Published:Updated:

பழ மரங்கள், பாரம்பர்ய மாடுகள், நாட்டு நாய்கள்... நடிகர் கிஷோரின் அற்புதப் பண்ணை!

பழ மரங்கள், பாரம்பர்ய மாடுகள், நாட்டு நாய்கள்... நடிகர் கிஷோரின் அற்புதப் பண்ணை!
பிரீமியம் ஸ்டோரி
பழ மரங்கள், பாரம்பர்ய மாடுகள், நாட்டு நாய்கள்... நடிகர் கிஷோரின் அற்புதப் பண்ணை!

இயற்கை த.ஜெயகுமார் - படங்கள்: க.தனசேகரன்

பழ மரங்கள், பாரம்பர்ய மாடுகள், நாட்டு நாய்கள்... நடிகர் கிஷோரின் அற்புதப் பண்ணை!

இயற்கை த.ஜெயகுமார் - படங்கள்: க.தனசேகரன்

Published:Updated:
பழ மரங்கள், பாரம்பர்ய மாடுகள், நாட்டு நாய்கள்... நடிகர் கிஷோரின் அற்புதப் பண்ணை!
பிரீமியம் ஸ்டோரி
பழ மரங்கள், பாரம்பர்ய மாடுகள், நாட்டு நாய்கள்... நடிகர் கிஷோரின் அற்புதப் பண்ணை!
பழ மரங்கள், பாரம்பர்ய மாடுகள், நாட்டு நாய்கள்... நடிகர் கிஷோரின் அற்புதப் பண்ணை!

“நமக்குத் தேவையே இல்லாத ஒரு பொருளை, நம்மிடம் இல்லாத பணத்தைக் கொண்டு வாங்குகிறோம். மற்றவர்களைக் கவர்வதற்காக - தற்போது இருக்கும் உலகமயமாக்கச் சூழல், நுகர்வு கலாசாரம் போன்றவற்றுக்கு எதிராக ‘ஹாலிவுட் நடிகர்’ வில் ஸ்மித் சொல்லிய வாசகம் இது. இது என்னை எப்போதும் உறுத்திக் கொண்டே இருக்கும். ஏனெனில், ஒரு மனிதனின் தேவை, அவனுக்கான வாழ்க்கை, அதற்கான நெறிகள் என எல்லாவற்றையும் கொடுத்தது, விவசாயம்தான். ஆனால், தற்போது மனிதன் இன்று தேர்ந்தெடுத்து வாழும் நவீன வாழ்க்கை, தேவைக்கு அப்பாற்பட்டது. இதை உணர்ந்துதான், ‘இந்த விவசாய வாழ்க்கையை வாழ வேண்டும். விவசாயத்தில் நீடித்து நிலைக்க வேண்டும்’ என்பதற்காகவே விவசாயம் செய்து வருகிறேன்” என்று விவசாயத்தின் மேன்மையை நெகிழ்ச்சியோடு சொல்கிறார், திரைப்பட நடிகர் கிஷோர்.

பொல்லாதவன், வெண்ணிலா கபடி குழு, கபாலி, விசாரணை, றெக்க என நிறைய  தமிழ் படங்களில் நடித்திருப்பவர், கிஷோர். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்பட வேலைகளில் மும்முரமாக இருப்பவர். சந்திப்பதற்கு நேரம் கேட்டோம். உடனடியாக நேரம் ஒதுக்கிப் பண்ணைக்கு அழைத்தார்.

பழ மரங்கள், பாரம்பர்ய மாடுகள், நாட்டு நாய்கள்... நடிகர் கிஷோரின் அற்புதப் பண்ணை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கர்நாடக மாநிலம், பெங்களூருவின் புறநகர் பகுதியான சிவனஹள்ளி என்கிற ஊர் வழியாக சுமார் 35 கிலோ மீட்டர் பயணித்தால் வருகிறது, கரியப்பனதொட்டி கிராமம். சுற்றிலும் மலைகள் சூழ்ந்து, சரிவுப் பகுதியில் அமைந்திருக்கிறது, கிஷோரின் ‘பஃபல்லோ பேக்’ எனும் பெயர் கொண்ட பண்ணை. மிதமான பனியும் வெயிலும் கலந்த ஒரு பொழுதில் பண்ணையில் அவரைச் சந்தித்தோம்.

அரசாங்கத்திடம் அடகு வைத்துவிட்டோம்“ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்குச் சராசரியா 1,500 கலோரி உணவே போதுமானதுனு இப்போ சொல்றாங்க. எளிமையான உணவைச் சாப்பிட்டு கடுமையான வேலைகளையும் செய்தாங்க, நம்ம மூதாதையர்கள். உணவை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. இன்று தேவைக்கு அதிகமாகச் சாப்பிடுவதும், வீணடிப்பதும் தொடர் கதையாகிடுச்சு. இதனால, ‘உற்பத்தி... உற்பத்தி’ என்று கூப்பாடு போட்டு விவசாயிகளை ‘ரசாயன உரங்கள்’ என்கிற வலையில் வீழ்த்தி, மண்ணையும் மக்களோட நலத்தையும் கெடுத்துக்கிட்டு இருக்காங்க.

போர்க் காலங்கள்ல உணவுப் பற்றாக்குறை ஏற்படும்போதுதான், மக்களுக்குத் தேவையான அரிசி, பருப்புகளை அரசு வழங்கும். ஆனா, அதையே பொது விநியோகத் திட்டமா கொண்டு வந்ததில் இருந்துதான் நம்மளை அரசாங்கத்துக்கிட்ட அடகு வெச்சிட்டோம். இப்ப என்னாச்சுன்னா, நம்மால் உழைச்சு பெற முடிகிற பொருள்களுக்குக்கூட இன்னொருத்தரை எதிர்பார்த்து வாழ வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிட்டோம்” என்று ஆதங்கப்பட்ட கிஷோர், தனது பின்புலம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

பழ மரங்கள், பாரம்பர்ய மாடுகள், நாட்டு நாய்கள்... நடிகர் கிஷோரின் அற்புதப் பண்ணை!

தாத்தா சொல்லிக்கொடுத்த விவசாயம் “எனக்குச் சொந்த ஊரு கர்நாடக மாநிலம், ராம் நகர் மாவட்டம், மாகடி என்கிற ஊர். அப்பா கல்லூரி முதல்வராக இருந்தாலும் எங்களோடது விவசாயக் குடும்பம்தான். சின்ன வயசிலேயே வயல்களிலும் தோட்டங்களிலும் ஓடித் திரிந்ததும் கிராமத்து உணவுகளை ரசித்துச் சாப்பிட்டதும்தான் இன்றுவரை விவசாயத்தை நேசிக்கிறதுக்கு அடிப்படையா இருக்கு. என்னோட அம்மா வழி தாத்தாவின் மூலமா விவசாயத்தை ஓரளவு தெரிஞ்சுக்கிட்டேன். மசானபு ஃபுகோகா, நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கரெல்லாம் விவசாயத்தை எனக்குள் இன்னும் ஆழமா பதியம் போட்டாங்க.

கரியப்பனதொட்டி கிராமத்துல எட்டரை ஏக்கர் நிலம் இருக்கு. ஆறு வருஷத்துக்கு முன்னாடி வாங்கினேன். செம்மண் கலந்த சரளைமண். மேட்டு வெள்ளாமைக்கேற்ற நிலம். இப்போ படிப்படியா இறவை பாசனத்துக்குத் தயார் படுத்திக்கிட்டு இருக்கேன். இதோட கர்நாடக பாரம்பர்ய நாட்டு மாடான ஹல்லிகர் ரகத்துல நாலு மாடுகள் இருக்கு. வீட்டிலேயே இயற்கை அங்காடியையும் நடத்திட்டு இருக்கோம். பண்ணையில ஒரு குடும்பம் இருக்காங்க. அவங்கதான் பண்ணையைப் பார்த்துக்குறாங்க. அதில்லாம இயற்கை அங்காடியில் விற்பனை செய்றதுக்காக விவசாயிகள்கிட்ட இருந்து வாங்குகிற பொருட்களையும் தரம் பிரிச்சு சுத்தப்படுத்தி அனுப்புற வேலையும் பண்ணையிலேயே நடக்குது.

பழ மரங்கள், பாரம்பர்ய மாடுகள், நாட்டு நாய்கள்... நடிகர் கிஷோரின் அற்புதப் பண்ணை!

பாரம்பர்ய முறைப்படி வீடுசிமென்ட், செங்கல் பயன்படுத்தாம, பழைய பாரம்பர்ய முறைப்படி மண், கல்லை வெச்சு வீட்டுக்குள் சூரியஒளி நேரடியா விழுற மாதிரி வீட்டைக் கட்டியிருக்கேன். ஏற்கெனவே பயன்படுத்தின பழையக் கதவுகள், ஜன்னல்களையே வாங்கிப் பொருத்தியிருக்கேன். கிட்டத்தட்ட மங்களூர் பகுதியில இருக்கிற வீடுகளைப்  போல கட்டியிருக்கேன். குடகு மலைப் பகுதியில பழங்குடிகள் அமைச்சிருக்கிற மாதிரியான மடிக்கேரி வகை குடிலையும் தனியாகக் கட்டியிருக்கேன்.

மலையில கல்குவாரி தொடங்கப் போறதாவும் அதுக்கான சாலை அமைக்க இந்த இடத்தை வாங்குறதாவும் ஒரு தகவல் கேள்விப்பட்டேன். அதனால, இந்த இடத்தை நாம வாங்கிக் கல் குவாரி வர்றதைத் தடுத்திடலாம்னு முடிவு பண்ணி வாங்கினேன். ஆனா, கல் குவாரி அமைச்ச பண முதலைகள் இன்னொரு இடத்தைப் பாதைக்காக வாங்கிக்கிட்டாங்க.

பலன் கொடுக்கும் பழ மரங்கள்வாங்கினதுக்குப் பிறகு ராகி, சோளம், தினை, பயறு வகைகள் எனப் பயிர் செய்ய ஆரம்பிச்சேன். நூத்துக்கணக்குல தேக்கு மரங்களையும் நடவு செஞ்சேன். ஆனா, தேக்கு மரங்களைவிட எலுமிச்சை, மா, அத்தி, கொய்யா, சப்போட்டா மாதிரியான கனிகள் கொடுக்கிற மர வகைகள்தான் நல்ல பலன் கொடுக்கும்கிறதைத் தாமதமா புரிஞ்சுக்கிட்டேன். தேக்கு மாதிரியான மரங்கள் நடணும்னு திட்டமிட்டிருந்த இடத்திலெல்லாம் இப்போ பழ மரங்களைத்தான் வளர்த்துட்டு இருக்கேன்.

பழ மரங்கள், பாரம்பர்ய மாடுகள், நாட்டு நாய்கள்... நடிகர் கிஷோரின் அற்புதப் பண்ணை!

ஆப்பிள், வாட்டர் ஆப்பிள், பட்டர் புரூட், மாதுளைனு குளிர் சீதோஷ்ணத்தில் விளையக்கூடிய பழ மரங்களையும் வளர்க்கிறேன்” என்ற கிஷோர், பண்ணையைச் சுற்றிக் காட்டிக் கொண்டே பேச ஆரம்பித்தார்.

மழைநீரை சேகரிக்கத் தடுப்பணை “என்னோட நிலம் சரிவுப் பகுதில இருக்கிறதால, தண்ணியை நிலத்துல சேகரிச்சு வைக்கிறது சிரமம். அதனால, மலையிலிருந்து இறங்குற தண்ணியைச் சேகரிக்க, நிலத்தைச் சுத்தியும் மழைநீர் சேகரிப்பு வாய்க்கால் அமைச்சிட்டு இருக்கேன். மலையிலிருந்து இறங்குற தண்ணி இந்த வாய்க்கால்ல சேகரமாயிடுது. இதைத்தவிர மூணு தடுப்பணைகளையும் கட்டியிருக்கேன். இப்போ ரெண்டு தடுப்பணைகள்ல தண்ணி நிறைஞ்சி இருக்கு. இது மூலமா நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கு. நீர்மட்டம் உயர்ந்ததால ஆழ்துளைக் கிணறு அமைச்சு இறவைப் பயிர்களுக்கும் பழமரங்களுக்கும் சொட்டுநீர் மூலமாகவும் நேரடியாகவும் பாசனம் செஞ்சிட்டு வர்றேன். இந்தத் தடுப்பணைக்கு அக்கரையில சமூகக்காடுகள் இருக்கு. அங்க வர்ற யானைகள், ஆடு, மாடுகளுக்குக் குடிதண்ணீராவும் இது பயன்படுது. இந்தத் தடுப்பணைகள்ல கிடைக்கிற தண்ணிய வெச்சு பருவக்காலங்கள்ல நெல் போடலாம்னு திட்டமிட்டிருக்கேன்.

உரமாகும் களைகள் நான், மசானபு ஃபுகோகாவோட உழவில்லாத விவசாய முறையைத்தான் அதிகம் பின்பற்றுறேன். நிலத்துல வளர்ற செடி கொடிகள், புல் பூண்டுகள் எல்லாத்தையும் மண்ணைக் கிளறும் கருவி கொண்டே கொத்தி, அப்படியே மல்ச்சிங் போட்டுடுறோம். இது மூலமா, இலைகள்ல இருந்து நைட்ரஜன் சத்தும் புல் வகைகள்ல இருந்து கார்பன் சத்தும் மண்ணுக்கு கிடைக்குது. செடிகள், புல் பூண்டுகள், தாவரக் கழிவுகளை எரிக்கக் கூடாதுங்கிறதை கொள்கையாவே வெச்சிருக்கேன். இப்படித் தொடர்ந்து களைகளை வெட்டி மூடாக்காகப் பயன்படுத்திட்டு வந்ததால, கட்டியான மண், ‘பொலபொல’னு மாறிட்டு இருக்கு. பண்ணையில் இருக்கிற எல்லாப் பயிர்களுக்கும் 15 நாட்களுக்கு ஒருமுறை அல்லது மாசத்துக்கு ஒருமுறை வடிகட்டிய ஜீவாமிர்தக் கரைசலை கொடுத்துட்டு இருக்கோம்.

பழ மரங்கள், பாரம்பர்ய மாடுகள், நாட்டு நாய்கள்... நடிகர் கிஷோரின் அற்புதப் பண்ணை!

பழ மரங்கள் நடவுக்காக ஒதுக்கின இடத்துல, 9 அடிக்கு 9 அடி இடைவெளியில் வரப்புகளை உருவாக்கியிருக்கேன். அதுலதான் முருங்கை, எலுமிச்சை, கொய்யா, மா, தென்னை கன்னுகளை நட்டுருக்கேன். வரப்புகளுக்கு இடையில் ஊடுபயிராக உளுந்து, தட்டைப்பயறு, நிலக்கடலைனு பயிர் செய்றோம். இந்த மரங்களை நட்டு நாலரை வருஷம் ஆகுது. பெரிய மரங்களுக்கு 36 அடி இடைவெளியும், சின்ன மரங்களுக்கு 18 அடி இடைவெளியும் விட்டுருக்கேன்” என தொழில்நுட்பங்களை அழகாக விவரித்த  கிஷோர், பெங்களூரு ஜெயா நகரில் உள்ள தனது வீட்டில் நடத்தி வரும் இயற்கை அங்காடிக்கு அழைத்துச் சென்றார்.

வீட்டின் முகப்பில் முள்இல்லா மூங்கில் செடிகள், வாழை மரம் என இயற்கை அம்சங்களுடன் இருந்தது வீடு. சுவர்களுக்கு கருங்கல் பயன்படுத்தப்பட்டிருப்பதால், குளுகுளுவென இருந்தது வீடு.

சணல் பைகளில் பொருட்கள்“இங்கே காய்கறிகள், சிறுதானியங்கள், எண்ணெய், பழங்கள் எல்லாம் விற்பனை செய்றோம். ஆரோக்கியமான உணவை விரும்புறவங்க தேடி வந்து வாங்கிட்டுப் போறாங்க. முன்னாடி வேறொரு இடத்தில தனியா நடத்திட்டு வந்தோம். ஆள் பற்றாக்குறையால, இப்போ வீட்டிலேயே வெச்சு விற்பனை செய்றோம். இந்த அங்காடியை என் மனைவிதான் பாத்துக்கிறாங்க. விற்பனைக்குப் போக மீதியை வீட்டுக்குப் பயன்படுத்திக்கிறோம். பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கக்கூடாதுங்கறதால, சாமான்களைச் சின்னச் சணல் பைகள்லதான் கொடுக்கிறோம்.

வீட்டில் எங்க குழந்தைகளோடு இருக்கிற இன்னும் ரெண்டு செல்லங்கள், இந்தக் கன்னி நாய்கள்தான். நம்ம நாட்டு ரகத்தைச் சேர்ந்த இந்த நாய்களை திண்டுக்கல்லிலிருந்து கொண்டு வந்தோம். வீட்டுல வளர்க்கவும், வீட்டைப் பாதுகாக்கவும் அருமையான நாய்கள் இதுங்க. இன்னொரு வெளிநாட்டு நாயும் இதோடு வளர்க்கிறோம். வீட்டுக்குள்ளேயே சின்ன அளவுல கீரை, வெங்காயமும் சாகுபடி செய்றோம்” என்ற கிஷோர் நிறைவாக, “சினிமாவில் எனக்குப் போதிய அளவு வருமானம் வந்தாலும்... விவசாயத்தைக் கத்துக்கணும். விவசாயியா அந்த வாழ்க்கையை அனுபவிக்கணும்ங்கிற எண்ணத்துல விவசாயத்தை நேரடியாகவே  கத்துக்கிட்டு வர்றேன். இப்போ விவசாயத்துல எனக்கு நல்ல நம்பிக்கை வந்திருக்கு” என்றவர், பசுமை விகடன் வாசகர்களுக்குத் தனது பொங்கல் வாழ்த்துகளைச் சொல்லி மகிழ்ச்சியோடு விடைகொடுத்தார்.

உழவுகேற்ற ஹல்லிகர்  மாடுகள்!

“கர்நாடக மாநிலம் மைசூரை பூர்வீகமாகக் கொண்ட நாட்டு மாடுகள்தான், ஹல்லிகர் ரக மாடுகள். மாநிலம் முழுக்கவே பரவலா இந்த ரகம் இருக்கு. இந்த ரகத்துல 4 மாடுகள், 2 கன்னுகுட்டிகள் எங்க பண்ணையில இருக்கு. தமிழ்நாட்டோட காங்கேயம் மாடுகள் மாதிரியான தோற்றம் கொண்டது. செபு இனத்துக் காளைகள் வகையைச் சேர்ந்ததால, முதுகில் பெரிய திமில் இருக்கும். கொம்பு மெல்லியதாகவும், கூர்மையாகவும், நீண்டும் இருக்கும். உழவு செய்ய, வண்டி இழுக்க என இதைப் பயன்படுத்தலாம். வெள்ளை, சாம்பல், சாம்பல் கலந்த கறுப்பு நிறத்துல மாடுகள் இருக்கும்.

சாணம், சிறுநீர் தேவைக்காகதான் நான் வளர்க்கிறேன். மலைப்பகுதியிலும், வறட்சியான பகுதியிலும் வாழும் தன்மை கொண்டது. தீவனமும் பெரிசா கொடுக்கவேண்டியதில்ல. பண்ணையில இருக்கிறத சாப்பிட்டுட்டு அடக்கமா இருக்கும். ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை பால் கிடைக்கும். இந்த மாட்டுப்பாலை பெரும்பாலும் வீட்டுக்குத்தான் பயன்படுத்துவாங்க. இந்தப்பால்ல காய்ச்சுற நெய் நல்ல மணமா இருக்கும். நெய்க்காகவே மாடு வளர்க்கிறவங்களும் உண்டு. இங்க கன்னுக்குட்டிகளுக்குப் போக மிச்சம்தான் எங்களுக்கு” என்கிறார், கிஷோர்.

பழ மரங்கள், பாரம்பர்ய மாடுகள், நாட்டு நாய்கள்... நடிகர் கிஷோரின் அற்புதப் பண்ணை!

கர்நாடகாவின் மகரச் சங்கராந்தி (பொங்கல்)!

தமிழ்நாட்டில் பொங்கல் விழா கொண்டாடும்போது,  கர்நாடகாவில் மகரச் சங்கராந்தி விழா நடைபெறும். அப்போது மாடுகளை வழிபடுவது வழக்கம். இந்த விழாவின் போது, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்று கர்நாடகாவில் மாடுகளை வைத்து நெருப்புத் தாண்டும் விழா விமரிசையாக நடத்தப்படுகிறது.

குறிப்பாகத் தென்கர்நாடக பகுதியில் இது பிரசித்தம். மாடு வளர்ப்போர், தெருக்களில் வைக்கோல் பரப்பித் தீ பற்ற வைத்து... அலங்கரிக்கப்பட்ட மாடுகளைத் தாண்ட விடுவார்கள். அதேபோல, தை மாதத்தில் கோயில்களில் கொண்டாடப்படும் விழாக்களோடு சேர்த்து அனைத்துப் பகுதிகளிலும் கால்நடை சந்தை நடத்தப்படும். இந்தச் சந்தைகள் மிகவும் பிரபலம். சந்தைகளுக்கு வண்டியில் மாடுகளைப் பூட்டி அழைத்துச் செல்வார்கள்.

கிஷோரும் பசுமை விகடனும்!

“எனக்குத் தமிழ் படிக்கத் தெரியாது. வீட்ல என் மனைவிதான் ‘பசுமை விகட’னைப் படிச்சு, அதில் உள்ள இயற்கை விவசாய தகவல்களைச் சொல்வாங்க. கர்நாடகாவை விட தமிழ்நாடுதான் இயற்கை விவசாயத்துல சிறப்பாக இயங்குது. ஏன்னா, இங்க நம்மாழ்வாரோட பங்களிப்பு அதிகமா இருக்குங்கறதுதான் காரணம். நிறைய பேருக்கு இயற்கை விவசாயம்னா என்னான்னு தெரியுது. சுபாஷ் பாலேக்கரோட ஜீவாமிர்தம், அக்னி அஸ்திரா கண்டுபிடிப்புகளால இயற்கை விவசாயத்துல பெரியளவுல மாற்றங்கள் நடந்துட்டு வருது” என்கிறார் கிஷோர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism