Published:Updated:

சுழற்சி முறையில் காய்கறி... - 1 ஏக்கர் நிலத்தில் ரூ5 லட்சம் லாபம்!

சுழற்சி முறையில் காய்கறி... - 1 ஏக்கர் நிலத்தில் ரூ5 லட்சம் லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
சுழற்சி முறையில் காய்கறி... - 1 ஏக்கர் நிலத்தில் ரூ5 லட்சம் லாபம்!

மகசூல்ஜி.பழனிச்சாமி - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

சுழற்சி முறையில் காய்கறி... - 1 ஏக்கர் நிலத்தில் ரூ5 லட்சம் லாபம்!

மகசூல்ஜி.பழனிச்சாமி - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

Published:Updated:
சுழற்சி முறையில் காய்கறி... - 1 ஏக்கர் நிலத்தில் ரூ5 லட்சம் லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
சுழற்சி முறையில் காய்கறி... - 1 ஏக்கர் நிலத்தில் ரூ5 லட்சம் லாபம்!

க்கர் கணக்கில் நிலம் இல்லை; கேணி நிறைய தண்ணீர் இல்லை; கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர வேலையாட்கள் இல்லை.... ஆனாலும், ஆழ்துளைக் கிணறுகளையும் சொட்டுநீர்ப் பாசனத்தையும் நம்பி சுழற்சி முறையில் காய்கறி சாகுபடி செய்து, தினமும் கணிசமான வருமானம் ஈட்டி வருகிறார், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கமலேஸ்வரி தங்கராசு.

சுழற்சி முறையில் காய்கறி... - 1 ஏக்கர் நிலத்தில் ரூ5 லட்சம் லாபம்!

பொங்கலூர் அடுத்துள்ள மலைப்பாளையம் கிராமத்தில்தான் கமலேஸ்வரியின் தோட்டம் உள்ளது. பெண் விவசாயிகள் சிறப்பிதழுக்காக, ஒரு காலை நேரத்தில் முள்ளங்கிப் வயலில் வேலை செய்துகொண்டிருந்த கமலேஸ்வரியைச் சந்தித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எங்களுக்குப் பூர்விகமே இந்த ஊருதான். மொத்தமே ரெண்டு ஏக்கர் நெலம்தான் இருக்கு. மஞ்சள், கரும்பு, வாழைனு வருஷ வருமானம் கொடுக்கிற வெள்ளாமை வெக்கிற அளவுக்குத் தண்ணீர் வசதி இல்லீங்க. எங்கள மாதிரி சிறு, குறு விவசாயிங்களுக்குச் சீதனமே காய்கறி விவசாயம்தானுங்க. கூப்பிடும் தூரத்துல திருப்பூர் இருக்கு. லட்சக்கணக்கான பேர் வசிக்கிற தொழில் நகரத்துல காய்கறிக்கு என்னிக்குமே கிராக்கிதான். அதனால திருப்பூரை நம்பித்தான் எங்க பொழப்பு ஓடுது. ஆரம்பத்துல தினசரி மார்க்கெட்லதான் கொண்டு போய் காய்கறிகளை வித்தோம். அங்கே நூத்துக்குப் பத்து ரூபா கமிஷன் எடுத்துக்குவாங்க. இப்போ, உழவர் சந்தைக்குக் கொண்டுபோக ஆரம்பிச்சிட்டதால கமிஷன் இல்லீங்க. இடைத்தரகு இல்லாம காய்கறிகளை ஏவாரம் பண்றோம்” என்ற கமலேஸ்வரி காய்கறி தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார்.

“ரெண்டு ஏக்கர் முழுசும் காய்கறிதான் போடுறோம். முப்பது முப்பது சென்ட்டா பிரிச்சு காய்கறி விதைக்கிறோம். வெண்டை, தக்காளி, முள்ளங்கி, பீட்ரூட், பீன்ஸ், கீரைன்னு சுழற்சி முறையில தினந்தோறும் பறிப்புக்கு வர்ற மாதிரி கணக்குப் பண்ணி விதைச்சிடுவோம். எங்க பகுதி சீதோஷ்ண நிலைக்கு பீட்ரூட், பீன்ஸ் எல்லாம் நல்லாவே விளையுது. விதைப்புல இருந்து பறிப்பு வரைக்கும் எந்த வேலைக்கும் ஆள் வெக்கிறதில்லீங்க. களை எடுக்கிறது, உரம் வெக்கிறது, தண்ணீர் பாய்ச்சுறது, பறிக்கிறதுன்னு எல்லா வேலையையும் நானே செஞ்சுடுவேன். பறிச்ச காய்கறிகளை மூட்டைப் பிடிச்சு எடுத்துக்கிட்டு, காலையில மூணு மணிக்கெல்லாம் உழவர் சந்தைக்குக் கிளம்பிடுவார், என் வீட்டுக்காரர். நேரம் கிடைக்கிறப்போ, என்கூட ஒத்தாசையா வயல்ல வேலையும் செய்வார். முன்னாடி, கேணியில இருந்து தண்ணீர் எடுத்து வாய்க்கால்ல நேரடிப் பாசனம்தான் செஞ்சோம். அதுல தண்ணீர் சேதாரம் அதிகமா இருந்துச்சு. அதில்லாம அந்தத் தண்ணியை வெச்சு அரை ஏக்கர்லதான் வெள்ளாமை வெக்க முடிஞ்சது. அதுக்கப்புறம்தான் சொட்டுநீர்ப் பாசனம் போட்டோமுங்க. அதனால, ரெண்டு ஏக்கர்லயும் வெள்ளாமை வெக்க முடியுது. இப்போ 30 சென்ட் நிலத்துல முள்ளங்கி அறுவடையில் இருக்கு. அடுத்த 30 சென்ட் நிலத்துல இருக்கிற பீன்ஸ், அடுத்த வாரம் அறுவடைக்கு வரும். இதேமாதிரி மணத்தக்காளி கீரை 30 சென்ட்ல இருக்கு. அதுவும் பதினஞ்சு நாள்ல அறுவடைக்கு வந்துடும். அடுத்த போகத்துக்கு 30 சென்ட்ல முள்ளங்கி விதைச்சிருக்கோம். மீதி 80 சென்ட் நிலம் விதைப்புக்கு தயாரா இருக்கு. வெண்டையும் பீன்ஸும் விதைக்கப்போறோம்” என்று கமலேஸ்வரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே உழவர் சந்தையில் வியாபாரத்தை முடித்துவிட்டு தங்கராசுவும் வந்து சேர்ந்தார்.

சுழற்சி முறையில் காய்கறி... - 1 ஏக்கர் நிலத்தில் ரூ5 லட்சம் லாபம்!

நம்மிடம் பேசிய தங்கராசு, “நான் தீவிர ‘பசுமை விகடன்’ வாசகனுங்க. ஆரம்பம் தொட்டு இப்போ வரை அத்தனை புத்தகங்களையும் வெச்சிருக்கேனுங்க. முழுக்க இயற்கை விவசாயம்தான் செய்றோம். கோழி எரு, பஞ்சகவ்யாவெல்லாம் வாங்கித்தான் பயன் படுத்துறோம். இதோட, கடையில விக்கிற பயோ உரத்தையும் பயன் படுத்துறோம். சுழற்சி முறையில வெள்ளாமை வெக்கிறதால வெண்டை, முள்ளங்கி, பீன்ஸ், தக்காளி, அவரைன்னு சீசனுக்குத் தக்கபடி காய்கறிகள் அறுவடையில இருந்துக்கிட்டே இருக்கும். அப்பப்போ ஏதாவது ஒரு வகைக் கீரையும் இருக்கும். ஒரு நாளைக்கு 120 கிலோவுல இருந்து 150 கிலோ வரைக்கும் காய் பறிப்போம். எல்லாத்தையுமே உழவர் சந்தையிலதான் விற்பனை செய்றோம். வருஷத்துக்கு 200 நாள்களுக்கு மேல உழவர் சந்தைக்குக் காய் கொண்டு போயிடுவேன். வெண்டைக்காய், கிலோ 20 ரூபாய்ல இருந்து 30 ரூபாய் வரை விற்பனையாகும். பீன்ஸ், கிலோ 30 ரூபாய்ல இருந்து 50 ரூபாய் வரை விற்பனையாகும். தக்காளி, கிலோ 5 ரூபாய்ல இருந்து 20 ரூபாய் வரை விற்பனையாகும். அவரை, ஒரு கிலோ 20 ரூபாய்ல இருந்து 50 ரூபாய் வரை விற்பனையாகும்.

அந்தக்கணக்குல பார்த்தா, காய் கொண்டு போற அன்னைக்கெல்லாம் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்கும். 200 நாள்களுக்குன்னு கணக்கு பண்ணுனா, 6 லட்சம் ரூபாய் வருமானம் கிடைச்சிடும். காய்க் கொண்டு போற வேன் வாடகை, பராமரிப்பு, விதைன்னு வருஷத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு போக, 2 ஏக்கர் நிலத்துல இருந்து வருஷத்துக்கு 5 லட்சம் ரூபாய் லாபம் கிடைச்சிடும். சின்ன அளவுல நெலம் இருக்கிறதால நாங்களே வேலை செஞ்சுக்குறோம். அதனால, வேலையாள் செலவு இல்லை. எப்பவாவது காய்கறிக்கு விலை இறங்கிப்போனாலும் பெரிய நஷ்டம் வராது. காய்கறிக்கு அதிகத் தேவை இருக்கிறதால கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டத்துல இருக்கிற பெரிய விவசாயிகள்கூட அரை ஏக்கர், முக்கால் ஏக்கர்னு காய்கறி சாகுபடி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க” என்றார் தங்கராசு.

சுழற்சி முறையில் காய்கறி... - 1 ஏக்கர் நிலத்தில் ரூ5 லட்சம் லாபம்!

நிறைவாகப் பேசிய கமலேஸ்வரி, “இப்போ இருக்கிற தண்ணி பத்தாக்குறைக்கு யாரும் ஏக்கர் கணக்குல எல்லாம் வெள்ளாமை வெக்க முடியாதுங்க. கைக்கடக்கமா ரெண்டு, மூணு ஏக்கர்ல இருக்கிற தண்ணியை வெச்சு, முறையா காய்கறி வெள்ளாமை செஞ்சோம்னா கண்டிப்பா தினசரி வருமானம் பாத்துட முடியும். அதுக்கு நாங்களே சாட்சி” என்று சந்தோஷமாகச் சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, தங்கராசு, செல்போன்: 94427 36916.

அனைத்துக் காய்கறிகளுக்கும் ஒரே பராமரிப்புதான்

காய்கறி சாகுபடி குறித்து கமலேஸ்வரி சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

இயற்கை வேளாண்மையில் அனைத்துக் காய்களுக்குமே பராமரிப்பு ஒன்றுதான். ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழுது 8 டன் தொழுவுரத்தைக் கொட்டி இறைக்க வேண்டும். பிறகு, ஒரு உழவு செய்து நிலத்தின் அமைப்புக்குத் தகுந்த அளவில் பாத்திகள் எடுத்துக்கொள்ள வேண்டும். சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துத் தேவைப்படும் விதையை ஊன்ற வேண்டும். பொதுவாகக் காய்கறிப் பயிர்களுக்கு இரண்டு அடி இடைவெளி இருக்குமாறு விதைக்க வேண்டும். விதைத்த அன்று நீர்ப் பாய்ச்சி, மூன்றாம் நாள் அடுத்தப் பாசனம் செய்ய வேண்டும். 20 மற்றும் 30-ம் நாள்களில் களை எடுக்க வேண்டும். 25-ம் நாள் தழை, மணி, சாம்பல் சத்து அடங்கிய பயோ உரத்தை பரிந்துரைக்கப்படும் அளவு, சொட்டுநீரில் கலந்து விட வேண்டும். 15 மற்றும் 35-ம் நாள்களில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா எனக் கலந்து தெளிக்க வேண்டும். வேறு பராமரிப்புகள் தேவைப்படாது. பூச்சிகள் தென்பட்டால் பரிந்துரைக்கப்பட்ட பயோ பூச்சி விரட்டிகளைத் தெளிக்க வேண்டும். இயற்கை முறை வேளாண்மையில் பெரும்பாலும் பூச்சிகள் தாக்குவதில்லை. வளர் பருவத்தில் தெளிக்கப்படும் பஞ்சகவ்யா பூச்சிவிரட்டியாகவும் செயல்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism