மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: உயிர்வேலிக்கு ஏற்ற சூடான் முள்!

நீங்கள் கேட்டவை: உயிர்வேலிக்கு ஏற்ற சூடான் முள்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: உயிர்வேலிக்கு ஏற்ற சூடான் முள்!

புறா பாண்டி

எங்கள் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். நிலத்தைச் சுற்றிலும் உயிர்வேலி அமைக்க விரும்புகிறோம். இதற்கு ‘சூடான் முள்’ என்ற ஒருவகை செடியிருப்பதாகக் கேள்விப்பட்டோம். இதைப் பற்றி விவரம் சொல்லவும்...?”

நீங்கள் கேட்டவை: உயிர்வேலிக்கு ஏற்ற சூடான் முள்!

கே.சி.பரமேஸ்வரி, கள்ளக்குறிச்சி.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகில் உள்ள ‘டி. களத்தூர்’ பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி மோகனகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.

‘‘இளம் வயதிலிருந்தே எனக்கு அரிய வகைப் பயிர் மற்றும் மூலிகைச் செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் அதிகம். அந்த தேடுதல் மூலம்தான், ‘சூடான் முள்’ என்று சொல்லப்படும் ‘மெல்லிபேரா’ பற்றித் தெரிந்துகொண்டேன். பருவமழை தொடங்கும் முன் விதைகளை விதைத்துவிட்டால் போதும். கிடுகிடுவென வளர்ந்து வந்துவிடும். ஆடுகள், இதன் இலைகளைத்  தின்னும் என்றாலும், செடிகளில் உள்ள முள்ளைத் தாண்டி நிலத்துக்குள் வர முடியாது. என்னுடைய அனுபவத்தில் சூடான் முள் போல, ஒரு உயிர்வேலியைப் பார்த்ததில்லை. இந்த முள்ளை அப்படியே விட்டுவிட்டால், வளர்ந்து மரமாகிவிடும். ஆகையால் நமக்குத் தேவையான உயரத்தில் கவாத்து செய்துவிட வேண்டும். மானாவாரி நிலங்களுக்கு இந்த உயிர்வேலி பாதுகாப்பானது. செலவும் குறைவு. இதன் விதை, கிலோ 1,000 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

மானாவாரி நிலங்கள் என்றால், விதைப்பதைக் காட்டிலும் கன்றுகளாக வளர்த்து நடவு செய்வது நல்லது. சில நர்சரிகளில் இதன் கன்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன. மரப்பயிர்கள் சாகுபடி செய்யும் தோட்டங்களில், சூடான் முள்ளை உயிர்வேலியாக அமைத்து, பாதுகாப்பு அரணை உருவாக்கலாம். விலை உயர்ந்த சந்தனம், தேக்கு போன்ற மரங்கள் ஓரளவு வளர்ந்த பிறகு, இந்த முள்ளை உயிர்வேலியாகப் போட்டால், ஆடு, மாடுகள் உள்ளே நுழைவது தொடங்கி திருடர்கள் பயம் வரை இருக்காது. ஜே.சி.பி., பொக்லைன் போன்ற வாகனங்களை வைத்து, முள்ளை அகற்றிவிட்டுத்தான் மரங்களை அறுவடை செய்ய முடியும். அந்த அளவுக்குச் சூடான் முள் வளர்ந்து நின்று பாதுகாக்கும்.

நீங்கள் கேட்டவை: உயிர்வேலிக்கு ஏற்ற சூடான் முள்!

சில ஆண்டுகளுக்கு முன், ‘பசுமை விகடன்’ இதழில் இந்தச் சூடான் முள் குறித்த தகவல்களைச் சொல்லியிருந்தேன். அதன் பிறகு சூடான் முள் மூலம் உயிர்வேலி அமைத்தவர்களின் தோட்டம், இயற்கையான பாதுகாப்புக் கோட்டையாக மாற்றியுள்ளது. ஒருமுறை செலவு செய்தால், வாழ்நாள் முழுக்க பலன் கொடுக்கக்கூடியது.’’

தொடர்புக்கு, செல்போன்: 98944 01680.

‘‘சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் கைநிறைய சம்பளம் வாங்குகிறேன். ஆனாலும், கிராமத்துக்குச் சென்று விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்துக்கொண்டே இருக்கிறது.  இதற்கு ஆலோசனை சொல்லுங்கள்...?”

ஆர்.நவீன்குமார், சென்னை.

தெலங்கானாவைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி நாகரத்தின நாயுடு பதில் சொல்கிறார்.

‘‘என்னுடைய பண்ணை குறித்த தகவல்கள் தொடர்ந்து ஊடகங்களில் வெளி வந்த வண்ணம் உள்ளன. சிலசமயம் இதைப் படித்துவிட்டு, என் பண்ணைக்கு விவசாயிகள் வருவதைவிட, நகரத்தில் உள்ள இளைஞர்கள்தான் அதிகமாக வருகிறார்கள். மாதம் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளைஞர்களும்கூட, கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்ய வேண்டும்  என்று ஆவலுடன் வருகிறார்கள். சிலர் நிலத்தை வாங்கிய பிறகும் வருகிறார்கள். இளைஞர்கள் மத்தியில் விவசாயத்துக்கான வரவேற்பு நன்றாகவே உள்ளது. ஆனால், விவசாயம் என்பது கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொள்ளும் கலை. என்னைத் தேடி வரும் இளைஞர்களுக்குப் பண்ணையைச் சுற்றிக் காட்டிவிட்டு, நல்ல உணவு கொடுத்து உபசரித்துவிட்டு, ‘தம்பி, உங்களை என் மகன் போல நினைத்து இதைச் சொல்கிறேன். எக்காரணம் கொண்டும் திடீரென வேலையை விட்டுவிட்டு வர வேண்டாம். முதலில் உங்கள் நிலத்தில் வேலைக்கு ஆட்கள் வைத்து, விவசாயம் செய்யுங்கள். இந்தச் சமயத்தில் விவசாயத்தில் உள்ள அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். இன்றைக்கு நீங்கள் மாதம், 50 ஆயிரம் சம்பளம் பெறுபவர் என்றால், விவசாயத்தில் மாதம் ரூ. 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கத் தொடங்கிய பிறகு, நகரத்தில் உள்ள வேலையை விட்டுட்டு விவசாயத்துக்கு வந்துவிடலாம்.

நீங்கள் கேட்டவை: உயிர்வேலிக்கு ஏற்ற சூடான் முள்!

விவசாயத்திலிருந்து வருமானம் எடுக்கும் நுட்பம் அறிந்து கொண்டால், உங்களைப் போன்ற படித்த இளைஞர்கள் பல சாதனைகளைச் செய்ய முடியும். எனவே, விவசாயத்தைப் பற்றி நன்றாக அறிந்து, தெரிந்துகொண்டு இறங்குங்கள்’ என்றுதான் ஆலோசனை சொல்லி வருகிறேன். இப்படி என்னிடம் ஆலோசனை கேட்டுச் சென்ற இளைஞர்கள் தற்போது, நகரத்தில் வேலை செய்தாலும் சனி, ஞாயிறு என வார விடுமுறையில் கிராமத்துக்கு வந்து விவசாயிகளாக (Weekend Farmers) மாறி இருப்பவர்களும் உண்டு. எனவே, இதையேத்தான் உங்களுக்கும் சொல்கிறேன். அவரசரப்பட்டு வர வேண்டாம். திட்டமிட்டு இறங்குங்கள். இயற்கை விவசாயத்தில் வெற்றி பெற வாழ்த்துகள்.’’

தொடர்புக்கு, செல்போன்: 094404 24463

நீங்கள் கேட்டவை: உயிர்வேலிக்கு ஏற்ற சூடான் முள்!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.