Published:Updated:

அவசர அழைப்பு எண் 1962... கால்நடைகளைக் காக்கும் ஆம்புலன்ஸ்!

அவசர அழைப்பு எண் 1962...  கால்நடைகளைக் காக்கும் ஆம்புலன்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
அவசர அழைப்பு எண் 1962... கால்நடைகளைக் காக்கும் ஆம்புலன்ஸ்!

திட்டம்கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன்

அவசர அழைப்பு எண் 1962... கால்நடைகளைக் காக்கும் ஆம்புலன்ஸ்!

திட்டம்கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன்

Published:Updated:
அவசர அழைப்பு எண் 1962...  கால்நடைகளைக் காக்கும் ஆம்புலன்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
அவசர அழைப்பு எண் 1962... கால்நடைகளைக் காக்கும் ஆம்புலன்ஸ்!

ந்தியாவிலேயே முதல் முறையாக, கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் திட்டம் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது ஆட்சிக்காலத்தில் கடைசியாக அறிமுகப்படுத்திய திட்டம் இது. கடந்த செப்டம்பர் 21-ம் தேதி, காணொலிக்காட்சி மூலமாக இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அவசர அழைப்பு எண் 1962...  கால்நடைகளைக் காக்கும் ஆம்புலன்ஸ்!

உடல் உபாதைகள், விபத்து உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் உயிருக்குப் போராடும் கால்நடைகளைக் காப்பாற்றும் உயரிய சேவையில் ஈடுபட்டு வருகிறது, இந்த ஆம்புலன்ஸ். கடந்த இரண்டரை மாதங்களில் நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகள் இத்திட்டத்தின் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளன.

மனிதர்களுக்குத் திடீர் உடல் நலக்குறைவு, விபத்து போன்ற பாதிப்புகள் ஏற்படும்போது முதலுதவி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, 108 ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்ற சேவைதான், தற்போது தமிழகத்தில் செயல்பட்டுவரும் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் திட்டம். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மூலமாகச் செயல்படுத்தப்படும் இத்திட்டம், கிராமப்புற மக்களுக்குப் பெரிதும் உதவக்கூடியதாக உள்ளது.
இத்திட்டம் குறித்துக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திலகரிடம் பேசினோம். “இது ஓர் இலவச திட்டம். கிராமப்புற மக்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். உடல் நலக்குறைவு, விபத்து உள்ளிட்ட காரணங்களால், பாதிக்கப்பட்ட கால்நடைகளை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல விவசாயிகள் பெரும் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இந்த இடர்பாடுகளைப் போக்கும் விதமாகத்தான், இந்த ஆம்புலன்ஸ் திட்டத்தை வடிவமைத்துள்ளோம். 6.34 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவசர அழைப்பு எண் 1962...  கால்நடைகளைக் காக்கும் ஆம்புலன்ஸ்!

முதல் கட்டமாகக் காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த மாவட்டங்களுக்கு அருகில் உள்ள மற்ற மாவட்ட மக்களும் இதனைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். தற்போது 5 மாவட்டங்களிலும் ஒரு மாவட்டத்துக்கு 2 ஆம்புலன்ஸ் வண்டிகள் என்ற கணக்கில் இயங்கி வருகின்றன. விரைவில் மற்ற மாவட்டங்களுக்கும் இதனைச் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தஞ்சாவூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள எங்களது கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆம்புலன்ஸ் வண்டிகள் தயார் நிலையில் இருக்கும். மற்ற மூன்று மாவட்டங்களிலும் கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களில் ஆம்புலன்ஸ் வண்டிகள் தயார் நிலையில் இருக்கும். அவசரத்தேவைக்கு ‘1962’ என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். சென்னையில் உள்ள இதற்கான அழைப்பு மையத்தில் தகவல் பெறப்பட்டு, உடனடியாக ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும். இதில் ஒரு மருத்துவரும் ஒரு உதவியாளரும் வருவார்கள். வீட்டிலேயே கால்நடைகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்படும். மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டியிருந்தால்,  அந்த வாகனம் மூலமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும். கால்நடைகளை மருத்துவமனையில் அதிக நாட்கள் வைத்துச் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தால், அந்த கால்நடையின் உரிமையாளர் மருத்துவமனையில் தங்குவதற்கும் வசதிகள் உள்ளன. அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை இந்த ஆம்புலன்ஸ் இயங்கும். ஆனாலும், 24 மணிநேரமும் 1962 என்ற தொலைபேசி எண் மூலமாக அழைப்பு மையத்தைத் தொடர்புகொள்ளலாம். ஆம்புலன்ஸ் சேவையை அளிக்க முடியாத நேரங்களில் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். இதுவரை 1,200 அழைப்புகள் வந்துள்ளன. நானூறுக்கும் மேற்பட்ட கால்நடைகள் இந்த ஆம்புலன்ஸ் திட்டம் மூலமாகக் காப்பாற்றப்பட்டுள்ளன” என்றார்.

அவசர அழைப்பு எண் 1962...  கால்நடைகளைக் காக்கும் ஆம்புலன்ஸ்!

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்துக்குச் சென்று சிகிச்சைப் பிரிவு பொறுப்புத் தலைவர் டாக்டர் சதீஸ்குமாரைச் சந்தித்துப் பேசினோம். இந்த ஆம்புலன்ஸில் உள்ள வசதிகளை நமக்குக் காட்டியபடியே பேசிய அவர், “பாதிக்கப்பட்ட கால்நடை எந்த நிலையில் இருந்தாலும் இதன் உள்ளே கொண்டு செல்வதற்கான லிஃப்ட் உள்ளது. கால்நடைகளின் உள் உபாதைகளை அறிய அல்ட்ரா ஸ்கேன், ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற கருவிகளும் முதலுதவி மற்றும் அறுவைச் சிகிச்சைக்கான கருவிகளும் இதில் உள்ளன. திரவ நைட்ரஜன் குடுவை உள்ளிட்ட பரிசோதனைக் கருவிகள் மற்றும் மருந்துப் பொருட்களும் உள்ளன. அதனால், உடனடி சிகிச்சை அளிக்க முடியும். குறிப்பாக சாலை விபத்துகளில் சிக்கிய கால்நடைகள்; நாய்க்கடி, பாம்புக்கடி போன்ற விஷக்கடிகளால் பாதிக்கப்பட்ட கால்நடைகள்; வயிறு உப்புசம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட கால்நடைகள்; திடீர் உபாதைகள் ஏற்படும் சினை மாடுகள் ஆகியவற்றுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கவில்லையென்றால் அவை இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இந்த ஆம்புலன்ஸ் பேருதவியாக இருக்கும். சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் சந்தானலட்சுமி, வாசுதேவன் ஆகியோர் எங்கள் மையத்தில் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 21 கால்நடைகளுக்குச் சிகிச்சை அளித்துள்ளோம். 32 அழைப்புகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளோம். ஆம்புலன்ஸை விளம்பரப் படுத்துவதற்காகக் கிராமங்களுக்குள் பயணம் செய்து, நாங்களாகவே விவசாயிகளின் வீடுகளில் உள்ள கால்நடைகளுக்குச் சிகிச்சை அளித்து வருகிறோம் இப்படி, இதுவரை 250 மாடுகளுக்கும் 1,500 ஆடுகளுக்கும் சிகிச்சை அளித்துள்ளோம்” என்றார், சதீஸ்குமார்.

அவசர அழைப்பு எண் 1962...  கால்நடைகளைக் காக்கும் ஆம்புலன்ஸ்!

இத்திட்டம் மூலமாக பலன் பெற்ற  தஞ்சாவூர் மாவட்டம், புண்ணியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராணி என்பவரிடம் பேசினோம். “என்னோட மாடு நிறை மாசமா இருக்கு. திடீர்னு ஏழெட்டு நாளா எதுவுமே சாப்பிடலை. சாணியும் போடலை. பாபநாசத்துல உள்ள டாக்டர்ங்களை அழைச்சிட்டு வந்து காண்பிச்சேன். ஆனாலும் என்ன பிரச்னைன்னே கண்டுபிடிக்க  முடியலை. அப்புறம்தான் ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணினோம். சோதனை பண்ணிப் பார்த்துட்டு, ஆஸ்பத்திரிக்கே கொண்டு போயி ஒரு வாரம் சிகிச்சை கொடுத்தாங்க. இப்ப குணமாகி என்னோட மாடு சாப்பிட ஆரம்பிச்சிருக்கு. சாணமும் போடுது. இந்த மாடு எங்க கைவிட்டு போயிருந்தா, எங்களுக்குப் பெரிய இழப்பாகியிருக்கும்” என்றார், நெகிழ்ச்சியாக.

இன்னொரு பயனாளியான தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வியிடம் பேசினோம். “எங்க மாட்டு மேல வேன் மோதிடுச்சு. விலா எலும்பு முறிஞ்சு போச்சு. நெஞ்சுக்கிட்ட சதை பிளந்து நுரையீரல் எல்லாம் வெளிய தெரிஞ்சது. அவ்வளவு பலமா அடி பட்டிருந்துச்சு. சாயந்தரம் நாலே முக்காலுக்கு என் மகன் ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணினான். அடுத்த இருபது நிமிஷத்திலேயே ஆம்புலன்ஸ் வந்துடுச்சு. எங்க மாடு உயிர் பொழைச்சு வந்ததே பெரிய விஷயம். எங்க மாடு 30 ஆயிரம் ரூபாய் விலை மதிப்பிருக்கும். தினமும் 200 ரூபாய் வருமானம் கொடுத்துக்கிட்டு இருக்கு. உடனடியா ஆம்புலன்ஸ் வரலைனா, எங்க மாட்டைக் காப்பாத்தியிருக்கவே முடியாது” என்றார்.

இதுபோன்ற நல்ல திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்வதோடு, இதைப்பற்றி தெரியாதவர்களுக்கும் தெரியப்படுத்தலாம் தானே.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism