Published:Updated:

5 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.6 லட்சம் லாபம்... நிறைவான வருமானம் தரும் மீன் வளர்ப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
5 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.6 லட்சம் லாபம்... நிறைவான வருமானம் தரும் மீன் வளர்ப்பு!
5 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.6 லட்சம் லாபம்... நிறைவான வருமானம் தரும் மீன் வளர்ப்பு!

மீன் வளர்ப்புகு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன்

பிரீமியம் ஸ்டோரி

விவசாயம் பொய்த்துப்போகும் சமயங்களில் உறுதுணையாக இருப்பது ஆடு, கோழி, மாடு, பன்றி, மீன் போன்ற பிராணிகள் வளர்ப்புதான். குறிப்பாக நல்ல தண்ணீர் வளம் உள்ள விவசாயிகளின் தேர்வு, மீன் வளர்ப்பாகத்தான் இருக்கிறது. எல்லா வயதினருக்கும் உகந்த அதே நேரத்தில் கொழுப்பு குறைவாக உள்ள அசைவ உணவு என்பதால், இறைச்சி வகைகளில் சிறந்ததாக இருக்கிறது மீன். அதனால் மீன் விற்பனைக்குப் பிரச்னையே இருப்பதில்லை.

5 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.6 லட்சம் லாபம்... நிறைவான வருமானம் தரும் மீன் வளர்ப்பு!

இப்படி உத்தரவாதமான வருமானம் கொடுக்கக்கூடிய தொழிலாக இருப்பதால்தான் பெரும்பாலான விவசாயிகளின் தேர்வாக இருக்கிறது, மீன் வளர்ப்பு. அந்த வகையில், தஞ்சாவூர்-திருவாரூர் மாவட்டங்களின் எல்லையோரமாக இருக்கும் விழுதியூர் கிராமத்தில் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார், ரங்கநாதன். இவரும் இவரது மகன் அஜய்சங்கரும் தீவன மேலாண்மை உள்ளிட்ட பல அம்சங்களில் திறம்படச் செயல்படுவதால் நிறைவான லாபம் எடுத்து வருகிறார்கள்.

தஞ்சாவூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, விழுதியூர். ரங்கநாதன் மற்றும் அஜய்சங்கர் ஆகியோர், மீன்பிடிப்பில் மும்முரமாக இருந்த ஒரு பகல் வேளையில் அவர்களைச் சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியோடு வரவேற்று பேச ஆரம்பித்தார், ரங்கநாதன்.

முன் அனுபவம் இருந்ததால் மீன் வளர்ப்பு!

“நான் மீன் வளர்ப்புல பட்டயப் படிப்பு முடிச்சிட்டு, தமிழ்நாடு மீன்வளத்துறையில 27 வருஷம் ஆய்வாளரா வேலை பார்த்தேன். ஓய்வுக்குப் பிறகு விவசாயம் செய்யணுங்கற ஆசையிலதான் இங்க 7 ஏக்கர் நிலம் வாங்கினேன். ஆனா, இது மீன் வளர்ப்புக்கு ஏற்ற களிமண் நிலமா இருந்துச்சு. 50 சதவிகிதத்துக்கு மேல களிமண் இருக்குற நிலத்துல மீன் குளம் அமைச்சா, தண்ணி பூமிக்குள்ள இறங்காம அப்படியே இருக்கும். அதில்லாம மீனுக்கு எப்பவுமே விற்பனை வாய்ப்பு உண்டு. மீன் பண்ணை இருக்குற இடத்துக்கு வியாபாரிகளும், பொதுமக்களும் தேடி வந்து வாங்குவாங்க. தவிர, இதுல எனக்கு முன்அனுபவமும் இருந்தது. என் மகனும் மீன் வளர்க்கலாம்னு ஆசைப்பட்டான். அதனாலதான் மீன் குளம் அமைக்கலாம்னு முடிவெடுத்து மூணு வருஷத்துக்கு முன்னாடி அமைச்சோம். நாங்க எதிர்பார்த்தபடியே நல்ல லாபமும் எடுத்திட்டிருக்கோம்.

5 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.6 லட்சம் லாபம்... நிறைவான வருமானம் தரும் மீன் வளர்ப்பு!

ஒரு ஏக்கர் பரப்பளவுல ஒரு குளம்னு மொத்தம் 5 குளங்கள் இருக்கு. இதில்லாம மீன் குஞ்சுகளை வளர்க்குறதுக்கு ஒரு குளமும் இருக்கு” என்று தாங்கள் மீன் வளர்ப்புக்கு வந்த கதை சொன்ன ரங்கநாதன், மீன் குளங்களைச் சுற்றிக்காட்டிக் கொண்டே பேச ஆரம்பித்தார்.

தாராளமாக நீந்தினால் எடை அதிகரிக்கும்!


“இந்தக் குளங்களோட ஆழம் 8 அடி. எப்பவும் 4 அடி உயரத்துக்கு நீர்மட்டம் இருக்குற மாதிரி பராமரிக்குறோம். அதனால, மீன்கள் நல்லா தாராளமா ஆழத்துல போய் நீந்த முடியுது. இதனால வளர்ச்சி வேகமா இருக்குது. 30 நாள் வயசுள்ள 10 ஆயிரம் குஞ்சுகளை வாங்கி மீன் குஞ்சு வளர்ப்புக் குளத்துல விடுவோம். அந்தச் சமயத்துல ஒவ்வொரு குஞ்சும், 5 சென்டிமீட்டர் நீளம், 10 கிராம் எடை இருக்கும். ஒரு குஞ்சு 1 ரூபாய் விலையில் கிடைக்கிது. குளத்துல விட்ட முதல் நாள் தீவனம் போட வேண்டியதில்லை. அடுத்த நாள்ல இருந்து சரிவிகிதத்துல கடலைப்பிண்ணாக்குத் தூளையும், அரிசித்தவிட்டையும் கலந்து தீவனமா போடுவோம். 10 ஆயிரம் குஞ்சுகளுக்கும் சேர்த்து முதல் 15 நாட்கள் வரை தினம் 5 கிலோ தீவனம் போடுவோம். அடுத்த 15 நாட்களுக்கு தினம் 10 கிலோ தீவனம் போடுவோம். அப்புறம் மீன் குஞ்சுகளை எடுத்து ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள குளத்துக்கு 2 ஆயிரம் குஞ்சுகள்ங்கிற கணக்குல வளர்ப்புக் குளத்துல விட்டுடுவோம்.

ஒரு ஏக்கர் குளத்துக்கு 2,000 மீன்கள்!

ஒரு ஏக்கர் அளவிலான குளத்துல 2 ஆயிரம் குஞ்சுகள் விடும்போது, ஒரு மீனுக்குக் கிட்டத்தட்ட 2 சதுர மீட்டர் இடம் கிடைக்கும். இந்தளவு இடம் இருந்தாத்தான் தாராளமா நீந்த முடியும். ஆக்ஸிஜனும் தடையில்லாம கிடைக்கும். மீன்கள் நல்லா நீந்தினாத்தான் வேகமா வளரும். மீன்கள்ல 30 சதவிகிதம் ரோகு, 20 சதவிகிதம் கட்லா, 20 சதவிகிதம் மிர்கால், 15 சதவிகிதம் கண்ணாடி கெண்டை, 15 சதவிகிதம் புல் கெண்டைனு கலந்து விடுவோம். 2 மாசத்துல ஒவ்வொரு மீன் குஞ்சும் சராசரியா 75 கிராம் எடைக்கு வரும். ஒரு ஏக்கர் குளத்துல இருக்குற 2 ஆயிரம் குஞ்சுகளோட மொத்த எடை 150 கிலோ இருக்கும். வளரும் மீன்களுக்கு ஒரு பங்கு தேங்காய்ப் பிண்ணாக்கு,  இரண்டு பங்கு தவிடு கலந்து தீவனமாப் போடுவோம்.

தேங்காய்ப் பிண்ணாக்கு விலை குறைவாக (ஒரு கிலோ 26 ரூபாய்) கிடைக்கிறதால தீவனச்செலவு குறையுது. அதே நேரத்துல பெரிய ரோட்டரி வெச்சிருக்குற செக்குகள்ல தேங்காய்ப் பிண்ணாக்கு வாங்க மாட்டோம். ஏன்னா, அதுல சல்பர் கலந்திருக்கும். சின்னச் செக்குகள்ல வாங்கும்போது ஓரளவுக்குச் சுத்தமான பிண்ணாக்கு கிடைக்கும். பிண்ணாக்கை 6 மணி நேரம் தண்ணீர்ல ஊற வச்சு, தவிட்டுல கலந்து கொடுப்போம்.

அடுத்த 15 நாட்களுக்குத் தினமும் 6 கிலோனு படிப்படியா அதிகரிச்சுக்கிட்டே போவோம். சமயத்துல மீன்கள் முழுசையும் சாப்பிட்டுடுச்சுனா தீவனத்தை அதிகப்படுத்த ஆரம்பிச்சிடுவோம். நாலரை மாசத்துக்குப் பிறகு மீன்களைப் பிடிச்சு, விற்பனை செய்ய ஆரம்பிப்போம். கட்லா, கண்ணாடி கெண்டை ரெண்டு ரகமும் சீக்கிரத்துல வளர்ந்திடும். நாலரை மாசத்துலயே 500 கிராம்ல இருந்து 600 கிராம் எடைக்கு வந்திடும். அதுமாதிரியான மீன்களைப் பிடிச்சு விற்பனை செஞ்சிட்டோம்னா, மற்ற ரகங்கள் இன்னும் வேகமா எடை கூடும். விற்பனை வாய்ப்புக்கு ஏத்த மாதிரி குளத்துல மீன்களைப் பிடிச்சு விற்பனை செய்வோம். உயிர் மீனா விற்பனை செய்றதுனால, நல்ல வரவேற்பு இருக்கு” என்ற ரங்கநாதன் நிறைவாக, வருமானம் குறித்து சொன்னார்.

6 மாதங்கள், ரூ.6 லட்சம் வருமானம்!

“மீன்களைக் குளத்துல பிடிச்ச உடனே சிமெண்ட் தொட்டிக்கோ, ‘பிளாஸ்டிக் ட்ரே’க்கோ மாத்த மாட்டோம். அதுக்காக 2 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 1 மீட்டர் உயரத்துல மூடியோடு இருக்குற ஹாப்பாவை குளத்துக்குள்ளயே வெச்சிருக்கோம். அதனால மீன்களைப் பிடிச்ச பிறகும் ரொம்ப நேரம் உயிரோட வெச்சிருக்க முடியும். 6 மாசத்துல எல்லா மீன்களையும் முழுமையா பிடிச்சி விற்பனை செஞ்சிடுவோம். 2 ஆயிரம் மீன்கள் விடுறப்போ, இறக்குற மீன்கள் எல்லாம் போக, சராசரியா ஒரு டன் அளவுக்கு மீன்கள் கிடைக்கும். மொத்த விலையில் ஒரு கிலோ 120 ரூபாய்னும் சில்லறை விலையில ஒரு கிலோ 150 ரூபாய்னும் விற்பனை செய்றோம். மொத்த விலையையே கணக்குல எடுத்துக்கிட்டாலும்...

ஒரு ஏக்கர் மீன் குளம் மூலமா 6 மாசத்துல 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சிடும். 5 ஏக்கருக்கு கணக்கு பண்ணினா 6 லட்ச ரூபாய் வருமானம். இதுல பாதிக்குப் பாதிச் செலவு போக, 3 லட்ச ரூபாய் லாபமா கிடைச்சிடும். ஆக, வருஷத்துக்கு 6 லட்ச ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைக்கிது. இது குறைஞ்சபட்ச கணக்குதான். சில்லறை விற்பனை அதிகமாச்சுனா இன்னமும் லாபம் கூடும்” என்று மகிழ்ச்சியாகச் சொன்ன ரங்கநாதன், மீன் விற்பனையில் மும்முரமானார்.

தொடர்புக்கு, ரங்கநாதன், செல்போன்: 94867 34008.

குளம் தயாரிப்பு!

குளம் தயாரிப்பு குறித்துப் பேசிய ரங்கநாதன், “ஒரு ஏக்கர் பரப்பில் 8 அடி ஆழத்துக்குக் குளம் வெட்ட வேண்டும். ஒரு குளத்துக்கு 100 கிலோ வீதம் கிளிஞ்சல் சுண்ணாம்பு போட்டு, 2 அடி உயரத்துக்குத் தண்ணீர் விட வேண்டும். பிறகு, 2 டன் ஈரச் சாணத்தைத் தண்ணீரில் கரைத்து மேலும்

2 அடி உயரத்துக்குத் தண்ணீர் விட வேண்டும். அடுத்த ஒரு வாரத்தில் தேவையான அளவு தாவர நுண்ணுயிரிகள் உருவாகியிருக்கும்.

உள்ளங்கையைத் தண்ணீருக்குள் விட்டுப் பார்க்கும்போது மங்கலாகத் தெரிந்தால், போதுமான அளவு நுண்ணுயிரிகள் உருவாகிவிட்டன என்று தெரிந்துகொள்ளலாம். அப்படி இல்லாமல் வெளுப்பாகத் தெளிவாகத் தெரிந்தால், இன்னமும் ஈரச் சாணத்தைக் கரைத்துவிட வேண்டும்.

தாவர நுண்ணுயிரிகள் உருவான பிறகுதான் மீன் குஞ்சுகளைக் குளத்துக்குள் விட வேண்டும். தொடர்ந்து மாதம் 400 கிலோ ஈர சாணத்தைக் கரைத்து விட்டு வர வேண்டும். அனைத்து மீன்களையும் பிடித்த பிறகு, குளத்திலிருந்து தண்ணீரை முழுமையாக வெளியேற்றி,

15 நாட்கள் வெயிலில் குளத்தைக் காய விட வேண்டும். பிறகு மீண்டும் இதே முறையில் தண்ணீர் விட்டு தயார் செய்ய வேண்டும்” என்றார்.

ஹாப்பா!

5 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.6 லட்சம் லாபம்... நிறைவான வருமானம் தரும் மீன் வளர்ப்பு!

“மீன் குஞ்சு விற்பனை நிலையங்களில் தீவனத்துக்கான ‘வெலான் ஸ்கிரீன் ஹாப்பா’ (Velon Screen Happa P 16) மற்றும் மீன் இருப்பு செய்வதற்கான மூடியுடன் கூடிய ஹாப்பா ஆகியவை கிடைக்கின்றன. குறிப்பாகத் தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் போன்ற பகுதிகளில் இந்த ஹாப்பாக்கள் கிடைக்கின்றன. தீவன ஹாப்பாவின் விலை 500 ரூபாய். மூடியுடன் கூடிய ஹாப்பாவின் விலை 750 ரூபாய். இவை இரண்டு ஆண்டுகள் வரை தாங்கும்.

1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம்,  1 மீட்டர் உயரம் கொண்ட ‘வெலான் ஸ்கிரீன் ஹாப்பா p(16)’ங்கற வலைத் தொட்டியில பரவலா தீவனத்தைக் கொட்டிடுவோம். தீவனம் பரவலா இருக்குறதால, ஒரே சமயத்துல எல்லா மீன்களும் உறிஞ்சி எடுத்துக்கும். குளத்தோட ஆழமான பகுதியில நாலு சவுக்குக் கம்புகளை நட்டு, அதுலதான் ஹாப்பா அமைச்சிருக்கோம். பாதியளவு தண்ணீர்க்கு உள்ளேயும் பாதியளவு தண்ணீருக்கு மேலயும் இருக்குற மாதிரி ஹாப்பா அமைச்சிருக்கோம். ஒரு ஏக்கர் குளத்துல வளரும் மீன்களுக்கு... வளர்ப்புக் குளத்துல விட்ட முதல் 15 நாட்களுக்குத் தினமும் 3 கிலோ தீவனம் கொடுப்போம். அடுத்த 15 நாட்களுக்குத் தினமும் நாலரை கிலோ கொடுப்போம்.”

ஏக்கருக்கு 80 ஆயிரம் ரூபாய் மானியம்!

தமிழ்நாடு மீன் வளத்துறை மூலம் மீன் குளம் வெட்ட ஒரு ஏக்கருக்கு 80 ஆயிரம் ரூபாய் மானியம் கிடைக்கிறது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள மீன் வளத்துறை அலுவலகங்களை அணுகினால் அதற்கான விவரங்கள் கிடைக்கும். தஞ்சாவூரில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் இந்த பகுதி விவசாயிகள் தகவல்களைப் பெறலாம்.
 
தொடர்புக்கு: 04362 235389. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு