நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

“வீட்டுத்தோட்டத்துக்கு இனி பொற்காலம்தான்!”

“வீட்டுத்தோட்டத்துக்கு  இனி பொற்காலம்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“வீட்டுத்தோட்டத்துக்கு இனி பொற்காலம்தான்!”

பயிற்சிஇ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

‘பசுமைவிகடன்’ மற்றும் ‘தூத்துக்குடி பியர்ல் சிட்டி ரோட்டரி சங்கம்’ ஆகியவை இணைந்து கடந்த நவம்பர் 26-ம் தேதி, தூத்துக்குடி, சிதம்பரநகர் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவ மண்டபத்தில், ‘வீட்டுக்குள் விவசாயம்’ என்ற தலைப்பில் பயிற்சிக் கருத்தரங்கை நடத்தின. தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

“வீட்டுத்தோட்டத்துக்கு  இனி பொற்காலம்தான்!”

நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றுப் பேசிய தூத்துக்குடி பியர்ல் சிட்டி ரோட்டரி சங்கத்தலைவர் பாலமுருகன், “பத்து வருஷத்துக்கு முன்னாடியெல்லாம், வீட்டுக்குப் பின்னால காய்கறிகள், கொடி வகைக் காய்கறிகள், பூச்செடிகள்னு எல்லாத்தையும் வளர்ப்போம். பொங்கலுக்கு வாங்கின கரும்பைக்கூட நட்டு வளர்ப்போம். ஆனா, இப்போ எல்லாமே மாறிப் போச்சு. ஒரு செடிகூட வளர இடம் இல்லாத அளவுக்கு சிமென்ட் போட்டு மண்ணை மூடிடுறோம். அதனால இப்போ திரும்பவும் வீட்டுத்தோட்டம் போட சொல்லித்தர வேண்டிய நிலை வந்துடுச்சு” என்றார்.

நாட்டு விதைகளைத்தான் விதைக்கணும்!


தொடர்ந்து, வீட்டுத் தோட்டம், அமைப்பது குறித்துப் பேசினார், தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம், ‘ஸ்காட் வேளாண் அறிவியல் மைய’ மனையியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் சுமதி.

“நமக்குத் தேவையான காய்கறிகள், நமது பகுதி சூழ்நிலையில் வளரும் காய்கள், கீரைகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். தேவையான செடிகளை தான் வீட்டில் வளர்க்க வேண்டும். அவற்றிலும் நாட்டு ரகங்களை மட்டும்தான் வளர்க்க வேண்டும். நாட்டு ரகங்களை விதைப்பதன் மூலம் நாமே விதைகளைப் பெருக்கிக்கொள்ள முடியும். விதைகளைப் பஞ்சகவ்யாவில் விதை நேர்த்தி செய்து, மண்புழு உரத்துடன் கலந்து தூவினால் வளர்ச்சி விரைவாக இருக்கும்.

தோட்டக்கலைத் துறை மூலம் வீட்டுத்தோட்டம் அமைக்க மானிய விலையில் உபகரணங்கள் கிடைக்கின்றன. தற்போது ஏற்பட்டுள்ள விழிப்பு உணர்வால், புதிதாக வீடு கட்டும் பலர், தோட்டத்துக்காகச் சிறிது இடம் ஒதுக்கி வருகிறார்கள். இனி வரும் காலம் வீட்டுத்தோட்டத்தின் பொற்காலம்தான்” என்றார்.

காலிப் பொருட்களிலெல்லாம் காய்கறிகள்!

வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்த தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட தூத்துக்குடியைச் சேர்ந்த விஜய், “குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்கள், சிமென்ட் பைகள், ஒழுகும் சிமென்ட் தொட்டி, உடைந்த மண்பானை, பழைய வாளி, லாரி பேட்டரி, ஜவுளிக்கடைகளில் கொடுக்கும் கெட்டியான பிளாஸ்டிக் பைகள், தெர்மா கூல் பெட்டிகள்... என அனைத்திலும் செடிகளை வளர்க்க முடியும். 5 பாலித்தீன் கவர்களை ஒன்றுக்குள் ஒன்றாக வைத்து கெட்டியாக்கி அதில் கீரைகளை வளர்க்கலாம்” என்றார்.

“வீட்டுத்தோட்டத்துக்கு  இனி பொற்காலம்தான்!”

வீடுகளில் வளர்க்க வேண்டிய அவசியமான மூலிகைகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்துப் பேசிய, சித்தமருத்துவர் மைக்கேல் செயராசு, “பதினைஞ்சு, இருபது வருஷத்துக்கு முன்னாடி தாத்தா பாட்டிகளோட கூட்டுக்குடும்பமா இருப்பாங்க. குழந்தைகள் லேசா இருமினால்கூட உடனே தூதுவளையுடன் மிளகு சேர்த்துக் கசாயம் வெச்சுக் குடிக்கக் கொடுப்பாங்க.

ஆனா, இப்போ எந்த வீட்டுலயும் தாத்தா பாட்டிகள் இல்லாததால, மூலிகைகளும் இல்லை. பள்ளிக் குழந்தைகளுக்குத் துளசி எது, தூதுவளை எது, கண்டங்கத்திரி எதுன்னு சொல்லத் தெரியலை.

வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள், கீரைகளோட மூலிகைகளையும் கட்டாயம் வளர்க்கணும். துளசி, தூதுவளை, கண்டங்கத்திரி, ஓமவள்ளி, மஞ்சள் கரிசாலை, ஆடாதொடை, நொச்சி, நிலவேம்பு, பிரண்டை, சோற்றுக்கற்றாழை, அறுகம்புல், பூனைமீசை, விஷநாராயணி ஆகிய மூலிகைகள் ஒவ்வொரு வீடுகள்லயும் இருந்தால் பெருமளவு நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

“வீட்டுத்தோட்டத்துக்கு  இனி பொற்காலம்தான்!”

பூனைமீசை, விஷநாராயணி ஆகிய மூலிகைகள் சிறுநீரகப் பிரச்னைகளைத் தீர்க்கும். தலைவலி தீர நொச்சி, ரத்த அழுத்தம் குறைய ஆடாதொடை, ரத்த ஓட்டத்தைச் சீராக்க அறுகம்புல்னு மூலிகைகள்ல ஏகப்பட்ட பலன்கள் இருக்கு” என்றார்.

பயிற்சியின் நிறைவில், சித்தமருத்துவர் மைக்கேல் செயராசு அனைவருக்கும் அன்பளிப்பாக மஞ்சள் கரிசாலை, வல்லாரை, பிரம்மி ஆகிய மூன்று மூலிகைக் செடிகளைக் கொடுத்தார்.