Published:Updated:

சொட்டுநீர்ப் பாசனம்... சொட்டுச் சொட்டாக நீர்... கட்டுக் கட்டாக லாபம்! - 4

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சொட்டுநீர்ப் பாசனம்... சொட்டுச் சொட்டாக நீர்... கட்டுக் கட்டாக லாபம்! - 4
சொட்டுநீர்ப் பாசனம்... சொட்டுச் சொட்டாக நீர்... கட்டுக் கட்டாக லாபம்! - 4

தூசுக்களை வடிகட்டும் வடிப்பான்கள்...பாசனம்ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

பிரீமியம் ஸ்டோரி

ண்ணீருக்காக ‘மூன்றாம் உலகப்போர் மூளும்’ என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள். ஆனால், நம் நாட்டில் மாநிலங்களுக்கு இடையிலேயே தண்ணீருக்காகப் போர் மூண்டுகொண்டிருக்கிறது. இந்தச் சம்பவங்களெல்லாம் நாம் விழித்துக்கொள்வதற்கான சமிக்ஞைகள்தான். இனியாவது தண்ணீரைப் பணத்தைப் போல எண்ணி எண்ணிச் செலவழிக்க வேண்டும். அதற்கு முறையான சொட்டுநீர்ப் பாசனம், அதற்கான கருவிகள், கருவிகளைப் பராமரிக்கும் முறைகள் போன்றவை குறித்து அலசுகிறது இக்குறுந்தொடர். சொட்டுநீர்ப் பாசன முறைகள் குறித்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த வேளாண் பொறியாளரும் நீரியல் வல்லுநருமான இளமுருகு பகிர்ந்துகொண்ட தகவல்கள் தொடர்கின்றன.

சொட்டுநீர்ப் பாசனம்... சொட்டுச் சொட்டாக நீர்... கட்டுக் கட்டாக லாபம்! - 4

“கிணறு அல்லது போர்வெல்லில் இருந்து மின்மோட்டார் மூலமாக எடுக்கப்படும் தண்ணீர், குழாய் மூலமாக வெளியே வந்து தொட்டி அல்லது வாய்க்காலில் கொட்டும் இடத்தில் இருந்து தொடங்குகிறது, சொட்டு நீருக்கான அமைப்பு. மோட்டார் பம்ப்செட்டில் தண்ணீர் வெளிவரும் குழாயை அப்படியே சொட்டுநீர்க் குழாயில் இணைத்துத் தண்ணீர் பாய்ச்ச முடியாது.

அப்படிப் பாய்ச்சினால், கிணற்றிலிருந்து வரும் சிறிய கற்கள், மண் துகள்கள், பச்சைப்பாசிகள் ஆகியவை சொட்டு நீர்க் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்திவிடும். அதனால் அத்தண்ணீரை வடிகட்டி அனுப்புவதற்கான சாதனத்தைப் பொருத்த வேண்டியது அவசியம். தவிர அச்சாதனத்தோடு திரவ உரங்களைப் பயிருக்குக் கொடுக்க உதவி செய்யக்கூடிய சாதனமான உரத்தொட்டியையும் அமைக்க வேண்டும்.

உரத்தொட்டி (Fertiliser Tank)

முதலில் உரத்தொட்டி அமைத்து அதற்கடுத்ததாகத்தான் வடிப்பான் அமைக்க வேண்டும். வடிப்பானில்தான் சொட்டுநீர்க்குழாயைப் பொருத்த வேண்டும். பெரும்பாலான ரசாயன உரங்கள் தற்போது திரவ வடிவிலும் கிடைக்கின்றன. முக்கியமானதாக இயற்கை விவசாயிகள்... பஞ்சகவ்யா, அமுதகரைசல், ஜீவாமிர்தம் ஆகியவற்றைப் பயிருக்குக் கொடுக்க, இந்த உரத்தொட்டி பெரிதும் பயன்படும். உரத்தொட்டிகளில் இரண்டு வகைகள் உள்ளன. உருளையாக ‘சிலிண்டர்’ வடிவில் இருக்கும் உரத்தொட்டி ஒரு வகை. இதற்குள் தேவையான அளவு உரங்களைப் போட்டு வைத்தால்... உரத்தொட்டியில் இணைக்கப்பட்டுள்ள குழாய் வழியாகத் தண்ணீர் உரத்தொட்டிக்குள் சென்று உரங்கள் கரைந்து, சொட்டு நீர்க் குழாய் வழியாகப் பாசன நீருடன் கலந்து பயிர்களுக்குச் சென்றுவிடும். 30, 60 மற்றும் 90 லிட்டர் அளவுகளில் கிடைக்கும். இந்த வகை உரத்தொட்டி 6 ஆயிரம் ரூபாயில் இருந்து கிடைக்கிறது. நீர் அழுத்தம் குறைந்த இடங்களில்கூட இந்த வகை உரத்தொட்டி சிறப்பாகச் செயல்படும்.

விரிகுழாய் (Ventury)

சொட்டுநீர்ப் பாசனம்... சொட்டுச் சொட்டாக நீர்... கட்டுக் கட்டாக லாபம்! - 4

உரத்தொட்டியின் மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் விரிகுழாய் என்கிற ‘வென்ச்சுரி’. இது இரண்டாவது வகை. இதில் தொட்டி இருக்காது. அதற்குப் பதிலாக ‘ஃபுட்வால்வ்’ உடன் கூடிய சிறிய குழாய் மட்டுமே இருக்கும். தேவையான உரத்தை நாம் ஒரு தொட்டியில் அல்லது பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு, தண்ணீர் ஊற்றி அதில் இந்த ஃபுட்வால்வுடன் கூடிய குழாயைப் போட்டு, கேட்வால்வைத் திறந்துவிட்டால் உரம் தண்ணீரோடு கலந்து பயிருக்குப் போய்ச் சேர்ந்துவிடும். பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் போன்ற இயற்கை இடுபொருட்களைப் பாசன நீருடன் கலந்து கொடுக்கும் விவசாயிகளுக்கு உரத்தொட்டியைவிட, இந்த வென்ச்சுரிதான் ஏற்றது. இது, 3 ஆயிரம் ரூபாயில் இருந்து கிடைக்கிறது. உரத்தொட்டியைவிட இது பலவகைகளில் சிறப்பானது என்றாலும், போதுமான நீர் அழுத்தம் இருந்தால்தான் இந்த அமைப்பு சிறப்பாகச் செயல்படும். அழுத்தம் குறைவாக உள்ள இடங்களில் இது பயன்படாது” என்ற இளமுருகு, வடிப்பான்கள் குறித்துச் சொன்னார்.

மணல் வடிப்பான் (Sand Filter)

சொட்டுநீர்ப் பாசனம்... சொட்டுச் சொட்டாக நீர்... கட்டுக் கட்டாக லாபம்! - 4

“உரத்தொட்டிக்கு அடுத்து சொட்டு நீர் செல்லும் முதன்மைக் குழாயில் அமைக்கப்படுவது, வடிப்பான் எனப்படும் ஃபில்டர். இந்த வடிப்பான்களில் மணல் வடிப்பான் மற்றும் துணி வடிப்பான் மற்றும் தட்டு வடிப்பான் என மூன்று வகைகள் உள்ளன. உரத்தொட்டியை தொடர்ந்து ‘சேண்ட் ஃபில்டர்’ எனப்படும் மணல் வடிப்பான் பொருத்தப்படும். சில இடங்களில் போர்வெல்லில் இருந்து, தண்ணீருடன் மணல் வந்துகொண்டே இருக்கும். அதுபோன்ற இடங்களுக்கு மணல் வடிப்பான் மிகவும் ஏற்றது. அதேபோல கிணறுகளில் உள்ள பச்சை நிறப் பாசிகளையும் இது தடுத்து, அடைப்பு ஏற்படுத்தாமல் பாதுகாக்கும். பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் உள்ளிட்ட கரைசல்களையும் வடிகட்டி அனுப்பும். பாசனம் முடிந்தவுடன் வடிப்பானின் மேல் பகுதியில் தேங்கி நிற்கும் தூசு, மணல், பாசிகள் ஆகியவற்றை... ‘பேக் ஃபிளஷ்’ என்ற முறையில், கீழ்நோக்கி வரும் தண்ணீரை கேட் வால்வு மூலமாக மேலே செல்ல வைத்து அலசி வெளியேற்ற வேண்டும்.
 
திரை வடிப்பான் (Screen Filter)

மணல் வடிப்பானில் பெரிய தூசுகள் வடிகட்டப்பட்டாலும், அதையும் தாண்டி வரும் சிறிய தூசி துகள்களை வடிகட்ட திரை வடிப்பான் என்கிற ‘ஸ்கிரீன் ஃபில்டர்’ பயன்படுகிறது. சிறிய தூசுகள் மட்டுமே வரக்கூடிய இடங்களில் ஸ்கிரீன் ஃபில்டர் மட்டுமே போதுமானதாக இருக்கும். ஆனால், பெரிய கற்கள் வரும் இடங்களில் இது பயன்படாது. ஆனால், மணல் வடிப்பானுக்கு அடுத்து இதை அமைத்துப் பயன்படுத்தலாம்.
 
தட்டு வடிப்பான் (Disc Filter)

சொட்டுநீர்ப் பாசனம்... சொட்டுச் சொட்டாக நீர்... கட்டுக் கட்டாக லாபம்! - 4

ஸ்கிரீன் ஃபில்டர் போன்று ‘டிஸ்க் ஃபில்டர்’ என்ற தட்டு வடிப்பானும் சிறிய தூசு துகள்களை வடிகட்டுகிறது. தட்டு தட்டாகச் சிறிய கம்பி வலைமூலமாக இணைக்கப்பட்ட பல தட்டுகள் அடுக்கப்பட்ட அமைப்பு டிஸ்க் ஃபில்டர் எனப்படுகிறது. இதற்குள் தண்ணீர் செல்லும்போது, சிறிய தூசு துகள்கள் வடிகட்டப்படுகின்றன. ஸ்கிரீன் ஃபில்டரைவிட டிஸ்க் ஃபில்டர் சிறப்பானது. அதே நேரம் இதன் விலையும் சற்று அதிகம் என்பதால் பெரும்பாலான விவசாயிகள் ஸ்கிரீன் ஃபில்டரையே அமைக்கிறார்கள்” என்ற இளமுருகு,

“மேற்படி அமைப்புகளை அமைத்த பிறகு, முதன்மைக் குழாய், துணைக்குழாய், லேட்ரல் ஆகியவை மூலமாகத் தண்ணீர் பயிரை அடைகிறது. சுருக்கமாகச் சொன்னால், ஒரு சொட்டு நீர் அமைப்பு... கிணற்றில் இருந்து வரும் தண்ணீர், உரத்தொட்டி, மணல் வடிப்பான், ஸ்கிரீன் ஃபில்டர் வழியாக வடிகட்டப்பட்டு சுத்தமான தண்ணீராக முதன்மைக் குழாய் மூலம் பயிரை அடையும் முறையில் செயல்படுகிறது” என்றார்.

ஒவ்வொரு பயிருக்கும் தேவையான தண்ணீரின் அளவு, அரசு மானியங்கள் ஆகியவை குறித்து அடுத்த இதழில்...

-தண்ணீர் சொட்டும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு