Published:Updated:

உப்பு அடைப்பைத் தடுக்கும் நுண்ணுயிர் கரைசல்கள்!

உப்பு அடைப்பைத் தடுக்கும் நுண்ணுயிர் கரைசல்கள்!
பிரீமியம் ஸ்டோரி
உப்பு அடைப்பைத் தடுக்கும் நுண்ணுயிர் கரைசல்கள்!

சொட்டுநீர்ப் பாசனம்... சொட்டுச் சொட்டாக நீர்... கட்டுக் கட்டாக லாபம்! - 7பாசனம்ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

உப்பு அடைப்பைத் தடுக்கும் நுண்ணுயிர் கரைசல்கள்!

சொட்டுநீர்ப் பாசனம்... சொட்டுச் சொட்டாக நீர்... கட்டுக் கட்டாக லாபம்! - 7பாசனம்ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

Published:Updated:
உப்பு அடைப்பைத் தடுக்கும் நுண்ணுயிர் கரைசல்கள்!
பிரீமியம் ஸ்டோரி
உப்பு அடைப்பைத் தடுக்கும் நுண்ணுயிர் கரைசல்கள்!

ண்ணீருக்காக ‘மூன்றாம் உலகப்போர் மூளும்’ என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள். ஆனால், நம் நாட்டில் மாநிலங்களுக்கு இடையிலேயே தண்ணீருக்காகப் போர் மூண்டுகொண்டிருக்கிறது. இந்தச் சம்பவங்களெல்லாம் நாம் விழித்துக்கொள்வதற்கான சமிக்ஞைகள்தான். இனியாவது தண்ணீரைப் பணத்தைப் போல எண்ணி எண்ணிச் செலவழிக்க வேண்டும். அதற்கு முறையான சொட்டுநீர்ப் பாசனம், அதற்கான கருவிகள், கருவிகளைப் பராமரிக்கும் முறைகள் போன்றவை குறித்து அலசுகிறது, இக்குறுந்தொடர்.

உப்பு அடைப்பைத் தடுக்கும் நுண்ணுயிர் கரைசல்கள்!

சொட்டுநீர்ப் பாசனக் கருவிகளைப் பொறுத்த வரை, அவற்றில் ஏற்படும் அடைப்புதான் முக்கியமான பிரச்னை. அதுகுறித்து, நீர் மேலாண்மை வல்லுநரும் வேளாண் பொறியாளருமான பிரிட்டோ ராஜ் சொன்ன விஷயங்கள் இங்கே...

“குழாய்களில் உப்பு படிவது மற்றும் பாசி, தூசி மூலமான அடைப்பு என இரண்டு வகைகளில்தான் சொட்டுநீர்க் குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. பொதுவாக, முதன்மைக் குழாய், துணைக்குழாய், லேட்ரல் மற்றும் சொட்டுவான்களில்தான் உப்பு படியும். இயற்கையாகவே கால்சியம் கார்பனேட் போன்ற உப்புகள் தண்ணீரில் இருக்கும்.

பாசன நீரில் உள்ள உப்புகளின் அளவைப் பொறுத்துக் குழாயில் உப்பு படியும் தன்மை மாறுபடும். பாசனம் செய்து முடித்த பிறகு, குழாய்களில் தேங்கி நிற்கும் தண்ணீர், சூரிய வெப்பத்தால் ஆவியாகும். உப்பளங்களில் நடக்கும் அதே விதிப்படி ஆவியானது போக, எஞ்சிய நீர் உப்பாக குழாயின் அடிப்பகுதியில் படியும். இப்படி படியும் உப்பு முதலில் வெள்ளை நிறத்திலும், அதன் துகளின் அளவு சிறியதாகவும் சுலபமாக நகரக்கூடியதாகவும் இருக்கும். முறையான பராமரிப்பு இல்லாமல் இதே நிலை நீடிக்கும்போது நாளடைவில், வெள்ளை நிற உப்பு மஞ்சள் நிறத்தில் மாறி கடினமாக மாறிவிடும். இதனால், கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் சொட்டும் அளவு குறைந்து கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் முழு அடைப்பு ஏற்பட்டுவிடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உப்பு அடைப்பைத் தடுக்கும் நுண்ணுயிர் கரைசல்கள்!



தரைக்குள் பதிக்காமல், நிலத்தின் மீது அப்படியே போட்டு வைத்திருக்கும் குழாய்களில்தான் விரைவாக உப்பு படியும். செம்மண் நிலங்களில் 2 அடி ஆழத்திலும், களிமண் நிலங்களில் 3 அடி ஆழத்திலும் குழாய்களைப் பதிக்க வேண்டும். இப்படிச் செய்தாலே உப்புப் படிமானத்தைப் பெருமளவு குறைத்து விடலாம். பஞ்சகவ்யா, இ.எம்., ஜீவாமிர்தம் போன்ற நுண்ணுயிர் கரைசல்களை பாசன நீர் வழியாக ஆரம்பம் முதலே கொடுத்து வந்தால் உப்பு படிவதை எளிதாக தடுத்துவிட முடியும்.
அதிகளவு உப்பு படிந்தால், ரசாயன அமிலம் மூலமாகத்தான் சரி செய்ய முடியும்.

உப்பைக் கரைக்கும் அமிலம்

உப்பின் அளவு அதிகமாக இருக்கும்போது ரசாயன ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைக் குழாய்களுக்குள் செலுத்தி குழாயில் படிந்துள்ள உப்பைக் கரைக்கலாம். 100 லிட்டர் தண்ணீருக்கு 5 லிட்டர் அமிலம் என்ற கணக்கில் கலந்து, வென்சுரி மூலமாகக் குழாய்களுக்குள் செலுத்த வேண்டும். உப்பின் அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் தண்ணீரின் அளவைக் குறைத்துக்கொள்ளலாம். அதாவது, 75 லிட்டர் தண்ணீருக்கு 5 லிட்டர் அமிலம் என்று கலந்துகொள்ளலாம். லேட்ரல் குழாயை எடுத்து நேராக்கி, அதை ஒரு கல்லிலோ அல்லது அருகிலுள்ள மரத்தின் அடிப்பகுதியிலோ தட்டினால், உப்புத் துகள்கள் உதிர்ந்தால் சாதாரண அளவில் உப்புப் படிந்திருக்கிறது எனத் தெரிந்துகொள்ளலாம். இதற்கு 5 சதவிகிதக் கரைசலே போதுமானது. தட்டும்போது உப்பு உடையாமல் கெட்டியாக இருக்கும்பட்சத்தில் உப்பின் அளவு அதிகமாக உள்ளது எனத் தெரிந்துகொள்ளலாம்.

உப்பு அடைப்பைத் தடுக்கும் நுண்ணுயிர் கரைசல்கள்!

குழாயில் அமிலத்தைச் செலுத்துவதற்கு முன்பாக, குழாய்களின் அனைத்து முனைகளையும் மூடி வைக்க வேண்டும். தண்ணீருடன் அமிலத்தைக் குழாய்க்குள் செலுத்திய பிறகு, மோட்டாரை நிறுத்திவிட்டால், அமிலம் கலந்த தண்ணீர் குழாய்களில் தங்கிவிடும். ஆறு மணி நேரம் இந்த அமிலத் தண்ணீரை குழாய்களில் வைத்திருக்க வேண்டும். இதனால், குழாய்களில் படிந்துள்ள உப்பு அமிலத்தால் அரிக்கப்பட்டுச் சிறு துகள்களாக மாறிவிடும்.

அழுத்தம் அவசியம்

ஆறு மணி நேரம் கழித்து, லேட்ரல் குழாய்களைத் தண்ணீர் வெளியேற ஏற்றவாறு நேராக வைத்துவிட்டு, அதன் முனைகளைத் திறந்துவிடவேண்டும். லேட்ரல் குழாய்கள் வழியாகத் தண்ணீரை வெளியேற்றும்போது, துணைக்குழாய்களை அடைத்துவிட வேண்டும். லேட்ரல் குழாய்களில் தண்ணீர் செல்லும் அழுத்தத்தை அதிகப்படுத்துவதற்காக ஒன்று அல்லது இரண்டு கேட் வால்வுகளை மட்டும் திறந்து தண்ணீரை வெளியேற்ற வேண்டும். இதனால், அதிக அழுத்தத்துடன் லேட்ரல் குழாய்களில் பயணிக்கும் தண்ணீர், உடைந்து கிடக்கும் உப்பு துகள்களையும் அடித்துக்கொண்டு, முனையில் உள்ள துளை வழியாக வெளிவரும். அதே நேரத்தில் லேட்ரல்களின் மீது குச்சியை வைத்து ஆங்காங்கே தட்டிவிட வேண்டும். அப்போதுதான் உப்புப் படிமங்கள் உதிர்ந்து தண்ணீருடன் வெளியேறும். பிறகு, லேட்ரல் குழாய்களை வளைத்துப் பார்க்க வேண்டும். இப்படி வளைக்கும்போது, நன்றாக வளைந்தால் உப்பு முழுவதும் வெளியேறிவிட்டது என அர்த்தம். சரியாக வளையாவிட்டால் உப்பு வெளியேறவில்லை எனப் புரிந்துகொண்டு மீண்டும் அமிலம் செலுத்தி அகற்ற வேண்டும்.

லேட்ரல் குழாய்களில் உப்பை வெளியேற்றிய பிறகு, அதன் முனைகளை அடைத்துவிட்டு, துணைக் குழாய்களில் உள்ள உப்பை வெளியேற்ற வேண்டும். இதற்கு, துணைக்குழாய்களில் முடிவில் மேல் நோக்கி வைத்திருக்கும் குழாயைப் படுக்கை வசமாக வைத்து, மூடியை எடுத்துவிட வேண்டும். இப்போது, இந்தக் குழாய்கள் வழியாக அழுத்தமாகத் தண்ணீரைப் பாய்ச்சுவதன் மூலமாக உடைந்த உப்புப் படிமானங்களை வெளியேற்றலாம். குழாய்களில் படிந்துள்ள உப்பை, ஒரே முறையில் அகற்ற முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். செம்மண் நிலங்களில் இரண்டில் இருந்து மூன்று முறையும் களிமண் நிலங்களில் நான்கிலிருந்து ஐந்து முறையும் அமிலத் தண்ணீரைச் செலுத்தினால்தான் முழுமையாக உப்புப் படிமானத்தை அகற்ற முடியும். அதிக இடைவெளிவிடாமல், பதினைந்து நாட்களுக்குள்ளாகவே, அடுத்தடுத்து நான்கைந்து முறை அமிலத்தைச் செலுத்தி குழாய்களில் அடைப்பை நீக்கிவிட வேண்டும்” என்ற பிரிட்டோ நிறைவாக,

பிரச்னையைக் குறைக்கும் இயற்கை இடுபொருட்கள்

“குழாய்களில் படிந்துள்ள உப்பு முழுமையாக அகற்றப்பட்ட பிறகு, தொடர்ந்து பாசன நீருடன் பஞ்சகவ்யா, இ.எம்., ஜீவாமிர்தம் போன்ற கரைசல்களை வென்சுரி மூலமாகக் கலந்து கொடுத்து வர வேண்டும். இந்த நுண்ணுயிர் கரைசல்களின் கார, அமிலத்தன்மை 5.8 முதல் 6.2 என்ற அளவில் இருக்கும். அதனால், குழாய்களில் உப்புப் படிவதைத் தடுக்க முடியும். ஆனால், இந்த நுண்ணுயிர் கரைசல்களால் ஏற்கெனவே படிந்துள்ள உப்பைக் கரைக்க முடியாது. அதனால், உப்பு முழுமையாக வெளியேறிய பிறகு, நுண்ணுயிர் கரைசலை செலுத்துவதன் மூலமாகத் தொடர்ந்து உப்புப் படிவதைத் தடுக்க முடியும். புதிதாகச் சொட்டுநீர் அமைப்பவர்கள், ஆரம்பம் முதலே நுண்ணுயிர் கரைசல்களைக் கொடுத்து வந்தால் உப்புப் படிமானத்தைப் பெருமளவு தடுத்துவிடலாம்” என்றார்.

சொட்டுநீர் அமைப்பிலுள்ள பிற பாகங்களின் பராமரிப்பு மற்றும் ஆலோசனைகள் குறித்த தகவல்கள் அடுத்த இதழில்...

- தண்ணீர் சொட்டும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism