நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கியூபாவின் ‘இயற்கை’ வழிகாட்டி!

கியூபாவின் ‘இயற்கை’ வழிகாட்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
கியூபாவின் ‘இயற்கை’ வழிகாட்டி!

மாத்தி யோசிமண்புழு மன்னாரு - ஓவியம்: ஹரன்

கியூபாவின் ‘இயற்கை’ வழிகாட்டி!

‘‘கியூபா மட்டும் இயற்கை விவசாயத்துக்கு மாறாமல் இருந்திருந்தால், சோமாலியாவில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை நிலைதான் கியூபாவிலும் ஏற்பட்டிருக்கும்’’னு பொருளாதார வல்லுநர்கள் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறாங்க.

இயற்கை வேளாண்மைன்னா, அது அறிவியலுக்கு எதிரானதுன்னு, விஞ்ஞானிகள் சொல்லிக்கிட்டிருந்த நேரத்துல, இயற்கை வேளாண்மைதான் அறிவியலுக்கு ஆதரவானதுன்னு தெளிவா பேசுன மனுஷந்தான், கியூபா நாட்டோட முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ. கடந்த ஆகஸ்ட் மாசம் 90வது பிறந்த நாளை, தன்னோட வீட்டுத்தோட்டதுல கொண்டாடினாரு. அந்தத் தோட்டத்துல இருக்கிற முருங்கை மரங்களோட பெருமையை, தன்னோட வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு, மணக்க மணக்கச் சொல்வாராம் காஸ்ட்ரோ. இந்த முருங்கை மரங்களை இந்தியாவுல இருந்து கொண்டு வந்தோம்னு மறக்காம சொல்லுவாராம். பசுமை விகடன் 10.10.16 தேதி வெளியான இதழ்ல ‘‘முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோ!’’னு விளக்கமாவே சொல்லியிருந்தேன்.

இயற்கை விவசாயத்தை நேசிச்ச, ஃபிடல் காஸ்ட்ரோ அண்மையில இயற்கையில கலந்துட்டாரு. ஃபிடல் காஸ்ட்ரோவோட வரலாறு, வெறும் தனிமனித வரலாறோ, ஒரு நாட்டோட கதையோ கிடையாது. ரசாயன விவசாயம்ங்கிற பேரழிவுல இருந்து மீண்டு வந்த, மக்களோட வெற்றிக் கதை.

1991 வருஷம் வாக்குல, சோவியத் ரஷ்யா சிதறி பிரிஞ்சுச்சு. இதுக்கு முன்னாடி வரையிலும், சோவியத் ரஷ்யாவோட செல்லப் பிள்ளையா கியூபா இருந்துச்சு. உறவு விரிசல் ஏற்பட்டவுடனே, கியூபாவோட ஒட்டுமொத்த பொருளாதாரமும் கீழ விழுந்துடுச்சு. பொருளாதாரம் சீராகணும்னா, விவசாயம்தான் முக்கியம்னு அப்போ அதிபரா இருந்த காஸ்ட்ரோவுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு. சோவியத் கூட கூட்டாளியா இருந்த வரையிலும், ரசாயன விவசாயம்தான் நடந்துச்சு. உலகின் ‘சர்க்கரைக் கிண்ணம்’னு கியூபாவைக் கொண்டாடினாங்க. ஆனா, அந்தப் பேரு நீண்ட நாளைக்கு நீடிக்கல. ரசாயன விவசாயம் ஏற்படுத்தின பாதிப்புல கரும்பு விளைச்சல், கசக்கத் தொடங்கியிருக்கு. நீண்ட காலத்துக்கு ஏத்தது, இயற்கை விவசாயம்தான்னு காஸ்ட்ரோவுக்குத் தெளிவா தெரிஞ்சிருக்கு. கரும்புங்கிற ஒற்றைப் பயிர்ச் சாகுபடி முறைக்கு, முழுக்குப் போட்டு பல பயிர்ப் சாகுபடிக்கு மாறினாங்க. அந்த நாட்டு மக்களும், அதிபர் காட்டிய வழியில நடக்க ஆரம்பிச்சாங்க.

1992-ம் வருஷம் ஏறத்தாழ நாடு முழுக்க இயற்கை விவசாயம் இயக்கமாவே மாறியிருந்துச்சு. கிராமப்புறங்களுக்கு வேலை செய்ய விருப்பத்தோட வர்ற நகர மக்களுக்காக, தற்காலிகக் குடில்கள் கட்டிக் கொடுத்தாங்க. இப்படி தற்காலிகமா வர்றவங்க 15 நாள், வயல்ல இறங்கி வேலை செய்வாங்க. 15 நாள் முடிஞ்சவுடனே திரும்பவும் நகரத்துக்குத் திரும்பிடுவாங்க. இதுல டாக்டர், இன்ஜினீயர், பேராசிரியர்னு எல்லோருமே 15 நாள் விவசாயிகளாக வலம் வந்தாங்க. இந்த நடைமுறை ஏறத்தாழ உணவு உற்பத்தியில கியூபா தன்னிறைவு அடையுற வரையிலும் தொடர்ந்திருக்கு.

நகர்ப்புற மக்கள் உணவுப் பொருட்களுக்காகக் கிராமங்களை நம்பி இருந்தாங்க, இதனால அதிகச் செலவு ஏற்பட்டுச்சு. அதாவது, கிராமப்புறங்களில் உற்பத்தியாகுற காய்கறி, பழங்களைப் பதப்படுத்தவும், சேமிச்சு வைக்கவும், கிராமத்திலிருந்து நகரங்களுக்குக் கொண்டு போக, போக்குவரத்துக்கும் முதலீடு அதிகமா தேவைப்பட்டிருக்கு. முதலீடு இல்லாமலே, அதைச் சமாளிக்கத் திட்டம் போட்டாங்க. நகர்ப் பகுதியிலேயே காய்கறிகள் உற்பத்தி நடந்துச்சு. சிறிய அளவான, வீட்டுத்தோட்டம் அமைக்க, அதிகமான மனித வளமே இருந்ததால, பெரிய இயந்திரங்கள் தேவைப்படல. வீட்டுத் தோட்டம்னா, வீட்டுல மட்டும் விதைக்கல, நகரத்துல காலியா உள்ள அத்தனை இடத்துலயும், பயனுள்ள காய்கறிகளைச் சாகுபடி செய்தாங்க.  குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளை, நகர்ப்புறத்துல உள்ள தோட்டத்திலேயே அறுவடை செய்து சாப்பிட்டாங்க.  உற்பத்தி பண்ணி, சாப்பிட ஆரம்பிச்சாங்க. இந்த முறைக்கு ‘ஆர்கானோபோனிகஸ்’னு (Organoponicos)பேரும் வெச்சாங்க.

அந்தச் சமயத்துல  கியூபாவுல உள்ள பள்ளி மாணவர்களும்கூட விவசாயம் செய்யத் தொடங்குனாங்க. மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, பாடத்திட்டத்தோட ஒரு பகுதியா, கிராமங்களுக்குப் பயணம் போய், விவசாயத்தை ஒரு பாடமாகவே கத்துக்கிட்டாங்க. வாரத்துக்கு ரெண்டு முறை தொலைக்காட்சியில் இயற்கை விவசாயம் சம்பந்தமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்புனாங்க. இதுக்குப் பின்னாடி, இன்னொரு தகவலும் இருக்கு.

கியூபாவுல உணவுக்கு மட்டுமில்லீங்க, காகிதத்துக்கும் தட்டுப்பாடு உண்டாகியிருக்கு. இதனாலத்தான், இயற்கை விவசாயம் சம்பந்தமா புத்தகம், குறிப்பேடு அச்சடிச்சுக் கொடுக்கிறதைவிட, தொலைக்காட்சி ஒளிபரப்புச் செலவு குறைந்ததா இருந்திருக்கு.

முன்னேற்றம் அடையுறதுக்கு என்னென்ன வழிகள் உண்டோ, அத்தனையும் கியூபா மக்கள் கையாண்டாங்க. இயற்கை விவசாயத்திலேயும், வீட்டுத்தோட்டத்திலேயும் கியூபா செய்த சாதனையை, இப்ப உலகமே கொண்டாடிக்கிட்டிருக்கு. உணவு உற்பத்தியில தன்னிறைவு அடைஞ்சது மட்டுமில்லாம, மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்காங்க. ஆரம்பத்துல ‘‘இயற்கை விவசாயத்தில் நல்ல விளைச்சல் கிடைக்காது’’னு சொன்ன விஞ்ஞானிங்ககூட, ‘‘கியூபா மாதிரி, விஞ்ஞானபூர்வமாக இயற்கை விவசாயம் செய்தா கூடுதல் விளைச்சல் கிடைக்கும்’’னு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. ‘‘நமது உழைப்பு மற்றும் அறிவின் மூலம் அற்புதம் நிகழ்த்துவோம்’’னு ஃபிடல் காஸ்ட்ரோ முழங்கினது, கியூபா நாட்டுக்காக மட்டுமில்லீங்க, உலகம் முழுக்க, ரசாயனத்தைத் துறந்து, இயற்கை விவசாயத்தைக் கையில் எடுத்துள்ள விவசாயிகளுக்காகவும்தாங்க.