Published:Updated:

அறிக்கைப் போர் நடத்தும் அரசியல்வாதிகள்... அலட்சியப்படுத்தும் ஆலைகள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அறிக்கைப் போர் நடத்தும் அரசியல்வாதிகள்... அலட்சியப்படுத்தும் ஆலைகள்...
அறிக்கைப் போர் நடத்தும் அரசியல்வாதிகள்... அலட்சியப்படுத்தும் ஆலைகள்...

பிரச்னை துரை.நாகராஜன்

பிரீமியம் ஸ்டோரி

ற்போது தமிழகத்தில் அத்தனை அரசியல் தலைவர்களும் மாற்றி மாற்றி அறிக்கை விடுவது, கரும்பு விவசாயிகளின் பிரச்னைக்காகத்தான். ‘மூன்று ஆண்டுகளாகக் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை அரசு உடனே பெற்றுத்தர வேண்டும்’ என அனைவரும் அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். எதிரி, உதிரி கட்சிகளெல்லாம் ஒன்று சேர்ந்து இப்படி ஆளும் கட்சியை நிர்பந்தப்படுத்துவது ஆரோக்கியமான விஷயம்தான் என்றாலும்... இது சமீபகாலத்தில் கிளம்பிய பிரச்னை அல்ல. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகக் கரும்பு விவசாயிகள் அனுபவித்து வரும் சோகம் இது.

அறிக்கைப் போர் நடத்தும் அரசியல்வாதிகள்... அலட்சியப்படுத்தும் ஆலைகள்...

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர், சுந்தர விமல்நாதன், “சர்க்கரை விலை குறைந்ததால், மாநில அரசு பரிந்துரைத்த விலையைக் கொடுக்க முடியவில்லை என்று தனியார் ஆலை அதிபர்கள் சொல்கிறார்கள்.

கடந்த ஆண்டு விலை குறைந்தது உண்மைதான். அதனால், எந்த ஆலையும் நஷ்டமடையவில்லை. லாபம் வேண்டுமானால் சற்றுக் குறைந்திருக்கலாம். ஆனால், விலை குறைவைக் காரணம் காட்டி விவசாயிகளை வஞ்சித்து வருகிறார்கள். இந்த ஆண்டு நல்ல விலைக்குத்தான் சர்க்கரை விற்பனையாகிறது. ஆனால், ‘இந்த விலை கட்டுபடியாகவில்லை’ எனச் சொல்லி விவசாயிகளைத் தட்டிக் கழிக்கிறார்கள், ஆலை அதிபர்கள்” என்றவர் தொடர்ந்தார்.

“1999-ம் ஆண்டில், தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம், ‘கரும்புக்கு மாநில அரசு பரிந்துரைக்கும் விலையை ரத்துச் செய்ய வேண்டும்’ என உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அக்கோரிக்கையை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் 2004-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் இதே ரீதியில் வழக்கு தொடரப்பட்டு... அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவ்வழக்கின்போது, ஜெயலலிதாதான் தமிழக முதல்வராக இருந்தார். அப்போது... ‘மாநில அரசு நிர்ணயிக்கும் விலையை, ஆலைகள் கண்டிப்பாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்’ எனத் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அறிக்கைப் போர் நடத்தும் அரசியல்வாதிகள்... அலட்சியப்படுத்தும் ஆலைகள்...ஆனால், 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை நிலுவைத்தொகை வழங்கப்படாததை ஜெயலலிதா கண்டுகொள்ளவேயில்லை. இத்தொகையை விவசாயிகளுக்குப் பெற்றுத் தருவதற்காகத் தனி அதிகாரிகளை நியமிக்கவேயில்லை. சர்க்கரைத்துறை இயக்குநரகமும் இப்பிரச்னையைக் கண்டுகொள்ளவில்லை.
 
2014-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா, ‘கரும்புக்கான மானிய விலை டன்னுக்கு 550 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்’ என அறிவித்தார். ஆனால் அந்த உத்தரவு இன்று வரை பேச்சளவில்தான் இருக்கிறது. அது சட்டமாக்கப்பட்டிருந்தால், ஒருவேளை நிலுவைத்தொகையை விவசாயிகள் இந்நேரம் பெற்றிருக்க முடியும். ஆனால் அப்போதைய சூழ்நிலையில், தற்போது அறிக்கை விடும் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சட்டம் இயற்றக்கோரி சட்டசபையில் குரல் கொடுக்கவில்லை. ஆனால், கர்நாடக மாநிலத்தில் இது குறித்துத் தனிச் சட்டமே இயற்றப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள 519 சர்க்கரை ஆலைகளில் 15 ஆயிரத்து 713 கோடி ரூபாய் பாக்கி வைக்கப்பட்டிருந்தது. விவசாயிகளின் தொடர் போராட்டங்களின் பலனாக ஆலைகள் பாக்கித்தொகையை வழங்க ஆரம்பித்தன. தற்போது, பாக்கித்தொகை 6 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மொத்தமாக 1,412 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. வழக்குத் தொடரக்கூட முடியாமல் விவசாயிகள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அறிக்கைப் போர் நடத்தும் அரசியல்வாதிகள்... அலட்சியப்படுத்தும் ஆலைகள்...

2011-12-ம் ஆண்டில், 6 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. 2015-16-ம் ஆண்டில் அது, 4 லட்சத்து 53 ஆயிரம் ஏக்கராகக் குறைந்துவிட்டது. அடுத்த ஆண்டு இன்னமும் குறையத்தான் வாய்ப்புள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு அதிகாரியை நியமித்து நிர்வாகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுபோல, கரும்பு ஆலைகளைக் கட்டுப்படுத்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பதுதான், எங்களது கோரிக்கை” என்றார், சுந்தர விமல்நாதன்.

இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன், “சமீபத்தில் நடந்த காத்திருப்புப் போராட்டத்தின்போது, அரசு தரப்பில், தனியார் ஆலைகள் கொடுக்க வேண்டிய பணத்தைப் பெற்றுத்தருவோம் என உறுதியளிக்கப்பட்டது.

அதன்படி, தனியார் ஆலைகளும், கூட்டுறவு ஆலைகளும் 10 சதவிகித நிலுவைத்தொகையை வழங்கியிருக்கின்றன. இது யானைப்பசிக்குச் சோளப்பொரி போலத்தான். முழுத்தொகையையும் வழங்கினால் மட்டுமே தமிழகக் கரும்பு விவசாயிகளைக் காப்பாற்ற முடியும்” என்றார்.

 இந்நிலையில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் இடைத்தேர்தலுக்கு பிறகு முத்தரப்புக் கூட்டம் நடத்தி கரும்பு விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு