கு வந்துள்ளது. நடப்பாண்டில் ஒரு குவிண்டால் நாட்டுக்கம்பு 3 ஆயிரத்து 200 ரூபாய் முதல் 4 ஆயிரத்து 480 ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது.

வீரிய ரக கம்பு 1,650 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளைவிட இந்த ஆண்டில் கம்பு வரத்து அதிகமாக இருந்தும், அதிக விலை கிடைத்து வருகிறது.

தமிழ்நாட்டில் தற்போது உணவுப் பயன்பாட்டுக்காக அதிக அளவு நுகரப்படுவதுதான், விலையேற்றத்துக்குக் காரணம். விவசாயிகளிடம் இருந்து வாங்கிச் செல்லும் வியாபாரிகள், தேவை அதிகமாக இருப்பதால் தமிழ்நாட்டுக்குள்ளேயே விற்பனை செய்துவிடுகிறார்கள். பூச்சிகள் தாக்காத, மாவுத்தன்மை அதிகம் உள்ள கம்புக்கு நல்ல விலை கிடைக்கிறது. தற்போது தேவை அதிகம் இருப்பதால், டிசம்பர்-ஜனவரி மாதங்களில் இறவையில் விதைத்தால், 80 நாட்களில் நல்ல வருமானம் பார்த்துவிட முடியும்” என்றார்.

கோயம்புத்தூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் கம்பை சாகுபடி செய்து வரும் விவசாயி கனகராஜ் சொல்வதைக் கேளுங்கள்.

“நாற்பது வருஷமா விவசாயம் செய்திட்டிருக்கேன். ஒவ்வொரு வருஷமும் தவறாம கம்பைப் பயிர் செஞ்சுடுவேன். வைகாசியில விதைச்சா ஆவணி, புரட்டாசி மாசத்துல அறுவடைக்கு வந்துடும். எப்பவுமே கம்புக்கு நல்ல கிராக்கி இருக்குது. ஏக்கருக்கு சராசரியா 6 குவிண்டால் மகசூல் கிடைக்கும். கம்பைக் காய வெச்சு, சுத்தம் செஞ்சு எடுத்துட்டுப் போனா நல்ல விலை கிடைக்கும். இப்போதைக்கு ஒரு கிலோ சராசரியா
37 ரூபாய்னு விற்பனையாகுது” என்றார்.

நாட்டுக்கம்புக்கு நல்ல விலை... குவிண்டால் 4,500 ரூபாய்!

கோயம்புத்தூரைச் சேர்ந்த வியாபாரி ஆறுமுகம், “சந்தை நிலவரத்தைப் பொறுத்து ஒவ்வொருநாளும் கம்பின் விலை வித்தியாசப்படும். இப்போ மார்க்கெட்ல கம்போட விலை நல்லா இருக்கு. கம்பை அதிக நாள் இருப்பு வெச்சிருந்தா பூச்சி விழுந்து, விலை கிடைக்காமப் போயிடும். அதனால சரியான நேரத்துல விற்பனை செஞ்சிடணும். நான் உணவுப்பண்டம் தயாரிக்கிறவங்களுக்குத்தான் விற்பனை செய்றேன். இப்போதைக்கு நாட்டுக்கம்பு ஒரு குவிண்டால் 5 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், வீரிய ரக கம்பு குவிண்டால் 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகுது” என்றார்.

- லாபம் பெருகும்

கம்பு, மிளகாய், வாழைக்கு நிலையான விலை... பல்கலைக்கழகம் அறிவிப்பு!

நாட்டுக்கம்புக்கு நல்ல விலை... குவிண்டால் 4,500 ரூபாய்!

தமிழ்நாடு வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும், விலை முன்னறிவிப்புத் திட்டம் கம்பு, மிளகாய், வாழைக்கு விலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள விவரங்கள் இங்கே...

•  மத்திய வேளாண் அமைச்சகத்தின் நான்காம் முன் மதிப்பீட்டின்படி 2015-16ம் ஆண்டில் 7.31 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் கம்பு பயிரிடப்பட்டு 8.06 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு உற்பத்தியை விட 12 சதவிகிதம் குறைவாகும். ராஜஸ்தான், உத்திர பிரதேசம், குஜராத் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்கள் கம்பு உற்பத்தியில் முக்கிய மாநிலங்களாகும். இவை நாட்டின் மொத்த உற்பத்தியில் 83 சதவிகிதம் பங்களிக்கிறது.
 

• தமிழ்நாட்டில் கம்பு 0.58 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயரிடப்பட்டு 1.77 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கம்பு உற்பத்தியில் விழுப்புரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. தூத்துக்குடி, திருவண்ணாமலை, விருதுநகர், கடலூர் மற்றும் வேலூர் மாவட்டங்கள் அடுத்த நிலையில் உள்ளன.

• கம்பின் மொத்த நுகர்வில் 73.4 சதவிகிதம் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. கம்மஞ்சோறு, கூழ், தானிய வகைகள் மற்றும் டிபன் வகைகள் என்று காலை உணவாக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மாடுகள் மற்றும் கோழிகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது மது தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

• ஆய்வு முடிவுகளின்படி அறுவடையின் போது தரமான கம்புவின் சராசரி பண்ணை விலை கிலோவுக்கு 17-18 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சுத்தமான, பச்சை நிறத்தோடு உள்ள தரமான கம்புவுக்கு நல்ல விலை கிடைக்கும்.

• 2015-16-ம் ஆண்டில் தமிழகத்தில், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகளவு மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் மிகக்குறைவாகவே பயிரிடப்பட்டுள்ளது. முண்டு மற்றும் சன்னம் ஆகிய ரகங்கள் தமிழகத்தில் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. அக்டோபர் மாதம் மிளகாய் விதைப்புக்கு உகந்த பருவமாகும்.

• தமிழகத்தில் இந்த ஆண்டு மழை குறைந்துள்ளதால் மிளகாய் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது. அதே சமயம் ஆந்திராவில் உற்பத்தி அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், ஆந்திர மிளகாய், தமிழகத்துக்கு விற்பனைக்கு வர வாய்ப்புண்டு.

• வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பிறகு, தமிழகத்தில் விதைக்கப்படும் மிளகாய் அறுவடைக்கு வரும் நேரத்தில் ஒரு கிலோ சம்பா ரக மிளகாய் வற்றலுக்கு 100 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

• கடந்த 15 ஆண்டுகளாகத் திருநெல்வேலி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய விலை நிலவரத்தை வைத்து மிளகாயின் விலை கணிக்கப்பட்டுள்ளது.

• கோயம்புத்தூர், தேனி, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவு வாழை பயிரிடப்படுகிறது. திருச்சி, திருநெல்வேலி, கடலூர், தேனி, கோயம்புத்தூர் ஆகியவை வாழை விற்பனைக்கு முக்கியச் சந்தைகள்.

• தற்போது வாழை வரத்து அதிகமுள்ளதால் விலை சரிந்துள்ளது. அடுத்து பண்டிகைகள் வரவிருப்பதால் இனி விலை குறைய வாய்ப்பில்லை. தற்போதைய விலையே நீடிக்கும்.

• கடந்த 15 ஆண்டுகளாகக் கோயம்புத்தூர்ச் சந்தையில் நிலவிய விலை நிலவரம் குறித்து மேற்கொண்ட ஆய்வின்படி... நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பூவன் வாழைக்குப் பண்ணை விலையாக ஒரு கிலோவுக்கு 13 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரையும்; கற்பூரவல்லி ரகத்துக்கு 18 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையும்; நேந்திரன் வாழைக்கு 35 ரூபாய் முதல் 38 ரூபாய் வரையும் விலை கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த விலை நிலவரங்களை வைத்து விவசாயிகள் முடிவு எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு:
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641003 தொலைபேசி: 0422 2431405

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு