Published:Updated:

ஒப்பந்தப் பண்ணையமும் ஒட்டகம் புகுந்த கூடாரமும்!

ஒப்பந்தப் பண்ணையமும் ஒட்டகம் புகுந்த கூடாரமும்!
பிரீமியம் ஸ்டோரி
ஒப்பந்தப் பண்ணையமும் ஒட்டகம் புகுந்த கூடாரமும்!

கடிதம்ஜூனியர் கோவணாண்டி - ஓவியம்: ஹரன்

ஒப்பந்தப் பண்ணையமும் ஒட்டகம் புகுந்த கூடாரமும்!

கடிதம்ஜூனியர் கோவணாண்டி - ஓவியம்: ஹரன்

Published:Updated:
ஒப்பந்தப் பண்ணையமும் ஒட்டகம் புகுந்த கூடாரமும்!
பிரீமியம் ஸ்டோரி
ஒப்பந்தப் பண்ணையமும் ஒட்டகம் புகுந்த கூடாரமும்!

‘சுதேசியம் பெற்றெடுத்த தங்கம், பாரதத் திருநாட்டின் சிங்கம்,

எதிர்த்து நிக்கிறவனெல்லாம் பங்கம்...’

நான் யாரைச் சொல்றேன்னு புரியுதா?

அதேதான்... மாண்புமிகு இந்திய பிரதமர், மாவீரன் நரேந்திர மோடியைத்தான் சொல்றேன்!

எதையுமே அதிரடியா... அதிரிபுதிரியா செய்யுறதுல அவரை யாரும் அடிச்சுக்கவே முடியாதுங்க. ஆயிரம், ஐநூறு ரூபாயை ஒழிச்சு, பல பேருங்களோட தூக்கத்தைக் கலைச்சு, ஏகப்பட்ட ஏழைகளையும் ஒழிச்சு, பற்பல பணக்காரங்களை இன்னும் பணக்காரங்களா மாத்தி வெச்சு... அப்பப்பா இந்த வேகம் யாருக்குமே வராதுங்க. அவருக்குத்தான் இந்தத் தடவை ஜூனியர் கோவணாண்டியோட கடுதாசி!

ஒப்பந்தப் பண்ணையமும் ஒட்டகம் புகுந்த கூடாரமும்!

அய்யா மோடிஜி, வணக்கமுங்க... ஏகப்பட்ட ஒழிப்புப் பட்டியலை கையில வெச்சிருக்கீங்க. தீவிரவாதி, ஊழல்வாதிகள் எல்லாம் அந்த ஒழிப்புப்பட்டியல்ல இருக்காங்களோ இல்லையோ, விவசாயிங்க தவறாம இடம்பிடிச்சாச்சு. ஏன்னா, உங்க பெரியண்ணன் மன்மோகன் சிங் போட்டு வெச்ச பாதையில ரொம்ப ரொம்பச் சரியாத்தான் அடி எடுத்து வைக்கிறீங்க. உலகப் பெரியண்ணன் அமெரிக்கா சொல்றதை வரி மாறாம சாதிக்கிறதுல, சிங்கையே மிஞ்சிட்டீங்க மோடிஜி.

‘விவசாய விளைபொருள்களின் விலை ஏற்றஇறக்கத்தைத் தடுத்து நிறுத்தி, விவசாயிகளுக்கு நிலையான விலை கிடைக்கச் செய்வதற்காகக் கான்ட்ராக்ட் ஃபார்மிங்கை (ஒப்பந்தப் பண்ணையம்) செயல்படுத்த நிதி ஆயோக் முடிவு செய்திருக்கிறது’ன்னு ஒரு சேதி அடிபட ஆரம்பிச்சிருக்குதுங்களே அதத்தான் சொல்றேன்.

எப்படியாவது, ஒட்டுமொத்த விவசாயிகளையும் நிலத்தைவிட்டே விரட்டி அடிச்சிட்டு, உலகம் பூரா இருக்கிற நிலங்களைக் கார்ப்பரேட் கம்பெனிகளோட கைகள்ல ஒப்படைக்க வைக்கிறதுதான் அமெரிக்காவோட நீண்டகாலத் திட்டம். இதுக்காகத்தான் ஓயாம உழைச்சார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். இப்ப நீங்க கையில எடுத்திருக்கீங்க. ஆனா, சில பல உண்மைகளை உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன். என்ன இருந்தாலும் நீங்கதானே எங்களுக்கெல்லாம் பிரதமர்!
 
கண்ணீரை வரவழைக்கும் காட்டாமணக்கு!


ஒப்பந்தப் பண்ணையம்கிறதே பெரும்பாலும் ஏமாற்று வேலையாத்தான் இருக்கு. சுருக்கமா சொன்னா, கூடாரத்துக்குள்ள ஒட்டகம் புகுந்த கதைதான். இப்படித்தான், ‘காட்டாமணக்கு வளர்த்து பயோ டீசல் எடுக்கலாம்... உலகத்தையே விலைக்கு வாங்கலாம்’ன்னு கதைகளைத் திரிச்சிவிட்டாங்க. கோடிக்கணக்கில் மானியங்களை அள்ளிவிட்டுச்சு அப்போதைய மத்திய அரசு. இந்த மானியம் உள்பட ஏகப்பட்ட பணத்தைச் சுருட்டுறதுக்காகத் திட்டம்போட்டு வேலை செஞ்ச பலபேர், ‘கட்டாந்தரையிலகூட காட்டாமணக்கு விளையும். அரசாங்க மானியத்தை அள்ளிக்கோங்க’ன்னு கூவிக்கூவி விவசாயிகளை வளைச்சாங்க. கடைசியில புல்லுகூட முளைக்காததால, பல பேரு இன்னிக்கு கடன்காரங்களா நடமாடிட்டு இருக்காங்க. காட்டாமணக்கு சாகுபடியை அறிமுகப்படுத்தினவங்க அதுக்கு ஆதரவுக்கரம் நீட்டின வேளாண் விஞ்ஞானிங்க, அரசுத்துறை அதிகாரிங்கள்ல பலரும் கமிஷன் வாங்கிக்கிட்டு கப்சிப் ஆகிட்டாங்க.

‘ஒண்ணும் விளையலையே’ன்னு விவசாயிங்க போய்க் கேட்டப்ப, ‘ஏழெட்டு வருஷமா சர்க்கரை வியாதிக்கு மருந்து, மாத்திரை சாப்பிட்டிருக்கீங்க. அந்த மருந்தெல்லாம் கிட்னியைக் காலி பண்ணாம இருக்குமா?’ன்னு சர்க்கரை வியாதிக்கு ஏழெட்டு வருஷமா மருந்து கொடுத்த அதே டாக்டரே, கடைசிக் கட்டத்துல சொல் றமாதிரி, ‘ கட்டாந்தரையில காட்டாமணக்கை பயிர் பண்ணினா அதெப்படி விளையும். இறவை பாசனத்துலதான் போட்டிருக்கணும்’னு பல்கலைக் கழக விஞ்ஞானிங்க முதற்கொண்டு, அத்தனை பேரும் கழட்டிவிட, காட்டாமணக்கு  சாகுபடிக்காகப் பேங்க்ல வாங்கின கடனையெல்லாம் கைக்காசையும் நிலத்தை வித்தும் கட்டின கோவணாண்டிங்கள்ல பலர், டவுனு பக்கம் கூலி வேலைக்குப் போயிட்டாங்க.

இளிச்சவாயனாக்கிய ஈமு!

‘ஈமு கோழி வளர்த்தா குபேரனாகலாம்... கோடீஸ்வரனாகலாம்’னு சொல்லி பேப்பர்லயும் டிவியிலயும் மாத்தி மாத்தி விளம்பரம் கொடுத்தானுங்க. சினிமாக்காரங்களை வெச்சு படம்படமா எடுத்து ஓட்டினாணுங்க. கடைசியில கோடிகோடியா சுருட்டிக்கிட்டு ஓடிட்டானுங்க. ஒரு கால்நடை டாக்டரையோ... கால்நடைப் பல்கலைக்கழக விஞ்ஞானியையோ நியமிச்சு, ஈமு கோழி தொடர்பா விசாரணை பண்ணி, என்ன உண்மைன்னு எங்களுக்கு அரசாங்கம் சொல்லியிருந்தா, ஈமுகாரனுங்ககிட்ட எங்க ஆளுங்க பணத்தை இழந்து, வீதிக்கு வந்திருக்க மாட்டாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒப்பந்தப் பண்ணையமும் ஒட்டகம் புகுந்த கூடாரமும்!

‘அதை வளர்க்கலாம்... இதை வளர்க்கலாம்’னு என்னமோ தாடி வளர்க்கிற மாதிரி எல்லாத்தையும் கிளப்பிவிட்டு. எங்களை ஏமாத்திக்கிட்டே இருக்கானுங்க. தட்டிக்கேக்கத்தான் ஆளில்லை. நிலைமை இப்படி இருக்கிறப்ப, விவசாயிங்கமேல ரொம்ப கரிசனத்தோட காய்கறிகள் விலை ஏற்ற இறக்கம் இல்லாம இருக்கிறதுக்காகக் கான்ட்ராக்ட் ஃபார்மிங்கிறத கையில எடுத்து விவசாயிங்கள வாழ வைக்கப் போறதா சேதியைப் பரப்பிக்கிட்டிருக்குது உங்களோட மேற்பார்வையில இயங்குகிற நிதி ஆயோக் அமைப்பு.

உங்க மேல இருக்கற நம்பிக்கையில சட்டுபுட்டுனு கவுந்துடறோம். கடைசியில பார்த்தாதான் தெரியுது, எல்லாமே அரசியல்வாதிகள், அதிகாரிகள் அப்புறம் உள்ளூர்-வெளிநாட்டு முதலாளிகள் இவங்கள்லாம் வாழறதுக்கான திட்டமாவே போடறீங்கனு. கரும்பு ஆலைகளோட நடவடிக்கைகளைக் கவனிச்சாலே போதும், உங்களோட திட்டங்களோட கதி என்னங்கிறது தெரிஞ்சுடும்.

காலைச் சுற்றிய கரும்பு!

இந்த ஆலைகள் எல்லாமே ஒருவிதத்துல கான்ட்ராக்ட் ஃபார்மிங்தான். ‘நீ கரும்பு போடு... நான் வாங்கிக்கிறேன்’ன்னு ஒப்பந்தம்போட்டுத்தான் வேலையை ஆரம்பிக்கிறாங்க விவசாயிங்ககிட்ட. இதைச் சொல்லித்தான் ஆலைக்காரங்க கோடி கோடியா பேங்க்ல கடனை வாங்கி, வேறவேற பிஸினஸை பெருக்குறாங்க. ஆனா, எப்பப் பார்த்தாலும் லாபம் இல்லை.. லாபம் இல்லைன்னு சொல்லி, விவசாயிங்க தலையில கைவெக்கறாங்க. கரும்பு சப்ளை செய்த விவசாயிக்கு உரிய நேரத்துல பணத்தைக் கொடுக்கறதே இல்லை. மாநில அரசு அறிவிக்கிற ஆதாய விலையையும் கொடுக்கிறதே இல்லை. தமிழ்நாட்டுல மட்டும் இந்த வகையில 900 கோடி ரூபாய் மூணு வருஷமா பாக்கி இருக்கு. இதேபோல, 2004-2009 வரைக்கும் மத்திய அரசோட கூடுதல் கரும்பு விலை (எல் ஃபேக்டர்) கொடுக்கவே இல்லை. இந்த வகையில விவசாயிகளுக்கு 250 கோடி ரூபாய் வரவேண்டியிருக்கு.

இப்படியெல்லாம் விவசாயிகளை ஏமாத்துற இந்த ஆலைகளைத் தட்டிக் கேக்க வேண்டிய அரசாங்கம் செய்த வேலை என்ன தெரியுமா? இனிமே, கூடுதல் விலைங்கற ஒண்ணு இருக்கவே கூடாதுன்னு காலி பண்ணினதுதான். நம்ம நாட்டோட விவசாயத்துறை மந்திரியா இருந்த சரத் பவார். தன்னை விவசாயின்னு சொல்லிக்கிட்டு வலம் வர்ற இந்த ஜென்மம், நிஜத்துல சர்க்கரை ஆலை முதலாளி. தன்னோட கூட்டாளிங்க நல்லாயிருக்கணும்கிறதுக்காக... பாட்டாளிகளான விவசாயிகள் வயித்துல அடிச்சதைத் தவிர, வேற எதையுமே இந்த ஜென்மம் சாதிக்கல, தான் மந்திரியா இருந்த காலத்துல.

ரூ.9 ஆயிரம் கோடி யார் வீட்டுப் பணம்?

கதர் ஆட்சிக்காலத்துலதான் இந்தக் கொடுமைன்னா... ‘விவசாயிகளின் தோழன் நாங்க... கோமாதா எங்கள் குலமாதா... சுதேசியம்தான் எங்களின் உயிர்மூச்சு’ன்னு சொல்லிக்கிற காவிகளான உங்க காலத்துலயும் பெருங்கொடுமை தொடருது. இப்ப கிலோ சர்க்கரை 39 ரூபாய்க்கு மேல ஆலைங்ககிட்ட இருந்து கொள்முதல் செய்யப்படுது. கிட்டத்தட்ட 12 ரூபாய் விலை ஏறியிருக்கு. ஆனாலும்கூட ஒப்பந்தப்படி விவசாயிங்களுக்குத் தரவேண்டிய பணத்தைத் தரவேயில்லை இந்த ஆலைகள். இதைத் தட்டிக்கேக்காம கைகட்டி ஆலை முதலாளிங்களுக்குச் சேவகம் பண்ணிக்கிட்டிருக்கீங்க.

இப்பக்கூட இந்தப் பட்ஜெட்ல விவசாயிகளுக்கு ஆலைகள் தரவேண்டிய நிலுவைத் தொகையைக் கொடுக்கிறதுக்காக 9 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கீங்க. ஆலைக்காரங்க பிஸினஸ் பண்றாங்க... சம்பாதிக்கிறாங்க... அவங்களோட குடும்பங்கள் சுகபோகமா கொழிக்கிறாங்க. ஆனா, விவசாயிகளுக்குத் தரவேண்டிய பாக்கியை மட்டும் கொடுக்கவே மாட்டேங்கிறாங்க. கேட்டா, நஷ்டம் நஷ்டம்னு கூப்பாடு போடுறாங்க. ஆனா, புதுசு புதுசா ஆலைகளைத் தொறந்து கிட்டேதான் இருக்காங்க.

ஆலைக்காரங்க போடற நஷ்ட நாடகத்தைப் பார்த்துட்டு, நாட்டு மக்களோட பணத்துல 9 ஆயிரம் கோடியை எடுத்து விடுறீங்க. கேட்டா, தொழில் நசிஞ்சிபோய், விவசாயிகள் பாதிப்பாங்கன்னு கதை விடறீங்க. லாபம் இல்லைனா ஆலையை மூடிட்டு போக வேண்டியதுதானே. லாபம் இல்லாத தொழிலை எந்த மடையனாவது நடத்துவானா....

தனியார்களால நடத்த முடியலைனா... அரசாங்கமே கையில எடுத்துக்க வேண்டியதுதானே! ஆனா, செய்ய மாட்டீங்க. அரசாங்க தொழிற்சாலைகளையெல்லாம் நஷ்டத்துல இயங்குதுனு சொல்லிச் சொல்லியே தனியார்கிட்ட தாரை வார்க்கிற ஜாதியாச்சே நீங்கள்லாம்.
 
செத்தவங்க மேல எத்தனை லாரி?


கிட்டத்தட்ட 50, 60 வருஷமாவே செத்து சுண்ணாம்பாகிட்டிருக்கோம் கோவணாண்டிகளான நாங்க. ஆனா, புதுசு புதுசா திட்டம்போட்டு எங்களைச் சுரண்டுறதுலே குறியாவே இருக்கீங்க. செத்தவங்க மேல எத்தனை லாரிகளைத்தான் ஏத்திக்கிட்டே இருப்பீங்களோ? இப்பவும் ஒப்பந்தப் பண்ணையம்கிற பேர்ல இன்னும் எந்தெந்த நாட்டுக்காரனையும், உள்ளூர் முதலாளிங்களையும் வளர்த்துவிட போறீங்களோ தெரியல.

இப்படிக்கு, ஜூனியர் கோவணாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism