நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

மண்ணுக்கேற்ற பயிர்... பயிருக்கேற்ற பாசனம்!

மண்ணுக்கேற்ற பயிர்... பயிருக்கேற்ற பாசனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்ணுக்கேற்ற பயிர்... பயிருக்கேற்ற பாசனம்!

நீர் மேலாண்மைச் சூத்திரம்! கண்காட்சிஜி.பழனிச்சாமி - படங்கள்: க.தனசேகரன், ரமேஷ் கந்தசாமி

மண்ணுக்கேற்ற பயிர்... பயிருக்கேற்ற பாசனம்!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மஞ்சள் மாநகரான ஈரோட்டில் முதல்முறையாக ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2015’ மற்றும் கருத்தரங்கு நடைபெற்றன. அதன் அமோக வெற்றியைத் தொடர்ந்து, மலைக்கோட்டை மாநகரான திருச்சியில், கடந்த பிப்ரவரி மாதம் நான்கு நாட்கள் பிரமாண்டமாக நடைபெற்றன, ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2016’ கண்காட்சி மற்றும் கருத்தரங்கு. தற்போது மூன்றாவது முறையாக, கடந்த செப்டம்பர் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை மஞ்சள் மாநகர் ஈரோட்டில், வ.உ.சி திடலில் ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2016’ கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றன. தினமும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் பேசிய வல்லுநர்களின் உரை வீச்சுகள் இங்கே இடம்பெறுகின்றன.

மண்ணுக்கேற்ற பயிர்... பயிருக்கேற்ற பாசனம்!

கருத்தரங்கின் மூன்றாம் நாளான செப்டம்பர் 11-ம் தேதி காலை அமர்வில் நீர் மேலாண்மை குறித்துப் பேசினார், திண்டுக்கல் நகரைச் சேர்ந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் பொறியாளர் பிரிட்டோ ராஜ்.

“முன்பெல்லாம் விவசாயிகள் சந்தித்துக்கொள்ளும்போது பயிர், பூச்சிகள், பூச்சிக்கொல்லிகள், உரங்கள் போன்ற தகவல்கள் குறித்துதான் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்வார்கள். ஆனால், 2010-ம் ஆண்டுக்குப் பிறகு எந்த விவசாயியாக இருந்தாலும் தண்ணீர் நிலவரம் குறித்துதான் பேசுகிறார்கள். அந்தளவுக்கு வறண்டுவிட்டது, தமிழகம். மாநிலம் முழுவதும் சீரான மழை பெய்வதில்லை. பருவமழை பொழிவில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அருகருகில் உள்ள மாவட்டங்களுக்குக்கூட சம அளவு மழை கிடைப்பதில்லை. அதற்குக் காரணம் மழை ஈர்ப்பு மையங்கள் குறைந்து வருவதுதான். மரங்கள் நிறைந்த காடுகள்தான் மழை ஈர்ப்பு மையங்கள். இப்போது பெய்வது பெரும்பாலும் வெப்பச் சலனத்தால் ஏற்படும் மழைதான். பருவமழை சரியாகக் கிடைப்பதேயில்லை.

நமது நாட்டில் சில முக்கிய மழைப் பருவங்கள் உண்டு. ஆடி மாதம் பிறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர் ஒரு மழை கிடைக்கும். அது நிலத்தை உழுது பொலபொலப்பாக்க உதவி செய்யும். ஆடி மாதம் மூன்றாம் நாள் அல்லது நான்காம் நாள் ஒரு மழை கிடைக்கும். அது, ஆடிப் பிறப்பன்று விதைத்த விதைகளுக்கு உயிர் நீர். ஆவணி மாதத்தில், பயிர் வளர்ச்சிக்குத் தூறல் போன்ற மழை கிடைக்கும். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படித்தான் இருந்தது, இயற்கை. ஆனால், இப்போது மழைச் சுழற்சி மாறிவிட்டது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்படி கடும் வறட்சி ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. மழையை  ஈர்க்கக்கூடிய காடுகள் அழிந்துக் கொண்டே வருவதுதான் வறட்சிக்குக் காரணம்.

இப்படி மழை பொய்த்துப்போவதால், விவசாயிகள் தங்கள் வசம் உள்ள தண்ணீர் இருப்பை மனத்தில் வைத்து அதற்கு ஏற்ற பரப்பளவில், அதற்குகந்த பயிர்களைத்தான் சாகுபடி செய்ய வேண்டும். அதாவது தண்ணீருக்கு ஏற்ற விவசாயம் செய்ய வேண்டும். உங்களிடம் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது என்பது குறித்துப் பார்ப்போம்.

மண்ணுக்கேற்ற பயிர்... பயிருக்கேற்ற பாசனம்!

கிணற்றில் இருந்து, 5 குதிரைத் திறன் (ஹெச்.பி) கொண்ட பம்ப்செட் மூலம், இரண்டரை அங்குல சுற்றளவுள்ள வெளியேற்றுக்குழாயில் தினமும் 1 மணிநேரம் மட்டுமே தண்ணீர் வருகிறது என்றால், அது 1 ஏக்கர் நிலத்துக்கு மட்டும்தான் போதுமானதாக இருக்கும். இதை வைத்து நீங்கள் கணக்குப் போட்டுக்கொள்ளலாம். இருக்கும் தண்ணீருக்கும் நிலத்தின் வளத்துக்கும் ஏற்ப நாட்டு ரக விதைகளைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். வளமான நிலம், போதுமான தண்ணீர், வேலை செய்யத் தோதான குடும்ப நபர்கள் இந்த மூன்று அம்சங்கள்தான் நிலையான விவசாயத்தைத் தீர்மானிக்கின்றன.

அதேபோல மண்ணுக்குத் தகுந்த பாசனத்தையும் மேற்கொள்ள வேண்டும். செம்மண் பாங்கான மண் உள்ள பகுதிகளில் வளரும் தென்னைக்கு ஒரு மரத்துக்குத் தினமும் 100 லிட்டர் தண்ணீர் தேவை. களிமண் பாங்கான மண் உள்ள பகுதிகளில் ஒரு மரத்துக்குத் தினமும் 50 லிட்டர் தண்ணீரே போதுமானது. செம்மண்ணுக்கு நீரைத் தேக்கிவைக்கும் தன்மை கிடையாது. அதனால், சீக்கிரம் மண் காய்ந்துவிடும். களிமண், நீரைத் தேக்கி வைக்கும் என்பதால் ஈரப்பதம் இருந்து கொண்டேயிருக்கும். கிடைக்கும் தண்ணீரை நீண்டகாலம் பயன்படுத்த வேண்டும் என்றால், தண்ணீரைத் தேவைக்கு அதிகமாகப் பயிர்களுக்குக் கொடுக்கக் கூடாது.

மண்ணுக்கேற்ற பயிர்... பயிருக்கேற்ற பாசனம்!

ஒவ்வொரு விவசாயியும் நிலத்தடி நீர் ஊற்றுகள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும். நிலத்துக்குள் அரை அங்குலம் முதல் 2 அங்குலம் உள்ள நீர் ஓடும் துளைகள் இருக்கும். இதுதான் ஊற்று. நிலத்தின் அடியில் தோண்டத்தோண்ட 47, 87, 130, 207, 340 மற்றும் 410 அடி என வரிசையாக ‘நீர்த் தாங்கி’ என்று சொல்லப்படுகிற நீர்த் தட்டுக்கள் இருக்கும். நாம் ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது நமது பகுதியிலுள்ள நிலத்தடி நீர் வளத்தைப் பொறுத்து, இதில் ஏதாவது ஒரு மட்டத்தில் தண்ணீர் ஊற்று கிடைக்கும்.

நிலத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் வரத்து இல்லாமல் போனால், அக்கிணற்றுக்கு அருகில் 5 அடி நீளம், 3 அடி அகலம், 4 அடி ஆழம் உடைய குழி எடுக்கவேண்டும். அதனுள் கொசுவலை போன்ற ஜல்லடையால் கட்டப்பட்ட குழாயை வைத்து, அதில் ஒரு சிறு குழாயை இணைத்து  குழாயின் மறு முனையை ஆழ்துளைக் கிணற்றுக்குள் விட வேண்டும். பிறகு குழிக்குள் மணல், சிறிய ஜல்லிக்கற்கள் ஆகியவற்றை நிரப்பிவிட வேண்டும். இப்படிச் செய்துவிட்டால், பெய்யும் மழைத் தண்ணீர் வடிக்கட்டப்பட்டு ஆழ்துளைக் கிணற்றுக்குள் சென்று விழும். இதன் மூலம் நீர்மட்டத்தை உயர்த்த முடியும்.

நன்செய் நிலமாக இருந்தாலும் சரி, புன்செய் நிலமாக இருந்தாலும் சரி, 5 ஏக்கருக்கு ஒரு பண்ணைக்குட்டை அமைப்பது அவசியமான ஒன்று. இதற்கு 100 சதவிகித மானியம் கிடைக்கிறது. நிலத்தில் தண்ணீர் இல்லை என்று விவசாயிகள் கவலை கொள்ளத் தேவையேயில்லை. நிலம் சரிவான அமைப்பில் இருந்தால், 400 மீட்டருக்கு ஒரு கரை வீதம் வரப்பு அமைக்க வேண்டும். அப்போதுதான் மழை நீர், பாசன நீர் ஆகியவை வீணாகாது. தென்னை மாதிரியான அதிக இடைவெளி உள்ள பயிர்களுக்கு இடையில் நீளக் கிடங்கு வெட்டி மழைநீரைச் சேமிக்கலாம். கிடைக்கும் மழைநீர் நமது நிலத்தை விட்டு வெளியில் போக முடியாத படி பண்ணைக்குட்டை, போர்வெல் செறிவூட்டம், வரப்புகளை உயர்த்திக் கரைகள் அமைத்தல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்தால் ஒரு மழைத்துளி கூட வீணாகாது” என்றார்.

மண்ணுக்கேற்ற பயிர்... பயிருக்கேற்ற பாசனம்!

மதிய அமர்வில் மேடையேறிய திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு, ‘வீட்டுக்குள் மருத்துவமனை’ என்ற தலைப்பில் பேசினார்.

“தற்போது மூலிகைகள் குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்து வருகிறது. வணிக நோக்கில் மூலிகைச் செடிகளை வளர்த்து லாபம் பார்க்கலாம் என்று பலரும், மூலிகை விவசாயத்தில் இறங்கியுள்ளார்கள். உண்மையில் மூலிகை வளர்ப்பதைவிட, அதைச் சேகரிப்பதுதான் அதிக லாபகரமானது. ஓரிடத்தில் மூலிகைத் தோட்டம் அமைக்க லட்சக்கணக்கில் செலவாகும். ஆனால், நமது வாழ்வியல் சூழலில் நம்மைச்சுற்றியே ஏராளமான மூலிகைகள் இயற்கையாகவே விளைந்து கிடக்கின்றன. அவற்றைத் தேடி சேகரித்து, உரிய முறையில் பக்குவம் செய்து மருந்தாக மாற்றினால், அதிக லாபம் ஈட்டிவிட முடியும்.

வீடுகளில் அழகுச்செடிகளுக்குப் பதிலாக மூலிகைகளை வளர்த்தால், கொசுக்கள் உள்ளிட்ட பல சிறு பூச்சிகள் வீட்டுக்குள் அண்டாது. முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டு சமையலறையிலும் மரத்தால் செய்யப்பட்ட அஞ்சறைப் பெட்டி இருக்கும். அதில் உள்ள 5 அறைகளில் மிளகு, சீரகம், ஓமம், சுக்கு, திப்பிலி ஆகியவற்றைப் போட்டு வைத்திருப்பார்கள். இந்த ஐந்து பொருட்களும் உணவுக்கானது மட்டுமல்ல. கை வைத்தியத்துக்கும் உகந்தவை. அதனால்தான் அஞ்சறைப்பெட்டியை சீதனமாகக் கொடுக்கும் பழக்கமும் இருந்து வந்துள்ளது. வழித்தோன்றல் கல்வியாக இருந்த பாரம்பர்ய மூலிகை அறிவு இன்று மறைந்தே போய்விட்டது. நம்மைச் சுற்றியுள்ள பல மூலிகைகளைப் பயன்படுத்தி நாம் நோயில்லாத வாழ்வை மேற்கொள்ள வேண்டும்” என்ற மைக்கேல் செயராசு சில மூலிகைகள் குறித்தும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் விளக்கினார்.

மற்ற கருத்துரையாளர்களின் உரை வீச்சுகள் அடுத்த இதழில்...

மண்ணுக்கேற்ற பயிர்... பயிருக்கேற்ற பாசனம்!

தேடி வந்தேன்... கிடைத்தது!

கண்காட்சியைக் காண வந்த ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த கவிதா, “வீட்ல சின்னதாகப் புறக்கடைத் தோட்டம் போட்டு காய்கறி, கீரைனு வளர்க்கிறேன். எல்லாமே வீரிய விதைகள்தான். எஃப்.எம்.ரேடியோ மூலம்தான் அக்ரி எக்ஸ்போ பத்தி தெரிஞ்சுகிட்டேன். அதனால நாட்டு விதைகள் கிடைக்குமானு பார்க்க வந்தேன். ஆனா, எனக்குத் தேவையான நாட்டு விதைகள் மட்டுமில்லாம, இன்னும் நிறைய விவசாயத் தகவல்களைத் தெரிஞ்சுகிட்டேன். விவசாயிகளுக்கு மட்டுமில்லாம என்னை மாதிரி விவசாயத்துக்குச் சம்பந்தம் இல்லாதவங்களுக்கும் பல விஷயங்களைக் கத்து கொடுத்திருக்கு இந்தக் கண்காட்சி” என்றார் நெகிழ்ச்சியாக.