நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கிச்சிலிச் சம்பா... வியக்க வைக்கும் மறுதாம்பு மகசூல்!

கிச்சிலிச் சம்பா... வியக்க வைக்கும் மறுதாம்பு மகசூல்!
பிரீமியம் ஸ்டோரி
News
கிச்சிலிச் சம்பா... வியக்க வைக்கும் மறுதாம்பு மகசூல்!

மகசூல்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்

கிச்சிலிச் சம்பா... வியக்க வைக்கும் மறுதாம்பு மகசூல்!

‘விளைநிலத்தையே ஆராய்ச்சிக்கூடமாக மாற்ற வேண்டும்’ என்று ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். அப்படிப் புதிய முயற்சிகள், புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்திப் பார்த்து வெற்றிபெற்ற ஏராளமான இயற்கை விவசாயிகள் உண்டு. அவர்களில் ஒருவர்தான், தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம். இவர், கிச்சிலிச் சம்பா ரக நெல்லைச் சாகுபடி செய்து ஒரு ஏக்கர் நிலத்தில் 22 மூட்டை மகசூல் எடுத்ததோடு, அதை மறுதாம்பு விட்டு 6 மூட்டை மகசூலும் எடுத்திருக்கிறார்.

25.9.2015-ம் தேதியிட்ட இதழில், ‘அதிக மழையிலும் அசராத ஜீரோ பட்ஜெட்’ என்ற தலைப்பில் ‘பசுமை விகடன்’ இதழில் வெளியான கட்டுரை மூலம், ஏற்கெனவே வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான், ராமலிங்கம்.

வயலில் நெல்லைப் புடைத்துக்கொண்டிருந்த ராமலிங்கத்தைச் சந்தித்தோம். “இது மறுதாம்புல விளைஞ்ச நெல். ஆனாலும் நெல்மணிகள் எல்லாமே நல்லா திரட்சியா இருக்கு. இதுக்கு உழவு, நாற்று உற்பத்தி, நடவுச்செலவு எதுவுமே இல்லை. தண்ணீர், இடுபொருள்கூட கொடுக்கலை. ஏக்கருக்கு 6 மூட்டை நெல் மகசூலானதைப் பார்த்து எங்க பகுதி விவசாயிகள் எல்லாரும் ஆச்சர்யப்படுறாங்க” என்று சந்தோஷத்துடன் சொன்ன ராமலிங்கம், தொடர்ந்தார்.

“நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பத்தாவது வரைக்கும் படிச்சிட்டு டிரைவர் வேலை பார்த்திட்டு இருந்தேன். ‘பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்ச பிறகு, அந்த வேலையை விட்டுட்டு விவசாயத்துக்கு வந்திட்டேன். ஆறு வருஷமா இயற்கை விவசாயம் செஞ்சிட்டிருக்கேன். எங்களுக்கு 6 ஏக்கர் நிலம் இருக்கு. சம்பாப் பட்டத்துல 6 ஏக்கர்லயும் நெல் சாகுபடி செய்வோம். கோடையில் 4 ஏக்கர்ல உளுந்து, 2 ஏக்கர்ல நெல்னு சாகுபடி செய்வோம். பெரும்பாலும் பாரம்பர்ய நெல் ரகங்களைத்தான் சாகுபடி செய்வோம். அப்படியே நெல்லா விற்பனை செய்யாம, அரிசி ஆக்கிதான் விற்பனை செய்வோம்.

கோடைப்பட்டத்தில் சோதனை முயற்சி!

கிச்சிலி நெல், சம்பா பட்டத்துக்கான ரகம். போன சம்பா பட்டத்துல சாகுபடி செஞ்சப்போ, ஏக்கருக்கு 30 மூட்டை மகசூல் கிடைச்சது. என்னோட வாடிக்கையாளர்கள் நிறைய பேர், இந்த ரக அரிசியை அதிகமா கேக்குறாங்க. அதனால, இந்த வருஷம் கோடைப்பட்டத்துல சோதனை முயற்சியா 2 ஏக்கர்ல கிச்சிலி சம்பா சாகுபடி செஞ்சேன். 15 நாளைக்கு ஒரு தடவைதான் தண்ணீரே பாய்ச்ச முடிஞ்சுது. அவ்வளவு வறட்சியிலேயும் ஏக்கருக்கு 22 மூட்டை நெல் மகசூலாச்சு” என்ற ராமலிங்கம், மறுதாம்பு அனுபவம் குறித்துச் சொன்னார்.

தானாக முளைத்த மறுதாம்பு!

“மறுதாம்பு விடணும்னு யோசனை எல்லாம் கிடையாது. விளைஞ்ச நெல்லை மெஷின் மூலம் அறுவடை செஞ்சோம். அப்போ, தரையில இருந்து முக்கால் அங்குல உயரத்துக்கு தான் இருந்துச்சு. அப்படியே விட்டுட்டேன். அறுவடை முடிஞ்ச 20-ம் நாள் மழை பெய்ஞ்சது. அதுல அந்தத் தாள் வளர ஆரம்பிச்சது. நல்லா வளருதேனு, அப்படியே விட்டுட்டேன். 70-ம் நாள் நல்லா வாளிப்பா கதிர் பிடிச்சிடுச்சு. அப்பவே எல்லாரும் பார்த்து ஆச்சர்யப்பட்டாங்க. 95-ம் நாள்லயே கதிர் எல்லாம் முத்திடுச்சு. வழக்கமா கிச்சிலிச்சம்பா 145 நாள்லதான் அறுவடைக்கு வரும். ஆனா, மறுதாம்புல 95 நாள்லயே அறுவடைக்கு வந்திடுச்சு.

அறுவடை செஞ்சப்போ, ஏக்கருக்கு 6 மூட்டை அளவு மகசூல் கிடைச்சது. பொதுவா பாரம்பர்ய நெல்லுல மறுதாம்பு விளைச்சல் எடுக்க முடியும். ஆனா, இயற்கை முறைச் சாகுபடிங்கிறதால தரமான நெல் மகசூலாகியிருக்கு. நான் இடுபொருள் எதுவும் கொடுக்காமலே 6 மூட்டை கிடைச்சிருக்கு. இடுபொருள் கொடுத்துப் பராமரிச்சிருந்தா 20 மூட்டைகூட எடுத்திருக்கலாம்” என்ற ராமலிங்கம், தனது தனித்துவமான தொழில்நுட்பங்கள் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு நாற்றில் 80 தூர்கள்!

“நான் மேட்டுப்பாத்தி அமைச்சுதான் நாற்றுகள உற்பத்தி செய்வேன். ஒரு நாற்றுல கிட்டத்தட்ட 80 தூர்கள் வரை உருவாகும்.

அதேமாதிரி, ஜீவாமிர்தத்தை நான் பாசனத் தண்ணீர்ல கலந்து விட மாட்டேன். அப்படி செஞ்சா ஜீவாமிர்தம் அங்கங்க தேங்கி வயல் முழுக்கா சீராக போய்ச் சேராது. ஜீவாமிர்தத்தை வடிகட்டி, தெளிப்பான் மூலமா தெளிச்சாலும் வீரியம் குறைஞ்சிடும். அதனால, ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை வாளியில் எடுத்துட்டுப் போய்க் குவளையில மொண்டு, காத்து வீசுற திசையில தெளிச்சி விடுவேன். அதனால எல்லாப் பயிருக்கும் சீரான அளவுல ஊட்டம் கிடைச்சிடும். இதேமாதிரிதான் பூச்சிவிரட்டியையும் தெளிப்பேன். அதனாலதான் பயிர் செழிப்பா வளருது” என்ற ராமலிங்கம், வருமானம் குறித்துச் சொன்னார்.

அரிசியாக விற்பனை!

“கோடைப்பட்டத்துல 2 ஏக்கர்ல விதைச்ச கிச்சிலிச்சம்பா ரகத்துல 44 மூட்டை நெல் (60 கிலோ மூட்டை) கிடைச்சது. அதை அதிகமாகத் தீட்டாம, ‘செமி பாலீஷ்’ அரிசியா அரைச்சதுல 1,760 கிலோ அரிசி, 220 கிலோ குருணை,

360 கிலோ தவிடு கிடைச்சது. ஒரு கிலோ அரிசி 60 ரூபாய்னு விற்பனையாச்சு. அதுமூலமா, 1 லட்சத்து 5 ஆயிரத்து 600 ரூபாய் வருமானம் கிடைச்சது. ஒரு கிலோ குருணை 25 ரூபாய்னு விற்பனை செஞ்சது மூலமா, 5 ஆயிரத்து 500 ரூபாய் கிடைச்சது. ஒரு கிலோ தவிடு 10 ரூபாய்னு விற்பனை செஞ்சது மூலமா 3 ஆயிரத்து 600 ரூபாய் கிடைச்சது.

ஆக மொத்தம் 1 லட்சத்து 14 ஆயிரத்து 700 ரூபாய் வருமானம் கிடைச்சது. இதுல 37 ஆயிரத்து 600 ரூபாய் செலவு போக... 2 ஏக்கர்ல 77 ஆயிரத்து 100 ரூபாய் லாபமா நின்னது. இதேமாதிரி மறுதாம்புல கிடைச்ச 12 மூட்டை நெல்லையும் அரிசியாக்கி விற்பனை செஞ்சா, அரவைக் கூலியெல்லாம் போக 26 ஆயிரம் ரூபாய்க்கு குறையாம லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு, புடைத்த நெல்லை மூட்டை பிடிப்பதில் மும்முரமானார்.

தொடர்புக்கு,
ராமலிங்கம்,
செல்போன்: 78711 26888.

மேட்டுப்பாத்தி நாற்றாங்கால்!

தேர்வு செய்த நிலத்தில் சேற்றுழவு செய்து 12 நாட்கள் ஆறவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்து 3 நாட்கள் ஆறவிட வேண்டும். பிறகு 72 அடி நீளம், மூன்றரையடி அகலம், 3 அங்குல உயரத்தில் மேட்டுப்பாத்தி அமைத்து அதில் 50 கிலோ கனஜீவாமிர்தத்தை (பவுடர் வடிவில் இருக்கும்) தூவ வேண்டும். பின்னர், 15 கிலோ கிச்சிலிச்சம்பா விதையைப் பாத்தியில் பரவலாகத் தூவ வேண்டும். பிறகு 50 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவி வைக்கோலைப் பரப்பி விதைகளை மூட வேண்டும்.

தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் வைக்கோல்மீது தண்ணீர் தெளித்து வர வேண்டும். விதைத்த 5-ம் நாள் மூடாக்கை நீக்க வேண்டும். 6-ம் நாள் 2 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியை 24 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

9-ம் நாள் 20 கிலோ கனஜீவாமிர்தத்தில் தேவையான அளவு ஜீவாமிர்த கரைசலை கலந்து புட்டுப் பதத்தில் பிசைந்து தூவ வேண்டும். 15-ம் நாளுக்கு மேல் நாற்றுகள் தயாராகிவிடும்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கர் பரப்பில், கிச்சிலிச்சம்பா சாகுபடி முறை குறித்து ராமலிங்கம் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

தேர்வு செய்த ஒரு ஏக்கர் வயலில் ஒரு சால் சேற்றுழவு செய்து எருக்கன், நொச்சி, ஆடாதொடை, வேம்பு, நுணா, ஒதியன், காட்டாமணக்கு ஆகிய இலைகளை 1,500 கிலோ அளவு வயலில் கொட்டி மிதித்து 15 நாட்கள்  அப்படியே விட வேண்டும். சேறு காயாத அளவுக்கு அவ்வப்போது தண்ணீர் விட வேண்டும். பிறகு, ஒரு சால் உழவு ஓட்டி வயலை மட்டம் பிடித்து 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பரவலாகத் தெளித்து, முக்கால் அடி இடைவெளியில் ஒற்றை நாற்று முறையில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

நடவு செய்த 15-ம் நாள் 20 கிலோ வேப்பம்பிண்ணாக்கைப் பரவலாகத் தூவ வேண்டும். களைகள் இருந்தால் கோனோ வீடர் மூலம் அழுத்திவிட வேண்டும். 16, 45, 60 மற்றும் 75-ம் நாட்களில் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து குவளை மூலம் செடிகள் மீது வீசித் தெளிக்க வேண்டும். 30-ம் நாள் 200 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து வீசித் தெளிக்க வேண்டும். கதிர் பிடிக்கும்போது, 200 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் புளித்த மோர், 50 கிராம் மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்து வீசித் தெளிக்க வேண்டும். 120-ம் நாளுக்கு மேல் அறுவடை செய்யலாம்.