Published:Updated:

``சேலம் 8 வழிச்சாலையை எதிர்க்க இந்த 10 காரணங்கள் போதுமா முதல்வரே?!" - ஒரு விவசாயியின் கடிதம்

``சேலம் 8 வழிச்சாலையை எதிர்க்க இந்த 10 காரணங்கள் போதுமா முதல்வரே?!" - ஒரு விவசாயியின் கடிதம்
``சேலம் 8 வழிச்சாலையை எதிர்க்க இந்த 10 காரணங்கள் போதுமா முதல்வரே?!" - ஒரு விவசாயியின் கடிதம்

நான் விவசாயியாக இருந்து எனது நிலம் கையகப்படுத்தப்படுமேயானால் அறிவுக்கு ஒவ்வாத வகையில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள செயல்பாடுகளை பெரும் ஏமாற்றமளிப்பதாகவே உணர்வேன்.

சேலம் 8-வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை ஏன் கை விடவேண்டும்? நித்தியானந்த் ஜெயராமன் ஆகிய நான் ஒரு விவசாயியாக இருந்தால் எழுதும் கடிதம் இது.

சேலம்-சென்னை நகரங்களை இணைக்கதான் அமைக்கவிருக்கும் 8 வழி நெடுஞ்சாலைக்கென திருவண்ணாமலை மாவட்டத்தில் 1306 ஹெக்டேர்கள் (3227 ஏக்கர்கள்) பரப்பளவிலான நிலத்தை கையகப்படுத்தப் போவதாக ஜூன் 11, 2018 அன்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கெஜட் அறிவிப்பின் மூலமாக, தேசிய நெடுஞ்சாலை சட்டத்தைப் பின்பற்றி, அறிவித்தது.

நிலங்களை கையகப்படுத்துவதற்காக அவை அளக்கப்பட்டு சுற்றாய்வு மேற்கொள்ளப்பட்டபோது நடைபெற்ற கைதுகளின் மூலமாகதான் பல விவசாயிகள் இந்தத் திட்டம் பற்றி அறிந்தனர். இந்தத் திட்டத்தின் சாதகபாதகங்கள் குறித்து எந்தவித தகவல்களும் அவர்களிடத்தில் இல்லை என்று துணிந்து கூறலாம்.

நான் விவசாயியாக இருந்து எனது நிலம் கையகப்படுத்தப்படுமேயானால் அறிவுக்கு ஒவ்வாத வகையில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள செயல்பாடுகளை பெரும் ஏமாற்றமளிப்பதாகவே உணர்வேன். ஆனால், எனது ஏமாற்றம் என்பது முக்கியமல்ல. இந்தத் திட்டத்தை ஏன் எதிர்க்கிறேன் என்பதை அடுத்த 21 நாள்களுக்குள் நான் மாவட்ட சிறப்பு வருவாய்த் துறை அதிகாரியிடத்தில் தெரிவிப்பதும், எனது ஆட்சேபனைகளை தெளிவுற முன்வைப்பதும்தான் முக்கியமாகும்.

நான் விவசாயியாக இருந்தால் இத்தகைய கடிதத்தைதான் எழுதுவேன்.

அன்பு அரசாங்கத்துக்கு

சேலம் - சென்னை நகரங்களை இணைக்க நீங்கள் அமைக்கவிருக்கும் 8 வழி பசுமை நெடுஞ்சாலைத் திட்டத்தினால் நிலத்தை இழக்கவிருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகளில் நானும் ஒருவன். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள கெஜட் அறிக்கை S.O. 2377(E) )க்கு எனது ஆட்சேபனைகளைத் தெரிவிக்கும் கடிதம் இது.

ஒரு விவசாயிக்கும் அவரது நிலத்துக்கும் உள்ள உறவு பற்றி உங்களிடம் கூற வேண்டும் என்றே நினைத்தேன். ஆனால் இதுகுறித்தோ, விவசாயியின் நிலம் அபகரிக்கப்பட்டால் அவரின் ஒரு பகுதி செத்து விடும், அவரும் அவரின் குடும்பமும் முன்போல இருக்க வாய்ப்பில்லை என்பது குறித்தோ நான் பேசப்போவதில்லை. நிலம் என்பது எக்காலத்துக்குமானது. நீங்கள் வழங்கவிருக்கும் இழப்பீடு, அது எவ்வளவு கணிசமானதாக இருந்தாலும், வெகு விரைவில் கரைந்து விடும்.

அண்மையில் நிலத்தை மாசுப்படுத்தியதற்காக ஒரு பெரும் தொழிற்சாலை பூட்டப்பட்டப்போது பலர் வேலைவாய்ப்பை இழந்துவிடுவர் என்றும் இந்தியாவின் செம்புத் தேவைகள் (copper needs) இனி எவ்வாறு நிறைவேற்றப்படும் என்றும் சிலர் அங்கலாயித்தனர். நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக விவசாய நிலங்கள் கபளீகரம் செய்யப்படும்போது பலரின் பிழைப்புக்கு இடம் இல்லாமல் போகும் என்று கணக்கிட்டுப் பார்க்க உங்கள் திட்டத்தில் இடமில்லை என்பதை அறிவேன். தொழில் வளர்ச்சிக்கும் கட்டுமான அடிப்படைகளை தயாரிக்கவும் விளைநிலங்கள் கையகப்படுத்தும்போது இந்தியாவின் உணவுத் தேவைகளை யார் நிறைவேற்றப் போகிறார்கள் என்ற கவலையோ அங்கலாய்ப்போ உங்களுக்கு இருக்காது என்பதும் எனக்குத் தெரியும்.

நீங்கள் ஏற்கெனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டதால் இவைக் குறித்தெல்லாம் நான் இங்கு பேசப் போவதில்லை. அப்படியே பேசினாலும் குடியானவன் ஒருவனின் உணர்ச்சிவயப்பட்ட பிதற்றுதல்களாகவே அவற்றை நீங்கள் கொள்வீர்கள். எனவே, நிலத்தை கையகப்படுத்த நீங்கள் மேற்கொண்டுள்ள வழிமுறையானது அடிப்படையிலேயே சட்டத்துக்குப் புறம்பானது, ஏமாற்று வேலையானதாக உள்ளது என்பது குறித்து மட்டுமே நான் பேச விரும்புகிறேன்.

8 வழிச் சாலையை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்படுவதை கீழ்க்கண்ட 10 காரணங்களுக்காக நான் ஆட்சேபிக்கிறேன்.

1. இந்தத் திட்டம், அதன் ஒழுங்கமைவு (alignment) சாதகபாதகங்கள் குறித்து எனக்கு எந்த புரிந்துணர்வும் (awareness) வழங்கப்படவில்லை. இந்தத் திட்டம் குறித்து நம்பத்தகுந்த தகவல்கள் ஏதும் வழங்கப்படாத நிலையில், இதற்காக நான் எனது நிலத்தை வழங்கிவிட வேண்டும் என்பது மட்டுமே எனக்கு சொல்லப்பட்டது.

2. இந்தத் திட்டம் எத்தகைய சமூக, சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து எந்த புரிந்துணர்வும் எனக்கு வழங்கப்படவில்லை. எனது நிலத்தின், எனது கிராமத்தின் ஒரு பகுதியை மட்டும் இந்தத் திட்டம் கைக்கொண்டாலும், திட்டத்தின் ஒழுங்கமைவு எல்லைகளுக்கு அப்பாலும் இதன் சமூக, சுற்றுசூழல் பாதிப்புகள் இருக்கக்கூடும்.

3. இந்தத் திட்டத்துக்கான இயலுமை ஆய்வு /சாத்தியக்கூறாய்வு (feasibility study) மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்த இயலும் என்ற முடிவுக்கு ஏமாற்றுவாதங்களை முன்வைத்தே (malafide intent) அது வந்தடைந்துள்ளது. இந்தத் திட்டத்துக்கான செலவு, அதைச் செயல்படுத்தத் தேவையான காலநேரம், இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் ஆகியவற்றை தவறான அடிப்படைகளில் இந்த ஆய்வு நியாயப்படுத்தியுள்ளது.

4. இந்தத் திட்டம் ஒட்டுமொத்தமாக நிறைவேற வேண்டுமானால் சமூகரீதியாகவும் சூழலியல்ரீதியாகவும் அது சாத்தியப்படக்கூடியதாக இருக்க வேண்டும். காரணம் சமூக எதிர்ப்பும் ஏற்பும்தான் குறிப்பிட்டத் திட்டம் நிறைவேறுமா அல்லது ஒன்றுமில்லாமல் போகுமா என்பதைத் தீர்மானிக்கும். இந்தத் திட்டத்துக்கான நிதித்தேவை, இதன் பொருளாதார, தொழில்நுட்ப நியாயங்கள் ஆகியன குறித்த கறாரான மதிப்பீட்டின் அடிப்படையில்தான் இயலுமை ஆய்வறிக்கை அமைந்துள்ளது என்றும், இத்திட்டத்தின் சூழலியல் பாதிப்பு, முதல்கட்ட சமூகபாதிப்பு குறித்த தொடக்கநிலை மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு அதுவுமே சமூக, சூழலியல்ரீதியாக இது மேற்கொள்ளத்தக்கத் திட்டம்தான் என்பதை உறுதி செய்துள்ளது என்றும் இயலுமை அறிக்கை தவறாக அறிவித்துள்ளது.

5. கிராம அளவில் என்னைப் போன்ற நிலத்தை இழக்கவிருக்கும் விவசாயிகளுடன் பொது கலந்தாய்வுகள் (consultations) மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், மாவட்ட அளவில் இதன் சமூக பாதிப்பு குறித்த மதிப்பீடு செய்யப்படுகையிலும் இத்தகைய கலந்தாய்வுகள் நடைபெற்றன என்றும் இயலுமை அறிக்கை தவறாக குறிப்பிடுகிறது. இந்தக் கலந்தாய்வுகள் குறித்த விவரங்கள், குறிப்பாக அவை நடைபெற்றதாகச் சொல்லப்படும் கிராமங்களின் பெயர்கள், கலந்தாய்வு நடத்தப்பட்ட தேதிகள் ஆகியன குறித்த எந்தத் தகவல்களும் வழங்கப்படவில்லை.

6. என்னையோ என் கிராமத்தைச் சேர்ந்த பிற விவசாயிகளையோ யாரும் அணுகவில்லை, எங்களைக் கலந்தாலோசிக்கவுமில்லை, இந்தத் திட்டம் குறித்த எங்களின் கருத்துகளை யாரும் கேட்கவில்லை. அப்படி அவர்கள் செய்திருப்பார்களேயானால் இந்தத் திட்டத்தை நாங்கள் ஏன், எதன் அடிப்படையில் எதிர்க்கிறோம் என்பது குறித்த தகவல்கள் திட்ட அறிக்கையில் பதிவாகியிருக்கும்.

7. இந்தத் திட்டத்தின் ஒழுங்கமைவானது மிகப் பொருத்தமானது என்ற முடிவுக்கு தான் வந்துள்ளதாக இயலுமை அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், இத்தகைய முடிவுக்கு எந்த ஆதாரமும் இருப்பதாகக் கொள்ள முடியாது. காரணம், மாற்று ஒழுங்கமைவுத் திட்டங்கள் குறித்த கறாரான ஆய்வும், இருக்கக்கூடிய மாற்றுவழிப் பாதைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட எந்தவிதமான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டதற்கான சான்றுகளோ விவரங்களோ திட்ட அறிக்கையில் இடம் பெறவில்லை.

8. நிலங்களைக் கையகப்படுத்தல், மாற்று வசிப்பிடங்களை வழங்குதல், நிவாரணம் வழங்குதல் குறித்த மத்திய சட்டம் 2013-ன் கீழ் அல்லாது தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. நிலவுரிமையாளன் என்ற வகையில் எந்தத் திட்டத்தின் கீழ் எந்த அதிகாரத்தின் கீழ் நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்பது எனக்கு முக்கியமல்ல. கைக்கொள்ளப்படும் வழிமுறையானது மனிதத்தன்மை வாய்ந்ததா (humane), மக்களின் பங்கேற்புடன் நடைபெறுகிறதா (participatory), திட்டம் சம்பந்தமான தகவல்கள் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றனவா (informed), ஒளிவுமறைவு இல்லாமல் எல்லாம் நடைபெறுகிறதா (transparent) என்பனதான் முக்கியம்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள மத்திய சட்டம் 2013 ஆனது மக்களின் ஒப்புதலைப் பெற வேண்டும், சமூக, சூழலியல் பாதிப்புகள் குறித்த மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்ற கட்டாய நிபந்தனைகளை முன்வைப்பதாக உள்ளதால் மனிதத்தன்மை வாய்ந்த, மக்களின் பங்கேற்பை உள்ளடக்கிய, தகவல்களைப் பகிர்ந்தளிக்கும், ஒளிவுமறைவற்ற வழிமுறைகள் பின்பற்றப்படுதலுக்கு இடமளிக்கிறது.

தேசிய நெடுஞ்சாலை சட்டத்தின்கீழ் நடைபெறும் இந்த நிலக் கையகப்படுத்துதல் என்பது மனிதத்தன்மை வாய்ந்த, மக்களின் பங்கேற்பை உள்ளடக்கிய, தகவல்களைப் பகிர்ந்தளிக்கும், ஒளிவுமறைவற்ற வழிமுறைகளை உள்ளடக்கியதல்ல. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் விதி 14 (Article 14) இங்கு மீறப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நிலம் கையகப்படுத்துதல் என்பது சூழலியல் பாதிப்புகள், சமூக பாதிப்புகள் ஆகியவற்றை மதிப்பிட தேவையான வழிமுறைகளை பின்பற்றவில்லை, சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலை, அதாவது உரிய தகவல்களை வழங்கி அதன்மூலமாகப் பெறப்படும் ஒப்புதலை, பெறவில்லை. எனவே, மத்திய சட்டம் 2013 வரையறுத்துள்ள குறைந்தபட்ச நிபந்தனைகளுக்குக் கூட உட்படாததுடன் இந்திய அரசியல் சட்டம் அடிப்படை உரிமைகள் விதி 14ஐ மீறுவதாகவும் உள்ளது.

9. இந்தத் திட்டத்தின் இயலுமையை தீர்மானிக்கவும், மத்திய சட்டம் 2013-ன் படியும் சூழலியல், சமூகப் பாதிப்புகள் குறித்த மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் சூழலியல் தொடர்பான பாதிப்புகள் குறித்த பொது விசாரணயின்றி இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது. இத்தகைய பொது விசராணை நடைபெற வேண்டுமானால் மேற்கூறிய பாதிப்புகள் குறித்த மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

நெடுஞ்சாலை திட்டங்களின் சூழலியல், சமூகப் பாதிப்புகள் குறித்த மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ளத் தேவையான வழிகாட்டு முறைகள் என்ற தலைப்பிட்ட வெளியீடு ஒன்றை இந்தியச் சாலைகள் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. சட்டபூர்வமாக பின்பற்ற வேண்டிய இந்த வழிகாட்டு முறைகள் (legally binding) குறித்த இந்த வெளியீடு கூறுவதாவது: சூழலியல் பாதிப்புகள் குறித்த மதிப்பீட்டு ஆய்வின் முக்கிய இலக்குகளில் ஒன்று “சூழலியல் பாதுகாப்பு என்ற கண்ணோட்டத்திலிருந்து குறிப்பிட்ட திட்டம் சரியா தவறா என்பதை அறிய தேவையான தகவல்களை வழங்குவதாகும்”. இத்தகைய மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ள தவறினால் நிலம் கையகப்படுத்துதல் என்பது சட்டரீதியாக செல்லாததுடன், அமுலில் உள்ள சட்டங்களின் நற்விளைவுகளை திட்டத்தினால் பாதிக்கப்படுவோருக்கு வழங்க மறுப்பதற்கு ஒப்பாகும்.

10. இந்தத் திட்டமானது பொது நலனுக்கு ஏற்றது, மாற்றுவகை திட்டங்கள் சாத்தியப்படாதவை, இந்தத் திட்டம் மட்டுமே சாத்தியக்கூறு வாய்ந்தது என்பன குறித்து நம்பத்தகுந்த வகையிலான வாதங்களை அரசாங்கம் முன்வைக்கவில்லை. தவறாகவும், ஏமாற்றும் எண்ணத்துடனும் தயாரிக்கப்பட்ட இயலுமை அறிக்கையின் அடிப்படையில் அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இந்த காரணங்களினால் நிலத்தை கையகப்படுத்தும் வழிமுறைகள் உடனடியாக கைவிடப்பட வேண்டும்.

இப்படிக்கு,

நித்தியானந்த் ஜெயராமன்
 

அடுத்த கட்டுரைக்கு