Published:Updated:

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர்

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர்
பிரீமியம் ஸ்டோரி
News
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர்

சந்தைஅனந்துதொகுப்பு: க.சரவணன் - படங்கள்: வீ.சிவக்குமார்

‘ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்
காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி
கடுதாசி போட்டானாம் வெள்ளக்காரன்’


ங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்டபோது நாட்டுப்புற மக்கள், அவர்களின் ஆட்சியை விமர்சனம் செய்து பாடிய பாடல் இது. இன்றுள்ள சூழ்நிலைக்கும் இந்த வரிகள் பொருத்தமாகவே உள்ளன.

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர்


கடை வீதிக்குச் சென்று காய்கறிகள், மளிகைப் பொருள்கள் வாங்குகிறோம். ‘அவற்றை உற்பத்தி செய்தது யார்... எப்படி இந்தக் கடைகளுக்கு வந்து சேர்ந்தன... அவற்றை வாங்க நாம் கொடுக்கும் பணத்தில், அவற்றை உற்பத்தி செய்பவருக்கான லாபம் எவ்வளவு... நாம் வாங்கும் பொருளுக்கான விலை நியாயமானதா?’ என்றெல்லாம் எப்போதாவது யோசித்ததுண்டா என்று கேட்டால் ‘இல்லை’ என்ற பதிலைத்தான் பெரும்பாலானோர் சொல்வார்கள்.

மண்ணோடும் இயற்கையோடும் மல்லுக்கட்டி பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிக்கு, அதனால் லாபமில்லை. அவற்றை வாங்கிப் பயன்படுத்தும் நுகர்வோருக்கும் நியாயமான விலையில் பொருள்கள் கிடைப்பதில்லை. நடுவிலிருக்கும் வேறு சிலர்தான் கொழுத்த லாபமடைகிறார்கள். இதுதான் மறுக்க முடியாத உண்மை. உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் நேரடித் தொடர்பில்லாத காரணத்தால்தான் இந்த அவலநிலை. இதுதான் இன்றைய சூழ்நிலையில் சந்தைகளின் கட்டமைப்பு. அதனால்தான், அதில் பல முறைகேடுகள்.

ஒரு குழுமமோ, ஒரு நபரோ சந்தையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்தால், இதுபோல பல தொல்லைகள் உண்டாகவே செய்யும். சில பல ஆண்டுகளுக்கு முன், அருகில் உள்ள கடைகள், உள்ளூரில் கூடும் சந்தைகள் ஆகியவை பொருள்கள் வாங்குவதற்கான இடமாக இருந்தன. அதனால், அந்தந்த ஊர் மக்களின் வாழ்வாதாரத்தையும் கிராமப் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடிந்தது.

தொலைதூரத்தில் இருந்து பொருட்கள் வந்தால் போக்குவரத்துச் செலவு, அவற்றைக் கெடாமல் பாதுகாப்பதற்கான செலவு எனப் பொருளின் விலை அதிகரிக்கும். தவிர, அவற்றின் காலாவதி தேதிக்குள் விற்பனை செய்து முடிக்காவிட்டால் ஏற்படக்கூடிய இழப்புகளைச் சமாளிக்கும் வகையில், அப்பொருள்களின் விலையைக் கூட்டி வைத்துதான் விற்பனை செய்வர். அதோடு, உற்பத்தியாளர் வெகுதூரத்தில் நடக்கும் விற்பனையை நேரடியாகக் கவனிக்க முடியாத சூழ்நிலையால், உற்பத்தியைத் தவிர வணிகம் சார்ந்த மற்ற அனைத்து விஷயங்களுமே, வணிகர்கள் மற்றும் இடைத்தரகர்களின் கைகளுக்குச் சென்றுவிடும். அங்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளால், வணிகத்துக்குள் வியாபாரத் தந்திரம் மற்றும் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்ற பேராசை உருவெடுப்பதால்தான் முறைகேடுகள் தொடங்குகின்றன. அதனால்தான் உற்பத்தியாளர், சந்தையை நம்பியே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர்

விவசாயியிடமிருந்து அடி மாட்டு விலைக்கு வாங்கப்படும் பொருள், கொஞ்சமாக மதிப்புக் கூட்டப்பட்டு அதே விவசாயிக்கே யானை விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால்தான் விவசாயிகள் நலிவடையத் தொடங்கினர். போதாக்குறைக்குப் பசுமைப் புரட்சி வேறு.

முதன்முதலில் நமது சந்தையை மாற்றியமைத்தது ஆங்கிலேயர்தான். இந்தியாவில், அவர்களது பொருளாதாரம் நிமிரத் தொடங்கி நூற்பாலைத் தொழிற்சாலைகள் வளர்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்குச் சாயப் பொருள்களின் தேவை ஏற்பட்டது. அப்போது இந்தியாவில் அவுரி (நீலம்-Indigo) விளைவித்த விவசாயிகளிடம் கெடுபிடிகளைக் காட்ட ஆரம்பித்தனர். அவர்கள் கொடுக்கும் விதைகள், அவர்கள் சொல்லும் முறைகளில் சாகுபடி செய்யக் கட்டாயப் படுத்தப்பட்டனர், நமது விவசாயிகள். இங்கு அவுரியை வாங்கி அவர்களின் நாட்டுக்கு அனுப்ப ஆரம்பித்தனர். அதனால், நமது துணி ஏற்றுமதி குறைந்தது. ஒரு கட்டத்தில், அவர்களின் நாட்டிலேயே சாய இடுபொருள்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்ததால், இந்தியாவில் அவுரி கொள்முதலை நிறுத்தினர். இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து துன்பத்துக்கு ஆளாகினர்.

இதே கதைதான், பாரம்பர்ய பருத்திக்கும் நிகழ்ந்தது. கைத்தறிக்கு ஏற்ற குட்டைரகப் பருத்தி (Short Staple) அழிக்கப்பட்டு, ஆங்கிலேயரின் தொழிற்சாலைகளுக்கு ஏற்ற நீள ரகங்கள் (Long Staple) முன்னிறுத்தப்பட்டன. விவசாயிகளைக் கொடுமைகளுக்குள்ளாக்கி நீள ரகப் பருத்தியை உற்பத்தி செய்யவைத்தனர். ஆரம்பத்தில் ஆங்கிலேய சந்தைக்கு உற்பத்தி செய்த விவசாயிகள், அப்படியே அவர்களது துணிகளுக்கும் பருத்தி விதைகளுக்கும் நுகர்வோரானார்கள்.

இப்படித்தான் சந்தை ஒருதலைப்பட்சமாக, சூழ்ச்சிகளால் சுழல ஆரம்பித்தது. வல்லவர்கள், பெரிய நிறுவனத்தைக் கொண்ட பண முதலைகள் போன்றோர் வசம் சென்றது சந்தை. அதன் பிறகு இன்று வரை விவசாயிகளின் பக்கம் திரும்பவே இல்லை. நம் விவசாயிகள், ஓரினப் பயிருக்கும் பணப்பயிருக்கும் அடிமையானார்கள். அவற்றுக்கான விதை மற்றும் இடுபொருள்களுக்கு அடுத்தவரை சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. அதோடு விளைபொருள்களையும் ஓரிருவருக்கே விற்கும் நிலைமையும் உருவானது. அந்த ஓரிருவர் விலையை நிர்ணயிக்க ஆரம்பித்தனர்.

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர்

இப்படித்தான் விவசாயிகளின் பொருளாதாரம் நசிந்தது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் விவசாயிகளுக்கு வேளாண்மையில் நஷ்டம் ஒருபுறம். இன்னொரு புறம், தனது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துக்கும் சந்தையை நாடவேண்டிய சூழ்நிலை. இப்படி அழிந்ததில் விவசாயிகளின் பொருளாதாரம் மட்டுமல்ல; பல்லுயிர் பெருக்கமும், தற்சார்பாக வாழக்கூடிய விவசாயிகளின் திறமையும்தாம்.

இன்று எந்தப் பொருளை (சந்தையை) எடுத்தாலும் அதில், பெரும்பகுதி (90%) இரண்டு, மூன்று கம்பெனிகளின் கையில் மட்டுமே இருக்கிறது. அது விமான உற்பத்தியாக இருந்தாலும் சரி, தீங்கானது என்று சொல்லப்படும் நூடுல்ஸ், குளிர்பானங்கள் உற்பத்தியாக இருந்தாலும் சரி... ரியல் எஸ்டேட், கணினி, மருந்துகள், விதைகள் என எவையாக இருந்தாலும் சரி, அவற்றின் சந்தையை இரண்டு, மூன்று கம்பெனிகள்தாம் கட்டுப்படுத்துகின்றன.

இப்படி ஒரு சிலர் மட்டுமே கொழுத்த லாபமடைந்து, பெரும் பணம் சேர்க்க... பெரும்பான்மையானவர்கள் கஷ்டத்திலும் ஏழ்மையிலும் வாடுகிறார்கள். இது எப்படிச் சரியான சந்தையாக இருக்க முடியும். இந்தச் சந்தை எப்படிப் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும்?

லாப வெறியால் கட்டமைக்கப்பட்டுள்ள இன்றைய வியாபாரத்தில், நியாய விலையையும் சீரான பரவலாக்கப்பட்ட அனைவருக்குமான பொருளாதாரத்தை மீட்டெடுப்பது அவசியம். இதில் விவசாயிகள் செய்ய வேண்டிய விஷயங்கள், விவசாயியையும் நுகர்வோரையும் நேரடியாக இணைக்கும் நியாயமான சந்தைகள் போன்றவை குறித்து தொடர்ந்து பேசுவோம்.

- விரிவடையும்.

இவரைப் பற்றி...

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர்

அனந்து, படித்தது பொறியியல். பல ஆண்டுகள் வெளிநாட்டில் கை நிறைய சம்பளம் வாங்கினார். ஆனாலும், இவருக்கு இயற்கை மீதுதான் தீராக்காதல் வளர்ந்துகொண்டே இருந்தது. அதனால், இயற்கையின் மீது கவனம் செலுத்த, இந்தியாவுக்கு திரும்பினார். கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை வேளாண் சந்தைகள் அமைப்பது, அவற்றைத் திறம்பட செயல்படுத்துவது குறித்தான ஆலோசனைகளை வழங்கிவருகிறார்.

சென்னையில், ‘ரீஸ்டோர்’ இயற்கை அங்காடி மற்றும் ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட் (Organic Farmers Market-OFM) என்ற தொடர் அங்காடிகளை உருவாக்கி, அவற்றை வழிநடத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகிறார்.

நாட்டுப்பருத்தி பயிரிடும் மானாவாரி இயற்கை விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், இயற்கைச் சாயமிடுபவர்கள் போன்றோரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் ‘துலா’ என்ற பருத்தி ஆடையகத்தையும் தன் நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறார். பாதுகாப்பான உணவுக்காகவும் மரபணு மாற்று விதைகளுக்கு எதிராகவும் பல ஆண்டுகளாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்.