Published:Updated:

கலப்புப் பயிர் சாகுபடி... கையைக் கடிக்காத வருமானம்!

கலப்புப் பயிர் சாகுபடி... கையைக் கடிக்காத வருமானம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கலப்புப் பயிர் சாகுபடி... கையைக் கடிக்காத வருமானம்!

நம்மாழ்வார் வழியில் வெற்றி நடை!இயற்கை ஜி.பழனிச்சாமி - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

‘விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை’- ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் அடிக்கடி சொல்கிற வாக்கியம் இது. நம்மாழ்வார் என்ற தனி மனிதன், பல்லாயிரக்கணக்கானோரின் மனதில் விதைத்த ‘இயற்கை விவசாயம்’ என்ற விதை ஆல்போல் தழைத்து ஆயிரக்கணக்கான விழுதுகளை உருவாக்கியிருக்கிறது. அப்படி ஓர் விழுதுதான், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரோஜா குமார். தீவிர இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வரும் சரோஜா குமாரின் பண்ணை கரூர் மாவட்டம், பள்ளபட்டிக்கு அடுத்துள்ள லிங்கமநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ளது.  ஊரடியில், பழைமை பேசும் மச்சு வீட்டை உள்ளடக்கிய 20 ஏக்கர் பண்ணையில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது மண் பாதை. பாதையின் இருபுறங்களிலும் அணிவகுத்து நிற்கும் தென்னை மரங்கள். ஒருபுறம், காய்த்துக் குலுங்கி நிற்கும் முருங்கைத்தோப்பு. அதில், ஊடுபயிராகப் பூசணிக் கொடிகள். இன்னொருபுறம், காய்கறிச் செடிகள். மேட்டுப்பாத்தி, மூடாக்கு, தெளிப்புநீர்க் கருவிகள், பலவகை மரங்கள் எனச் செழித்துப் பசுமையாக இருக்கிறது, சரோஜா குமாரின் பண்ணை.

கலப்புப் பயிர் சாகுபடி... கையைக் கடிக்காத வருமானம்!

மண்ணில் ஊன்றியிருந்த முளைக் குச்சிகளில் வரிசையாகக் கட்டப் பட்டிருந்தன, நாட்டுப் பசுமாடுகள். அவற்றுக்கிடையே நின்றிருந்த கம்பீரமான ஜல்லிக்கட்டுக் காளையை வாஞ்சையாகத் தடவிக்கொண்டிருந்தார், சரோஜா குமார். நம்மைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தார். நாம் அந்தக் காளையைக் கவனிப்பதைப் பார்த்த சரோஜா, ‘‘பந்தயம்னு வந்தா துள்ளிக்குதிக்கிற வீரமான காளைதான். ஆனா, எங்கிட்ட சாந்தமாத்தான் இருக்கும். நான் அதுமேல பாசம் காட்டுறதால, அது என் மேல பாசம் காட்டுது. கன்னுக்குட்டியில் இருந்து இதை நான்தான் வளர்க்கிறேன்” என்றபடி தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார்.

செய்தி ஏற்படுத்திய மாற்றம்

“இருபது வருஷத்துக்கு முன்னாடி இந்த நிலத்தை வாங்கினோம். செம்மண் கலந்த சரளை பூமி. சூரியகாந்தி, மக்காச்சோளம், புகையிலை, வீரிய ரக வெள்ளைச்சோளம்னு ரசாயனம் பயன்படுத்திதான் விவசாயம் செஞ்சுக்கிட்டு இருந்தோம். பாலுக்காகக் கலப்பின பசுமாடுகளும் வெச்சிருந்தோம்.

அப்படியே போய்க்கிட்டு இருந்த சமயத்துலதான் எங்க பண்ணையில் திடீர் இயற்கை மாற்றம் ஏற்பட்டது. ஒருநாள், நாளிதழ்ல ‘சுனாமியால் உப்பு நிலங்களாக மாறிய நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை மீண்டும் செம்மைப்படுத்தும் முயற்சியில் நம்மாழ்வார் தலைமையிலான இயற்கை ஆர்வலர் குழு ஈடுபட்டுள்ளது. இரவு, பகல் பார்க்காமல் அக்குழுவினர் மேற்கொண்ட கடின முயற்சியால் பாழ்பட்ட நிலங்கள் மீண்டும் உயிர்பெற்று விவசாயம் செய்ய ஏற்றவையாக மாறி வருகின்றன’னு எழுதியிருந்தாங்க. அதுதான் நான் இயற்கை விவசாயம் மேற்கொள்றதுக்கான முதல் புள்ளியா அமைஞ்சது. அந்தச் செய்தியைப் படிச்சதில் இருந்தே நம்மாழ்வாரைச் சந்திச்சு நாலு வார்த்தை பாராட்டிப் பேசணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கான முயற்சிகளையும் செஞ்சுட்டு இருந்தேன். ஆனா, அதுக்கு வாய்ப்பு கிடைக்கலை.

என்னை மாற்றிய ஐந்து நாள்கள்

சில வருஷங்கள் கழிச்சு, ‘கரூர், குருதேவர் பள்ளிக்கூடத்துல நம்மாழ்வார் கலந்துக்கிற இயற்கை விவசாயக் கருத்தரங்கு நடக்கப்போகுது’ன்னு தகவல் கிடைச்சது. அந்தக் கருத்தரங்குல கலந்துகிட்டேன். அதுல நம்மாழ்வார், விளையாட்டு, விடுகதைன்னு எளிமையான வார்த்தைகள்ல இயற்கை விவசாயம் பத்திப் பேசப் பேச எனக்கும் இயற்கை விவசாயம் மேல ஆர்வம் வந்துடுச்சு. அதுக்கப்புறம் முழுமையா தெரிஞ்சுக்கணுங் கிறதுக்காக, வானகம் பண்ணையில நடந்த இயற்கை விவசாயப் பயிற்சியில் கலந்துகிட்டேன். நம்மாழ்வார் தலைமையில நடந்த அந்த ஐந்து நாள் பயிற்சியில... பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி, மீன் அமினோ அமிலம், அமுதக்கரைசல், அரப்பு மோர் கரைசல், மேட்டுப்பாத்தி, இருமடிப்பாத்தி, வட்டப்பாத்தி, மூடாக்கு, ஊடுபயிர், கலப்பு பயிர், நாட்டு மாடுகள்னு பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.

பயிற்சி முடிஞ்சு நம்மாழ்வார் கிட்ட விடை பெற்றபோது... ‘விவசாயம் என்பது லாபம் பார்க்கக்கூடிய தொழில் கிடையாது. அதுவொரு சேவை. அது ஒரு தவம். கோடி கோடியாகப் பணம் கொட்டும் எந்தப் பொருளை உற்பத்தி செஞ்சாலும், அது பசிக்கு உணவாகாது. விவசாயி ஒருத்தனால்தான் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் பசியைப் போக்க முடியும். பசி போக்கக் கொடுக்கிற உணவை நஞ்சில்லாமல் கொடுக்கணும். இதை, மனத்தில் நிறுத்தி உங்கள் இயற்கை விவசாயத்தை ஆரம்பிங்க’னு வாழ்த்தி அனுப்பினார். அந்த வார்த்தைகள் கல்வெட்டு போல மனசுல பதிஞ்சிடுச்சு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கலப்புப் பயிர் சாகுபடி... கையைக் கடிக்காத வருமானம்!

அதனாலதான் இன்னிக்கும் திசை மாறாமல் ஐயா காட்டின வழியில் போய்க்கிட்டிருக்கேன்” என்று, தான் இயற்கை விவசாயத்துக்கு வந்த கதை சொன்ன சரோஜா தொடர்ந்தார்.

வாங்கியபோது இரண்டு... இப்போது ஒன்பது

“பயிற்சி முடிஞ்சு வந்ததுமே கத்துக்கிட்ட விஷயங்களை ஒவ்வொண்ணா, நடைமுறைப்படுத்த ஆரம்பிச்சேன். இயற்கை விவசாயத்தின் முதுகெலும்பு பஞ்சகவ்யாதான். அது இருந்தாத்தான் ஒரு பண்ணை, முழு இயற்கை விவசாயப் பண்ணையா இருக்க முடியும். நாட்டு மாட்டுச் சாணம் கொண்டு தயாரிச்ச பஞ்சகவ்யா வீரியமா இருக்குங்கிறதால, தேடிப்பிடிச்சு ரெண்டு நாட்டுப் பசுக்களை வாங்கினேன். அது இப்ப ஒன்பது உருப்படிகளா பெருகியிருக்கு. அப்போ ஆறு ஏக்கர் நிலத்துல முருங்கை இருந்தது. பஞ்சகவ்யாவையும் அமுதக்கரைசலையும் தயாரிச்சு முதன் முதலா முருங்கைக்குத்தான் கொடுத்தேன். ‘ஊடுபயிர் மூலமா, உபரி வருமானம் கிடைக்கிறதோட களைகளையும் கட்டுப்படுத்த முடியும்’னு ஐயா சொல்லியிருந்ததால, முருங்கைக்கு இடையில் பூசணி விதைகளை விதைச்சிவிட்டேன். அதுக்கும் தொடர்ந்து 15 நாள்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யாவைக் கொடுக்க ஆரம்பிச்சேன். அறுவடை முடிஞ்ச பூசணிக்கொடிகளையும் அப்படியே வயல்லயே மூடாக்கா விட்டுடுவேன். அது மட்கி உரமாயிடுது. அதோட, களைகளும் வர்றதில்லை. முருங்கையில பூக்குற சமயத்துலயும், காய்ப்புப் பருவத்துலயும் பஞ்சகவ்யா தெளிக்கிறேன். அதனால பூக்கள் உதிர்றதில்லை.
 
பூச்சிகளை விரட்டும் செடிகள்


‘எந்த இடுபொருளையும் காசு கொடுத்து வாங்கக்கூடாது. விளைபொருள்களைத் தவிர எந்தப் பொருளும் பண்ணையை விட்டு வெளியில் போகக்கூடாது. அப்படிப்பட்ட தற்சார்பு விவசாயத்தை எல்லோரும் செஞ்சா, இந்த நாட்டுல விவசாயிகள் தற்கொலை செய்ய வேண்டியிருக்காது’னு ஐயா அடிக்கடி சொல்வார். அதைத்தான் இதுவரை கடைபிடிச்சிட்டு இருக்கேன். அவர் சொன்ன மாதிரியே ஒரே பயிரை சாகுபடி செய்யாம கலப்புப் பயிர் சாகுபடிதான் செஞ்சுட்டு இருக்கேன். அதனால, வருஷமெல்லாம் மகசூல் கிடைக்குது. சில பயிர், சில பூச்சிகளை விரட்டும். சில நன்மை செய்யும் பூச்சிகளை ஈர்க்கும். அதேமாதிரி சில, பயிர்களால மண்ணுக்கு சில சத்துகள் கிடைக்கும். குறிப்பா ஆமணக்கு, மக்காச்சோளம், செண்டுமல்லி மூணும் வரப்பில் இருந்தாலே பல பூச்சிகளால் வர்ற பாதிப்புகளைத் தடுத்திடலாம். அதை அப்படியே இங்க நடைமுறைப் படுத்தியிருக்கேன்.

மண்ணை மாற்றும் மூடாக்கு

கத்திரி, மிளகாய், வெண்டை, வெங்காயம், துவரைனு அஞ்சு பயிர்களைக் கலந்து மேட்டுப்பாத்தி முறையில் சாகுபடி செஞ்சிருக்கேன். அதனால, வருஷம் முழுவதுக்கும் எங்க வீட்டுக்குத் தேவையான நஞ்சில்லா காய்கறிகள் கிடைக்குது. மேட்டுப்பாத்தி முறைங்கிறதால எப்போதுமே மண் பொலபொலன்னு இருக்குது. தண்ணீர் தேங்க வாய்ப்பில்லாததால வேர் அழுகல் நோய் வராது. மேட்டுப்பாத்தியில் விவசாயக் கழிவுகளைப் போட்டு மூடாக்கு அமைச்சிடுவேன். அதனால, மண் வளமா மாறியிருக்கிறதோடு, ஏகப்பட்ட மண்புழுக்களும் பெருகியிருக்கு. எந்த இடத்துல மண்ணைப் பறிச்சாலும் மண்புழுக்களைப் பார்க்க முடியும்” என்ற சரோஜா, நிறைவாக,

“ரசாயன விவசாயம் செஞ்சபோது பெருசா லாபமில்லை. இயற்கை விவசாயம், மதிப்புக்கூட்டல்னு மாறின பிறகுதான் ஓரளவு லாபம் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. என்னைப் பொறுத்தவரை நம்மாழ்வார் ஐயா சொன்னதுபோல... விவசாயத்தை ஒரு சேவையாத்தான் செஞ்சிட்டிருக்கேன்.

நிரந்தரமா நாலு பேர் பண்ணையில் வேலை செய்றாங்க. அவங்களுக்குச் சம்பளம் கொடுக்கவும்; எங்க குடும்பச் செலவு, பிள்ளைகள் படிப்புச் செலவை ஈடுகட்டவும் வருமானம் கிடைச்சா போதும்கிறதுதான் எங்க ஆசை. இயற்கை விவசாயம் எங்களைக் கைவிடலை. கையைக் கடிக்காத அளவுக்கு வருமானம் வருது. நஞ்சில்லாத சாப்பாடு சாப்பிடுறோம். நோயில்லா வாழ்க்கை வாழ்றோம். அதனால ஆத்ம திருப்தி இருக்கு.

இயற்கை விவசாயத்துக்கு மாறின பிறகு, ஊருக்காக வாழுற போலி ஆடம்பர வாழ்க்கை இல்லை. எளிமையான வாழ்க்கையின் பக்கம் மனசு திரும்பிடுச்சு. நம்மாழ்வார் ஐயா, விவசாயம் மட்டும் கற்றுத் தரலை. எளிமையான வாழ்க்கை முறைகளையும் சொல்லிக் கொடுத்திருக்கார். ‘இனி உள்ள காலம் வரை நம் வழி நம்மாழ்வார் வழி’னு அந்த வழியில் பயணிச்சுட்டு இருக்கேன்” என்றார் மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு, சரோஜா குமார், செல்போன்: 94894 34551

மதிப்புக்கூட்டினால் கூடும் லாபம்

“ஒவ்வொரு விவசாயியும் அவங்க பண்ணையில் விளையுற பொருள்களில் ஒரு பகுதியையாவது மதிப்புக்கூட்டியப் பொருளாக மாத்தணும். அப்போதான், கட்டுபடியாகுற விலை கிடைக்கும்’னு ஐயா சொல்லுவார். அதை மனசுல வெச்சு தேங்காய் எண்ணெய் உற்பத்தி செஞ்சுட்டு இருக்கேன். மொத்தம் 100 தென்னை மரங்கள் இருக்கு. அதுல முத்தின தேங்காய்களை மட்டும் பறிச்சு, ஒரு பகுதியைத்தான் கொப்பரையா மாத்தி மரச்செக்குல அரைச்சு, தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்றேன். ஆட்டும்போது கிடைக்கிற தேங்காய்ப் பிண்ணாக்கை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கிறேன். மாடுகள் விரும்பிச் சாப்பிடுது. மீதித் தேங்காய்களைச் சந்தையில விற்பனை செஞ்சிட்டு இருக்கேன். 

கலப்புப் பயிர் சாகுபடி... கையைக் கடிக்காத வருமானம்!

நாட்டு மாடுகளுக்கு மேய்ச்சல் முக்கியம்

தொழுவத்துல கட்டி வெச்சுப் பசுந்தீவனம் கொடுத்தாலும், நாட்டு மாடுகளுக்கு மேய்ச்சல் அவசியம். இயற்கையில் வெளைஞ்சு கிடக்கும் கொழுக்கட்டைப்புல், வேலிகளில் படர்ந்து கிடக்கும் செடிகொடிகள்னு அலைஞ்சு மேயும் போதுதான் மாடுகள் இயற்கையான வாழ்வியல் சூழ்நிலையில் வளரும். நோய்களும் வராது. அதனால, நாட்டு மாடுகளுக்காகவே நாலு ஏக்கர்ல மேய்ச்சல் நெலம் வெச்சிருக்கேன். அதேமாதிரி, முழுமையான இயற்கை விவசாயப் பண்ணையா இருக்கணும்னா காடு மாதிரி மரங்களும் இருக்கணும். அப்போதான் பறவைகள் வரும். மாசுக்கள் குறையும். அதுக்காக ஒரு ஏக்கர்ல நாட்டு வேம்பு, மலை வேம்பு, மா, தீக்குச்சி மரம், குமிழ், தேக்குனு பலவகை மரங்களை வளர்த்திட்டு இருக்கேன். மரங்களுக்கும் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல்னு கொடுத்ததில் அடர் வனமா மாறிடுச்சு” என்கிறார் சரோஜா குமார்.

தேனீக்களை வரவைக்கும் அரப்புமோர் கரைசல்!

“பத்து லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி அரப்புமோர் கரைசலைக் கலந்து 15 நாள்களுக்கு ஒருமுறை கைத்தெளிப்பான் மூலம் பயிர்களுக்குத் தெளித்து வந்தால், வளர்ச்சி விரைவாகும். பூக்கள் நன்றாக பூக்கும். இதனால் வயலுக்குள் அதிகளவு தேனீக்கள் வந்து, மகரந்தச் சேர்க்கை அதிகரிக்கும்.

கலப்புப் பயிர் சாகுபடி... கையைக் கடிக்காத வருமானம்!

அமுதக்கரைசல்

பத்து கிலோ பசுமாட்டுச் சாணம், 10 லிட்டர் மாட்டுச் சிறுநீர், 250 கிராம் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை 100 லிட்டர் தண்ணீரில் இட்டு, கலந்து 24 மணி நேரம் வைத்திருந்தால் அமுதக்கரைசல் தயாராகிவிடும். இதை பாசன நீரில் 15 நாள்களுக்கு ஒருமுறை கலந்து விடுவோம்” என்கிறார், சரோஜா.