Published:Updated:

பாலாறு முதல் வாயலூர் வரை... உயிர்பெற்ற ஒரு கால்வாய்!

பாலாறு முதல் வாயலூர் வரை... உயிர்பெற்ற ஒரு கால்வாய்!
பிரீமியம் ஸ்டோரி
News
பாலாறு முதல் வாயலூர் வரை... உயிர்பெற்ற ஒரு கால்வாய்!

நீர்நிலைபா.ஜெயவேல்

க்கிரமிப்பு... எல்லைதாண்டிய பயங்கரவாதத்தைக் காட்டிலும் கொடியது. ஒரு துளி நிலத்தை ஆக்கிரமித்தால்கூட அதன் எதிர்விளைவு அதிகமாகவே இருக்கும். இத்தகையச் சூழலில் ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள், காடுகள் என்று ஆக்கிரமித்துக்கொண்டே செல்வதன் விளைவு எத்தனை கொடுமையானதாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

பாலாறு முதல் வாயலூர் வரை... உயிர்பெற்ற ஒரு கால்வாய்!

மனிதர்களுக்கு மட்டுமல்ல தாவரங்கள், உயிரினங்கள் என்று அனைவருக்கும் எதிரான ஒரு தாக்குதல்தான் இத்தகைய ஆக்கிரமிப்புகள் என்பதே உண்மை. இதற்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்கள்... பெரும்பாலும் பலனளிப்பதே இல்லை. காரணம், அரசும் அரசியல்வாதிகளும் ஆக்கிரமிப் பாளர்களுக்குக் காவல் அரணாக இருப்பதுதான்.

இத்தகையச் சூழலில், கிட்டத்தட்ட மண்மேடாக்கப்பட்டுவிட்ட சுமார் 5 கிலோமீட்டர் நீள பாசனக் கால்வாயை, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரே உத்தரவு மீட்டெடுத்திருக்கிறது என்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமே. இது, ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்குமே உற்சாகம் தரும் செய்தி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓடும் பாலாறு, அணுமின் நிலைய பூமியான கல்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது. இதற்கு அருகில் உள்ள வாயலூர் ஏரிக்கு, பாலாற்றில் இருந்து தண்ணீர்கொண்டு செல்கிறது வாயலூரான் கால்வாய். ஒரு காலத்தில் இங்கே செழித்தோங்கியிருந்த விவசாயம் மங்கத் தொடங்கியது மற்றும் மின்மோட்டார்களின் வரவு போன்ற காரணங்களால், கால்வாய்க் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. பயன்பாடு குறையவே, படிப்படியாகத் தூர்ந்தும் போனது. இதையடுத்து, விவசாயத் தோட்டம், வீடு என ஆளாளுக்குக் கால்வாயை ஆக்கிரமித்தனர். கால்வாயை நம்பி கொஞ்சநஞ்சம் விவசாயம் செய்துவந்தவர்கள்... பரிதாபமாகிப் போனார்கள். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கொடுமை நீடித்த நிலையில், தனிநபரான ரங்கநாதன், நீதிமன்றப் படிகளேற, மெள்ளமெள்ள கால்வாய் உயிர்பெற்று வருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பாலாறு முதல் வாயலூர் வரை... உயிர்பெற்ற ஒரு கால்வாய்!

இதுசம்பந்தமாக ரங்கநாதனிடம் பேசியபோது, “ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன் நான். அப்போது சொந்த நிலமெல்லாம் எங்களுக்குக் கிடையாது. வறுமையான சூழலில் ஐ.டி.ஐ படித்துவிட்டு, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உதவியாளராகச் சேர்ந்தேன். லோன் வாங்கி, சொந்த ஊரான ஆயப்பாக்கத்தில் விவசாய நிலம் வாங்கினேன். பணியிலிருந்து ஓய்வுபெற்றதும், வயல்வெளிக்குப் பக்கத்திலேயே வீடும் கட்டினேன். சாலைக்கும் வீட்டுக்கும் இடையில் தூர்ந்துபோன வாயலூரான் கால்வாய் இருந்தது. இந்த கால்வாய் பகுதியில் என் வீட்டுக்குச் செல்ல முடியாதவாறு, ஒருவர் ஆக்கிரமிப்புச் செய்து குடிசை கட்டிவிட்டார். ஊர்க்காரர்களை வைத்துப் பேசியபோது, ‘35 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் இடத்தை விடுவேன்’ என்று சொல்லிவிட்டார். அதைக் கொடுத்த பிறகும், ‘இன்னும் ஒரு லட்சம் கொடுத்தால்தான் வழிவிடுவேன்’ என்று சொன்னதோடு, வீட்டுக்குப் போக முடியாதவாறு வேலியும் அடைத்தார்.

இந்தப் பிரச்னை 2007-ம் ஆண்டிலிருந்து நடக்கிறது. இது தனிப்பட்ட எனக்கான பிரச்னைதான். ஆனால், கால்வாய் நிலத்தில் ஆக்கிரமிப்புச் செய்து இன்னும் பலருக்கும் தொல்லை கொடுப்பவர்களைச் சும்மா விடக்கூடாது என முடிவெடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தேன். ஆண்டுக்கணக்கில் கலெக்டர் ஆபீஸுக்கு நடக்கவிட்டார்களே தவிர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்துதான் 2014-ம் ஆண்டு நீதிமன்றத்தை அணுகினேன். கடந்த மார்ச் மாதம் ‘வாயலூரான் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாசனத்துக்குப் பயன்படுத்தும் வகையில் ஆழப்படுத்திச் சுத்தம் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டது நீதிமன்றம்.

பாலாறு முதல் வாயலூர் வரை... உயிர்பெற்ற ஒரு கால்வாய்!

இதுவரை சுமார் 3 கிலோமீட்டர் அளவுக்குத் தூர்வாரியிருக்கிறார்கள். மீதியைத் தூர்வாராமல் கிடப்பில் போட்டுவிட்டார்கள். மிதமான மழைக்கே அறுவடைக்குத் தயாராக இருந்த வயலில் மழைநீர் புகுந்து, நெல் முளைத்துவிட்டது. வாயலூர் ஏரிவரை இந்தக் கால்வாயை முழுமையாகத் தூர்வார வேண்டும். பணிகளைத் தரமாகவும் முழுமையாகவும் செய்து முடித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். இல்லையென்றால் விவசாய நிலங்களில் வெள்ளநீர் புகுந்து அழிவை ஏற்படுத்தும்” என்று சொன்னார்.

வாயலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி தாமோதரன், “வாயலூர் ஏரி மூலமாக 1,500 ஏக்கர் நிலத்துக்குப் பாசனம் நடக்குது. அந்தக் காலத்துல இந்தப் பகுதியை ‘சின்ன தஞ்சாவூர்’னுதான் அழைப்பாங்க. அந்த அளவுக்கு ஏரி, குளம், ஆறு எல்லாத்திலேயும் தண்ணீர் நிரம்பி இருக்கும். முப்போகமும் பாசனம் இருக்கும். சீரகச்சம்பா, குண்டஞ்சம்பா, நீலஞ்சம்பா, சிறுமணி, குள்ளகார், மோசனம்னு பல நெல் ரகங்கள் இந்தப் பகுதியில் விளையும். ஆறு, கால்வாய் படிப்படியாகத் தூர்ந்து, ஏரிகளும் வறண்டு போனதால, விவசாயம் செய்ய முடியாம நிலங்களை வித்துட்டாங்க பல விவசாயிகள்” என்றார்.

பாலாறு முதல் வாயலூர் வரை... உயிர்பெற்ற ஒரு கால்வாய்!

பனங்காட்டுச்சேரியைச் சேர்ந்த விவசாயி மணி, “பொதுப்பணித்துறை மூலமாகக் கால்வாயிலிருந்து மண் எடுத்து விற்கிறார்கள். 800 லோடு மண் எடுப்பதற்குப் பதில் 8,000 லோடு எடுக்கிறார்கள். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, கால்வாயைத் தூர்வாருவது இதையெல்லாம் நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், எங்கள் பட்டா நிலத்திலும் மண் எடுக்கிறார்கள். பயிர்களையும் சேதப்படுத்துகிறார்கள். வீட்டில் வளர்த்த பலா, மா, புளிய மரங்களையும் பெயர்த்தெடுத்தார்கள். இதையெல்லாம் கேட்டால், ‘நீதிமன்ற உத்தரவு’ என்று மிரட்டுகிறார்கள். மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டபோது, இதுபற்றி விசாரித்தவர், ‘இருபக்கமும் கரையை உயர்த்திய பிறகு, உபரி மண் இருந்தால் எடுத்து விற்பனை செய்யலாம்’ எனப் பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டார். ஆனால், கான்ட்ராக்ட் எடுத்திருப்பவர்கள், அதை மதிக்காமல் செயல்படுவதால், வேலை அப்படியே நின்றுவிட்டது” என்றார்.

பாலாறு முதல் வாயலூர் வரை... உயிர்பெற்ற ஒரு கால்வாய்!

செங்கல்பட்டு, நீர்வள ஆதாரத்துறை கீழ்பாலாறு மண்டல செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், “ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயைத் தூர்வார 64 லட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பிட்டுள்ளோம். அரசிடம் பணத்தைப் பெறமுடியாத சூழலில், யாருக்கு மண் தேவை இருக்கிறதோ அவர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான செலவைச் செலுத்தி, பின்பு இங்கிருக்கும் மண்ணை எடுத்து விற்பனை செய்து கொள்ளலாம் என்ற ஒப்பந்தத்தின்படி தூர்வாரி வருகிறோம்.
 
இதுவரை 3 கிலோமீட்டர் தொலைவு அகலப்படுத்திவிட்டோம். இரண்டு பக்கமும் கரையைக்கட்ட சொல்கிறார்கள். தண்ணீர் மட்டம் எங்கு உயருமோ அங்குதான் கரை தேவைப்படுகிறது. வெள்ளம் ஏற்பட்டால் அதைச் சரிசெய்யவோ, சமாளிக்கவோ பொதுப்பணித்துறை இருக்கிறது. நிச்சயமாக வெள்ளத்தால் பாதிப்பு இருக்காது. போதிய நிதி ஆதாரம் இல்லாததால் தற்காலிகமாகப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நிதி ஒதுக்கப்பட்டதும் மீண்டும் பணிகள் தொடரும்” என்று சொன்னார்.

ரங்கநாதனின் தொடர் போராட்டத்தால் விவசாயிகளுக்குக் கிடைத்த பொக்கிஷம் இந்த வாயலூரான் கால்வாய். இதேபோல ராமநாதன், ராபர்ட், ரஹீம் என ஊருக்கு ஊர் கிளர்ந்தெழுந்தால், தமிழகத்தை ஆக்கிரமிப்பின் பிடியிலிருந்து நிரந்தரமாகக் காப்பாற்ற முடியும்!