Published:Updated:

காசு... பணம்... துட்டு... மோடி.. மோடி!

காசு... பணம்... துட்டு... மோடி.. மோடி!
காசு... பணம்... துட்டு... மோடி.. மோடி!

பிரதமர் மோடிக்கு ஜூனியர் கோவணாண்டியின் சுளீர் கடிதம்கடிதம்ஜூனியர் கோவணாண்டி, ஓவியம்: ஹரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

‘‘மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே...

உங்கள நினைக்கிறப்ப ரொம்ம்ப பெருமையா இருக்குங்கய்யா!

ஒரே ராத்திரியில, உலகத்தோட உச்ச நட்சத்திரமா மாறிடற அளவுக்கு நீங்க எடுத்த அதிரடி இருக்கு பாருங்க... எங்கள ராத்திரி, பகல்னு நடுரோட்டுல நாயா, பேயா அலைய வெச்சுடுச்சு. முதல் நாள் ராத்திரி உங்க அதிரடியைப் பத்தி பேச ஆரம்பிச்ச பலரும்... சும்மா ‘புலி’ படத்து விஜயைப் பத்தி டி.ராஜேந்தர் பாணியில... ‘இவர் அதிரடி மோடி, அடங்காத மோடி, அட்ராக்ட் பண்ற மோடி, ஆதர்ஷ மோடி, அசாத்திய மோடி, அலப்பற மோடி, ஆச்சர்ய மோடி’னு சும்மா பிச்சு உதறினாங்க. ஆனா, எனக்கென்னவோ அப்ப நம்பிக்கை வரவே இல்லீங்கய்யா.

காசு... பணம்... துட்டு... மோடி.. மோடி!

‘நீ எப்பவுமே எனக்கு எதிரி... நீ கம்யூனிஸ்ட், நீ காங்கிரஸிஸிட், நீ கலகலிஸ்ட், நீ டெரரிஸ்ட்’னு கண்டபடி முத்திரை எதையும் குத்திடாதீங்க.

இந்த ஈஸ்ட் எதுவும் நமக்குத் தெரியாதுங்க. இவ்வளவு ஏன், பிரட் தயாரிக்கிறதுக்குப் பயன்படுத்துவாங்களே ஈஸ்ட்... அதைக் கண்ணாலகூட பார்த்தது கிடையாதுங்க. ஆனா, உங்களோட கடந்தகாலச் சாதனைகளை நினைச்சுப் பார்த்தும் எனக்கு நம்பிக்கை வரவே இல்லீங்க. ‘இது பெருசா எங்கயோ போய் முட்டிக்கப் போகுது’னு நினைச்சேன். அடுத்தடுத்த நாட்கள்லயே பல்இளிக்க ஆரம்பிச்சுடுச்சு. ‘ஏதோ தப்பாயிடுச்சு... யாரோ அவரைத் திசை திருப்பிவிட்டிருக்காங்க... கூட இருந்தே குழி பறிச்சிட்டாங்க. ஆனாலும், மோடி விடமாட்டார்... சீக்கிரமே ஒரு வழி பண்ணப் போறார்’னு முதல் நாள் உங்கள ஆதரிச்சு புளகாங்கிதப் பட்டவங்ககூட இப்ப, மாத்தி மாத்தி புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க.

‘சரி இதுல உனக்கு என்ன நஷ்டம் வந்துச்சு... கத்திரிக்காயைக் கொடுத்தோமா... காசோலையை வாங்கினோமானு போயிக்கிட்டே இருந்தா உனக்கென்ன பிரச்னை’னுதானே கேக்கறீங்க. இந்தக் காசோலை... கடன்அட்டை, கழுதை அட்டை, பேடிஎம்னு கண்டதையும் சொல்றீங்க. ஆதார் அட்டை கணக்கா அதையும் கட்டாயப்படுத்திக் கொடுத்திருந்தா முடியாதுனா சொல்லிடப் போறாங்க எங்க விவசாயிங்க. வானளாவிய அதிகாரத்தை வெச்சுக்கிட்டு, வானத்துலயே பறந்துகிட்டிருக்கிற உங்கள பகைச்சுக்கிட்டு இந்த நாட்டுல வாழ்ந்திட முடியுமா என்ன? அது என்ன இழவோ... இந்த நாட்டுப்பிரஜையா விவசாயிங்க வாழணும்னா, இதையெல்லாம் ஏத்துக்கிட்டாதானே சரிப்பட்டு வரும். அதனால தலையாட்டித்தானே இருப்பாங்க. இப்ப கைரேகை, கண்ரேகையெல்லாம் எடுத்துக்கிட்டு ஆதார் அட்டையைக் கொடுத்த மாதிரி, அந்த அட்டைங்களையும் கொடுத்துத் தொலைச்சிருக்கலாம். ஆனா, இப்படிப்பட்ட விஷயங்கள் எதுக்கும் நாட்டு மக்கள முழுசா பழக்காம, திடுதிப்புனு 500 செல்லாது... 1,000 செல்லாது... செல்லாது செல்லாதுனு குழப்பிவிட்டுட்டீங்களே!

காலையில எழுந்திரிச்சி கத்திரித் தோட்டத்துக்கு உரம் வைக்கணும்... தென்னந்தோட்டத்துக்குப் பாசனம் பண்ணணும்... பருத்தித்தோட்டத்துக்கு மருந்தடிக்கணும்னு போட்டு வெச்சிருந்த திட்டமெல்லாம் தவிடுபொடியா போயிடுச்சி. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிக்குப் போனா... 500, 1,000-த்த பார்த்ததுமே... ஏதோ தீண்டத்தகாத பொருள் கணக்கா துரத்தி அடிக்கிறாங்க. உரக்கடைக்குப் போனா... கதவை இழுத்து மூடிட்டு காணாமலே போயிட்டாங்க. சரி தண்ணி பாய்ச்சுற வேலையையாவது பார்க்கலாம்னு ஆளுங்கள கூப்பிட்டா... ‘புதுநோட்டு கையில இருந்தா பேசுங்க. இல்லாட்டி ஆளைவிடுங்க’னு தோள்ல துண்டை உதறிப்போட்டுக்கிட்டு ஆளாளுக்குக் கடைத்தெரு பக்கம் நடையைக் கட்ட ஆரம்பிச்சிட்டாங்க.

காசு... பணம்... துட்டு... மோடி.. மோடி!

பயிருங்கிறது குழந்தைங்க மாதிரி. அந்தந்த சமயத்துல, அததுக்குத் தேவையானதைக் கொடுத்தாத்தான் அது தன்னால வளரும். ஆனா, க்யூவுல நின்னு நின்னே ஓய்ஞ்சு போயிட்டேன். இருந்த காசுக்கு உரம், மருந்து வாங்கி அடிச்சாச்சி. அடுத்த வயலுக்கு உரம் போடறதுக்குப் பணமெடுக்கப் போனா... கையில மை வெச்சிருக்கியே ஏற்கெனவே பணமெடுத்திட்டே ஓடு ஓடுனு விரட்டி அடிக்கிறாங்க. உள்ளூர்ல இருக்கிற தொடக்க வேளாண்ம வங்கியில பணத்தை மாத்த முடிஞ்சாகூட வசதியா இருக்கும். அதுக்கும் வழியில்ல. டவுனுக்குத்தான் போகணும்னா... ரெண்டு பஸ் மாறிப்போய்த் தவம் கிடந்தாலும் வரிசையில கடைசி ஆளா நிக்கிற நமக்கு வாய்க்கவே மாட்டேங்குதே!

‘ஏடிஎம் மெஷினு இருக்கே அதுல போய்ப் பாரு’னு பேங்க் வாசல்ல முன்னால நிக்கிறவரு சொன்னாரு. அதைக் கேட்டு ஏடிஎம்முக்குப் போனேன். ‘கொடுமை கொடுமைனு கோயிலுக்குப் போனா... அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம்’கிற கதையா அந்த வரிச அடுத்த தெரு வரைக்கும் நிக்குது. ‘நமக்குப் பணம் கிடைச்சுடுமா’னு முன்னால இருக்கறவங்ககிட்ட கேட்டா, ‘பொட்டியில பணம் இல்லையாம். இன்னும் ரெண்டு, மூணு மணி நேரத்துக்குள்ள பண வண்டி வருமாம். அவங்க வந்து ரொப்புனாதான் பணம் வருமாம். அது வரைக்கும் பொணமாட்டம் காத்துக்கிடக்க வேண்டியதுதான்’னு சர்வசாதாரணமா சொல்றாரு. நெருக்கிக் கேட்டா... மூணு நாளா இப்படித்தான் வந்து நிக்கிறேன். ஆனா, பணம் கிடைச்ச பாடில்ல. முடிஞ்சா நில்லு... இல்லாட்டி தள்ளு. க்யூவுல நிக்கறவங்கள நோகடிக்காதே’னு எரிஞ்சி விழறார். கையில இருக்கிற ஸ்மார்ட் போனை தட்டிவிட்டா... நாடு பூரா இதே நிலைமைதான்னு வாட்ஸ்அப்புல மாத்தி மாத்தி படம் காட்டறாங்க. இப்படியே போனா... என்னாகுமோனு ரொம்பக் கவலை பத்திக்கிச்சுங்கய்யா. ‘நான் இந்தியாவை விட்டு வெளியேறுகிறேன்’னு அமீர்கான், கமலஹாசன் கணக்கா சொல்லிடலாம்னுகூட தோணுதுங்கய்யா.

எங்க கிராமத்துல, ‘மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துறதா’னு கேப்பாங்க பெருசுங்க. சின்ன வயசுல இருந்து இதைக் கேட்டுக் கேட்டு வளர்ந்திருக்கேனே தவிர, இப்படி யாரும் மூட்டைப் பூச்சிக்கு பயந்துகிட்டு தீ வெச்சு வீட்டைக் கொளுத்திவிட்டதைப் பார்த்ததில்ல. ஆனா, நீங்க ஒரு நாட்டையே கொளுத்தி விட்டு, சும்மா பட்டைய கிளப்பிட்டீங்க. ஒரு வீடு எரிஞ்சதை பார்க்கற பாக்கியம் கிடைக்காம இருந்த எனக்கு, ஒரு நாட்டையே எரிய விட்டு வேடிக்கை பார்க்க வெச்ச வகையில ரொம்ப ரொம்ப சந்தோஷம்தான்.

கறுப்புப்பணம்... கள்ளப்பணம் இதையெல்லாம் வேரோடவும், வேரடி மண்ணோடவும் அழிச்சி ஒழிக்க வேண்டியதான்கிறதுல சந்தேகமே இல்ல. ஆனா, வீடு முழுக்க, நாடு முழுக்கத் திருடனுங்களையும், கொள்ளைக்காரனுங்களையும் வெச்சுக்கிட்டு இதை எப்படி ஒழிக்க முடியும். பெரும்பாலான கொள்ளைக்காரங்க... அதிகாரி, அரசியல்வாதி, ரியல்எஸ்டேட் அதிபர், தொழிலதிபர்னு பல முகமூடிகளைப் போட்டுக்கிட்டுதானே நடமாடிட்டிருக்காங்க. முதல்ல இவங்களையெல்லாம் கருவறுத்திருக்கணும்.

‘அதெப்படி அவங்களையெல்லாம் சந்தேகப்பட முடியும்’னு கேட்டீங்கனா... அதுக்கு உங்ககிட்டயே பதில் இருக்கு. அதாவது, இப்படி ஒரு முடிவை எடுக்கறதுக்காக உங்க அமைச்சருங்களையெல்லாம் கூடிப்பேசின நீங்க, அவங்க மூலமா விஷயம் வெளியில போயிடும்னு அந்த ரூமுக்குள்ளயே போட்டுப் பூட்டி வெச்சுட்டு, ஜனாதிபதியப் பார்த்து விஷயத்தைச் சொல்லி, அதுக்குப் பிறகுதான் அறிவிச்சிருக்கீங்க. அமைச்சருங்கள விடுங்க.... ரிசர்வ் பேங்க் ஆபீஸருங்க... மத்த மத்தங்குகளோட தலைமைப் பதவியில இருக்கிறவங்கனு எல்லாத்தையும் உள்ள வெச்சுப் பூட்டிட்டு ஜனாதிபதி வீட்டுக்குப் போய், அவரப் பார்த்துட்டு அப்படியே டி.வி. ஸ்டேஷனுக்குப் போய்த்தான் 1000, 500 ரூபாய் செல்லாதுனு அறிவிச்சிருக்கீங்க. ஆக, உங்ககூட இருக்கிற மந்திரிகளையும் நம்ப முடியல.... அதிகாரிகளையும் நம்ப முடியல. நாட்டோட உண்மையான நிலை இதுதான்கிறது உங்களுக்கே நல்லா தெரிஞ்சிருக்கு. இப்படியிருக்கும்போது, எந்தத் தைரியத்துல இப்படியொரு தடாலடி முடிவை எடுத்தீங்க. எல்லாம் மாறிடும்னு எப்படி நம்புனீங்க.

இப்ப பார்த்தீங்களா... ‘மோடியையே நம்ப முடியாது’னு நாட்டுல ஆளாளுக்கு கூவிக்கிட்டிருக்காங்க.

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி, ‘பணம் செல்லாதுனு அறிவிச்ச அன்னிக்கு பகல்ல பி.ஜே.பி. சார்புல கோடிக்கணக்குல பேங்க்ல டெபாஸிட் பண்ணியிருக்காங்களே அது எப்படி’ன்னு கேட்டிருக்கார்.

‘விஷயம் முக்கியமான தொழிலதிபர்கள், ஆளுங்கட்சிக்காரர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்பட்டுவிட்டது. அவர்களும் போதுமான அளவுக்குப் பணத்தை மாற்றிவிட்டார்கள்’னு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லியிருக்காரே, அதுக்கு உங்க பதில் என்ன?

இவங்களையெல்லாம் விட்டுத்தள்ளுங்க. நீங்க நூத்துக்கு நூறு சுத்தம் சுயம்பிரகாசமாத்தான் இந்த நடவடிக்கையை ஆரம்பிச்சீங்கன்னு நான் நம்புறேன். பெரும்பாலான அதிகாரிங்க கொள்ளைக்காரங்களா இருந்தாலும் ஒவ்வொரு ஆபீஸுலயும் ரெண்டொரு நல்ல ஆபீஸருங்களும் இருக்கத்தானே செய்யறாங்க. அப்படிப்பட்ட ஆளுங்களையா தேடிப்பிடிச்சி, உங்க தோழர் விஜயகாந்த் நடிச்ச ‘ரமணா’ சினிமாப்பட பாணியில அவங்களையெல்லாம் ஒண்ணா சேர்த்து வெச்சு, அவங்களோட ஆலோசனைகளோட கறுப்புப் பண ஆசாமிங்கள ஒழிக்கற நடவடிக்கையை ஆரம்பிச்சிருக்கலாமே.

நம்ம நாட்டுல கறுப்புப் பணம்னு சொன்னதுமே முதல்ல நினைவுக்கு வர்ற ஆசாமிங்க யாருனு உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்ல. பெரும்பெரும் பணங்காரங்களும், தொழில் அதிபருங்களும்தான் மக்களோட நினைவுக்கு வர்றாங்க. அதாவது, காங்கிரஸ் கட்சிக்கும், உங்க கட்சிக்கும் ரொம்ப ரொம்ப நெருக்கமா உள்ள பணக்காரங்க, தொழில் அதிபருங்களைத்தான் சொல்றேன். இப்படிப்பட்ட பணக்காரங்கதான் ஸ்விஸ் வங்கி, கறுப்புப்பணம்னு கொழிக்கிறாங்கங்கறது உலகத்துக்கே தெரியும். ஆனாலும், இப்படிப்பட்டவங்க மேலயெல்லாம் நீங்களோ... உங்களுக்கு முன்ன இருந்தவங்களோ நடவடிக்கை எடுக்கவே மாட்டீங்க. அடநடவடிக்கைய விட்டுத்தள்ளுங்க. இதுமாதிரியான ஆளுங்களோட தோள்மேல தோள் போட்டு போட்டோ எடுக்கறதைகூட நிறுத்தமாட்டேங்கறீங்களே. அது மன்மோகன் சிங்காக இருந்தாலும் சரி, நரேந்திர மோடியா இருந்தாலும் சரி... உங்களோட சகவாசமெல்லாம் இப்படிப்பட்ட ஆசாமிங்ககிட்டதானே இருக்கு.

இப்பகூட ஜியோ செல்போன் சேவை விளம்பரம், பேடிஎம் விளம்பரம்னு எது வந்தாலும் உங்க படத்தைப் போட்டுல்ல கொடுக்கிறாங்க. இதையெல்லாம் நீங்க எப்படி அனுமதிக்கலாம். விளம்பரப் படத்துல நடிக்கிற நடிகர்கள்தான் விளம்பரங்களோட உண்மைத் தன்மைக்குப் பொறுப்பு. நாளைக்கு அந்தப் பொருட்களால ஏதாவது பாதிப்புனா, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மேல நடவடிக்கை எடுக்கலாம்னு ஒரு சட்டம் போட்டு வெச்சிருக்கீங்க. இதே சட்டம் உங்க மேலயும் ஏன் பாயக்கூடாது?

அதாவது நீதி, நேர்மைனு பேசற நீங்க, முதல்ல இதுமாதிரியான ஆட்களோட வெச்சிருக்கிற சகவாசத்தையில்ல கைவிடணும். இவங்கள்ல ரொம்பப் பேரு பேங்க்ல ஆயிரம் கோடி, லட்சம்கோடினு கடன வாங்கிட்டு, பேங்க் பக்கமே அடியெடுத்து வைக்காத ஆளுங்க. பல பேர் கடனைத் திருப்பிக் கட்டாத ஆளுங்க. ஆனாலும், அவங்களோட தொழில் வளர்ச்சிக்காக விடாம கடனை அள்ளிக் கொடுத்திட்டே இருப்பீங்க. கடைசியில கோடி கோடியா கொள்ளையடிச்சு முடிச்ச பிறகு, மல்லையா கணக்கா வெளிநாட்டுக்குப் பறந்துடுவாங்க.

இப்படி 7000 கோடி, 8000 கோடி கடன் வாங்கினவனையெல்லாம் சல்யூட் அடிச்சு பாரினுக்குப் பறக்கவிடுவீங்க. ஒரு ஏக்கர் நிலத்துல விதைக்கறதுக்காக நகையை அடகு வெச்சவன், உழவு ஓட்டிப் பொழைச்சுக்கலாம்னு டிராக்டர் கடன் வாங்கினவனையெல்லாம் தேடித் தேடி ‘கடன்காரப்பய’னு அவமானப்படுத்துவீங்க. இதைத் தாங்க முடியாம அவன் தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துப்போற நிலைமைக்கு ஆளாக்குவீங்க.

அப்படினா கறுப்புப் பணத்தை ஒழிக்க வேணாம்னு சொல்றியான்னு கேட்டுடாதீங்க. மீறிக் கேட்டீங்கனா என்னோட பதில்... ‘தசாவதாரம்’ படத்துல கடைசிக் காட்சியில கமலஹாசன் சொல்வார் இல்லையா... அதுதான் இதுக்கும் பதில். அதாவது, ‘கடவுள் இல்லைனு மட்டும் சொல்லிடாதீங்கோ’ன்னு அசின் கேப்பாங்க. ‘இருந்தா நல்லாருக்கும்’னு கமல் சொல்வார். அதேமாதிரி ‘‘கறுப்புப் பணத்தை ஒழிச்சா நல்லாருக்கும்’னுதான் நான் சொல்ல முடியும். வேறென்னத்தை நான் சொல்ல!’’

-ஜூனியர் கோவணாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு