Published:Updated:

நம்பிக்கையை விதைங்க நியாயன்மாரே... நாண்டுக்கிட்டு சாகாம தடுங்க நியாயன்மாரே!

நம்பிக்கையை விதைங்க நியாயன்மாரே...  நாண்டுக்கிட்டு சாகாம தடுங்க நியாயன்மாரே!
பிரீமியம் ஸ்டோரி
நம்பிக்கையை விதைங்க நியாயன்மாரே... நாண்டுக்கிட்டு சாகாம தடுங்க நியாயன்மாரே!

அரசுக்கும் சங்கங்களுக்கும் ஜூனியர் கோவணாண்டி வேண்டுகோள்! நிலவரம் ஜூனியர் கோவணாண்டி - ஓவியம்: ஹரன்

நம்பிக்கையை விதைங்க நியாயன்மாரே... நாண்டுக்கிட்டு சாகாம தடுங்க நியாயன்மாரே!

அரசுக்கும் சங்கங்களுக்கும் ஜூனியர் கோவணாண்டி வேண்டுகோள்! நிலவரம் ஜூனியர் கோவணாண்டி - ஓவியம்: ஹரன்

Published:Updated:
நம்பிக்கையை விதைங்க நியாயன்மாரே...  நாண்டுக்கிட்டு சாகாம தடுங்க நியாயன்மாரே!
பிரீமியம் ஸ்டோரி
நம்பிக்கையை விதைங்க நியாயன்மாரே... நாண்டுக்கிட்டு சாகாம தடுங்க நியாயன்மாரே!
நம்பிக்கையை விதைங்க நியாயன்மாரே...  நாண்டுக்கிட்டு சாகாம தடுங்க நியாயன்மாரே!

ரெண்டு மாசமா நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையா கிடந்து இறந்து போனாங்க ஜெயலலிதா. உடனே, பொதுக்குழுவைக் கூட்டி, ‘மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளை விவசாயிகள் தினமாக அறிவிக்க வேண்டும்’னு ரகளைக் கட்ட ஆரம்பிச்சிட்டாங்க ரத்தத்தின் ரத்தங்கள் (யாரோட ரத்தத்தின் ரத்தங்கள்னு எல்லாம் கேட்கக்கூடாது). ஆனா, இப்படி இவங்க கூச்சல் போட்டுக்கிட்டிருந்ததுக்கு நடுவுல... தமிழ்நாடு முழுக்க வறட்சி தாண்டவமாட ஆரம்பிச்ச சத்தம்; பயிர்கள் கருகின நாத்தம்; உயிர்கள் சரிஞ்ச ஓசை... இது எதுவுமே வெளியில கேக்கமா போயிடுச்சு.

காவிரி, தாமிரபரணி, தென்பெண்ணை, வைகை, பாலாறு, அமராவதி, பவானினு தமிழ்நாட்டுல ஓடுற எந்த நதியிலேயும் தண்ணியில்ல; ஊர்க்காட்டு ஏரி, குளம் குட்டை, கண்மாய்கள்ல தண்ணி இல்ல; நிலத்தடி நீரும் அதலபாதாளத்துக்குப் போயிடுச்சு; மழையும் கண்காணாம போயிடுச்சு. இப்படிப் பலப்பல பிரச்னைகளையெல்லாம் மனசுல போட்டு உழப்பிக்கிட்டு, காஞ்சிப்போன, கருகிப்போன பயிருங்கள பார்த்துட்டு, கடைசியில மாரடைப்புலயும், தூக்குக் கயித்துலயும், பூச்சிக்கொல்லியிலயும் செத்துக்கிட்டே இருக்காங்க. கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுக்க இழவு வீடு கணக்கா மாறிக்கிடக்கு. ஆனா, இதைப் பத்தியெல்லாம் ஒரு வார்த்தை பேசவோ... தற்கொலைகளைத் தடுத்து நிறுத்துறதுக்காக ஏதாவது அதிரடி திட்டங்களை அறிவிக்கவோனு எந்த முயற்சியையும் எடுக்கல, நம்மள ஆளுறதுக்காக தேர்ந்தெடுத்த அண்ணா தி.மு.க. தமிழக அரசு (பணத்துக்குத்தான் பல பேரு ஓட்டு போட்டாங்கன்னாலும், அரசாங்கம்கிறது நம்மளோட அரசாங்கம்தானே... என்ன நான் சொல்றது?).

பெரிம்மா போய்ச் சேர்ந்துட்டாங்க. பெரிம்மா இருந்த கட்சிப்பதவியில மினிம்மாவை உக்கார வைக்கிறதுக்கும், அடுத்தாப்ல மினிம்மாவை ஆட்சிப் பதவியில உக்கார வைக்கறதுக்கும், கோடி கோடியா சுருட்டிக் கொடுத்து உபகாரம் பண்ணிக்கிட்டிருந்த சேகர் ரெட்டி கூட்டாளிங்களை எப்படிக் காப்பாத்தறதுங்கறதைப் பத்தி யோசிச்சிக்கறதுக்கும்தான் நேரம் போயிட்டிருக்கே ஒழிய... தமிழ்நாட்டுல உயிரோட நடமாடிக்கிட்டிருக்கிறவங்கள பத்தி யாருமே கவலைப்படல.

கோடி கோடியா வாங்கினக் கடனைக் கட்ட முடியாதவனையெல்லாம் சொகுசா ஏரோப்பிளேன் ஏத்திவிடற இந்த நாட்டுல, இல்லாத பாவத்துக்காகப் பத்தாயிரம், பன்னண்டாயிரம்னு கடன் வாங்கின விவசாயிங்களைத் தான் ஜப்தினு மிரட்டறாங்க. வெச்ச பயிர் வாடிப்போக, வீட்டு அடுப்புல பூனைத் தூங்க, வேற வழியில்லாம நாண்டுக்கிட்டு சாக ஆரம்பிச்சிட்டாங்க விவசாயிங்க.

முதல்கட்டமா விவசாயிகளுக்கு நம்பிக்கையைக் கொடுக்கணும். பல ஆயிரம் கோடி ரூபாய்களை வருஷா வருஷம் விவசாயத் துறைக்காகச் செலவு செய்துக்கிட்டு இருக்குது மாநில அரசு. இந்தப் பல ஆயிரம் கோடிகள்ல அதிகபட்சமா வேளாண் துறை, தோட்டக்கலைத் துறைனு விவசாயம் சார்ந்து இருக்கிற பல துறைகள்லயும் இருக்கிற ஊழியர்களுக்குச் சம்பளமாவும், அவங்களோட இன்ன பிற வசதிகளுக்காகவும்தான் செலவாயிட்டிருக்கு. இதுக்கெல்லாம் போக மீதி இருக்கிற தொகைதான் விவசாயத்தை வளர்க்கவும், விவசாயிகளைத் தூக்கிப் பிடிக்கவும் ஒதுக்கப்படுது. விவசாயத்துறைக்குனே நியமிக்கப்பட்டிருக்கிற இந்த அதிகாரிங்க எல்லாம் மனசாட்சிக்கு விரோதம் இல்லாம வேலை பார்த்தாலே, நிச்சயமா விவசாயச் சாவுங்கிறதே இங்க இருக்காது.

வறட்சி பாதிப்புங்கிறது 5 வருஷத்துக்கு, 6 வருஷத்துக்கு ஒரு தடவை வந்துக்கிட்டுதான் இருக்கும். அதைத் தடுக்கவே முடியாது. ஆனா, அதைத் தாங்குற மனோபலத்தை விவசாயிகளுக்குத் தரணும். அதைத் தர மறந்துட்டோம்.  இந்த வருஷம்  வறட்சிதான்கிறது... கிட்டத்தட்ட மூணு மாசத்துக்கு முன்னேயே உறுதியாயிடுச்சு. அதாவது டெல்டாவுல இந்த வருஷம் குறுவை சாகுபடி கிடையாதுங்கிறது ஆடி, ஆவணியில முடிவாகிடுச்சு. அப்பவே இந்த அதிகாரிங்க உஷாராகி, அடுத்தக் கட்டமா என்ன மாதிரி பயிர் செய்யலாம், என்ன மாதிரி பயிர் செய்யக்கூடாதுனு பலவித யோசனைகளை முன் வெச்சு செயல்பட்டிருக்கலாம். ‘இந்த வருஷம் பாதிப்புதான். அதனால, திறமையா நடந்துக்கோங்க.... விதைக்கிறேன் பேர்வழினு மேற்கொண்டு செலவு பண்ணி கையில இருக்கிற காசையும் இழந்துடாதீங்க... கடன ஒடன வாங்கிடாதீங்க’னு எச்சரிக்கை செய்திருக்கலாம். இது எதையுமே அதிகாரிங்களும் சரி, அரசாங்கமும் சரி செய்யவே இல்லையே. ‘ம்... காவிரியில தண்ணி வரல, மழையும் பெய்யல; இதுக்கு நாம என்ன செய்ய முடியும்?’னு கையைக் கட்டிக்கிட்டு கிழக்கேயும் மேக்கேயும் போயிட்டாங்க அதிகாரிங்க. சின்னம்மாவை சிங்காரிக்கிறதுதான் முக்கிய வேலைனு அதுலயே மூழ்கி முத்தெடுத்துக்கிட்டிருக்காங்க அண்ணா தி.மு.க. முதலமைச்சரும் மந்திரிங்களும்.

இதுக்கு நடுவுல கொஞ்சம் நேரம் கிடைச்சதும்... விவசாயிங்க மேல கரிசனம் இருக்கிற மாதிரி வறட்சி ஆய்வுப்பயணம்னு சொல்லிக்கிட்டுப் போய், ‘விவசாயம் பொய்ச்சுப் போனதுக்காக விவசாயிங்க சாகல. அதுக்கெல்லாம் தனிப்பட்ட காரணங்கள் இருக்கு’னு மைக்கை பிடிச்சி முழங்க ஆரம்பிச்சிட்டாங்க மங்குணி மந்திரிங்க. விவசாயத் தற்கொலைனு ஒப்புக்கிட்டா நிவாரணம் கொடுக்கணும்... அதுக்காக மத்திய அரசுக்கிட்ட காவடி தூக்கணும். மினிம்மாவுக்குக் காவடி தூக்கவே இவங்களுக்கு நேரமில்லாதப்ப, விவசாயிங்கள தூக்கிச் சுமக்கவா முடியும்?

நம்பிக்கையை விதைங்க நியாயன்மாரே...  நாண்டுக்கிட்டு சாகாம தடுங்க நியாயன்மாரே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சரி, ராமன் ஆண்டாலும்... ராவணன் ஆண்டாலும் இதே கதைதான் நடக்கும். நாளைக்கே தளபதி ஸ்டாலினோ... இல்ல கறுப்பு எம்.ஜி.ஆரோ முதலமைச்சரா வந்துட்டாலும் இதைவிட இன்னும் கேவலமாதான் இருக்கும். அதனால இந்த ஜென்மங்களை எல்லாம் நம்பாம... முதல்ல நம்ம மேல, நாம நம்பிக்கை வைக்கணும். இதுக்கு இயற்கையை முதல்ல புரிஞ்சுக்கணும். இயற்கைங்கிறது ஏதோ பேங்க்ல டெபாசிட் வெச்சுருக்கிற பணம்கிற மாதிரி நினைச்சுக்கிட்டுச் செயல்படக்கூடாது. சொல்லப்போன நாம டெபாசிட் செய்து வெச்சிருக்கிற பணமே, இப்ப நம்மது இல்லனு ஆகிடுச்சு. ஆமாம், நம்ம பாரதப் பிரதமர் நரேந்திர மோடி டப்பு... டுப்புனு எடுத்த அதிரடி நடவடிக்கைகளால, ரெண்டு மாசமா சொந்தப் பணத்தையே எடுக்க முடியாம அல்லாடிக்கிட்டிருக்காங்க பலபேரு. நிலைமை இப்படி இருக்கும்போது, இயற்கைக்கிட்ட எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஆத்தை ஆக்கிரமிச்சோம்; குட்டையைத் தோட்டமாக்கினோம்; குளத்தை வீடாக்கினோம்; ஏரிகளை விளையாட்டுத் திடலாக்கினோம்; காடுகளைக் கபளீகரம் பண்ணினோம்; நிலங்களைப் பிளாட் போட்டோம்னு பலவித அநியாயங்களைப் பண்ணியிருக்கோம். நாம பண்ணலானாலும், இந்த அநியாயங்களைப் பண்ணிய அரசியல்வாதிங்களுக்குக் கைகட்டி சேவகம் பார்த்திருக்கோம்... இல்ல ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்த்திருக்கோம். இதெல்லாம் சேர்ந்துதான் இன்னிக்கு நம்மள விரட்டி விரட்டி அடிக்குது. ஆனா, வெல்லம் திங்கிறது ஒருத்தன், விரல் சூப்புறது ஒருத்தன்கிற கதையா, ஆக்கிரமிச்சவன், அநியாயம் செஞ்சவன், அனுபவிச்சவன் எல்லாம் சுகமா செட்டில் ஆகிட்டானுங்க. ஆனா, ‘வெந்ததைத் திம்போம்... விதி வந்தா சாவோம்’னு தன்னோட வேலையை மட்டும் பார்த்திட்டிருந்த விவசாயிங்கதான் இன்னிக்கு திண்டாட்டத்துல இருக்கோம்.

மாரடைப்பு, தற்கொலைனு விவசாயிங்களோட சாவு ஆரம்பிச்சிருக்கு. இதைத் தடுத்து நிறுத்தறதுக்கு, உடனடியா செய்யவேண்டிய வேலைகள் என்னன்னு பார்க்கிறதவிட, இதை ஊதி பெருசாக்குற வேலைதான் ரொம்பத் தீவிரமா இருக்கு. மேற்கொண்டு சாவு நடக்காம தடுக்கிறதுதான் முக்கியம். ஒவ்வொரு தலைவரும் தங்களோட கட்சி, சங்கம், அமைப்புனு அந்தந்த பகுதிகள்ல இருக்கிற கிராம பிரதிநிதிகளை உசுப்பிவிட்டு, உள்ளூர் விவசாயிகளைச் சந்திச்சி, முதல்ல மனதைரியம் கொடுக்க வைக்கணும். அடுத்ததா, என்ன பிரச்னைனு கேட்டு அதைப் பத்தி உள்ளூர் அதிகாரிகள் ஆரம்பிச்சி அடுத்தடுத்தக்கட்ட அதிகாரிகள் வரைக்கும் கொண்டு போய்ச் சேர்த்து, எந்த மாதிரியெல்லாம் உதவ முடியும்னு பார்க்கணும். இந்தந்தப் பிரச்னைகள் இருக்குனு அமைச்சர்களுக்குத் தெரியப்படுத்தறதோட, டி.வி., பத்திரிகைனு தெரியப்படுத்திச் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு உதவிகள் கிடைக்கிறதுக்கு வழி செய்யணும். இதுதான் இப்போதைக்கு நாம செய்யவேண்டிய உடனடி நடவடிக்கை.

இந்தக் கொடுமைக்கு நடுவுலேயும் நம்பிக்கையூட்டுற விஷயங்கள் நடந்துகிட்டிருக்கிறத கொஞ்சம் கவனிச்சுப் பார்க்கணும். அதாவது, இயற்கை விவசாயத்தைத்தான் சொல்றேன். இந்த இதழ் பசுமை விகடன்லயே கூட பாரம்பர்ய நெல் ரகங்கள்ல 52 ரகங்களை அதே டெல்டாவுல, திருவாரூர் பக்கத்துல ஒரு விவசாயி விளைவிச்சிருக்கிற செய்தி வெளியாகியிருக்கு. வசதி இருக்கிறதால போர் தண்ணியைப் பாய்ச்சிதான் விவசாயம் பண்ணிக்கிட்டிருக்கார். ஆனா, முழுக்க முழுக்க இயற்கை முறையில விளைவிக்கிறார். இதுக்காகக் கொஞ்சம் பணத்தை இவர் செலவழிச்சிருப்பார். இன்னும்கூட செலவைக் குறைச்சி ஜீரோ பட்ஜெட்லயும் பயிர் வைக்க முடியும். இதுக்கெல்லாம் தேவை நம்பிக்கை. அதாவது முதல்ல இயற்கை மேல நம்பிக்கை வைக்கணும்.

மானாவாரி விவசாயிங்களுக்கு ரொம்ப நம்பிக்கை உண்டு. ஏதோ ஒரு தைரியத்துலதான் ஒவ்வொரு வருஷமும் அவங்களோட வெள்ளாமை ஆரம்பிக்கும். மழை வரும்னு நம்பியே உழுது வைப்பாங்க... ஒரு மழை வந்ததும் கண்டிப்பா இன்னொரு மழை வரும்னு விதைப்பாங்க, அடுத்த மழை வரும்னு நம்பி களை எடுப்பாங்க. பத்துக்கு ஒரு தடவை அவங்க நம்பிக்கை பொய்ச்சுப் போகும். ஆனா, மனச தேத்திக்கிட்டு அடுத்த வெள்ளாமைக்குத் தயாராயிடுவாங்க. இப்ப டெல்டா பகுதியும் கிட்டத்தட்ட மானாவாரி கதையாத்தான் மாறிப்போயிருக்கு. அதனால இப்போதைக்கு அவங்களோட முதல் தேவையே... நம்பிக்கைதான். இந்த நம்பிக்கையைத்தான் நம்ம விவசாயிங்க மனசுல இந்த அதிகாரிகளும், சங்கத் தலைவர்களும் முதல்ல விதைக்கணும்.

“ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!”


(நன்றி: கவிஞர் பா.விஜய்)

இப்படிக்கு 
ஜூனியர் கோவணாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism