நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

மண்ணுக்கு சத்தாகும் சாண உருளை!

மண்ணுக்கு சத்தாகும் சாண உருளை!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்ணுக்கு சத்தாகும் சாண உருளை!

கருவித.ஜெயகுமார்

மண்ணுக்கு சத்தாகும் சாண உருளை!

மிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் செயல்பட்டு வரும் உயிர்சக்தித் துறையில், சாண உருளை தயாரிக்கும் கருவியை உருவாக்கியுள்ளார்கள்.

இதுகுறித்து துறையின் உதவிப் பேராசிரியர் மகேந்திரன் பேசியபோது, “இந்தக் கருவியைக் கொண்டு எளிதாகச் சாணத்தை உருளைகளாக (கட்டி) மாற்றிக் கொள்ளலாம். இந்தச் சாண உருளைகளைக் காயவைத்து வறட்டியைப் போல் எரியூட்டுக் கலன்களில் பயன்படுத்தலாம். சாணத்தை வட்டமாகத் தட்டி, சுவரில் ஒட்டிக் காய வைத்துக் கொண்டிருந்த பழைய முறையை, இனி இதுபோன்ற கருவிகள் கொண்டு எளிதாகச் செய்துகொள்ளலாம்.

இதன் இன்னொரு முக்கியப் பயன்பாடு, சாண எரிவாயுக் கலனைப் பயன் படுத்தும்போது வெளிவரும் சாணக் கரைசலை உருளைகளாக மாற்றி, தேவைப்படும்போது நிலங்களுக்குப் பயன்படுத்தலாம்.

சாணத்தோடு தேங்காய் நார்க் கழிவுகளையும் கலந்து உருளைகளாக மாற்றி வயல்களில் இடும்போது நிலத்தை ஈரப்பதத்தோடு வைப்பதால், பயிர்களுக்கான நீர்த் தேவையைக் குறைக்கும். இந்தக் கருவி 3 எச்.பி.(குதிரைத் திறன்) மின்சாரத்தால் இயங்கக்கூடியது. கருவியின் விலை உத்தேசமாக 40 ஆயிரம் ரூபாய்” என்றார்.

மண்ணுக்கு சத்தாகும் சாண உருளை!

இத்துறையின் பேராசிரியர் முனைவர் புகழேந்தி, “இன்று அதிக ரசாயன உரங்கள் பயன்படுத்துவதால், நிலத்தில் அங்ககச்(ஆர்கானிக்) சத்து இல்லாமல் மண் வளமற்று இருந்துவருகிறது. இதற்கு மாட்டுச் சாணம், தேங்காய் நார்க்கழிவு, உயிர் உரங்கள் இதை மூன்றையும் ஒன்றாகக் கலந்து கருவியில் இட்டு, உருளைகள் ஆக்கிக்கொள்ள வேண்டும். இதை நேரடியாக நிலத்தில் ஆங்காங்கே அப்படியே போட்டுவிட்டால் போதும்.

நிலத்தில் மண்புழுக்களும் நுண்ணுயிரிகளும் பெருகி நிலம் வளமாக இருக்கும். விளைச்சலும் கூடும். மண்ணில் அங்ககச் சத்து கூடி வளம்குன்றா வேளாண்மைக்கு வழிவகுக்கும். சத்துக் குறைபாடு உள்ள நிலங்களில் இதைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். இயற்கை விவசாயம் செய்வோருக்குக் கூடுதல் பலன் கிடைக்கும். நகர்ப் பகுதிகளில் அமைக்கப்படும் மாடித்தோட்டங்களிலும் இதைப் பயன்படுத்தலாம்” என்றார்.

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், உயிர்சக்தித் துறை வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோயம்புத்தூர்.
தொலைபேசி: 0422 6611276