மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: ‘‘ஏரியில் வண்டல் மண் அள்ள என்ன செய்ய வேண்டும்?’’

நீங்கள் கேட்டவை:  ‘‘ஏரியில் வண்டல் மண் அள்ள என்ன செய்ய வேண்டும்?’’
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: ‘‘ஏரியில் வண்டல் மண் அள்ள என்ன செய்ய வேண்டும்?’’

புறா பாண்டி

‘‘எங்கள் நிலத்தை வளமாக்க, ஏரியில் உள்ள வண்டல் மண்ணை எடுத்துப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகக் கேள்விப்பட்டோம். இதன் விவரங்களைச் சொல்லுங்கள்?’’

வே.நந்தகோபால், அன்னங்கால்.

நீங்கள் கேட்டவை:  ‘‘ஏரியில் வண்டல் மண் அள்ள என்ன செய்ய வேண்டும்?’’

சூழலியலாளர் ரமேஷ் கருப்பையா  பதில் சொல்கிறார்.

‘‘தமிழ்நாடு அரசு 1959-ம் ஆண்டுச் சிறு கனிம விதி சட்டம் உட்பிரிவு 6-ன் படி ஏரி மற்றும் குளங்கள், ஆறுகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் அனுமதியின்றி எடுத்துப் பயன்படுத்தலாம். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட அரசாணையின்படி 10 யூனிட்டுக்கு மேல் விவசாயிகள் மண்ணை அள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை ரத்துச் செய்ய வேண்டும். விவசாய நிலங்களில் மண்வளம் காக்க அனைத்து ஏரி, குளங்களிலும் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்தக் கண்டராதித்த சோழன் பெரிய ஏரியில் மக்கள் சேவை இயக்கத்தின் சார்பில் விவசாயிகள் வண்டல் மண் அள்ளும் போராட்டம் நடத்தினர். மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பல விவசாய அமைப்புகள், வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி வேண்டும் என தொடர்ந்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வந்தன.

நீங்கள் கேட்டவை:  ‘‘ஏரியில் வண்டல் மண் அள்ள என்ன செய்ய வேண்டும்?’’

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு கனிமவளச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவந்தது தமிழக அரசு. ஒரு தனிநபர் விவசாயத் தேவைக்காக, 30 கனமீட்டர் வரை இலவசமாக வண்டல் எடுத்துக்கொள்ளக் கட்டணம் இல்லை. அதற்கு மேல் கட்டணம் செலுத்தி, வண்டல் எடுத்துக்கொள்ளலாம் என விதிகள் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் தான் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரிடம் கோரிக்கை வைத்தோம். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் வண்டல் மண்ணை அள்ள அனுமதி அளித்தார்.

நீங்கள் கேட்டவை:  ‘‘ஏரியில் வண்டல் மண் அள்ள என்ன செய்ய வேண்டும்?’’



இதனை அடுத்து புதுக்குறிச்சி ஏரியில் 300 கனமீட்டர் வரை வண்டல் எடுத்துள்ளனர் அந்தப் பகுதி விவசாயிகள். ஒவ்வொரு விவசாயியும் 30 கனமீட்டர் அளவுள்ள வண்டலைக் கட்டணம் இல்லாமலும், அதற்கு மேல் ஒரு கனமீட்டருக்கு 25 ரூபாய் வீதம் கட்டணம் (இந்த கட்டணத்தின் அளவு மாவட்டத்துக்கு மாவட்டம் மாறுபடும்) செலுத்தியும் எடுத்துள்ளனர்.

நீங்கள் கேட்டவை:  ‘‘ஏரியில் வண்டல் மண் அள்ள என்ன செய்ய வேண்டும்?’’

மேலும், மாதம்  தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும் தங்கள் பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், ஊருணிகளில் இருந்து வண்டல் எடுத்துப் பலன் பெற முடியும். வண்டல் எடுக்க விருப்பப்படும் விவசாயி, முதல்கட்டமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், பொதுப்பணித்துறை அல்லது ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் அடங்கிய குழு, சம்பந்தப்பட்ட நீர்நிலையில் எந்தப் பகுதியில் எவ்வளவு வண்டல் எடுக்கலாம் என ஆய்வுசெய்து அனுமதி அளிப்பார்கள். விவசாயி மனு அளித்த 30 நாள்களுக்குள் நடவடிக்கை எடுப்பார்கள்.

வண்டல் மண் அள்ளுவது குறித்துக் கடந்த ஆண்டு பசுமை விகடன் இதழில், விரிவான கட்டுரை வெளிவந்தது. அதைப் படித்த விவசாயிகள், உரிய அனுமதி பெற்று வண்டல் மண்ணை எடுத்துப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் இணையதளத்தில், வண்டல் மண் அள்ளுவது சம்பந்தமான அரசாணை பி.டி.எஃப் வடிவில் கிடைக்கிறது. அரசு அதிகாரிகள் வண்டல் மண் அள்ள அனுமதி தர மறுத்தால், இந்த அரசாணையைக் காட்டி, உரிய அனுமதி பெற முடியும்.

தற்போதுள்ள சூழ்நிலையில் கூடுதலான சில சிறப்புத் திட்டங்களையும் அரசு தரப்பில் செய்ய வேண்டும் என விவசாய அமைப்புகள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் ஏராளமான ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளைத் தூர் வாருவதற்கு அரசு தரப்பில் பல நூறு கோடிகளைச் செலவு செய்ய வேண்டும். இந்தத் தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவு இருந்தாலே, அனைத்து ஏரிகளையும் எளிதாகத் தூர்வாரிவிடலாம். அதாவது, வண்டல் மண்ணை எடுப்பதற்கு விவசாயிகளிடம் எந்த விதமான கட்டணமும் வாங்கக்கூடாது. மேலும், ஜே.சி.பி இயந்திரம் மூலம் வண்டல் மண்ணை அள்ளி, லாரிகள் மூலம் எடுத்துச் சென்று சம்பந்தப்பட்ட விவசாயிகளின் நிலத்தில் இலவசமாகக் கொட்டும்படி செய்யலாம். இதனால், ஏரியின் ஆழமும் அதிகரிக்கும், விவசாயிகளின் நில வளமும் கூடி, நல்ல விளைச்சலும் கிடைக்கும்.’’ 

இணையதள முகவரி:
http://www.tnmine.tn.nic.in/GO/G.O.MS.NO.233.pdf

தொடர்புக்கு, செல்போன்: 94442 19993.

‘‘நிலக்கடலை சாகுபடி செய்துள்ளோம். இதன் காய்களைப் பிரித்தெடுக்க இயந்திரம் இருக்கிறதா?’’

ஆர்.சுதா, வாலாஜா.


கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் இயந்திரங்கள் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் பெ.விவேக் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை:  ‘‘ஏரியில் வண்டல் மண் அள்ள என்ன செய்ய வேண்டும்?’’

‘‘நிலக்கடலையைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் எங்கள் துறையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. நிலக்கடலைச் செடியிலிருந்து காய்களைப் பிரித்தெடுப்பதற்கு அதிக மனித உழைப்பும் நேரமும் செலவாகிறது. தற்போது கிராமங்களில் நிலக்கடலையைக் கையால் பிரித்தெடுக்கிறார்கள். இம்முறையினால் ஓர் ஆள், ஒரு நாளில் 10 முதல் 15 கிலோ அளவே பிரித்தெடுக்க முடிகிறது. ஆகவே, அறுவடைக் காலங்களில் வேலையாட்கள் பற்றாக்குறையினால் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். இச்சிரமத்தைப் போக்க நிலக்கடலையைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் ஒன்றைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் வேலையாட்களையும் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தலாம். இந்த இயந்திரத்தில் பல முனைகளைக் கொண்ட சுழலும் உருளை, குழிவு சல்லடை, துருத்தி, முன் பின் ஆடும் வெவ்வேறு அளவு சல்லடைகள் ஆகிய பாகங்கள் உள்ளன. இதை இயக்க 5 குதிரைத்திறன் கொண்ட மின்சார மோட்டார் பொருத்தப் பட்டுள்ளது.

நீங்கள் கேட்டவை:  ‘‘ஏரியில் வண்டல் மண் அள்ள என்ன செய்ய வேண்டும்?’’



அறுவடை செய்த செடியை இவ்வியந்திரத்திலுள்ள இடுபெட்டியில் செலுத்த வேண்டும். கருவியின் சுழலும் உருளையில் உள்ள முனைகள் மற்றும் சுற்றிலும் உள்ள குறுக்கு கம்பிகளின் உதவியால் செடியிலிருந்து காய்கள் பிரித்தெடுக்கப்படும். காய் மற்றும் செடிகள் கீழே பொருத்தப்பட்டுள்ள சல்லடையின் மேல் விழும். துருத்தியின் உதவியினால் இலைகள் பிரிக்கப்பட்டுக் காய்கள் தனியாகக் கீழே வந்தடைகின்றன. இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் சுமார் 150 கிலோ காய்களைப் பிரித்தெடுக்கலாம்.

செடியுடன் பிரித்தெடுக்கப்படாமல் செல்லும் காய்கள் மற்றும் உடையும் காய்கள் சுமார் மூன்று விழுக்காடுகளுக்கும் குறைவே. இந்த இயந்திரத்தை உபயோகிப்பதன் மூலம் சுமார் 32 விழுக்காடு செலவும் 70 விழுக்காடு நேரமும் மீதமாகிறது. இயந்திரத்தின் விலை தோராயமாக ரூ.60,000. இந்த இயந்திரத்தை, பல்கலைக்கழக வழிகாட்டுதலுடன் தனியார் நிறுவனங்கள் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றன. பண்ணைக் கருவிகள் குறித்த கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், எங்கள் ஆராய்ச்சி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.’’

தொடர்புக்கு, வேளாண் இயந்திரங்கள் ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-3 தொலைபேசி: 0422 2457576.

நீங்கள் கேட்டவை:  ‘‘ஏரியில் வண்டல் மண் அள்ள என்ன செய்ய வேண்டும்?’’

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.