Published:Updated:

பஞ்சகவ்யா! - 20 - பஞ்சகவ்யா விற்பனையில் பல்கலைக்கழகம்!

பஞ்சகவ்யா! - 20 -  பஞ்சகவ்யா விற்பனையில் பல்கலைக்கழகம்!
பிரீமியம் ஸ்டோரி
பஞ்சகவ்யா! - 20 - பஞ்சகவ்யா விற்பனையில் பல்கலைக்கழகம்!

வெற்றி விவசாயிகளின் அசத்தல் அனுபவத் தொடர்இயற்கைஜி.பழனிச்சாமி - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

பஞ்சகவ்யா! - 20 - பஞ்சகவ்யா விற்பனையில் பல்கலைக்கழகம்!

வெற்றி விவசாயிகளின் அசத்தல் அனுபவத் தொடர்இயற்கைஜி.பழனிச்சாமி - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

Published:Updated:
பஞ்சகவ்யா! - 20 -  பஞ்சகவ்யா விற்பனையில் பல்கலைக்கழகம்!
பிரீமியம் ஸ்டோரி
பஞ்சகவ்யா! - 20 - பஞ்சகவ்யா விற்பனையில் பல்கலைக்கழகம்!

ரம்பக் காலத்தில் பஞ்சகவ்யா கரைசலைப் பயன்படுத்தியவர்கள், அதைப் பரவலாக விவசாயிகளிடம் எடுத்துச் சென்றவர்கள் குறித்த தொடர் இது. அந்த வரிசையில் இந்த இதழில் இடம்பெறுகிறார், முனைவர் வடிவேல்.

பஞ்சகவ்யா! - 20 -  பஞ்சகவ்யா விற்பனையில் பல்கலைக்கழகம்!

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 36 ஆண்டுகள் பல்வேறு பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், தோட்டக்கலைத்துறை விஞ்ஞானி, பேராசிரியர் வடிவேல். ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்துள்ள தெற்கு புதுப்பாளையம் கிராமம் இவரது பூர்விகம். தற்போது, முத்தூர் மேட்டுக்கடையில் உள்ள தனது 6 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகிறார், இவர்.

பணி ஓய்வுக்குப் பிறகு ‘இயற்கையோடு இணைந்த வேளாண்மை’ என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் விவசாயம், மதிப்புக்கூட்டிய பொருட்கள் தயாரிப்பு, சந்தைப்படுத்துதல் போன்றவை குறித்த பயிற்சிகளை அளித்து வருகிறார். விவசாயிகளிடம் மட்டுமே புழங்கிய பஞ்சகவ்யாவைப் பல்கலைக்கழகத்துக்குக் கொண்டு சென்று பல ஆய்வுகளை மேற்கொண்டு பஞ்சகவ்யாவுக்கு அரசு அங்கீகாரம் கிடைக்கப் பாடுபட்டவர், இவர்.

ஒரு காலை வேளையில், நாட்டு மாடுகளுக்குத் தீவனம் வைத்துக்கொண்டிருந்த வடிவேலைச் சந்தித்தோம்.

“கொடுமுடி டாக்டர் நடராஜன் எனக்கு உறவினர். ஊர்ல நடக்குற விசேஷங்கள்ல நானும் அவரும் அடிக்கடி சந்திச்சுக்குவோம். அப்படி சந்திக்கிறபோதெல்லாம்  பஞ்சகவ்யாவோட முக்கியத்துவம் குறித்துச் சொல்வார், டாக்டர். ஆனா, நான் அப்போ அதைப் பெரிசா கண்டுக்கலை. இவர் டாக்டரா இருந்துக்கிட்டுச் சாணம், மூத்திரத்துல சத்து இருக்குனு சொல்றாரேனுகூட நினைச்சிருக்கேன். அடுத்தடுத்து நிறைய விவசாயிகளும் என்கிட்ட பஞ்சகவ்யா குறித்துச் சொன்னாங்க. அப்புறம்தான் அதுல என்னதான் இருக்குனு பார்த்திடுவோமேனு தோணுச்சு. அந்தச் சமயத்துல டாக்டர் கூட சேர்ந்து சில இயற்கை விவசாயக் கருத்தரங்குகளுக்குப் போனேன். அங்கேயும் பஞ்சகவ்யா குறித்து எல்லாரும் பேசுறதைக் கேட்டதும், அதை ஆராய்ச்சி செஞ்சே ஆகணும்னு முடிவெடுத்தேன்.

தொடர்ந்து, பஞ்சகவ்யா உபயோகம் பண்ற விவசாயிங்களோட வயல்களுக்குப் போக ஆரம்பிச்சேன். அவங்க சொன்ன விஷயங்களும் அவங்களுக்குக் கிடைச்ச மகசூலும் ஆச்சர்யப்படுற அளவுல இருந்தது. அடுத்ததா, பஞ்சகவ்யா மூலமா வயல்வெளி பரிசோதனை, ஆய்வுக்கூடச் சோதனைகள் செய்யலாம்னு... பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அனுமதி வாங்கி, வேளாண் கல்லூரி மாணவர்களோட ஆராய்ச்சித் திட்டத்தில் பஞ்சகவ்யாவை இணைச்சேன். அடுத்து, பல்கலைக்கழகப் பரிசோதனை வயல்ல, தக்காளி, வெண்டை, கத்திரி, பாகல், புடலை, கீரை மாதிரியான பயிர்களுக்கு 3 சதவிகித பஞ்சகவ்யாவைத் தண்ணீர்ல கலந்து தெளிச்சு ஆராய்ச்சிகளை ஆரம்பிச்சோம்” என்ற வடிவேல் மாடுகளை இடம் மாற்றிக் கட்டிவிட்டு வந்து தொடர்ந்தார்.

“அரோமாங்கிற இயல்பான மணம் ஒவ்வொரு விளைபொருளுக்கும் உண்டு. ரசாயனத்தில் விளைஞ்ச காய்கறி, கீரைகளைக் கழுவி சமையல் செஞ்சுட்டா, அந்த மணம் போயிடும். ஆனா, பஞ்சகவ்யா தெளிச்சு விளைவிச்ச காய்கறிகள்ல சமைச்ச பிறகும் அந்த இயல்பான மணம் இருந்ததை உணர்ந்தோம். தொடர்ந்து, பயிர்கள்ல இருக்கிற நுண்வேதிப்பொருட்களை நிலைநிறுத்தி ஆவியாகாமல், அழியாமல் தங்க வைக்கிற மூலக்கூறு குறித்தும் அண்ணா பல்கலைக்கழகம், ஸ்பிக் பயோ டெக், நைப்பெர் லேப் சோதனைக்கூடங்கள்ல கொடுத்து 2008-ம் ஆண்டுல தொடர் ஆராய்ச்சி செஞ்சோம்.

பொதுவா, செடிகள்ல வளர்சிதை மாற்றம் 35 சதவிகிதம்தான் நடக்கும். ஆனா, பஞ்சகவ்யா தெளிச்ச செடிகளில் அது 100 சதவிகிதமா இருந்துச்சு. அதோட ஒரே சீரான விரைவான வளர்ச்சி, முன்கூட்டியே ஏற்பட்ட மலர் பருவம், காய்கறிகள்ல மணம் எல்லாமே இருந்தது. பஞ்சகவ்யா பயன்படுத்தின காய்கறிகளோட எடை அதிகமா இருந்தது.

அதுக்கப்புறம்தான், ஆராய்ச்சியில் நாங்க தெரிஞ்சுகிட்ட விஷயங்களை, வேளாண் விஞ்ஞானிகள் கலந்துகிட்ட பல கருத்தரங்குகள்ல எடுத்துச்சொல்ல ஆரம்பிச்சேன். ஆனா, அதை வேளாண் விஞ்ஞானிகள் ஏத்துக்கலை. என்னை ‘சாண மூத்திர விஞ்ஞானி’னு கிண்டல்கூட செஞ்சாங்க. ஆனா, கொஞ்சமும் மனம் தளரலை. திரும்பத்திரும்பப் பஞ்சகவ்யா குறித்து எடுத்துச் சொன்ன பிறகு சில விஞ்ஞானிகள் பஞ்சகவ்யா தெளிச்ச வயலைப் பார்வையிட வந்தாங்க. அங்க விளைஞ்சிருந்த காய்கறிகளைப் பார்த்ததும் அதுல இருந்த வித்தியாசத்தை உணர்ந்தாங்க. அதுக்கப்புறம்தான் பஞ்கவ்யாவை அவங்கவங்க துறை மூலமா பரிசோதனை செய்யச் சம்மதிச்சாங்க. அதுவும் அரை மனசோடதான்.

பஞ்சகவ்யா! - 20 -  பஞ்சகவ்யா விற்பனையில் பல்கலைக்கழகம்!

பயிர் வினையியல் துறை, விதையியல் துறை, உழவியல் துறை மூணு துறைத் தலைவர்களும் பஞ்சகவ்யாவை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கிட்டாங்க. வேண்டா வெறுப்பா ஆராய்ச்சியை ஆரம்பிச்சாலும் போகப்போகப் பரிசோதனை முடிவுகள் மூலமா பஞ்சகவ்யாவோட மகிமை அவங்களுக்குப் புரிய ஆரம்பிச்சது. பஞ்சகவ்யாவுக்கான முதல் ஆதரவு விதையியல் துறையில் இருந்துதான் கிடைச்சது. பஞ்சகவ்யா தெளிச்ச வயல்ல பயிர் அபரிமிதமான வளர்ச்சி கொண்டிருந்ததை அவங்க உறுதி செஞ்சாங்க. அடுத்து, பயிர் வினையியல் துறை ஆராய்ச்சி முடிவிலயும் பஞ்சகவ்யா சிறந்த வளர்ச்சி ஊக்கின்னு சொல்லிட்டாங்க. உழவியல் துறை விஞ்ஞானிகளும் பல பயிர்களில் தொடர் ஆராய்ச்சிகள் செய்து பஞ்சகவ்யாவில் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான மூலக்கூறுகள் இருக்கிறதை ஒத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் 2007-ம் வருஷம், பல்கலைக்கழகம் பஞ்சகவ்யா கரைசலுக்கு அங்கீகாரம் வழங்கினதோட, பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் விவசாயிகளுக்குத் தயாரிச்சும் கொடுக்கலாம்னு சொன்னது” என்ற வடிவேல் நிறைவாக,

“ஒட்டுமொத்த இயற்கை விவசாயத்தையும் ‘பஞ்சகவ்யாவுக்கு முன்’, ‘பஞ்சகவ்யாவுக்குப் பின்’ என்று ரெண்டாகப் பிரிக்கலாம். பஞ்சகவ்யாவுக்கு முன்னாடி எந்த வரைமுறையும் இல்லாமத்தான் இயற்கை விவசாயம் நடந்தது. பஞ்சகவ்யா அறிமுகமான பிறகுதான் ஒரு ஒழுங்கு வந்தது. பசுமாட்டில் இருந்து கிடைக்கிற சாணம், சிறுநீர், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து பொருட்களை மட்டும் வெச்சுப் பஞ்சகவ்யா தயாரிச்சாலே போதுமானது. அதுவே வீரியமாதான் இருக்கும். அதனால, வேற பொருட்களை அதுல சேர்க்க வேண்டியதில்லை. வேற பொருட்களைக் கூடுதலாகச் சேர்க்கணும்னா சேர்க்கப்போற பொருட்களோட மூலக்கூறுகளைத் தெளிவுபடுத்திட்டுதான் சேர்க்கணும்.

இப்போ, பல்கலைக்கழகம் சார்பா இயங்குற ஆராய்ச்சி மையங்கள், கே.வி.கே எல்லாத்திலயும், பஞ்சகவ்யாவைப் பயன்படுத்துறாங்க. வளம்குன்றா அங்கக வேளாண் துறையைப் பல்கலைக்கழகத்துல ஆரம்பிச்சு, இயற்கை இடுபொருட்கள் குறித்த பாடங்களையும் கல்வித்திட்டத்துல சேர்த்திருக்காங்க. பல்கலைக்கழகத்துலயே ‘டி.என்.ஏ.யூ. பஞ்சகவ்யா’ங்கிற பெயர்ல விற்பனை செய்றாங்க. இந்தளவுக்கு அங்கீகாரம் கிடைச்சதுல என்னோட பங்கும் கொஞ்சம் இருக்குங்கிறது, எனக்கு ரொம்பச் சந்தோஷமான விஷயம்.

2013-ம் வருஷம் பணியில இருந்து ஓய்வு பெற்றேன். பேராசிரியர் பதவிக்குதான் ஓய்வு. விவசாயியா இன்னும் வேலை செஞ்சுக்கிட்டுதான் இருக்கேன். இப்போ உழவர் உற்பத்தியாளர் கம்பெனி தொடங்கி இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைத்து ‘உன்னதம் உழவர் அங்காடி’ங்கிற பேர்ல 4 இடங்கள்ல கடைகள் ஆரம்பிச்சிருக்கோம். அங்கயும் பஞ்சகவ்யா விற்பனை செய்றோம்” என்றார், சந்தோஷமாக!

-மணம் பரப்பும்


தொடர்புக்கு, வடிவேல், செல்போன்: 94437 20160.

இரண்டு வகைப் பஞ்சகவ்யா!

‘‘பஞ்சகவ்யாவில், சிருஷ்டி கிரமா (வளர்ச்சி ஊக்கி கலவை) மற்றும் சம்ஹார கிரமா (எதிர்ப்பாற்றல் கலவை) என இரண்டு வகைகள் உள்ளன. பால் 1 பங்கு, தயிர் அரைப் பங்கு, நெய் கால் பங்கு, சிறுநீர் எட்டில் ஒரு பங்கு, சாணம் பதினாறில் ஒரு பங்கு என்று நாட்டுப்பசுவின் ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரிப்பது சிருஷ்டி கிரமா.

சாணம் ஒரு பங்கு, சிறுநீர் அரைப் பங்கு, பால் கால் பங்கு, தயிர் எட்டில் ஒரு பங்கு, நெய் பதினாறில் ஒரு பங்கு என்று கலந்து தயாரிப்பது சம்ஹார கிரமா.

இவற்றைத் தயாரிக்கக் கறுப்பு நிறப் பசுவில் இருந்து பால், மயிலை நிறப்பசுவில் இருந்து தயிர், சாம்பல் நிறப் பசுவில் இருந்து நெய், கபிலை நிறப் பசுவில் இருந்து சிறுநீர், செவலைப்பசுவில் இருந்து சாணம் எனச் சேகரிக்க வேண்டும். அப்படிச் சேர்த்துத் தயாரிக்கப்படும் கிரமா வகைப் பஞ்சகவ்யா மனோ வேக ஆற்றல் கொண்டிருக்கும்” என்று பழங்கால முனிவர் எழுதிய ஒரு நூலில் பஞ்சகவ்யா குறித்துச் சொல்லப்பட்டுள்ளது.