நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பஞ்சகவ்யா! - 21 - விளைச்சலைக் கூட்டும் ‘பஞ்சாமிர்த’ பஞ்சகவ்யா!

பஞ்சகவ்யா! - 21 -  விளைச்சலைக் கூட்டும் ‘பஞ்சாமிர்த’ பஞ்சகவ்யா!
பிரீமியம் ஸ்டோரி
News
பஞ்சகவ்யா! - 21 - விளைச்சலைக் கூட்டும் ‘பஞ்சாமிர்த’ பஞ்சகவ்யா!

வெற்றி விவசாயிகளின் அசத்தல் அனுபவத் தொடர்இயற்கைஜி.பழனிச்சாமி, படங்கள்: ரமேஷ் கந்தசாமி

ரம்பக் காலத்தில் பஞ்சகவ்யா கரைசலைப் பயன்படுத்தியவர்கள், அதைப் பரவலாக விவசாயிகளிடம் எடுத்துச் சென்றவர்கள் குறித்த தொடர் இது. இந்த இதழில் இடம்பெறுபவர்கள், முன்னோடி இயற்கை விவசாயத் தம்பதி கந்தசாமி-முத்துலட்சுமி ஆகியோர்.

பஞ்சகவ்யா! - 21 -  விளைச்சலைக் கூட்டும் ‘பஞ்சாமிர்த’ பஞ்சகவ்யா!

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அடுத்துள்ள நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில் இருக்கிறது, கந்தசாமி-முத்துலட்சுமி தம்பதியின் 12 ஏக்கர் பண்ணை. கிளுவை வேலிக்குள் கொழுக்கட்டைப் புல் நிறைந்த மேய்ச்சல் நிலத்தில் மாடுகளும், செம்மறி ஆடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன. குளுமை படர்ந்த தென்னந்தோப்பு, அதில் ஆங்காங்கே வெள்வேல் மரங்கள் என இருந்தது, அவர்களின் பண்ணை.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நெருங்கிய சீடர்களில் கந்தசாமியும் ஒருவர். 2013-ம் ஆண்டில் இவரது பண்ணையில் இரண்டு நாட்கள் தங்கிச் சென்றிருக்கிறார், நம்மாழ்வார்.

நம் வருகையை முன்னரே தெரிவித்திருந்ததால், பண்ணையில் காத்துக் கொண்டிருந்தனர், கந்தசாமி-முத்துலட்சுமி தம்பதி. நம்மை வரவேற்றுப் பேசிய கந்தசாமி,

“எங்களுக்கு இந்தக் கிராமம்தான் பூர்விகம். இளங்கலை தாவரவியல் படிச்சிருக்கேன். படிச்சு முடிச்சதும் விவசாயத்துல இறங்கிட்டேன். தனியா நூல் மில்லும் வெச்சிருக்கேன். ஆரம்பத்துல சூரியகாந்தி, நிலக்கடலை, மக்காச் சோளம்னுதான் வெள்ளாமை செஞ்சேன். அதை அடியோடு மாத்தி, இயற்கை விவசாயத்துக்குள்ள இறக்கி விட்டது, ‘பசுமை விகடன்’தான். அது மூலமாத்தான் இயற்கை விவசாயம் குறித்து நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டேன்.

எனக்குச் சின்ன வயசில இருந்தே புத்தகம் வாசிக்கிற பழக்கம் இருக்கிறதால பசுமை விகடன் வெளியாகப்போற தகவலை மத்த புத்தகங்கள் மூலமாகத் தெரிஞ்சுகிட்டேன். முதல் பசுமை விகடன் புத்தகமே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததால, அப்போ இருந்து இப்போ வரைக்கும் தொடர்ந்து படிச்சிட்டு இருக்கேன். அது மூலமாத்தான் நம்மாழ்வார் ஐயா பத்தியும் தெரிஞ்சுகிட்டேன். கொடுமுடியில நடந்த ஒரு கருத்தரங்குலதான் ஐயாவோட பேச்சை முதல் முறையா கேட்டேன். ரொம்பத் தெளிவா அவர் பேசினதைக் கேட்டதும், அவர் மேல ஈர்ப்பு வந்து அவர் நடத்தின பயிற்சிகள்ல கலந்துக்க ஆரம்பிச்சேன்.

ஐயா அமைச்சிருந்த வானகம் உயிர்ச்சூழல் பண்ணைக்கு அடிக்கடி போய் ஐயாவைப் பார்த்துப் பேசுவேன். ஒருமுறை பேசும்போதுதான், ‘நம்ம பாட்டன், முப்பாட்டன் காலத்துல அவங்களோட விவசாயம் வாழ்க்கையை நோக்கிய பயணமா இருந்துச்சு. ஆனா, இன்னிக்குப் பணத்தை நோக்கிய பயணமா மாறிட்டுருக்கு. அதை மாத்தணும், அதை மாத்தி அமைக்கிற ஆற்றல் இயற்கை விவசாயத்துக்குத்தான் இருக்கு. மண்ணுக்கேத்த விவசாயம் , மண்ணுக்கேத்த கால்நடைகள்னு உள்ளடக்கிய நிரந்தர வேளாண்மை செய்ய உகந்த இடமா இருக்கு, உங்க இடம். அந்தப் பகுதியில இருக்குற மாதிரி... கொழுக்கட்டைப் புல் மேய்ச்சல் காடுகளும், வெள்வேல் மரங்களும், கிளுவை வேலிகளும் வேறு எங்கயும் கிடையாது. வெள்வேல் மரத்துக் காய்கள் ஆடுகளுக்கு அருமையான தீனி. கொழுக்கட்டைப் புல்லைச் சாப்பிடுறதாலதான் காங்கேயம் மாடுகள் சிறப்பா இருக்கு. அதனால உங்க மண்ணுக்கேத்த வாழ்வியலைக் கடைப்பிடியுங்க. நான் ஒரு முறை உங்க பண்ணைக்கு வர்றேன்’னு ஐயா சொன்னார். அதோட நாட்டு மாடுகளைப் பாதுகாக்கணும்னும் அறிவுரை சொன்னார். நானும் அதைக் கடைப்பிடிக்க ஆரம்பிச்சேன்” என்றவரை இடைமறித்துப் பேசினார், அவரது மனைவி முத்துலட்சுமி.
“சொன்ன மாதிரியே திடீர்னு ஒரு நாள் இங்க வந்துட்டார், ஐயா. தென்னங்கீற்று பந்தல் நிழல்ல இருந்த கயிற்றுக்கட்டிலைப் பார்த்துட்டு, ‘நல்லவேளை, எனக்குப் பிடிச்ச இடமாத்தான் இருக்கு. எங்கே கான்கிரீட் வீட்ல கந்தசாமி படுக்க வெச்சிடுவாரோனு பயந்துதான் வந்தேன்’னு சொன்னார். அதுக்குள்ள ஐயா வந்திருக்குற தகவல் கேள்விப்பட்டு, அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க வரவும், ஐயா ரொம்பக் குஷியாகி அவங்ககிட்ட நல்லா பேசினார். அப்புறம் ஒரு இடம் பாக்கியில்லாம பண்ணை முழுக்கச் சுத்தி வந்தார்.

அப்போ, போர்வெல்லைப் பார்த்து, ‘எத்தனை அடி ஆழம்’னு கேட்டார். ‘550 அடி. தென்னைக்குக் கேணித்தண்ணி பத்தலை. அதனாலதான் போர் போட்டிருக்கோம்’னு  சொன்னோம்.

பஞ்சகவ்யா! - 21 -  விளைச்சலைக் கூட்டும் ‘பஞ்சாமிர்த’ பஞ்சகவ்யா!

‘ரொம்பத் தப்பு பண்றீங்க. நிரந்தர வருமானம் கொடுக்கிற தென்னை விவசாயம் உங்க முல்லை நிலப் பகுதிக்கு ஏற்றது கிடையாது. ஒரு நாளைக்கு ஒரு தென்னை மரத்துக்கு 120 லிட்டர் தண்ணீர் தேவை. பருவமழை கிடைக்கிற பகுதி, ஆற்றுப் பாசனம் இருக்கிற இடங்களுக்குத்தான் தென்னை தோதுப்படும். இருந்தாலும் தென்னைக்குத் தண்ணீருக்காக இன்னும் அதிகம் செலவு பண்ண வேணாம். நெலத்துல தடுப்புகள் அமைச்சு கிடைக்கிற மழை நீரை நிலத்தை விட்டு வெளியில விடாம சேமிச்சா தண்ணி கிடைக்கும். எப்பவும் தண்ணீரை பூமிக்குள் இருந்து எடுக்கக் கூடாது. வானத்தில் இருந்து அறுவடை செய்யணும்’னு சொன்னார். அதை இன்னைக்கு வரை கடைப்பிடிக்கிறோம்.

பண்ணையில் தங்கி இருந்த ரெண்டு நாள்ல பஞ்சகவ்யா குறித்து ஐயா நிறைய பேசினார். அப்போ எங்க பகுதி மக்களுக்குப் பஞ்சகவ்யா தயாரிப்பு பத்தி ரொம்ப எளிமையா சொல்லிக் கொடுத்தார். நாட்டு மாட்டில இருந்து கிடைக்கிற சாணம், சிறுநீர், பால், தயிர், நெய் அஞ்சும் ரொம்ப வீரியம் கொண்டது. இதைக் கொண்டு தயாரிக்கிற பஞ்சகவ்யாவுக்கும் ஆற்றல் அதிகம்.

5 கிலோ சாணத்தை 500 மில்லி கரும்புச் சாற்றில் பிசைந்து ஒரு நாள் முழுக்க வெச்சிருக்கணும். அப்போதான் சாணத்தில் உள்ள மீத்தேன் வாயு முழுமையாக வெளியேறும். அதுக்கப்புறம்தான் பால், தயிர், கனிந்த பழங்கள், நெய்னு மத்த பொருட்களைச் சேர்க்கணும். மீத்தேன் வாயு முழுசா வெளியேறாட்டி... கார, அமிலத்தன்மை காரணமா முழுப் பயன் கிடைக்காது’னு சொன்னார். அவர் தங்கியிருந்த ரெண்டு நாட்களை மறக்கவே முடியாது” என்றார், முத்துலட்சுமி.

தொடர்ந்து பேசிய கந்தசாமி, “அதுக்கப்புறம்தான் பஞ்சகவ்யா பயன்படுத்த ஆரம்பிச்சோம். 100 லிட்டர் தண்ணீருக்கு 3 லிட்டர் பஞ்சகவ்யானு கலந்து 15 நாட்களுக்கு ஒரு தடவை தென்னைக்குப் பாயுற தண்ணீர்ல கலந்து விடுவோம். மொத்தம் 300 தென்னை மரங்கள் இருக்கு. பஞ்சகவ்யா கொடுக்கிறதால காய்ப்பு நல்லா இருக்கு. அதே போல மானாவாரியா விதைச்சிருக்கிற சோளத்துக்கும் பஞ்சகவ்யா தெளிச்சுட்டு இருக்கோம். 

அதன் பிறகு எனக்குத் தெரிஞ்சவர் ஒருத்தர், பழநியில் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் தொழிற்சாலை வெச்சிருக்கார். அவரை ஒருமுறை பார்க்கப் போயிருந்தேன். அப்போ அவர், பஞ்சாமிர்தம் தயாரிக்கிறப்போ கிடைக்கிற அடிக்கசடுகளைப் பீப்பாய்கள்ல ஊத்தி வெச்சிருந்தார். அதை மாசக்கணக்கில் வெச்சிருந்தாலும் அழுகாதுன்னு சொன்னார்.

அப்போதான்... ‘கனிந்த பழம், நாட்டுச் சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், கல்கண்டு, தேன், பன்னீர் கலந்த பஞ்சாமிர்தக் கழிவுகளைப் பஞ்சகவ்யாவில் சேர்த்தால் என்ன’ன்னு எனக்கு யோசனை தோணுச்சு. அதனால 50 கிலோ கசடை எடுத்திட்டு வந்தேன்.

வழக்கமா தயாரிக்கிற மாதிரி 5 கிலோ சாணம், 3 லிட்டர் சிறுநீர், 2 லிட்டர் பால், 2 லிட்டர் தயிர், 3 லிட்டர் இளநீர் எடுத்துக்கிட்டு அதுல கலக்குற நாட்டுச் சர்க்கரை, கரும்புச் சாறு, கனிந்த பழம் மூணையும் தவிர்த்து... அதுக்குப் பதிலா 1 லிட்டர் பஞ்சாமிர்தக் கழிவைச் சேர்த்தேன். அதனால, பஞ்சகவ்யா நல்ல நறுமணமா மாறுச்சு. பலனும் நல்லா இருந்துச்சு. அதை நீண்ட நாள் வெச்சிருந்தாலும் நறுமணம் மாறலை. அதோட அதிகளவுல தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் வயலுக்குள்ள வந்துச்சு. அதனால தென்னையில் விளைச்சல் அதிகமாச்சு.

மானாவாரியா கொள்ளு, நரிப்பயறு சாகுபடி செய்றப்போ அதுலயும் பஞ்சகவ்யா தெளிச்சி விடுவோம். அறுவடை முடிஞ்ச பிறகு அந்தக் கொடிகளைக் காயவெச்சு மாடுகளுக்குக் கொடுப்போம். பஞ்சாமிர்த பஞ்சகவ்யா தெளிச்ச கொடிகளை மாடுகள் விரும்பிச் சாப்பிடுது.

ஒருமுறை 15 சென்ட்ல இறவையில் கேழ்வரகு நாற்று நட்டு 15 நாளைக்கு ஒரு வாட்டி சொட்டு நீர் மூலமா பஞ்சகவ்யா கொடுத்தோம். அதுல, 12 மூட்டை கேழ்வரகு கிடைச்சது. அதுக்குக் காரணம், பஞ்சாமிர்த பஞ்சகவ்யாதான். ஆனா, இந்தத் தகவலை ஐயாகிட்டதான் சொல்ல வாய்ப்பில்லாமப் போயிடுச்சு” என்று வருத்தப்பட்டார், கந்தசாமி.

நிறைவாகப் பேசிய கந்தசாமி, முத்துலட்சுமி ஆகியோர், “நாட்டு மாடு, கொழுக்கட்டைப் புல், கிளுவை வேலி, வெள்வேல் மரங்கள், செம்மறி ஆடு, நாட்டுக்கோழிகள், மானாவாரி வெள்ளாமை என்ற பாரம்பர்ய விவசாயத்துல இப்போ, பஞ்சகவ்யாவும் சேர்ந்ததால நல்ல முறையில் வெள்ளாமை செய்ய முடியுது. கொடுமுடி டாக்டர் நடராஜன் கண்டுபிடிச்ச இந்த பஞ்சகவ்யா, என்னைப் போன்ற ஏராளமான விவசாயிகளுக்கு வருமானம் கொடுத்துட்டு இருக்கு. இந்த அற்புத பரிசை கொண்டுவந்த டாக்டருக்கு நன்றியை தெரிவிச்சுக்கிறோம்” என்றனர் நெகிழ்ச்சியாக.

-மணம் பரப்பும்

தொடர்புக்கு, கந்தசாமி, செல்போன்: 97886 78888

உழவில்லா வேளாண்மை!

பஞ்சகவ்யா! - 21 -  விளைச்சலைக் கூட்டும் ‘பஞ்சாமிர்த’ பஞ்சகவ்யா!

“என்னோட 12 ஏக்கர் நெலத்தில் கடந்த 7 வருஷமா உழவே செய்றதில்லை. நிலத்துல முளைக்கிற புல் பூண்டு, செடி கொடிகள்னு எதையும் எடுக்குறதில்லை. இங்க இருக்கிற மாடுகளும், 30 செம்மறி ஆடுகளும், 10 நாட்டுக்கோழிகளுமே இந்தச் செடிகளை மேயுது. மீதி   மண்ணுக்கு உரமாக மாறிடுது” என்கிறார், கந்தசாமி.

பஞ்சகவ்யாவுக்கு நோபல் பரிசு... நம்மாழ்வாரின் ஆசை! 

பஞ்சகவ்யா! - 21 -  விளைச்சலைக் கூட்டும் ‘பஞ்சாமிர்த’ பஞ்சகவ்யா!

நம்மாழ்வாருடனான தனது அனுபவம் குறித்துப் பகிர்ந்துகொண்ட டாக்டர் நடராஜன், “1998-ம் வருஷம், ‘இயற்கை விவசாயத்தில் பஞ்சகவ்யா’ங்கிற தலைப்பில் கொடுமுடியில் ஒரு கருத்தரங்கை நடத்தினோம். அந்தக் கருத்தரங்குக்கு நம்மாழ்வார் வந்திருந்தார். முன்னோடி இயற்கை விவசாயிகள் நாராயண ரெட்டி, ‘சத்தியமங்கலம்’ சுந்தரராமன், ‘அறச்சலூர்’ செல்வம், ‘உப்புபள்ளம்’ ரவினு நிறைய பேர் அவரோட வந்திருந்தாங்க. அந்தக் கருத்தரங்குல முனைவர்.சோலையப்பன் அனுப்பியிருந்த பஞ்சகவ்யா குறித்த வீடியோவை ஒளிபரப்பினோம். அந்த வீடியோவில், பஞ்சகவ்யாவில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் குறித்த ஆராய்ச்சி முடிவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்துச்சு. அதைக் கவனமாகப் பார்த்த நம்மாழ்வார், வீடியோ காட்சி முடிஞ்சதும் சந்தோஷத்துல துள்ளிக்குதிச்சார்.

‘இதுதான் நான் தேடிக்கிட்டிருந்த விஷயம். பஞ்சகவ்யா இயற்கை விவசாயத்தில் ஒரு புரட்சி’னு நம்மாழ்வார் சொன்னார். அடுத்துப் பஞ்சகவ்யா பயன்படுத்துற பல விவசாயிகளைச் சந்திச்சுப் பஞ்சகவ்யா பயிர்ல ஏற்படுத்துற மாற்றங்கள் குறித்துத் தெரிஞ்சுகிட்டார்.

அதுக்கப்புறம் அவரோட வாழ்நாள் முழுவதும் அவர் கலந்துக்குற அத்தனை நிகழ்ச்சிகள்லயும் பஞ்சகவ்யா குறித்துப் பேசியிருக்கார். கை விரல்கள் மூலம் பஞ்சகவ்யா தயாரிக்கிற விதத்தை எளிமையாக மக்கள் மனசுல பதிய வெச்சார். பஞ்சகவ்யாவை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சேர்த்ததில் நம்மாழ்வாருக்கு முக்கியப் பங்கு இருக்கு. பஞ்சகவ்யா விவசாயிகள் கைக்கு கிடைச்ச பிறகுதான் இயற்கை விவசாயம் வேகம் எடுத்துச்சுனு அடிக்கடி சொல்வார். பஞ்சகவ்யாவுக்கு நோபல் பரிசு பெற தகுதி இருக்குனு கூட எங்கிட்ட பெருமையாகச் சொல்லியிருக்கார்” என்றார் மகிழ்ச்சியுடன்.

ஒரு மரம் 1,000 ரூபாய்!

“எங்க பகுதியில் வெள்வேல் மரங்கள்தான் அதிகம். அந்தக்காலத்தில் இந்த மரப்பட்டைகளை உறிச்சு ஊற வெச்சுச் சாராயம் காய்ச்சுவாங்க. அந்தச் சாராயம் வீரியமா இருக்குமாம். இதுல நிறைய மருத்துவக் குணமும் இருக்கிறதா சொல்வாங்க. இப்போ எங்க நெலத்துல 600 மரங்கள் இருக்கு. ஒரு மரம் ஆயிரம் ரூபாய் வரை விலை போகும். அந்தக்கணக்குல பார்த்தா அந்த மரங்களோட மதிப்பு 6 லட்ச ரூபாய்” என்கிறார் கந்தசாமி.