Published:Updated:

“நிலத்தை வித்துட்டு பணத்தையா திங்க முடியும்..!” - பாடம் சொல்லும் படம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“நிலத்தை வித்துட்டு பணத்தையா திங்க முடியும்..!” - பாடம் சொல்லும் படம்!
“நிலத்தை வித்துட்டு பணத்தையா திங்க முடியும்..!” - பாடம் சொல்லும் படம்!

கடலை - திரை விமர்சனம் பசுமைக் குழு

பிரீமியம் ஸ்டோரி
“நிலத்தை வித்துட்டு பணத்தையா திங்க முடியும்..!” - பாடம் சொல்லும் படம்!

“விவசாய நிலத்தையெல்லாம் பட்டாபோட்டு வீடுகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாற்றக் கூடாதுனு சட்டத்துலயே இடம் இருக்கு. சட்டத்தை மீறிக்கிட்டே போனா... விவசாயம் பண்றதுக்கு இடமே இல்லாம போயிடும்’’

“நிலத்தை வித்துட்டு பணத்தையா திங்க முடியும்..!” - பாடம் சொல்லும் படம்!

- வலி மிகுந்த ஒரு வரி வசனத்தை வலிமையாகச் சொல்லும் திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘கடலை’. தீபாவளி வெளியீடுகளான பரபரப்புத் திரைப்படங்களுக்கு நடுவில் வெளியாகி, பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது விவசாயம் பேசும் இந்தக் கடலை.

மாவட்ட ஆட்சித் தலைவர், தன் சாப்பாட்டில் கைவைக்கும் மதியவேளையில், அவரை விவசாயிகள் அதிரடியாகச் சந்திக்கும் காட்சியுடன்தான் படம் ஆரம்பிக்கிறது. ‘சார் உங்களுக்கு இன்னைக்குச் சாப்பாடு கிடைச்சிருக்கு, நாளைக்குக் கிடைச்சுரும்ங்குற நம்பிக்கை இருக்கு. ஆனா... நாளான்னைக்கு? விவசாய நிலத்தைப் பிளாட் போட்டா, அடுத்த தலைமுறை வெறும் மாத்திரையை மட்டும் சாப்பிட்டுட்டு... அரிசியையும், தக்காளியையும் மியூசியத்துலதான் பார்க்கவேண்டி இருக்கும்’

-இப்படியொரு சாட்டையடி வசனத்துடன்தான் படத்தை எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பி.சகாயசுரேஷ்.

‘விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு விற்பனை செய்யக்கூடாது’ என்பதில் வைராக்கியமாக இருக்கும் பொன்வண்ணன், தன் ஊரில் யாரையும் விற்கவிடாமலும் தடுத்துக்கொண்டே இருக்கிறார். ஒரு விவசாயியாகவே படத்தில் வாழவும் செய்கிறார் பொன்வண்ணன். இவரின் மகனாக நடித்திருக்கிறார், மா.கா.பா. ஆனந்த். அப்படியே அப்பாவுக்கு நேர் எதிர். விவசாயத்தில் சற்றும் ஆர்வமில்லாதவராக ஊர் சுற்றுகிறார். இவரும் யோகிபாபுவும் சேர்ந்துகொண்டு ஊருக்குள் செய்யும் சேட்டைகள், அச்சுஅசலாகக் கிராமத்துக் குறும்புகளைக் கண்முன்னே கொண்டு வருகின்றன.

பத்தாம் வகுப்புப் படிக்கும்போது மாநிலத்திலேயே முதல்மாணவனாக வரும் பொன்வண்ணன், ‘நான் விவசாயப் படிப்புப் படிக்கப் போறேன்’ என்று சொல்லும்போது, ஊரே ஆச்சர்யமாகப் பார்க்கிறது. ‘மகனை டாக்டராக்க வேண்டும்... இன்ஜினீயராக்க வேண்டும்’ என்று கனவு கொண்டிருந்த அப்பா, அதிர்ச்சியில் இறந்தே போகிறார். இதனால் விவசாயம் படிக்க முடியாமல் போய்விடுகிறது பொன்வண்ணனுக்கு. தன் மகனாவது படிக்கவேண்டும் என்று வேளாண் கல்லூரியில் சேர்த்து விடுகிறார். ஆனால், விவசாயத்தைத் துச்சமெனப் பேசி எதிர்வாதம் செய்யும் மகன், ‘நானே பெரியாளாகிக் காட்டுறேன்’ என்று வசனம் பேசுகிறார். விவசாயம் படிக்கும் ஐஷ்வர்யா ராஜேஷ், தன் தோழிகளுடன் விவசாயப் பயிற்சி எடுக்கப் பொன்வண்ணனிடம் வருகிறார். இதை வைத்து, காதல் கடலையும் போட வைத்திருக்கிறார்கள். இடைவேளை வரை காதல், காமெடி என்றே பயணிக்கும் கதை, கலகலப்பாகவும் பயணிக்கிறது.

“நிலத்தை வித்துட்டு பணத்தையா திங்க முடியும்..!” - பாடம் சொல்லும் படம்!

இதற்கிடையில், விவசாய நிலங்களை வாங்கிக் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்பனை செய்யும் ‘ரியல் எஸ்டேட்’ முதலை ஜான்விஜய், அந்த ஊரில் 500 ஏக்கர் நிலத்தை மொத்தமாக வாங்க முயல்கிறார். பொன்வண்ணனின் எதிர்ப்பால் அது நிறைவேறாத நிலையில், பணத்தாசை காட்டி மா.கா.பாவை தன் வலையில் விழவைக்கிறார். ஊரில் உள்ள எல்லோருடைய நிலங்களையும் வாங்கிக் கொடுக்கும் மா.கா.பா, தன் அப்பாவின் நிலத்தையும் வாங்க முயற்சி செய்கிறார். விவசாய நிலங்கள் என்னவாகின... காதல் கைகூடியதா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

‘லாப நஷ்டம் பார்க்குறதுக்கு விவசாயத்தை நாங்க தொழிலா பண்ணல... அடுத்தவன் பசியைப் போக்குற கடமையா பண்ணிட்டிருக்கோம்’, ‘உன்ன விதைச்சா மக்கிப் போயிடுவ... நம்பிக்கையோடு ஒரு விதையை விதைச்சுப் பாரு அப்படியே அள்ளித்தரும்’, ‘நிலத்தை வித்துட்டு, பணத்தையாடா திங்க முடியும்’ என்று வரிசையான வசனங்களால் பொன்வண்ணன் தோரணம் கட்ட...

‘நாங்க கேட்டுப் பார்ப்போம், கொடுக்கலைனா நாங்களே எடுத்துக்குவோம்’ என்று எதார்த்த நிலையை ஒரே வரியில் சொல்லி மடக்குகிறார் ரியல் எஸ்டேட் முதலையாக வரும் ஜான்விஜய்.
 
தன் அம்மாவுக்கும் மேலாகத் தான் வணங்கிவரும் நிலத்தை விற்கும் நிலைக்கு விவசாயி தள்ளப்படுவதற்கான காரணம் தொடங்கி, விவசாயிகளை வைத்து இங்கே நடத்தப்படும் அரசியல் வரை பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன அலசுவதற்கு. அவற்றையெல்லாம் கொஞ்சம் போலவாவது தொட்டுக் காட்டியிருக்கலாம் என்கிற ஆதங்கம் பொங்கத்தான் தியேட்டரை விட்டு வெளியே வரவேண்டியிருக்கிறது என்றாலும், விவசாயம் பற்றித் திரைப்படங்கள் வருவதே அபூர்வம் என்கிற நிலையில், ‘ரியல் எஸ்டேட்காரனுக்கு விளைநிலத்தை விற்கக்கூடாது’ என்பதை நேர்கோட்டில் பயணித்துச் சொல்லியதற்காகவே ‘கடலை’யை தாராளமாக வரவேற்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு