Published:Updated:

கால்நடைகளுக்கும் செயற்கைக் கால்... அரசு மருத்துவரின் அர்ப்பணிப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கால்நடைகளுக்கும் செயற்கைக் கால்... அரசு மருத்துவரின் அர்ப்பணிப்பு!
கால்நடைகளுக்கும் செயற்கைக் கால்... அரசு மருத்துவரின் அர்ப்பணிப்பு!

சேவைஸ்ரீலோபாமுத்ரா

பிரீமியம் ஸ்டோரி

னிதர்களுக்குப் பொருத்தப்படும் செயற்கைக் கால்களைப் போல கால் நடைகளுக்கெனப் பிரத்யேகமான செயற்கைக் கால்களை உருவாக்கி யிருக்கிறார், ஜெய்ப்பூரில் வசிக்கும் அரசு கால்நடை மருத்துவர் தபேஷ் மாத்தூர். காலில் அடிபட்டு அநாதைகளாக விடப்பட்ட பல பசுக்கள் இவரது முயற்சியால், நடமாடி வருகின்றன.

கால்நடைகளுக்கும் செயற்கைக் கால்... அரசு மருத்துவரின் அர்ப்பணிப்பு!

இதுகுறித்து மருத்துவர் தபேஷ் மாத்தூரிடம் பேசினோம். “விபத்துகளில் காலை இழந்த எண்ணற்ற பசுக்களுக்குச் சிகிச்சை அளித்திருக்கிறேன். சிகிச்சைக்குப் பிறகு, எவரும் ஊனமுற்ற பசுக்களை வளர்ப்பதில் அக்கறை காட்டுவதில்லை. இப்படி முக்கியத்துவம் இழப்பதால், போதிய பராமரிப்பின்றி, பாதிக்கப்பட்ட பசுக்கள் இறந்துவிடுகின்றன. அதைத் தடுக்கும் யோசனையில் உருவானதுதான் இது.
 
2007-ம் ஆண்டு என் வீட்டில் ஓர் அறையை ஆராய்ச்சிக் கூடமாக மாற்றியமைத்தேன். தொடர்ந்து மனிதர்களுக்கான செயற்கைக் கால்களைத் தயாரிக்கும் நிறுவனங்களைத் தொடர்புகொண்டு அந்தத் தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டேன். அடர்த்தியான பிளாஸ்டிக் மூலப்பொருளைப் (HDPE) பயன்படுத்தி 300 கிலோ அளவு எடையைத் தாங்கக்கூடிய அளவில், கால்நடைகளுக்கான உறுதியான செயற்கைக் கால்களை உருவாக்கினேன். ஆரம்பத்தில் அவற்றை இரண்டு பசுக்களுக்குப் பொருத்தியதில், சரியாக அமையவில்லை. தொடர்ந்து முயற்சி எடுத்து குறைகளைக் களைந்து செயற்கைக் கால்களை உருவாக்கினேன்” என்ற தபேஷ் மாத்தூர், தொடர்ந்தார்.

கால்நடைகளுக்கும் செயற்கைக் கால்... அரசு மருத்துவரின் அர்ப்பணிப்பு!

“இரண்டரை ஆண்டுகளுக்கு முன் விபத்தில் காயமடைந்த மூன்று வயதான பசுவுக்குச் சிகிச்சை அளித்தபோது, முழங்காலுக்குக் கீழே காலை வெட்ட வேண்டி வந்தது. அந்தப் பசுவுக்குச் செயற்கைக் காலைப் பொருத்திப் பார்த்தேன். ஆரம்பத்தில் அது, செயற்கைக் காலை ஏற்றுக்கொள்ளாமல் முரண்டு பிடித்தது. தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சைக்கு உட்படுத்திய பிறகு, செயற்கைக் காலைப் பயன்படுத்தப் பழகியது. சிறிது நாட்களிலேயே நடக்கவும் ஓடவும் செய்தது. கிருஷ்ணா என்ற பெயர் கொண்ட அந்தப் பசுவின் மூலம் எனது ஆராய்ச்சி வெற்றி பெற்றதால், நான் தயாரித்த செயற்கைக் காலுக்கு ‘கிருஷ்ணா கால்’ (Krishna Limb) எனப் பெயரிட்டேன்.

இந்தச் செயற்கைக் காலை இரவில் அகற்றி கொள்ளலாம். இதுவரை முப்பத்தைந்து பசுக்கள் மற்றும் இரண்டு நாய்கள், ஒரு குதிரை ஆகியவற்றுக்கு நான் தயாரித்த செயற்கைக் கால்களைப் பொருத்தியி ருக்கிறேன். அவற்றில் பல பசுக்கள் ஆதரவற்றவை. இப்போது முழங்காலுக்கு மேல் உள்ள பகுதிக்கும் சேர்த்துச் செயற்கைக் காலை உருவாக்கும் ஆராய்ச்சியில் இருக்கிறேன்” என்ற தபேஷ் மாத்தூர் நிறைவாக,

“பத்திரிகையாளராகப் பணிபுரியும் என் மனைவி டாக்டர் ஷிப்ராவும் நானும் எங்கள் மாத வருமானத்தில் குறிப்பிட்ட தொகையைச் செயற்கைக்கால்கள் தயாரிக்க ஒதுக்கி வருகிறோம். பிராணிகள் நலனில் அக்கறை கொண்ட பலரும் தாங்களாகவே முன்வந்து நன்கொடை அளிக்கின்றனர். இப்படி கால் பொருத்தும் பணியை முற்றிலும் இலவசமாகச் செய்து வருகிறோம். இந்த சேவையிலேயே எங்களை அர்ப்பணித்துக்கொள்ள நாங்கள் முடிவு செய்துவிட்டோம்” என்றார், நெகிழ்ச்சியாக.

தொடர்புக்கு, தபேஷ் மாத்தூர், செல்போன்: 099280 15504, tapeshmathur@yahoo.co.in

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு