நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஒரு ஏக்கர்ல ஒரு கோடி... ரகசியத்தை கண்டுபிடிங்க மோடி!

ஒரு ஏக்கர்ல ஒரு கோடி... ரகசியத்தை கண்டுபிடிங்க மோடி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு ஏக்கர்ல ஒரு கோடி... ரகசியத்தை கண்டுபிடிங்க மோடி!

கடிதம் ஜூனியர் கோவணாண்டி - ஓவியம்: ஹரன்

ஒரு ஏக்கர்ல ஒரு கோடி... ரகசியத்தை கண்டுபிடிங்க மோடி!

புண்ணியப் பூமியாம் பாரதப் பூமியின் பெருமைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அய்யாவுக்கு வணக்கமுங்க.

புண்ணியத்தைப் பத்தி உங்களுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனாலும் புதுசா ஒரு புண்ணியத்தை வாங்கிக் கட்டிக்கிறதுக்காகத்தான் உங்களுக்கு இந்தக் கடிதம். அதாவது, எங்க நிலைமை இருக்க இருக்க... இன்னும் மோசமா போயிக்கிட்டே இருக்குதுங்க. இதுக்கு நடுவுல பலபேர் கிளம்பி வந்து எங்களைக் கேவலப்படுத்தவும் பார்க்கறாங்க. அதைத் தடுத்து நிறுத்தி, எங்களோட புண்ணியத்தை நீங்க வாங்கிக்கிறதுக்காகத்தான் இந்தக் கடிதம்.

புண்ணியம்னு சொன்னதுமே பலருக்கும் நினைவுக்கு வர்றது... புண்ணிய நதிகள்தான். வடக்குப் பக்கமிருக்கிற கங்கை, பிரம்மபுத்திரா, யமுனையெல்லாம் உங்களுக்கு நல்லாவே தெரியும். தெற்குப் பக்கம்கூட ஏகப்பட்ட புண்ணிய நதிங்க இருக்கு. குறிப்பா, காவிரியைப் பத்தி உங்களுக்குத் தெரியாம இருக்காது. இதையெல்லாம் புண்ணிய நதினு சொன்னதால, மத்த நதிகளெல்லாம் பாவம் செஞ்ச நதிகளான்னு ஒரு கேள்வி எழுந்து நிக்குதுங்கய்யா.

இப்ப நீங்க சொல்லிட்டிருக்கிற புண்ணிய நதிகளும்கூட பாவப்பட்ட நதிகளா மாறி ரொம்ப நாளாகிப் போச்சுதுங்கய்யா. காரணம்... உங்களுக்கே நல்லா தெரியும். ஏன்னா, பலகோடிகளைக் கொட்டி கங்கையைச் சுத்தம் பண்றதுக்காகப் பெரிய திட்டம் தீட்டி, அதுல ஒரு அமைச்சரோட கவனத்தை முழுசா பதிய வெச்சிருக்கீங்களே.

எங்க ஊருலயும் இப்படிப் பாவப்பட்ட நதிகள் நிறைய இருக்கு. இந்தச் சென்னைப் பட்டணத்துல ஓடுது பாருங்க கூவம் நதி... அது பண்ணின பாவம் கொஞ்சம்நஞ்சமில்ல போலிருக்கு. சென்னையோட மொத்தக் கழிவையும் அதுல கலந்துவிட்டு, அந்த நதியையே காலி பண்ணிட்டாங்க.

இப்படிப் பாவப்பட்ட நதிகளைச் சுத்தம் பண்றதுக்காகக் கொட்டாத கோடிகள் இல்லீங்க. கருணாநிதி முதலமைச்சரா இருந்தப்ப, எம்.ஜி.ஆர். முதலமைச்சரா இருந்தப்ப, மு.க.ஸ்டாலின் துணைமுதலமைச்சரா இருந்தப்ப, ஜெயலலிதா முதலமைச்சரா இருந்தப்ப, ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரா இருந்தப்பனு இந்தக் கூவத்துல இவங்கள்லாம் காட்டின அக்கறை இருக்கே... அடடா!

சும்மா ஐந்நூறு கோடி, ஆயிரம் கோடினு அள்ளிக் கொட்டி கூவத்தைச் சுத்தப்படுத்துறதுக்காக இவங்க எடுத்துக்கிட்ட நடவடிக்கைகள் சொல்லி மாளாதுங்க. ஆனா, இந்தக் கேடுகெட்ட கூவமிருக்கே, அதுக்குத்தாங்க கொடுப்பினை இல்லை. கொஞ்சம்கூட சுத்தமாக மாட்டேன்னு அடம்பிடிச்சுட்டே இருக்குதுனா பார்த்துக்கோங்க.

‘என்ன ஜூ.கோ... நக்கலானு கேக்கறீங்களா?’

தெரியுதுல்ல? கங்கையைச் சுத்தம் பண்ணணும்னா... கங்கையில வந்து சேருற கழிவுகளைச் சேரவிடாம தடுக்கணும். அதுக்குப் பிறகு நதியைச் சுத்தப்படுத்தணும். அப்பத்தான் நதி சுத்தமாகும். ஆனா ஆத்துல, குளத்துல, ஏரியில கலக்குற கழிவுகளுக்கெல்லாம் முடிவு கட்டாம... கோடி கோடியா கொட்டி சுத்தம் பண்ணிட்டே இருந்தா, இன்னும் கோடி வருஷம் ஆனாலும் ஆறு, குளம், ஏரி எதுவுமே சுத்தமாகாது.

அதேமாதிரிதான், கறுப்புப்பணம் உருவாகிற, ஊற்றெடுக்கிற இடங்களையெல்லாம் துடைச்செடுக்காம ஐந்நூறு, ஆயிரத்தைத் தடை பண்ணிட்டே இருக்கிறதுல அர்த்தமில்ல. நீங்க என்னதான் பண்ணினாலும் வேற வேற பாதையைக் கண்டுபிடிச்சிட்டேதான் இருப்பாங்க.

நீங்க என்னவோ இந்தத் திட்டத்தைக் கொண்டு வர்றதுக்கு 6 மாசமா ரூம் போட்டு யோசிச்சதா சொல்றீங்க. ஆனா, அன்னிக்கு ராத்திரி அடுத்தடுத்த நொடியே ஆளாளுக்குப் புது ரூட் போட்டு தங்கமாவும், பழைய பணத்தோட மதிப்புல 60 சதவிகிதத்துக்குப் புதுப் பணமாவும் கறுப்புப் பணத்தை மாத்தின சாதுர்யம் இருக்கே... என்னா வேகம்... என்னா மூளை? பழைய பணத்தை மாத்தி, புதுப்பணமா கொடுக்கிற வேலைகள் இன்னைக்கு வரை நிக்கல. உங்க கட்சிப் பிரதிநிதி, பேங்க் ஆபீஸருங்க, இன்ஜினீயருங்கனு வரிசையா போலீஸ்ல மாட்டிக்கிட்டே இருக்காங்களே, பேசாம இவங்கள்ல சிலரைத் தேர்ந்தெடுத்து ரிசர்வ் பேங்க்லயும், நிதித்துறையிலயும் சேர்த்துக்கிட்டா, பிரமாதமா திட்டம்போட்டுக் கறுப்புப் பணத்தைத் தடுத்து நிறுத்திடுவாங்கனு தோணுது.

அரசாங்கத்தோட பொறியில இருந்து தப்பிக்கிறதுக்காக, ஆளாளுக்கு ‘விவசாய வருமானம்’னு சொல்லி ஆயிரம் கோடி, லட்சம் கோடினு கணக்குக் காட்டி தப்பிக்கிற சங்கதிங்க வெளியில வர ஆரம்பிச்சிருக்கு. விவசாய வருமானத்துக்கு வரி கட்ட வேண்டியதில்லைங்கிற ஒரு சலுகையை, இந்தக் கேடுகெட்ட ஜென்மங்கள் தவறா பயன்படுத்திக் கிட்டிருக்காங்க.

இருக்கிறதிலயே உத்தமமான, உசந்த தொழில்னு நாங்க, நீங்கனு எல்லாரும் நம்பிக்கிட்டிருக்கிறது விவசாயத்தைத்தான். எங்க அய்யன் திருவள்ளுவர்கூட இதைத்தான் தூக்கிப் பிடிக்கிறார், ‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்’னு. ஆனா, இப்ப அதுலயும் சாக்கடைங்க புகுந்து, புண்ணிய நதியைக் கெடுத்த மாதிரி கெடுக்க ஆரம்பிச்சிருக்காங்க.

இந்த ஆசாமிங்க எல்லாரும் விவசாய வருமானம் கோடி கோடியா கொட்டுதுனு கிளப்பிவிட்டா... அப்புறம் நிஜமான கோவணாண்டிங்க நாட்டுல நடமாடவே முடியாதுங்கய்யா. ‘ஏண்டா, கோடி கோடியா கொட்டுது... ஆனா, வாங்குன கடனைக் கட்டாம கடுக்காய் கொடுக்கப் பாக்குறியா... எவன்கிட்ட வேலை காட்டுறீங்க’னு கந்துவட்டிக்காரன்ல இருந்து, உங்க பேங்க் ஆபீஸருங்க வரைக்கும் வந்து நாக்கப்புடுங்கற மாதிரி கேள்வியைக் கேட்டுட்டு, கோவணத்தையும்கூட விட்டு வைக்காம உருவ ஆரம்பிச்சுடுவாங்க. அப்புறம் நாங்க நாண்டுகிட்டுத்தான் செத்துத் தொலைக்க வேண்டியிருக்கும்.

ஒரு ஏக்கர்ல ஒரு கோடி... ரகசியத்தை கண்டுபிடிங்க மோடி!

காங்கிரஸ் கட்சியோட முன்னாள் அமைச்சர் சரத் பவார், அதாங்க மகாராஷ்டிராவுல உங்க கட்சி ஆட்சிக்கு வர்றதுக்குப் பின்னாடி இருந்து முட்டுக் கொடுத்த பெரிய மனுஷன்... அவரோட பொண்ணு சுப்ரியா சுலே எம்.பி, பிஸினஸ், ஷேர் மார்க்கெட் இதோட ஒன்பது ஏக்கர் நிலத்தையும் வெச்சிருக்காங்க. 100 கோடிக்கு மேல லாபக் கணக்குக் காட்டியிருக்காங்களாம். இதுல விவசாயத்துல மட்டுமே கோடிகள்ல லாபம் பார்த்ததா சொல்லிக்கிறாங்க. பீகாரைச் சேர்ந்த ஒருத்தர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ) மூலமா விவரம் கேட்டதுல, பல லட்சம் கோடி ரூபாய் வரைக்கும் விவசாய வருமானம்னு கணக்குக் காட்டி பெரும்புள்ளிங்க, பெரிய பெரிய கம்பெனிங்க கொழிச்சுக்கிட்டிருக்கிறதா தகவல் வருது.

ஆகக்கூடி, ‘ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’ங்கிற கணக்கா... எல்லாரும் எங்க பேரைச் சொல்லிக்கிட்டுத் தகிடுதத்தம் செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. இப்படியே போச்சுனா, ‘அடடே, விவசாயத்துல பெரிய வருமானம் வருது. ஆனா, இந்தக் கோவணாண்டிங்க பஞ்சப்பாட்டு பாடிக்கிட்டிருக்கானுங்க. அதனால விவசாய வருமானத்தையும் கணக்குல காட்டச் சொல்லு’னு அக்மார்க் தேசபக்தனுங்கனு பலபேரு கிளம்பிடுவாங்க. அதை நினைச்சா, ரொம்பவே பயமாயிருக்கு.

இப்படி விவசாய வருமானம்னு கணக்குக் காட்டுறது புதுசு இல்ல... பழசுதான். ஆனா, இப்ப அது ரொம்பப் பெருசா இருக்கே. இதுவரைக்கும் இப்படி ‘விவசாய வருமானம்’னு கணக்குக் காட்டின பெரும்புள்ளிங்களை வளைச்சிப் புடிச்சு கணக்குக் கேட்டிருக்கீங்களா?

ஒரு ஏக்கர்ல ஒரு லட்சம், ரெண்டு லட்சம் எடுக்கறதுக்கே அவனவன் அல்லாடுறான். இயற்கை விவசாயம், ஜீரோ பட்ஜெட் விவசாயம், மதிப்புக்கூட்டல்னு பல சங்கதிகளைக் கையில எடுத்தாத்தான் லட்சங்கள்ல வருமானம்கிறதே சாத்தியம். இவங்க என்னடான்னா... ஒரு கோடி ரூபாய் எடுத்த மாதிரி கணக்குக் காட்டுறாங்க.

எனக்குத் தெரிஞ்சு பணம் காய்க்கிற மரத்தை ஒரு ஏக்கர் முழுக்க நட்டாகூட, இத்தனை கோடி முளைக்குமானு தெரியலீங்க. உங்க வருமான வரித்துறை அதிகாரிங்களைக் கொஞ்சம் உசுப்பிவிட்டு, இப்படி விவசாயத்துல கோடிகள்ல வருமானம் எடுக்கிற ரகசியத்தைக் கண்டுபிடிக்கச் சொல்லுங்க. அப்படியே அதை எங்களுக்கும் வந்து விளக்கமா சொல்லச் சொல்லுங்க. அவங்க என்ன விதை போட்டு இப்படிக் கோடி கோடியா அள்ளுறாங்களோ... அதையே நாங்களும் விதைச்சு அள்ளிக்கிறோம்.

ஐயா... இந்த ரகசியத்தை மட்டும் நீங்க கண்டுபிடிச்சு சொல்லிட்டீங்கனா... நாட்டு மக்கள் தொகையில 60 சதவிகிதமா இருக்கிற பிச்சாதிபதி விவசாயிங்க எல்லாருமே குரோர்பதி விவசாயியா மாறிடுவோம். அதுக்குப் பிறகு நீங்களும் இன்னும் ஜாலியா உலகத்தைச் சுத்தி சுத்தி வரலாம். ஏன்னா, நாட்டுல எல்லாருமே குரோர்பதியான பிறகு, உங்களுக்கு எங்களப் பத்தி கவலைப்பட தேவையிருக்காதே.

அப்புறம் இன்னொரு விஷயமுங்க... இப்ப பல லட்சம் கோடி ரூபாய் பேங்குக்குள்ள வந்திருக்கு. இதையெல்லாம் பழையபடி மல்லையா மாதிரி ஆட்களுக்கே அள்ளிக் கொடுத்துட்டு, வாராக்கடன் பட்டியலை அனுமார் வால் கணக்கா நீட்டிவிட்டுடாதீங்க.

‘நாட்டோட வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவோம். கட்டமைப்புகளுக்காகப் பயன்படுத்துவோம்’னு இப்ப சொல்ல ஆரம்பிச்சிருக்கீங்க. இதுவரைக்கும் நாட்டை ஆண்ட எல்லாருமே இப்படிச் சொல்லிச் சொல்லியே தேரை இழுத்து தெருவுல விட்டுட்டுப் போயிட்டாங்க. ஆனா, வளர்ச்சியைத்தான் பார்க்க முடியல... திரும்பின பக்கமெல்லாம் வீக்கமாத்தான் இருக்கு. இதையே வளர்ச்சினு சொல்லிச் சொல்லி எங்களையெல்லாம் நம்ப வெச்சுட்டாங்க. நீங்க நிச்சயமா வளர்ச்சியை நோக்கி மட்டுமே நகர்வீங்கனு நம்புறோம். அதனால, உண்மையா உழைக்கிற விவசாயி ங்களுக்கும் சிறு, குறு தொழிலதிபர்களுக்கும் இந்தப் பணத்தையெல்லாம் கொடுத்துக் கைதூக்கிவிடுங்க. அவங்களோட புண்ணியமும் உங்களுக்கு வந்து சேர ஆரம்பிக்கும்.

இப்படிக்கு

ஜூனியர் கோவணாண்டி