நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

10 ஏக்கர் ரூ10 லட்சம் லாபம் தென்னை, பாக்கு, ஜாதிக்காய்...

10 ஏக்கர் ரூ10 லட்சம் லாபம் தென்னை, பாக்கு, ஜாதிக்காய்...
பிரீமியம் ஸ்டோரி
News
10 ஏக்கர் ரூ10 லட்சம் லாபம் தென்னை, பாக்கு, ஜாதிக்காய்...

முத்தான வருமானம் கொடுக்கும் மூன்றடுக்கு சாகுபடிமகசூல்ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சக்தி அருணகிரி

10 ஏக்கர் ரூ10 லட்சம் லாபம் தென்னை, பாக்கு, ஜாதிக்காய்...

“இவ்வளவு மூலப்பொருளை உள்ள போட்டா இவ்வளவு பொருள் உற்பத்தியாகி வெளியே வரும்னு கால்குலேட்டர்ல கணக்குப் போடற ஃபேக்டரி கிடையாது, விவசாயம். நாம எவ்வளவு உழைச்சாலும் மண், காத்து, மழை, வெயில், பனி எல்லாம் சரியா அமைஞ்சாத்தான் விதைச்ச விதை விளைச்சலா வீட்டுக்கு வரும். இல்லாட்டி விளைச்சலுக்கு உத்தரவாதம் கிடையாது. ஒரே பயிரை விதைச்சு ஒரே மாதிரி பண்டுதம் பார்த்தாலும் ஒவ்வொரு வயல்லயும் மகசூலாகிற அளவு ஒரே மாதிரி இருக்காது. இத்தனை பிரச்னைகளையும் தாண்டி விவசாயத்துல ஜெயிக்கணும்னா, ஒரே பயிரை சாகுபடி செய்யாம பல பயிர்களைக் கலந்து சாகுபடி செய்றதுதான் வழி. ஒவ்வொரு பயிருக்கும் இருக்குற கூட்டாளி பயிர்களையும் சேர்த்து சாகுபடி செய்றப்போ, ஒண்ணு கைவிட்டாலும், இன்னொண்ணு கரையேத்தி விட்டுடும்”  ஒவ்வொரு வார்த்தையிலும் அனுபவம் தெறிக்கப் பேசுகிறார், ரசூல் மொய்தீன்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலூகா சித்தையன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி தென்னை விவசாயி ரசூல். நாற்பது ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்து வருகிறார். தென்னையில் ஊடுபயிராகப் பாக்கு, ஜாதிக்காய் ஆகியவற்றைச் சாகுபடி செய்து வருகிறார்.

வித்தியாசமான முயற்சிகளை முன்னெடுக்கும் ஆர்வம் கொண்ட இவர், மலையடிவாரப் பகுதிகளில் விளையும் ஜாதிக்காயை சமவெளிப் பகுதியில் சாகுபடி செய்து சாதனை படைத்திருக்கிறார். நல்லாம்பிள்ளை கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் கணக்கு வழக்குப் பார்த்துக்கொண்டிருந்த ரசூலைச் சந்தித்தோம்.

10 ஏக்கர் ரூ10 லட்சம் லாபம் தென்னை, பாக்கு, ஜாதிக்காய்...

விவசாயியைவிட பெரிய ஆள் யாருமில்லை!

“எங்க தாத்தா காலத்துல இருந்தே விவசாயம் செய்றோம். தலைமுறை தலைமுறையா செஞ்சுட்டிருக்கிற விவசாயத்தை விட்டுடக்கூடாதுனு என்னோட பசங்களையும் விவசாயத்துல ஈடுபடுத்திட்டு இருக்கேன். நாம எந்தத்துறையில சாதிச்சாலும், எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் பசியாத்துறது சோறுதான். அந்த உணவை உற்பத்தி செஞ்சுக் கொடுக்குற விவசாயிங்கதான் எல்லாத்தையும்விட பெரியவங்கனு சொல்வாங்க. கடவுளோட பெரும் கருணையால நானும் ஒரு விவசாயியா இருக்கேன். எங்கப்பா அப்துல் காதர், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர். ஆனாலும், ‘தான் ஒரு விவசாயி’ங்கிறதைத்தான் பெருமையாகச் சொல்வார். அதனாலதான் என்னையும் விவசாயியா உருவாக்குனாரு.

எனக்கு ரெண்டு பசங்க. பெரிய பையன் சாகுல் ஹமீது, டிகிரி முடிச்சிட்டுப் பெட்ரோலியம் கம்பெனியில வேலைப் பார்த்துட்டு இருந்தாரு. இப்ப அந்த வேலையை விட்டுட்டு, முழு நேர விவசாயியா இருக்கார். சின்னப் பையன் முகைதீன் அப்துல் காதர், முதுகலை சமூக சேவை படிப்பு முடிச்சிட்டு, மும்பையில ஒரு கம்பெனியில வேலை பார்த்துட்டு இருக்காரு. அவரும் கூடிய சீக்கிரம் விவசாயத்துக்கு வந்திடுவாரு”, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ரசூல், தோப்புக்குள் அழைத்துச் சென்றார்.

தென்னைக்கு இடையில் அழகாக அணிவகுத்து நின்றன, பாக்கு மரங்கள். அவற்றுக்கு இடையில் ஜாதிக்காய் மரங்கள் இடம்பெற்று இருந்தன. சிறியதும் பெரியதுமாய் விதவிதமான வளர்ச்சியில் இருந்த ஜாதிக்காய் மரங்களில் இளம் சந்தன நிறத்தில் காய்த்துத் தொங்கின, ஜாதிக்காய்கள். பல மரங்களின் கீழ் வெடித்த பழங்கள் உதிர்ந்து கிடந்தன. தோப்பு முழுக்க உயிர்மூடாக்காகப் புற்கள் வளர்ந்து கிடந்தன.

இன்னும் கொஞ்சம் நாட்களில் இயற்கை விவசாயி!

“பெரும்பாலும் பள்ளக்கால் பகுதியில நெல், வாழை போடுவாங்க. மேட்டு நிலமா இருந்தா தென்னை சாகுபடி செய்வாங்க. நான் வாங்கும்போது, இது காடா கிடந்தது. நான்தான், திருத்தி கிணறு வெட்டி, தண்ணி உண்டாக்கி 1989-ம் வருஷம் தென்னை நடவு செஞ்சேன். தென்னை ஓரளவுக்குப் பலன் கொடுக்க ஆரம்பிச்சதும், தென்னைக்கு இடையில ஊடுபயிர் போடலாம்னு பாக்கு நடவு செஞ்சேன். அதே வருஷத்துல கேரளாவுல இருந்து வந்த ஒரு நண்பர், ஜாதிக்காய் சாகுபடி செய்யச் சொல்லி ஆலோசனை சொன்னார். உடனே, கேரள மாநிலம், கல்லாறு பகுதியில இருந்து ஜாதிக்காய் செடிகளை வாங்கிட்டு வந்து நட்டேன். ரெண்டு வருஷமா ஜாதிக்காய்ல இருந்து பலன் கிடைச்சிட்டு இருக்கு.

10 ஏக்கர் ரூ10 லட்சம் லாபம் தென்னை, பாக்கு, ஜாதிக்காய்...

இது இல்லாம தனியா ரெண்டு ஏக்கர்ல இளநீருக்காகச் சவுக்காட் ஆரஞ்சு, சவுக்காட் பச்சை ரகத் தென்னையை நடவு செஞ்சிருக்கேன். அதுவும் இப்ப மகசூல்ல இருக்கு. ரெண்டு ஏக்கர்ல கொய்யா இருக்கு. நான் முழுசா இயற்கை விவசாயத்துக்கு இன்னும் மாறல. அதுக்கான முயற்சியில இருக்கேன். அதுக்கான முதல்கட்டமா நாட்டு மாடு வாங்கி, ஜீவாமிர்தம் தயாரிச்சு மரங்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சிருக்கேன். பஞ்சகவ்யா, அமுதகரைசல், மீன் அமிலம் தயாரிப்புக்கான வேலையில இருக்கேன். இன்னும் கொஞ்ச நாள்ல முழுமையான இயற்கை விவசாயியா மாறிடுவேன்” என்ற ரசூல், ஒவ்வொரு பயிர் குறித்தும் விரிவாகச் சொல்ல ஆரம்பித்தார்.

“பத்து ஏக்கர் பரப்புல ‘அய்யம்பாளையம் தென்னை’ங்கிற நாட்டுரகத் தென்னை இருக்கு. 25 அடி இடைவெளியில ஏக்கருக்கு 80 மரங்கள்ங்கிற கணக்குல 800 மரங்கள் இருக்கு. இந்த மரங்களுக்கு 27 வயசாச்சு. இந்தப்பகுதி தட்பவெப்ப சூழ்நிலைக்குத் தென்னை நல்லா வளரும். முழுக்கச் சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சிருக்கோம். தென்னைக்கு ஆறு மாசத்துக்கு ஒரு தடவை உரம் கொடுப்போம். ரசாயன உரம் கொடுத்தாலும்கூட் தொழுவுரத்தைக் கலந்துதான் கொடுப்போம். இப்போ, கொஞ்சம் கொஞ்சமா ரசாயனத்தைக் குறைச்சுக்கிட்டு இருக்கோம். தொழுவுரத்துல சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, வேப்பங்கொட்டை எல்லாத்தையும் கலந்து ஊட்டமேத்தி கொடுக்கிறோம். ஆறு மாசமா ஜீவாமிர்தத்த ஒவ்வொரு மரத்தோட தூர்லயும் ஊத்திக்கிட்டிருக்கோம். சீக்கிரம் சொட்டுநீர்லயே கலந்துவிட ஏற்பாடு பண்ணிடுவோம்.

மரம் ஏறி காய் பறிப்பதில்லை!

தென்னை மரம் ஏறும்போது இடையில் இருக்குற பாக்கு, ஜாதிக்காய் மரங்களுக்குப் பாதிப்பு ஏற்படுறதால, ரெண்டு வருஷமா மரம் ஏறி காய் பறிக்கறதில்லை. தானா கீழ உதிர்ற காய்களைத்தான் எடுக்குறோம். ஒரு மரத்துக்குச் சராசரியா 120 காய்கள் கிடைச்சிடுது. காய் பெருவெட்டா இருக்கறதால ஒரு காய் ஏழு ரூபாய்க்கு குறையாமப் போகும். நான் காய்களா விக்குறதில்லை. காய்களா விக்கும்போது, சின்னக் காய்களைக் கழிப்பாங்க. தனியா வியாபாரிக்குக் கழிவு காய் போடணும். இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு ஆளுங்களை வெச்சி உரிச்சு, உடைச்சு கொப்பரையாக்கித்தான் விற்பனை செய்றேன். கொப்பரையா விற்பனை செய்யும்போது ஒரு காய்க்கு 50 பைசா வரை விலை கூடுதலாகக் கிடைக்குது. பழுது போக, 700 தென்னையில மகசூல் கொடுக்குறதாகக் கணக்கு வெச்சிக்கிட்டாலும், ஒரு மரத்துக்கு 120 காய்கள் வீதம் 84 ஆயிரம் காய்கள் கிடைக்கும். அதைக் கொப்பரையா மாத்தி விற்பனை செய்றப்போ, ஆறு லட்ச ரூபாய்க்கு குறையாம வருமானம் கிடைக்கிது.

10 ஏக்கர் ரூ10 லட்சம் லாபம் தென்னை, பாக்கு, ஜாதிக்காய்...

பாக்குக்குப் பராமரிப்பில்லை!

தென்னைக்கு இடையில ஒரு வரிசை, நாலு தென்னைக்கு நடுவுல ஒரு மரம்னு இடைவெளி இடத்துல எல்லாம் 15 அடி இடைவெளியில பாக்கு மரம் வெச்சிருக்கோம். இந்த இடைவெளியில ஏக்கருக்கு 225 மரங்கள் வைக்கலாம்னாலும் ஜாதிக்காய் மரங்களும் இருக்குறதால ஏக்கருக்கு 80 மரங்கள்ங்கிற கணக்குல 800 பாக்கு மரங்கள் வெச்சிருக்கோம். இதுலயும் பழுது போக, 700 மரங்கள் எப்பவும் காய்ப்புல இருக்குது. இந்தப் பாக்கு மரங்களுக்குப் பத்து வயசாச்சு. தென்னைக்கு உரம் வைக்கும்போது இதுக்கும் கொஞ்சம் வைப்போம். இதுக்கு எந்த நோயும் வராதுங்கிறதால தனியா பராமரிப்பு செய்றதில்லை. தென்னைக்கான பராமரிப்பிலயே பாக்கும் வளர்ந்திடுது. பாக்கு மரங்களைப் பொறுத்தவரைக்கும் நான் அறுவடை செய்றதில்லை. மொத்தமா ஒப்பந்தம் பண்ணி விட்டுடுவேன். காய்ப்பை பொறுத்து ஒரு மரத்துக்கு 200 ரூபாய்ல இருந்து 400 ரூபாய் வரைக்கும் ஒப்பந்தத்துக்கு பேசிப்பாங்க. சராசரியா 300 ரூபாய்னு வெச்சுக்கிட்டா 700 மரங்கள் மூலமா 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிது.

25 அடி இடைவெளியில் ஜாதிக்காய்!

பாக்கு நடும்போதே, ஜாதிக்காய் செடியையும் நடவு செஞ்சிட்டேன். 25 அடி இடைவெளியில, நாலு தென்னைக்கு இடையில ஒரு செடிங்கிற கணக்குல வெச்சேன். ஒண்ணு, ரெண்டு பட்டுப்போச்சு. சிலது சரியா காய்க்கலை. அதெல்லாம் போக, நல்லா காய்க்கிற மரம்னு பார்த்தா 500 மரங்கள் தேறும். ஜாதிக்காயைப் பொறுத்தவரைக்கும் ஏழு வருஷத்துக்கு மேலதான் மகசூலுக்கு வரும். முந்நூறு வருஷம் வரைக்கும் மகசூல் கொடுக்கும்னு சொல்றாங்க. வயசு அதிகமாக அதிகமாக மகசூலும் அதிகமாகும். இப்ப மூணு வருஷமாத்தான் மகசூல் கிடைச்சுட்டு இருக்கு. மொத வருஷம் சொல்லிக்கிற மாதிரி இல்லை. போன வருஷம் சுமாராகக் காய்ச்சிருந்தது. இந்த வருஷம் பரவாயில்லை. ஜாதிக்காய்க்கு தனியா எந்தப் பராமரிப்பும் செய்றதில்லை. தென்னை, பாக்குக்குச் செய்ற பராமரிப்பிலயே வளந்திடுது.

இதுக்கு இதுவரை நோயே தாக்குனதில்லை. ஜாதிக்காய்ல ஆண் மரங்களும் காய்க்கும். ஆனா, அந்தக் காய் சரியான வடிவத்துல இல்லாம ஒழுங்கீனமா இருக்கும். நல்லா காய்க்கிற மரத்துல இருந்து பட்டை எடுத்து, ஆண் மரங்கள்ல பரு ஒட்டு முறையில ஒட்டு கட்டினா, அந்த மரமும் பெண் மரமா மாறிடும். ஆனாலும், மகரந்தச்சேர்க்கைக்காகக் குறிப்பிட்ட எண்ணிக்கையில ஆண் மரங்களைப் பராமரிக்கணும். ஜாதிக்காய் அறுவடைக்குத் தயாரானதும் காய் வெடிச்சு நிக்கும். அந்தப் பருவத்துல அறுவடை செய்யணும். காயில இருந்து கொட்டை தனியா பிரிஞ்சு நிக்கும். அதை எடுத்து, கொட்டைக்கு மேல, ஒட்டிக்கிட்டு இருக்கிறப் பத்ரியை பிரிச்சு எடுத்துடணும். அதுக்குப் பிறகு, கொட்டையை உடைச்சா, உள்ள ஜாதிக்காய் இருக்கும். ஜாதிக்காய் கிலோ 300 ரூபாய் வரைக்கும் விலை போகும். 200 ரூபாய்க்கு குறையாது. ஒரு கிலோ பத்ரி, 800 ரூபாய் வரைக்கும் விலை போகும். போன வருஷம் 500 மரங்கள்ல இருந்து 5 லட்ச ரூபாய் வருமானம் கிடைச்சது. இந்த வருஷம் நல்லா காய்ப்புல இருக்கும்கிறதால கூடுதல் வருமானம் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். இனி, ஒவ்வொரு வருஷமும் ஜாதிக்காய் மூலமா வருமானம் அதிகரிச்சுட்டுதான் இருக்கும். சொல்லப்போனா, தென்னையில வர்ற வருமானத்தைவிட ஊடுபயிரான ஜாதிக்காய் மூலமா அதிக வருமானம் கிடைக்குது.

10 ஏக்கர் ரூ10 லட்சம் லாபம் தென்னை, பாக்கு, ஜாதிக்காய்...

நாலாவது பயிராக மிளகு!

மொத்தமா, பத்து ஏக்கர் நிலத்துல, போன வருஷம் தேங்காய், பாக்கு, ஜாதிக்காய்  மூலமா 13 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது.  இதுல உரம், வேலையாள் செலவு எல்லாம் சேர்த்து 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் போக, 10 லட்ச ரூபாய் லாபமா நிக்குது. இன்னும் அடுத்தடுத்த வருஷங்கள்ல ஜாதிக்காய் விளைச்சல் அதிகமானா  லாபம் இன்னும் அதிகரிக்கும். இது இல்லாம, எங்களுக்குப் பூர்விகத் தோட்டம் மருதாநதி அணைக்கு மேல இருக்கு. அங்க தென்னை, பாக்கு, ஜாதிக்காய், வாழை, மிளகுனு ஐந்து அடுக்கு முறையில விவசாயம் நடக்குது. மிளகு போட்டு ரெண்டு வருஷம்தான் ஆகுது. இப்போதான் காய்க்க ஆரம்பிச்சிருக்கு. அது கொடுத்த ஊக்கத்தால இப்போ இங்கயும் நாலாவது பயிரா மிளகு போடலாம்னு இருக்கேன்” என்ற ரசூல் நிறைவாக,

‘‘நான் கொஞ்சமா ரசாயன உரங்களைப் பயன்படுத்தினாலும் அது எனக்கு உறுத்தலாத்தான் இருக்கு. அதனால இயற்கை விவசாய முறைகளைப் பண்ணைக்குள்ள கொண்டு வந்துட்டு இருக்கேன். இப்ப என்னோட பசங்களும் இயற்கை விவசாயத்துல ஆர்வமா இருக்காங்க. இயற்கை விவசாயத்துல எனக்கு முழுமையான பயிற்சி இல்லை. இயற்கை விவசாயம் செய்ற என்னோட நண்பர், தோட்டத்துக்கு வந்து பயிற்சி கொடுக்கிறேன்னு சொல்லியிருக்கார். கூடிய சீக்கிரமே இது முழு இயற்கை விவசாயப் பண்ணையா மாறிடும். என்னைப் பொறுத்தவரைக்கும் விவசாயத்துல ரெண்டு விஷயத்துல கவனமா இருக்கணும். ஒண்ணு, ஒரு பயிரை நம்ம நிலத்துல நடவு செய்றதுக்கு முன்னாடி, அதைக் குறைஞ்ச இடத்துல சாகுபடி செஞ்சுப் பார்த்து, திருப்தி வந்த பிறகுதான் முழுமையா செய்யணும். அதேபோல, ஒரே பயிரை மட்டும் நம்பி இருக்கக்கூடாது. இது ரெண்டையும் கடைப்பிடிச்சா விவசாயத்துல நஷ்டம்கிற பேச்சுக்கே இடம் கிடையாது” என்று உறுதியாகச் சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,
ரசூல் மொய்தீன்,
செல்போன்: 94437 36984.

10 ஏக்கர் ரூ10 லட்சம் லாபம் தென்னை, பாக்கு, ஜாதிக்காய்...

எலுமிச்சையில் ஊடுபயிராகக் கொய்யா!

பத்து ஏக்கர் தென்னை தவிர, இரண்டு ஏக்கர் நிலத்தில் இளநீர்த் தென்னை மற்றும் இரண்டு ஏக்கர் 70 சென்ட் நிலத்தில் எலுமிச்சையும் அதற்கு ஊடுபயிராகக் கொய்யாவும் சாகுபடி செய்துள்ளார், ரசூல். அதுகுறித்துப் பேசியவர்,

‘‘சவுக்காட் ரகத்துல ஆரஞ்சு, பச்சை ரெண்டு ரக இளநி மரங்களையும் நடவு செஞ்சிருக்கேன். இதுக்கும் 25 அடி இடைவெளிதான். சொட்டுநீர் பாசனம்தான் போட்டிருக்கேன். ஆறு வயசாச்சு. வழக்கமா தென்னையைப் பராமரிக்கிறது மாதிரிதான் இதையும் பராமரிக்கிறேன். ஏக்கருக்கு 80 மரங்கள் வீதம் 160 மரங்கள் இருக்கு. அதுல 150 மரங்கள் நல்ல மகசூல் கொடுத்திட்டு இருக்கு. மரத்துக்குச் சராசரியா வருஷத்துக்கு 120 இளநீ கிடைக்கிது. ஒரு இளநீக்கு 12 ரூபாய் வரை விலை கொடுத்து உள்ளூர் வியாபாரிகளே வெட்டிக்கிறாங்க.

ரெண்டு வருஷத்துக்கு முன்ன நாட்டு ரக எலுமிச்சையை 2 ஏக்கர் 70 சென்ட் நிலத்துல 15 அடி இடைவெளியில் நடவு செஞ்சோம். மொத்தம் 500 எலுமிச்சை மரங்கள் இருக்கு. நாலு எலுமிச்சை மரத்துக்கு இடையில ஒரு கொய்யாங்கிற கணக்குல பனாரஸ் ரகக் கொய்யாவை ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி நடவு செஞ்சிருக்கோம். அதுலயும் 500 கன்னுகள் இருக்குது. இன்னும் ரெண்டு வருஷத்துல எலுமிச்சை, கொய்யா ரெண்டுமே மகசூலுக்கு வந்திடும். இப்ப வர்ற பூக்களை உருவி விட்டுடுறோம். ஒண்ணு, ரெண்டு தப்பிப் போன பூக்கள் காய்ச்சிருக்கு. நாலாவது வருஷத்துல இருந்து கொய்யாவுல நல்ல மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். இன்னும் ரெண்டு வருஷத்துல எலுமிச்சையும் மகசூலுக்கு வந்திடும்’’ என்றார்.

10 ஏக்கர் ரூ10 லட்சம் லாபம் தென்னை, பாக்கு, ஜாதிக்காய்...

அய்யம்பாளையத்தில் நடக்கும் ஐந்தடுக்கு சாகுபடி!

“திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் அருகேயுள்ள மருதாநதி அணைக்கு மேல்பகுதியில் இருக்கும் பூர்விக தோப்பில் 100 ஆண்டுகள் வயதுள்ள தென்னை முதல் பல வயதில் உள்ள தென்னை மரங்கள் இருக்கு. இந்தத் தோப்பில்தான் தென்னை, பாக்கு, ஜாதிக்காய், வாழை, மிளகு என ஐந்தடுக்கு முறையில் சாகுபடி செய்றோம். தனியாக நார்த்தை, எலுமிச்சை சாகுபடியும் நடக்குது. இந்தத் தோப்பை எங்க கணக்குப்பிள்ளை வீரமணிதான் பார்த்துக்கிறார். மூணு தலைமுறையா அவங்க குடும்பம் இந்தத் தோப்புல இருக்காங்க. வயசு அதிகமான நல்ல காய்ப்பு இருக்கற மரங்கள்ல இருந்து விழுகிற நெத்துகள் மூலமா தென்னை நாற்று உற்பத்தி செய்றோம். இந்தப் பகுதி விவசாயிகள் வாங்கிக்கிறாங்க. வியாபார நோக்குல இல்லாம சேவை மனப்பான்மையோட செய்றோம். இந்தத் தோப்புல மகசூல் நல்லா இருக்கும். எல்லா இடத்திலயும் மண்புழு எச்சம் இருக்குது. அந்தளவுக்கு வளமான நிலம். இதுல உழவே செய்றது இல்லை. உயிர் மூடாக்காக இருக்கற புல், செடி, கொடிகளைப் பிரஷ் கட்டர் மூலமா, வெட்டி அப்படியே காய விட்டுடுவோம். அது அப்படியே மட்கி உரமாகிடும்” என்கிறார், ரசூல்.

10 ஏக்கர் ரூ10 லட்சம் லாபம் தென்னை, பாக்கு, ஜாதிக்காய்...

ஒரு மரத்தில் 10 கிலோ ஜாதிக்காய்!

ஜாதிக்காய் சாகுபடி குறித்து ரசூல் பேசியவை பாடமாக இங்கே இடம் பெறுகிறது...

இது நன்கு படர்ந்து வளரும் மரம். அதனால், 25 அடி இடைவெளி கொடுக்க வேண்டும். இதற்கு மிதமான சீதோஷ்ண நிலை தேவை. ஆனால், அதிகப் பனி கொட்டும் பகுதியில் வளராது. ஈரக்காற்று வீசும் பகுதிகளில் வளரும். அதேபோல உப்புத்தண்ணீரில் வளர்ச்சி சரியாக இருக்காது; அதனால் உப்புத்தண்ணீர் நிலம் கொண்டிருப்பவர்கள் இதனைத் தவிர்த்துவிட வேண்டும். 3 அடி சதுரம் 3 அடி ஆழம் என்ற அளவில் குழியெடுத்து, அதில், ஒரு கூடை அளவு ஊட்டமேற்றிய தொழுவுரத்தைக் கொட்டி, மேல் மண்ணால் குழியை மூட வேண்டும். பிறகு குழியின் நடுவில், ஜாதிக்காய் செடியை நடவு செய்ய வேண்டும். இதற்குப் பாசனத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். தண்ணீர் கூடுதலானாலும் சரி, குறைந்தாலும் சரி... அது ஆபத்துதான்.

முதல் ஆண்டில் ஒரு செடிக்கு தினமும் 10 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 10 லிட்டர் தண்ணீரை அதிகப்படுத்த வேண்டும். ஐந்தாம் ஆண்டுக்கு மேல், ஒரு மரத்துக்குத் தினமும் 50 லிட்டர் தண்ணீர் போதுமானது. ஜாதிக்காய், இயல்பிலேயே அதிக நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது என்பதால் நோய்த் தாக்குதல் இருக்காது. ஆண்டுக்கு இரண்டு முறை, அடியுரமாக 30 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரம் கொடுக்க வேண்டும். காய்கள் வெடிக்கத் தொடங்கும்போது அறுவடை செய்யலாம். அறுவடை செய்த காய்களில் இருந்து பத்ரியை தனியாகவும், காயைத் தனியாகவும் பி்ரித்தெடுக்க வேண்டும். பத்ரியை நிழலிலும், காயை வெயிலிலும் காய வைத்து சேமித்து, தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யலாம். ஏழு ஆண்டுகளுக்கு மேல் மகசூல் கொடுக்கத் தொடங்கும். 10 வயதான ஒரு மரத்தில் இருந்து சராசரியாக 10 கிலோ ஜாதிக்காயும், 2 கிலோ பத்ரியும் கிடைக்கும்.

மான்களிடமிருந்து மரத்தைக் காப்பாற்றும் சாணக்கரைசல்!

ருதாநதி அணைப்பகுதியில் உள்ள தோப்பு, வனப்பகுதி அருகே இருப்பதால் காட்டு மாடு, மான் ஆகியவை அடிக்கடி ரசூலின் தோட்டத்துக்குள் வந்து போகின்றன. இதனால், இளஞ்செடிகளைக் காப்பாற்ற ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார், ரசூல்.

“மான் வர்ற இடத்துல புதுசா எந்தச் செடிகளையும் நட்டு வைக்க முடியாது. அதுக்குத் தேவையில்லைனாலும் சும்மா கடிச்சுட்டுப் போயிடும். அதனால ஏகப்பட்ட செடிகள் வீணாகும். மான்களையும் தொந்தரவு செய்யாம, செடிகளையும் பாதுகாக்கிறதுக்காக மாட்டுச் சாணியைக் கெட்டியான பதமாகக் கரைச்சு, செடிகள் மேல தெளிச்சுடுவோம். அதனால செடி பக்கத்துல வர்ற மான்கள் சாணி வாசம் பட்டதும் செடிகளைக் கடிக்கிறதில்லை. அதேபோல, செடி நடவு செய்றப்போ, ரெண்டு அடி தள்ளி ஒரு வாழைக்கன்றை நட்டு வெச்சிடுவோம். வாழை வேகமா வளர்றப்போ செடிக்கு நிழலாகவும் ஆயிடும். தண்ணியில்லா வறட்சி காலங்கள்ல வாழையில இருக்கிற தண்ணியை எடுத்து செடியும் உயிர் வாழும்” என்றார்.