Published:Updated:

அமெரிக்க வாழ் இந்தியரின் ஆத்மார்த்த விவசாயம்...

அமெரிக்க வாழ் இந்தியரின் ஆத்மார்த்த விவசாயம்...
பிரீமியம் ஸ்டோரி
News
அமெரிக்க வாழ் இந்தியரின் ஆத்மார்த்த விவசாயம்...

மலைப்பயிர்களுக்கு ஒரு மாதிரிப் பண்ணை!இயற்கைஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார்

பாரம்பர்யமாக விவசாயம் செய்துவரும் பலரே விவசாயத்தை விட்டு விலக நினைக்கையில், விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத இளைஞர்கள், இயற்கை விவசாயத்தைக் கற்றுக்கொண்டு விவசாயம் செய்ய ஆர்வமாக வருகிறார்கள். ‘லட்சங்களில் வரும் ஊதியம், ஆடம்பரமான வாழ்க்கை போன்றவற்றிலிருந்து விலகி விவசாயத்துக்குள் உங்களை எது இழுத்து வருகிறது?’ என்று கேட்டால், அந்த இளைஞர்கள் சொல்லும் பதில், “விவசாயத்தில் மன அமைதி கிடைக்கிறது. ரசாயன நச்சுக்களால் உணவே விஷமாகிக் கிடக்கும் காலகட்டத்தில், நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்து தருவதில் ஓர் ஆத்மார்த்தமான மகிழ்ச்சி இருக்கிறது. இந்த மகிழ்ச்சிக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாது” என்பதுதான்.

அமெரிக்க வாழ் இந்தியரின் ஆத்மார்த்த விவசாயம்...

இதேபோல, அமெரிக்காவில் கைநிறைய சம்பளம் கொடுத்த வேலையை உதறிவிட்டு, இந்தியாவுக்கு வந்து ஆத்மார்த்தமாக இயற்கை விவசாயம் செய்து கொண்டிருக்கிறார், பிரியா.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், தாண்டிக்குடிக்கு அருகேயுள்ள மங்களம்கொம்பு காமனூர் பகுதியில் இருக்கிறது, ‘பிரியா எஸ்டேட்’. சித்தரேவு-தாண்டிக்குடி மலைப்பாதையில் மங்களம்கொம்பு கிராமத்தைத் தாண்டியதும் இடதுபுறமாகத் திரும்புகிறது, காமனூர் சாலை. அந்தச் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரம் பயணித்தால் பிரியா எஸ்டேட் உள்ளது.  கொஞ்சம் வெயில், கொஞ்சம் குளிர் என்று இதமான சூழல் நிலவிக்கொண்டிருந்த ஒரு காலைப்பொழுதில், பிரியாவைச் சந்தித்தோம். “வெளிநாட்டு வேலைக்குப் போய்ப் பணம் சம்பாதிக்கணும்கிறது, திருப்தியான வாழ்க்கை வாழ்றதுக்காகத்தான். ஆனா, அதுக்காகப் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கு. உறவுகளை, உணர்வுகளை இழந்து இயந்திரமாக வாழ வேண்டிய கட்டாயத்துக்குப் போயிடுறோம். நாலு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் நானும் அப்படித்தான் இருந்தேன். அமெரிக்காவுல சிகாகோ நகரத்துல கணவர், மகளோடு இருந்தேன். இப்போ நான், இங்க வந்து இயற்கை விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். எனக்குச் சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஆர்வம் அதிகம். அம்மா ஊரு கோவில்பட்டி. அங்க சின்ன வயசுல தாத்தாகூட வயல்ல சுத்துவேன். அப்பா, மதுரையில தோட்டம் வெச்சிருந்தார். நாத்து நடுறது, களை பறிக்கறதுனு எல்லா வேலையும் செய்வேன். ஒரு கட்டத்துல எங்க அப்பா விவசாயமே வேணாம்னு முடிவு பண்ணி நிலத்தை எல்லாம் வித்துட்டாரு. பதினேழு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் முடிச்சு அமெரிக்கா போய்ட்டேன். அவரும் நானும் மென்பொருள் துறையில வேலை பார்த்தோம். அப்பப்போ ஊரைப்பத்தி நினைக்கிறப்பல்லாம் தோட்டமும் நினைவுக்கு வந்திடும். ஒரு தோட்டம் வாங்கி விவசாயம் செய்யணும்னு நினைச்சுட்டே இருப்பேன். என்னோட எண்ணத்துக்குக் கணவரும் ஆதரவு கொடுத்தார். ஆனாலும் காலம் ஒத்து வரலை. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அமெரிக்க வாழ் இந்தியரின் ஆத்மார்த்த விவசாயம்...

அப்படியே போய்ட்டிருந்தப்போ, நண்பர் ஒருத்தர் கேன்சர்ல இறந்துட்டார். அவருக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. உடற்பயிற்சி, தியானம்னு கோடு போட்டு வாழ்ந்த மனுசன். அவர் சின்ன வயசிலேயே இறந்ததைத் தாங்கிக்கவே முடியலை. உணவுப் பொருள்கள் உற்பத்திக்காகப் பயன்படுத்துற ரசாயனங்கள்தான் கேன்சருக்கான மூலக்காரணம்னு தெரிய வந்ததும் இயற்கை விவசாயத்துப் பக்கம் கவனம் திரும்புச்சு. அப்புறம் அது தொடர்பான தகவல்களைச் சேகரிக்க ஆரம்பிச்சோம். அம்மாகிட்ட அதுபத்தி பேசினப்ப ‘பசுமை விகடன்’ பத்திச் சொன்னாங்க. ஆன்லைனுக்கான சந்தா கட்டி படிக்க ஆரம்பிச்சேன். அதைப் படிக்க ஆரம்பிச்ச பிறகுதான், எங்க வாழ்க்கையில பல விஷயங்களை மாத்திக்க ஆரம்பிச்சோம்.

அமெரிக்க வாழ் இந்தியரின் ஆத்மார்த்த விவசாயம்...

உலகத்தைத் திருத்த முடியலைன்னாலும், குறைஞ்சபட்சம் நாமளாவது இயற்கை விவசாயத்துல விளைபொருளை உற்பத்தி செஞ்சு, சாப்பிடலாம்னு தோணுச்சு. உடனே வீட்டுத்தோட்டம் போட்டுட்டோம். அமெரிக்காவில் நாங்க இருந்த பகுதி பயங்கரமான குளிர். வருஷத்துல நாலு மாசம்தான் செடிகளை வெளியில் வைக்க முடியும். மத்த நாள்கள்ல தொட்டிகளை வீட்டுக்குள்ள எடுத்து வெச்சிடுவோம். வீட்டுத்தோட்டத்துல உற்பத்தியான பொருளைச் சாப்பிட்ட பிறகு, எங்களுக்கே ஒரு திருப்தி கிடைச்சது. நாம உற்பத்தி செஞ்ச பொருளை சாப்பிடுறோம்னு சந்தோஷமா இருக்கும்.

அமெரிக்காவில் ‘கம்யூனிட்டி கார்டன்’னு ஒரு திட்டம் வெச்சிருக்காங்க. அரசாங்கமே பிளாட் மாதிரி பிரிச்சு ஒரு ஏக்கர், ரெண்டு ஏக்கர்னு விவசாயம் செய்றதுக்காக நிலத்தைக் குத்தகைக்குக் கொடுப்பாங்க. எங்க வீட்டுக்குப் பக்கத்திலேயே அப்படி ஒரு பிளாட் கிடைச்சது. அதுல, நாங்க இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சோம். எங்க பக்கத்து பிளாட்கள்ல வேற வேற நாட்டுக்காரங்க விவசாயம் பாத்தாங்க. வார விடுமுறை நாள்கள்ல ஒவ்வொருத்தரும் அவங்கவங்க நாட்டுப் பயிர்களைப் பத்தித் தெரிஞ்சுக்குவோம். விதைகளைப் பரிமாறிக்குவோம். எங்க பிளாட்ல விளையுற காய்கறிகளை அறுவடை செஞ்சு, எங்க தேவைக்குப் போக மீதியை மத்தவங்களுக்குக் கொடுத்திடுவோம்.

அமெரிக்க வாழ் இந்தியரின் ஆத்மார்த்த விவசாயம்...

என்னதான் அமெரிக்காவுல விவசாயம் பார்த்தாலும், நம்ம மண்ணுல விவசாயம் பாக்கணுங்கிற எண்ணம், மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்துச்சு. ஆனா, என்னோட எண்ணத்தை அப்பா ஏத்துக்கலை” என்ற பிரியா சில நொடிகள் பழைய நினைவுகளில் ஆழ்ந்தார்.

தொடர்ந்து பேசிய பிரியா, “சில வருஷத்துக்கு முன்னாடி நெருங்கின உறவுக்காரங்க ஒருத்தர் இந்தியாவில் இறந்துட்டாங்க. உடனே எங்களால அமெரிக்காவில் இருந்து கிளம்ப முடியாம, ஒரு நாள் தாமதம் ஆயிடுச்சு. அதுவரை உடலை ஐஸ் பாக்ஸ்ல வெச்சிருந்தாங்க. அந்தச் சமயத்துல எங்க அத்தை, ‘எனக்கு ஒண்ணுன்னாலும் இப்படித்தான உங்களால வர முடியும்’னு சொல்லி வருத்தப்பட்டாங்க. அது மனசளவுல எங்களை ரொம்பப் பாதிச்சுடுச்சு. இங்க துக்கக் காரியம் முடிஞ்சு அமெரிக்கா போனதும், நானும் அவரும் இதபத்தி பேசினோம். அப்போ, ஒருத்தர் மட்டும் அமெரிக்காவில் இருந்துக்கலாம். இன்னொருத்தர் ஊர் திரும்பிடலாம்னு முடிவு பண்ணினோம். உடனடியா, வேலையை ராஜினாமா பண்ணிட்டு நான் இந்தியா வந்துட்டேன். என் கணவரும், மகளும் இப்பவும் அங்கேதான் இருக்காங்க.

அமெரிக்க வாழ் இந்தியரின் ஆத்மார்த்த விவசாயம்...

அதுக்கப்புறம்தான் இந்த இடத்தை வாங்கினோம். வாங்கும்போது பராமரிப்பு இல்லாம புதராத்தான் இருந்துச்சு. மொத்தம் 80 ஏக்கர். நாப்பது ஏக்கர் நிலத்தைச் சரி செஞ்சு பயன்படுத்திக்கிட்டு இருக்கோம். மீதி நிலம் சும்மாதான் இருக்கு. வாங்குறப்பவே கொஞ்சம் காபி செடிகள் இருந்துச்சு. இன்னும் கொஞ்சம் காபி, அவகோடா, பலானு நடவு செஞ்சேன். அதோட கிட்டத்தட்ட 10 ஆயிரம் மரக்கன்னுகளை நட்டிருக்கேன். நாலரை வருஷத்துல எல்லா மரங்களும் நல்லா வளர்ந்து நிக்குது. நம்மாழ்வார் அய்யா, பாலேக்கர் அய்யா ரெண்டு பேரோட விவசாய சித்தாந்த முறையைத்தான் இங்கே  பயன்படுத்துறேன்.

நான் விவசாயம் ஆரம்பிச்ச புதுசுல, என்னோட நண்பர் அன்பழகன், என்னைப் பத்தி நம்மாழ்வார் அய்யாகிட்ட சொல்லி இருக்கார். ‘அமெரிக்காவுல பார்த்த வேலை, குடும்பம் ரெண்டையும் விட்டுட்டு ஒரு பொண்ணு விவசாயம் பார்க்குறதை நாம நிச்சயம் பாராட்டணும்யா’னு அவர்கிட்ட சொன்னதோட, என்கிட்ட போன்ல கூப்பிட்டு ‘வானகத்துல ஒரு பயிற்சி நடக்குது, வந்து கலந்துக்கங்க’னு சொன்னாரு. நானும் அந்தப் பயிற்சியில கலந்துகிட்டேன். ஏற்கெனவே பசுமை விகடன்ல படிச்சிருந்த பல விஷயங்களை அங்க நேரடியா கத்துகிட்டது, எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு. தாண்டிக்குடி காபி போர்டுல இருக்குற சௌந்தர்ங்கிற பேராசிரியரும் அடிக்கடி ஆலோசனை கொடுப்பார்.

ஒருமுறை, நம்மாழ்வார் அய்யா என்னோட எஸ்டேட்டுக்கு நேரடியா வந்து ஒரு நாள் முழுக்கத் தங்கி, பல ஆலோசனைகளைச் சொன்னாரு. மலைப்பயிர்களுக்கான இயற்கை விவசாய மாதிரி பண்ணையா இதை மாத்தணும்னு சொன்னாரு. அய்யா இப்ப நம்ம கூட இல்லைனாலும், நான் அவரோட கருத்துகளைச் செயல்படுத்திகிட்டு இருக்கேன். என்னால முடிஞ்சது உள்ளூர் விவசாயிகளை மாத்துறதுதான். அவங்களுக்கு இயற்கை விவசாயம் சம்பந்தமான விழிப்பு உணர்வை ஏற்படுத்துறேன். இங்க இருக்கிற குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்கிறதோடு, இயற்கை வாழ்வியலையும் சொல்லிக் கொடுக்கிறேன்.

கிராமத்துல, அடி மாடா விற்பனை செய்ய இருந்த அஞ்சு மாடுகளை மீட்டு எங்க பண்ணையில வெச்சிருக்கேன். அந்த மாடுகள்ல கிடைக்கிற சாணம், சிறுநீரை வெச்சுதான் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் எல்லாம் தயார் செஞ்சு பயன்படுத்துறேன். மலையில அதிகளவு ரசாயனம் பயன்படுத்துறாங்க. ஒருத்தர் என்ன பூச்சிக்கொல்லி தெளிக்கிறார்னு அடுத்த விவசாயிக்கு தெரியக்கூடாதுனு கடையில வாங்கிட்டு வரும்போதே லேபிளை கிழிச்சுட்டுத்தான் கொண்டு வருவாங்க. இந்தப்பகுதியில், ஒருமுறை வைரஸ் தாக்கி சுத்தியிருந்த எல்லார் தோட்டத்திலேயும் சௌசௌ செடிகள் கருகிப்போச்சு. ஆனா, இயற்கை முறையில் வளர்ந்த என் பண்ணையோட செடிகள் மட்டும் பசுமை மாறாம அப்படியே இருந்துச்சு. அதைப் பார்த்துட்டு பக்கத்து விவசாயிகள், ‘என்ன மருந்தடிச்சீங்க?’னு கேட்டாங்க. அப்போ, அவங்ககிட்ட ஜீவாமிர்தம், மூலிகைப் பூச்சிவிரட்டிகள் பத்தி சொன்னேன். அதைக் கேட்டு ரெண்டு பேர் இயற்கை விவசாயத்துக்கு மாற முன்வந்திருக்காங்க” என்ற பிரியா நிறைவாக, “இந்தப் பண்ணை ஆரம்பிச்சதிலிருந்து என் கணவர்கிட்ட இதுக்காக ஒரு பைசா வாங்கல. இங்க வர்ற வருமானத்தை வெச்சே பராமரிப்பு வேலைகளைப் பாத்துகிட்டு இருக்கேன். அடுத்த வருஷத்துல இருந்து காபி, மிளகுலயும் வருமானம் வர ஆரம்பிச்சுடும். வாழையும் வருஷ வருமானம் கொடுத்துட்டு இருக்கு. இங்க வீட்டு வேலைக்குக்கூட ஆள் வெச்சுக்கலை. பெரும்பாலும் அடுப்பில்லாத சமையல்தான். நான் இங்க இயற்கை அன்னை துணையோட ரொம்ப ஆத்மார்த்தமான ஒரு வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கேன்.

அமெரிக்க வாழ் இந்தியரின் ஆத்மார்த்த விவசாயம்...

இதுக்கு விலை மதிப்பே இல்லை. இந்த எஸ்டேட்டைப் பொறுத்தவரை இவ்வளவு பணம் நான் சம்பாதிச்சேன்னு சொல்ல இன்னும் சில வருஷங்கள் ஆகும். இங்க போதுமான வருமானம் வர ஆரம்பிச்ச பிறகு, என் குடும்பமும் இங்கேயே வந்துடும். இந்த நேரத்துல எனக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்துட்டு இருக்கிற என்னோட கணவருக்கும் குடும்பத்தினருக்கும் நன்றி சொல்லணும். இங்க நான் நடவு செஞ்சிருக்கிற 10 ஆயிரம் மரங்கள் மூலமா வெளியாகிற ஆக்சிஜன், எத்தனையோ உயிர்களுக்குச் சுவாசக்காற்றா இருக்கு. அதை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கும். இன்னும் சில ஆண்டுகள்ல இது லாபகரமான இயற்கை விவசாயப் பண்ணையா மாறிடும்” என்றார், நம்பிக்கையுடன். 

தொடர்புக்கு, பிரியா, செல்போன்: 96000 65864

மூலிகை வனம்

“இ
ங்க பலவகையான மூலிகைகள் அடங்கின ஒரு மூலிகைப் பண்ணையையும் உருவாக்கிட்டு இருக்கேன். மூலிகைகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்துறதுதான் இதோட நோக்கம். இங்க இருக்கிற குழந்தைகளுக்கும் இது தொடர்பான விழிப்பு உணர்வு கொடுக்கத் திட்டம் வெச்சிருக்கேன்” என்கிறார், பிரியா.

சவாலே சமாளி!

“இந்த எஸ்டேட்ல ஆரம்பத்துல திருட்டு அதிகமா நடந்துகிட்டு இருந்தது. பிறகு, பல இடங்கள்ல கேமரா வெச்சு ரெண்டு, மூணு பேரைப் பிடிச்சோம். அதுக்குப் பிறகு, இப்ப வரைக்கும் திருட்டுப் பிரச்னை இல்லை. இங்க இருக்கிற பெரிய பிரச்னை காட்டுமாடுகள்தான். போன முறை வறட்சியிலும் மூவாயிரம் வாழை நட்டிருந்தேன். அறுவடைக்கு நாலு மாசம் இருக்கும்போது, கூட்டமா வந்த மாடுகள், அத்தனை வாழை மரங்களையும் நாசம் பண்ணிடுச்சு. ஆனாலும், அதுங்க மேல கோபப்பட முடியலை. மறுபடியும் வாழை சாகுபடி செஞ்சிருக்கேன்.

நான் முதலாளினு சொல்லிகிட்டு மேற்பார்வை மட்டும் பார்க்கிறதில்லை. ஆளுங்களோட சேர்ந்து எல்லா வேலையையும் பார்ப்பேன். கீழயிருந்து சிப்பத்தைத் தோள்ல தூக்கிட்டு வருவேன். ஏலச்சந்தைக்கு நான்தான் பொருளைக் கொண்டுபோவேன். ஆரம்பத்துல எனக்குச் சந்தையில பலத்த எதிர்ப்பு இருந்துச்சு. ஆனா, இப்ப எல்லோரும் நண்பர்களாகிட்டாங்க” என்கிறார், பிரியா.