நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நிலையான வருமானம் கொடுக்கும் சோளம்!

நிலையான வருமானம் கொடுக்கும் சோளம்!
பிரீமியம் ஸ்டோரி
News
நிலையான வருமானம் கொடுக்கும் சோளம்!

சந்தைக்கேற்ற சாகுபடி! லாப ஊருக்கு ஒரு வழிகாட்டி!சந்தைதுரை.நாகராஜன், படங்கள்: ரமேஷ் கந்தசாமி

யல் விளைச்சலை அள்ளிக் கொடுத்திருந்தாலும், சந்தையில் விலை கிடைத்தால்தான், லாபம் கிடைக்கும். ‘ஒவ்வொரு பயிருக்கும் எந்தப் பருவத்தில் நல்ல விலை கிடைக்கும்... சந்தையின் தேவை என்ன?’ என்பது போன்ற அடிப்படையான சில தகவல்களைத் தெரிந்துகொண்டால், ‘விலை இல்லை’ என்ற கவலையே இருக்காது. ஒவ்வொரு பயிருக்குமான சந்தைத் தகவல்களை அலசுகிறது, இத்தொடர். இந்த இதழில் சோளம் குறித்த தகவல்கள் இடம்பெறுகின்றன.

நிலையான வருமானம் கொடுக்கும் சோளம்!

சோளம், தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும், மண் வகைகளிலும் விளையக்கூடிய பயிர். தவிர, வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது. சிறியதாக இருக்கும் வெள்ளைச்சோளம் இந்தியாவின் பழைமையான, பாரம்பர்யமான பயிர். அமெரிக்காவில் அதிக அளவு உபயோகப்படுத்தப்படும் தானியம், சோளம். இதில் அதிக அளவு மாவுச்சத்து, கொழுப்பு மற்றும் புரதச்சத்து ஆகியவை நிறைந்துள்ளதால், சத்தான உணவாக உள்ளது. மேலைநாடுகளில் அதிக அளவில் உணவுக்காகத்தான் பயிரிடப்படுகிறது.

தமிழகத்தில் பொங்கல் திருநாளன்று நாட்டுச் சோளமான வெண்சாமரச் சோளம் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகைச் சோளம் திருச்சி, பெரம்பலூர் மாவட்ட கிராமங்களில் வெகு சிலரால் மட்டுமே பயிரிடப்படுகிறது. தற்போது, கலப்பின ரகச் சோளங்களைத்தான் பெரும்பாலானோர் பயிரிடுகின்றனர். இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியான உணவுப் பயிராக இருப்பது, சோளம். தவிர, நொதித்தல் தொழிற்சாலை மற்றும் எரிசாராயத் தொழிற்சாலைகளில் மாவுச்சத்துப் பொருளாகவும் சோளம் பயன்படுத்தப்படுகிறது.

வெள்ளைச் சோளம் அரிசியைப் போன்ற தன்மையையும் அதைவிடப் பல மடங்கு சத்துக்களையும் கொண்ட உணவுப் பொருள். சோளத்தில் உடலுக்கு அவசியமான சத்துக்களோடு, குறைந்தளவே குளுக்கோஸ் இருப்பதால் இன்சுலின் சுரப்புக் குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்ற உணவுப் பொருளாக உள்ளது. சிவப்புச் சோளம் அல்லது பழுப்பு நிறச் சோளம் உணவாகப் பயன்படுகிறது. மழை குறைவாகப் பொழியும் அனைத்து நாடுகளிலும் இது சாகுபடி செய்யப்படுகிறது.

இதன் இலைகள், மருந்து மற்றும் எத்தனால் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. பால் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் வாய்ந்த சோளத்தட்டைகள், கறவை மாடுகளுக்குத் தீவனமாகவும் பயன்படுகின்றன.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் மற்றும் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு மையம் ஆகியவை, சோளம் குறித்து வெளியீட்டுள்ள தகவல்களின் தொகுப்பைப் பார்ப்போம்.

“தமிழ்நாட்டில் உள்ள சந்தைகளில் திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் சோளத்துக்கான முக்கியமான சந்தையாக விளங்குகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் சோளம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் திண்டுக்கல், கோயம்புத்தூர், திருச்சி, சேலம், கரூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. மஞ்சள் சோளம் தீவனத்துக்காகவும், வெள்ளைச்சோளம் தீவனம் மற்றும் உணவு தானியத்துக்காகவும் பயிரிடப்படுகின்றன. சோளத்தின் மொத்த விளைச்சலில் 66% உணவுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மீதி தீவனம் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளைச்சோளம், காரிச்சோளம் மற்றும் கருரெட்டுச் சோளம் ஆகியவை தீவனத்துக்காகவும், மொட்டு வெள்ளைச்சோளம் உணவுக்காகவும் பயன்படுகிறது.

நிலையான வருமானம் கொடுக்கும் சோளம்!

கலப்பின ரகங்களான கோ-30, பி.எஸ்.ஆர்-1 மற்றும் சி.எஸ்.எச்-5 ஆகியவை தீவனப்பயிர் மற்றும் அடுமனைப் பொருட்கள் தயாரிப்பில் மூலப்பொருளாகவும் பயன்படுகின்றன. தென்மேற்குப் பருவமழை குறைந்ததன் காரணமாக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரிலிருந்து வெள்ளைச் சோளத்தின் வரத்து குறைந்துள்ளது. ஆதலால், வரும் மாதங்களில் வெள்ளைச் சோளத்தின் வரத்து குறைய வாய்ப்புள்ளது. இதனால், சோளத்தின் விலை நிலையாக இருக்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில், ஆடிப்பட்டம் (ஜூலை-செப்டம்பர்) மற்றும் புரட்டாசிப் பட்டம் (அக்டோபர்-டிசம்பர்) ஆகிய இரு பருவ காலங்களில் சோளம் பயிரிடப்படுகிறது. ஆடிப்பட்டத்தில் விளைவிக்கப்படும் சோளத்தில் பாதியளவு கால்நடை தீவனப் பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படுகிறது. புரட்டாசிப் பட்டத்தில் விளைவிக்கப்படும் சோளம், உணவுக்காக உபயோகிக்கப்படுகிறது.

இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் கீழ் இயங்கிவரும் விலை முன்னறிவிப்புத் திட்டத்தின் கீழ் கடந்த 13 ஆண்டுகளாகத் திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய சோளத்தின் விலை ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வு முடிவின் அடிப்படையில் தரமான சோளத்தின் சராசரி பண்ணை விலை ஒரு கிலோ 24 முதல் 26 ரூபாய் வரை இருக்கும் எனத் தெரிய வருகிறது. இந்தச் சந்தை ஆலோசனை அடிப்படையில் விதைப்புப் பணிகள் குறித்த முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

- வியாபாரம் தொடரும்