நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

மானாவாரி விவசாயம்... - இயற்கையில் செழிக்கும் சிறுதானியங்கள்!

மானாவாரி விவசாயம்... - இயற்கையில் செழிக்கும் சிறுதானியங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மானாவாரி விவசாயம்... - இயற்கையில் செழிக்கும் சிறுதானியங்கள்!

முயற்சி இ.கார்த்திகேயன் - படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

யற்கை வாழ்வியல், இயற்கை உணவு குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால், இளைய சமுதாயத்துக்கு இயற்கை விவசாயம் மீதும் ஆர்வம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன் காரணமாகப் பல இளைஞர்கள் நகர வாழ்க்கையைத் துறந்து, கிராமங்களில் நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்து கிராமங்களிலேயே வசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு பெண்களிடையேயும் ஆதரவு பெருகி வருகிறது.

மானாவாரி விவசாயம்... - இயற்கையில் செழிக்கும் சிறுதானியங்கள்!

ஏற்கெனவே கிராமங்களை விட்டு, இடம்பெயர்ந்த பலரும் மீண்டும் கிராமத்துக்குத் திரும்பி, இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து வருகிறார்கள். இதில் கணிசமாக பெண்களும் அடங்குவர். அப்படி கிராமத்து வாழ்க்கை முறைக்குத் திரும்பி ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமிட்ட பெண் விவசாயி, விருதுநகரைச் சேர்ந்த அஜிதா.

விருதுநகர் மாவட்டம், வரலொட்டியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அயன்ரெட்டியாபட்டி கிராமத்தில்தான் தற்போது வசித்து வருகிறார், அஜிதா. தனது நிலத்தில் வரகு அறுவடைப் பணியிலிருந்த அஜிதாவைச் சந்தித்தோம். “நான் பிறந்தது இந்தக் கிராமத்துலதான். ஆனா, வளர்ந்தது, படிச்சது எல்லாம் சென்னையில். என் கணவர் வீரபாண்டிக்கும் இதுதான் சொந்த ஊர். கல்யாணம் முடிஞ்ச பிறகு விருதுநகர்ல குடியிருந்தோம். இடையில் நாலு வருஷம் அவர் ஹரித்துவார்ல வேலை செய்ய வேண்டி இருந்ததால, அங்க போய்ட்டோம். நாலு வருஷத்துக்கு முன்னாடிதான் திரும்பவும் விருதுநகர் வந்தோம்.

கொஞ்ச வருஷம் முன்னாடி திருநெல்வேலி மாவட்டம், சிவசைலத்துல இருக்கிற நலவாழ்வு மையத்துக்குக் குடும்பத்தோட போனோம். அங்க இயற்கை விவசாயத்துல விளைஞ்ச சிறுதானிய உணவுகள் கொடுத்தாங்க. அங்கதான் இயற்கை உணவுகள்ல கிடைக்கிற நன்மைகளைத் தெரிஞ்சுகிட்டோம். அப்புறம்தான் நம்ம தோட்டத்திலேயே சிறுதானிய விவசாயம் செய்யலாமேனு தோணுச்சு. ஆனா, தினமும் விவசாய வேலைகளுக்காக விருதுநகர்ல இருந்து வந்து போறதைவிட, இங்கேயே நிரந்தரமா தங்கிடலாம்னு முடிவு பண்ணி வந்துட்டோம்.

விவசாயத்தை ஆரம்பிக்கும்போது ஊர்ல எல்லாரும் ரசாயன உரம் போட்டாதான் மகசூல் எடுக்க முடியும்னு சொன்னாங்க. அதனால ரசாயன உரம் போட்டுதான் குதிரைவாலி சாகுபடியை ஆரம்பிச்சேன். ரெண்டு வருஷம் அப்படியே போயிடுச்சு. அந்தச் சமயத்துல சிவகாசியைச் சேர்ந்த இயற்கை விவசாயி கருப்பசாமியோட அறிமுகம் கிடைச்சது. அவர்தான் இயற்கை விவசாயத்தைப் பத்தி சொல்லி ‘பசுமை விகடன்’ புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். அதுல வர்ற மானாவாரி பயிர்களைப் பற்றிய கட்டுரைகளைத் தேடிப்பிடிச்சுப் படிப்பேன். அதுமூலமா தெரிஞ்சுக்கிட்ட விஷயங்களை வெச்சு, போன வருஷத்துல இருந்து இயற்கை முறையில விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன்” என்று முன்கதை சொன்ன அஜிதா தொடர்ந்தார்.

“மொத்தம் 5 ஏக்கர் நிலம் இருக்கு. முழுசும் கரிசல்மண்தான். மூணு ஏக்கர் நிலத்துல இருங்குச்சோளமும் (சிவப்புச் சோளம்), ஊடுபயிரா துவரையும் போட்டிருந்தேன். இதுல இருங்குச் சோளம் அறுவடை முடிஞ்சிடுச்சு. மீதியுள்ள 2 ஏக்கர் நிலத்துல, ஒரு ஏக்கர்ல வரகு போட்டிருந்தேன். மீதி ஒரு ஏக்கர் நிலத்துல பாசிப்பயறு, உளுந்து, மொச்சை, தட்டை, கறுப்புக்கொள்ளு, சிவப்புக்கொள்ளு, கம்புனு கலந்து போட்டிருந்தேன். வேலிப்பயிரா இருங்குச் சோளம், வெள்ளைச் சோளம், துவரை போட்டிருந்தேன். அதுல இருங்குச்சோளம், வெள்ளைச்சோளம், கேழ்வரகு, பாசிப்பயறு, உளுந்து, கம்பு, மொச்சை, தட்டை எல்லாம் அறுவடையாகிடுச்சு. வரகு, துவரை, சிவப்புக்கொள்ளு, கறுப்புக் கொள்ளு மூணும் இன்னும் அறுவடைக்கு வரலை.

மானாவாரி விவசாயம்... - இயற்கையில் செழிக்கும் சிறுதானியங்கள்!

இருங்குச் சோளத்துல மகசூல் குறைவாத்தான் கிடைச்சது. கலப்புப் பயிரா பல தானியங்களைக் கலந்து போட்டதுல ஓரளவுக்கு நல்ல மகசூல் கிடைச்சிருக்கு. இயற்கை விவசாயங்கிறதால கொஞ்சமாகக் கிடைச்ச மழையிலேயும் மகசூல் கிடைச்சிடுச்சு. ரசாயன உரம் போட்டு விவசாயம் பண்ற பக்கத்துத் தோட்டத்துக்காரங்களைவிட எனக்கு அதிக மகசூல் கிடைச்சிருக்கு. என் தோட்டத்துல பூச்சித்தாக்குதலும் இல்லை” என்ற அஜிதா மகசூல் குறித்து சொன்னார்.

“மூணு ஏக்கர் நிலத்துல தனிப்பயிராவும், 2 ஏக்கர் நிலத்துல வேலிப்பயிராவும் போட்டிருந்த இருங்குச்சோளத்துல 543 கிலோ மகசூல் ஆகியிருக்கு. 2 ஏக்கர் நிலத்துல வேலிப்பயிராப் போட்டிருந்த வெள்ளைச்சோளத்துல 132 கிலோ கிடைச்சிருக்கு. 2 ஏக்கர் நிலத்துல கலப்புப்பயிரா போட்டிருந்ததுல 8 கிலோ பாசிப்பயறு, 7 கிலோ உளுந்து, 10 கிலோ மொச்சை, 10 கிலோ தட்டைப்பயறு, 47 கிலோ கம்பு கிடைச்சிருக்கு. துவரை, வரகு, சிவப்புக்கொள்ளு, கறுப்புக்கொள்ளு எல்லாம் இனிதான் வரிசையா அறுவடைக்கு வரும். அதுல 350 கிலோ வரகும் 60 கிலோ துவரையும் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். கொள்ளு வகைகள்ல ஒவ்வொண்ணும் 5 கிலோ அளவுக்குக் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்.

இந்தத் தானியங்களை விதைக்காகப் பக்கத்து விவசாயிகள் கேட்டிருக்காங்க. நான் அடுத்த போகத்துல விதைக்கிறதுக்குத் தேவையான தானியங்களை எடுத்து பக்குவப்படுத்தி வெச்சிட்டேன். வீட்டுல எல்லாரும் சாப்பிடறதுக்குத் தேவையான அளவு எடுத்து வெச்சுட்டு, மீதியை மட்டும் விதைக்காக விற்பனை செய்யலாம்னு இருக்கேன்” என்ற அஜிதா நிறைவாக,

“விவசாயம் பண்ணி விளைபொருளை விற்பனை செய்யணும்னு விவசாயத்துக்கு வரலை. நமக்குத் தேவையானதை நாமளே உற்பத்தி செஞ்சு சாப்பிடணும்னுதான் வந்தோம். ‘பசுமை விகடன்’ மூலமா இயற்கை விவசாயம் பத்தி தெரிஞ்சிக்கிட்டதால, இப்போ விஷமில்லாத உணவை உற்பத்தி செஞ்சு சாப்பிடறதுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. வீட்டுக்குத் தேவையானது போக, மீதி தானியங்களை விற்பனை செஞ்சா எப்படியும் 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல வருமானம் கிடைக்கும். அதனால எல்லா வகையிலேயும் லாபம்தான். அறுவடை செஞ்ச பிறகு செடிகளை அப்படியே வயல்லயே விட்டுட்டதால மண்ணும் வளமாகிடும். அடுத்த போகத்துக்குப் பெரிசா செலவு இருக்காது.

ஆரோக்கியமான உணவு வேணும்னா, அதுக்கு விவசாயம் செய்றதுதான் சரியான தீர்வு. எங்க குடும்பம் ஒத்துழைச்சால,  இன்னைக்கு இந்த மானாவாரி விவசாயம் சாத்தியமாகி இருக்கு” என்றார், நம்பிக்கையோடு.

தொடர்புக்கு, அஜிதா, செல்போன்: 95003 21318