நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

விவசாயி ஜெயலலிதா!

விவசாயி ஜெயலலிதா!
பிரீமியம் ஸ்டோரி
News
விவசாயி ஜெயலலிதா!

நினைவலை ஆர்.குமரேசன் - படங்கள்: சு.குமரேசன்

விவசாயி ஜெயலலிதா!

* விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேசத்தில், விவசாயம் மற்றும் விவசாயிகள் மேம்பாடு தொடர்பான திட்டங்களைத் தீட்டும் தலைவர்கள் அரிதாகத்தான் தோன்றுகிறார்கள். தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, வேளாண்மை வளர்ச்சிக்காகப் பெரிய சாதனைகளைச் செய்து விடவில்லை என்றபோதிலும்... அவர் கொண்டு வந்த சில திட்டங்கள், விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவைதான்.

* சொட்டுநீர் அமைக்கச் சிறு, குறு விவசாயிகளுக்கு 75% மானியம்; மற்ற விவசாயிகளுக்கு 50% மானியம் இருந்ததை... சிறு, குறு விவசாயிகளுக்கு 100% எனவும் மற்ற விவசாயிகளுக்கு 75% என உயர்த்தியது, ஜெயலலிதாதான். இத்திட்டத்தில், சில ஊழல்கள் இருந்தாலும்... சிறு, குறு விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றி இருப்பது உண்மை. அதனால், பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாகாமல் தடுக்கப்பட்டிருக்கின்றன.

* ‘தமிழகத்தில் இருந்து வரும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி அதிகம் தெளிக்கப்பட்டுள்ளது’ என கேரள மாநிலம் சுமத்திய குற்றச்சாட்டைத் தொடர்ந்து ‘ஒருங்கிணைந்தப் பயிர் பாதுகாப்பு’ முறையில், பூச்சிக்கொல்லி இல்லாத தமிழகம் என்ற இலக்கை நோக்கி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய ‘மாதிரி கிராமங்கள்’ திட்டத்தை உருவாக்கினார், ஜெயலலிதா. இத்திட்டத்தின் மூலம், விவசாயிகளை வயல்வெளி பயிற்சிக்காக அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து, பூச்சிகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள், வேளாண்மைத்துறை அதிகாரிகள்.

* சிறுதானியங்களின் மகத்துவத்தை இயற்கை ஆர்வலர்களும் விவசாயிகளும் ஓயாமல் உணர்த்திக் கொண்டிருந்தனர். இதையடுத்து, சிறுதானிய மகத்துவ மையத்தை அமைத்து சிறுதானிய விவசாயம் பெருகுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தார் ஜெயலலிதா.

* பலருக்கு எமனாக அமைந்த எண்டோசல்ஃபான்  பூச்சிக்கொல்லிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்கள், தங்களிடம் உள்ள கையிருப்பை விற்பனை செய்துவிட்டுத்தான் தடை விதிப்போம், என அடம் பிடித்தன.  ஆனால், தமிழகத்தில் உடனடியாகத் தடை விதித்தவர், ஜெயலலிதா. 

 * நெல் பயிர்களுக்கு இடையில் போதுமான இடைவெளி, காய்ச்சலும் பாய்ச்சலுமான பாசனம் போன்ற நவீன வேளாண் முறையான, ‘ஒற்றை நெல் சாகுபடி’ முறைதமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது ஜெயலலிதா ஆட்சியில்தான். அதன் பிறகு கருணாநிதி ஆட்சியில், ‘செம்மை நெல் சாகுபடி’ எனப் பெயர் மாற்றப்பட்டது. தற்போது, ‘திருந்திய நெல் சாகுபடி’ எனப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
 மரபணு மாற்றுப்பயிர்களை அனுமதிக்கும் விஷயத்தில் அப்போதைய காங்கிரஸ் அரசு பிடிவாதமாக இருந்தபோதும், அதைத் துணிச்சலாக எதிர்த்தவர், ஜெயலலிதா. 

* ‘பி.டி. கத்திரிக்காயை அனுமதிக்க முடியாது’ எனக் குரல் கொடுத்தார், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா. 

* விவசாயிகளின் அனுபவ அறிவுக்கு ஆப்பு வைக்கும் வகையில்... முந்தைய தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ‘வேளாண் மன்ற சட்ட’த்தை, ‘இது ஒரு கறுப்புச் சட்டம்’ என எதிர்த்தார், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். ‘பசுமை விகடன்’ உள்ளிட்ட ஊடகங்கள், சமூக ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பால், அச்சட்டத்துக்குத் தற்காலிகத் தடை விதித்தார், அப்போதைய முதல்வர் கருணாநிதி. அடுத்த ஆட்சி மாற்றம் ஏற்பட, முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா, அந்தச் சட்ட மசோதாவை நிரந்தரமாக நீக்கினார்.

* தமிழகத்தில் கெயில் குழாய்ப் பதிப்பு பிரச்னையில் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக நின்றார். அதோடு உச்ச நீதிமன்றம் வரையில் இந்த வழக்கை கொண்டு சென்றதற்கு உறுதுணையாக இருந்தார். டெல்டா பகுதியில் விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஜெயலலிதா தலைமையிலான அரசு எதிர்ப்பாகவே இருந்தது.

* தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தை முழுமையாக விதைப்பதற்காக ஓயாமல் உழைத்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் இறந்தபோது ‘இயற்கையை காக்க இடிமுரசு போல் முழங்கிக் கொண்டிருந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் இயற்கை எய்தியது ஈடுசெய்ய முடியாத இழப்பு’ என்று தன்னுடைய இரங்கல் செய்தியில் தெரிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.  ஆனால், நம்மாழ்வாரின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் எதையும் தீட்டாமல் மறைந்து விட்டார்.

* டெல்டா பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பாகக் கடும் மின்வெட்டு நிலவியபோது... குறுவை, சம்பா பயிர்களைக் காப்பாற்றும் விதமாக மானியத்தில் டீசல், உயிர் உரங்களை வழங்கியவர் ஜெயலலிதா.
 அதேபோல, முல்லை-பெரியாறு வழக்கில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது, காவிரி நதிநீர்ப் பங்கீடு வழக்கில் கர்நாடகாவை எதிர்த்துப் போராடியது என விவசாயம் செழிக்க ஜெயலலிதா செய்த செயல்கள் வரலாற்றில் என்றைக்கும் நிலைத்து நிற்கும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஹைதராபாத்தில் திராட்சைத் தோட்டம், கொடநாடு மலைப்பகுதியில் தேயிலைத் தேட்டம் ஆகியவற்றை வைத்து பராமரித்து வந்தார். அரசு சார்ந்த நிறுவனங்களில், தான் தாக்கல் செய்யும் ஆவணங்களில் தன்னை ஒரு ‘விவசாயி’ என்றே அறிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!