Published:Updated:

நாட்டுப் பருத்தியில் நல்ல லாபம்... வறட்சியிலும் செழிக்கும் விளைச்சல்!

நாட்டுப் பருத்தியில் நல்ல லாபம்...  வறட்சியிலும் செழிக்கும் விளைச்சல்!
பிரீமியம் ஸ்டோரி
News
நாட்டுப் பருத்தியில் நல்ல லாபம்... வறட்சியிலும் செழிக்கும் விளைச்சல்!

மகசூல்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ராபர்ட்

ங்கிலேயர் காலத்தில்,  இந்திய பருத்தி விவசாயிகளுக்கு ஆரம்பித்த சோதனை இன்றளவும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நஷ்டமில்லாமல் பாரம்பர்ய முறையில் நாட்டுப்பருத்தி சாகுபடி செய்து கொண்டிருந்த விவசாயிகளை வீரிய விதைகள், பசுமைப்புரட்சி, மரபணு மாற்று விதைகள் என மாற்றியதன் விளைவு... பருத்தி விவசாயிகளின் கொத்துக்கொத்தான மரணம்தான். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விதர்பாவில் பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டுபோய்க் கொண்டிருக்கும் விஷயத்தை அவ்வளவு எளிதாக யாரும் கடந்து போய்விட முடியாது. இதேபோல மழையின்மை, விலையின்மை, அதிக  உரம் மற்றும் பூச்சிக்கொல்லிச் செலவு... எனப் பல கஷ்டங்களுடன்தான் தமிழ்நாட்டிலும் பருத்தி சாகுபடி நடந்து வருகிறது. 

நாட்டுப் பருத்தியில் நல்ல லாபம்...  வறட்சியிலும் செழிக்கும் விளைச்சல்!

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும், இயற்கை விவசாய முறையில் பாரம்பர்ய ரக பருத்தி சாகுபடியில் ஈடுபடும் பல விவசாயிகள் கணிசமான லாபம் எடுத்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலூகா, சிறுகண்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நட்சத்திரன்.

ஒரு பிற்பகல் வேளையில் பருத்தியை அறுவடை செய்துகொண்டிருந்த நட்சத்திரனைச் சந்தித்தோம். நம்மை வரவேற்றுப் பேசிய அவர், ‘‘விவசாயக் குடும்பத்துல பிறந்தவன்தான், நான்.

எஸ்.எஸ்.எல்.சி வரைக்கும் படிச்சிட்டு, சத்துணவு அமைப்பாளரா வேலைபார்த்து ரிட்டையர்டு ஆயிட்டேன். வேலையில் இருக்கிறப்பவே நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செஞ்சுட்டுதான் இருந்தேன். ஓய்வுக்குப் பிறகு முழு நேரமா விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன். இப்போ நாலு ஏக்கர் குத்தகை நிலத்துல விவசாயம் செய்றேன். இது சுண்ணாம்பும் மணலும் கலந்த நிலம். அதனால, மானாவாரியில பருத்தியும் சோளமும் சாகுபடி செஞ்சிட்டு இருக்கேன். போன வருஷம் ஆவணி மாசம் மானாவாரியா அரை ஏக்கர்ல கருங்கண்ணி என்கிற நாட்டுப் பருத்தி போட்டேன். அதுதான் இப்போ அறுவடையாகிட்டு இருக்கு” என்ற நட்சத்திரன், நிலத்தில் இருந்த பருத்திச் செடிகளைக் காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார்.
“2016-ம் வருஷம், பெரம்பலூர்ல ‘தமிழ்நாடு இயற்கை வேளாண் இயக்கம்’ சார்பா நடந்த விதைத் திருவிழாவுலதான், இந்தக் கருங்கண்ணி நாட்டுப்பருத்தி விதை கிடைச்சது. இதை ஆடி மாசம்தான் விதைக்கணும். ஆனா, ஆடியில மழை கிடைக்கலை. அதனால, ஆவணி 13-ம் தேதிதான் விதைச்சேன். இந்த வருஷம் கடுமையான வறட்சி. விதைச்சதிலிருந்து இதுவரைக்கும் மொத்தம் மூணே மூணு மழைதான் கிடைச்சிருக்கு. அதுவும் சொல்லிக்கிற மாதிரி கிடையாது. சும்மா பேருக்கு பேஞ்ச மாதிரிதான். ஆனாலும் நாட்டு ரகங்கிறதால, செடிகள் செழிப்பா வளர்ந்திருக்கு. உயரமாப்போனா பறிக்க முடியாதுனு, நுனி கிள்ளி விட்டதாலதான் இவ்வளவு குட்டையா இருக்கு. இல்லாட்டி இன்னும் உசரமா வளர்ந்திருக்கும். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நாட்டுப் பருத்தியில் நல்ல லாபம்...  வறட்சியிலும் செழிக்கும் விளைச்சல்!

சித்திரையில கோடை உழவு ஓட்டி வெச்சுருந்தேன். ஆவணியில் மழை கிடைச்சதும் ரெண்டு சால் உழவு ஓட்டிட்டு ஒரு டன் எருவைப் போட்டு மீண்டும் ஒரு தடவை உழுது விட்டேன். ஒரு கிலோ கருங்கண்ணி விதையை ரெண்டு மணி நேரம் சாணிப்பால்ல ஊற வெச்சு, மூணு அடி இடைவெளியில் விதைச்சு விட்டேன். 15 நாள்களுக்கு  ஒரு தடவை 3 லிட்டர் பஞ்சகவ்யாவை 90 லிட்டர் தண்ணீர்ல கலந்து, சாயங்கால நேரத்துல தெளிச்சுவிட்டேன். 75-ம் நாள் 900 மில்லி மீன் அமினோ அமிலத்தை 150 லிட்டர் தண்ணீர்ல கலந்து தெளிச்சு விட்டேன். 90-ம் நாளுக்கு மேல அங்கொண்ணும் இங்கொண்ணுமா பூக்க ஆரம்பிச்சது. ஒவ்வொரு செடியிலேயும் கிட்டத்தட்ட 100 காய்கள் அளவுக்குக் காய்ச்சது. சீரா பஞ்சு வெடிச்சு வந்துச்சு. முதல் பறிப்பு முடிஞ்சு இப்போ அடுத்த பறிப்புக்குத் தயாராகிடுச்சு. அரை ஏக்கர்ல முதல் பறிப்பிலேயே மூன்றரை குவிண்டால் மகசூலாச்சு. இன்னும் இரண்டு, மூணு முறை பறிக்கலாம்னு சொல்றாங்க. அடுத்தடுத்த பறிப்புகள்ல இன்னும் ரெண்டரை குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்.

சுத்துப்பட்டுல கம்பெனி விதை பருத்தி போட்டவங்களுக்கெல்லாம் கொஞ்சம் கஷ்டம்தான். நல்ல விளைச்சல் இல்லை. ஆனா, நாட்டுப் பருத்தி போட்டதால நான் தப்பிச்சுக்கிட்டேன். பி.டி பருத்தியை அறிமுகப்படுத்துனப்போ பூச்சி, புழுவெல்லாம் வராதுனுதான் சொன்னாங்க. ஆனா, அதுலயும் காய்ப்புழு, வெள்ளை ஈ எல்லாம் வர ஆரம்பிச்சிடுச்சு. அதனால வீரியமான பூச்சிக்கொல்லி அடிக்க வேண்டியிருக்கு. அதில்லாம வறட்சியையும் அதிக மழையையும் பி.டி பருத்தி தாங்குறதில்லை. மழை கிடைச்சு நல்லபடியா விளைச்சல் வந்தா கம்பெனி பருத்தியில் ஒரு ஏக்கருக்கு 10 குவிண்டாலுக்கு மேல மகசூல் கிடைக்கும். ஆனா, அந்தளவுக்கு பராமரிப்பு பார்க்க செலவு பண்ணணும். ஆனா நாட்டுப் பருத்தியில் செலவு குறைவு. கிட்டத்தட்ட அதே அளவு மகசூலும் கிடைச்சுடும். அதில்லாம அடுத்த போகம் விதைக்கிறதுக்கு நாமளே விதை எடுத்து வெச்சுக்கலாம். கம்பெனி பருத்தி போட்டா ஒவ்வொரு தடவையும் விதையை வெளியேதான் வாங்கணும். ஆனா, நாட்டுப் பருத்தி அப்படியில்லை. முப்பது, நாப்பது வருஷத்துக்கு முன்னாடி, இந்தப் பகுதியில ‘குப்பன் பருத்தி’ங்கற நாட்டுப் பருத்தியைத்தான் சாகுபடி செஞ்சுட்டு இருந்தோம். அதுல ஊடுபயிரா மிளகாய், கொத்தமல்லியையும் சாகுபடி செய்வோம். அதுலயும் ஒரு வருமானம் கிடைச்சுடும். கருங் கண்ணியிலேயும் அடுத்த வருஷம் ஊடுபயிர் சாகுபடி செய்யலாம்னு இருக்கேன். இப்போ எங்க பகுதியில இன்னும் சில பேர் கருங்கண்ணி பருத்திக்கு மாறலாம்னு இருக்காங்க” என்ற நட்சத்திரன், மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொன்னார்.

“சகஜ சம்ருதாங்கிற தொண்டு நிறுவனம் மூலமாத்தான் எனக்கு இந்தக் கருங்கண்ணி விதை கிடைச்சது. அறுவடையாகுற பருத்தியையும் அவங்களே வாங்கிக்கிறாங்க. முதல் பறிப்புல 350 கிலோ பருத்தி கிடைச்சது. அதை, கிலோ 50 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 17,500 ரூபாய் வருமானம். இது வரைக்கும் 7 ஆயிரம் ரூபாய் செலவாகியிருக்கு. அதைக் கழிச்சா 10,500 ரூபாய் லாபம். இன்னும் 250 கிலோ மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அதை விற்பனை செஞ்சா 12,500 ரூபாய் கிடைக்கும். இதுல பறிப்புக்கூலி 1,500 ரூபாய் போக 11 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும். ஆக, அரை ஏக்கர் நிலத்துல நாட்டுப்பருத்தி போட்டதுல, 21,500 ரூபாய் லாபம் வரும். முன்னாடி நானும் பி.டி பருத்தி சாகுபடி செய்திருக்கேன். அதுல செலவு போக 11,750 ரூபாய் லாபம் கிடைக்கும். ஆனால், நாட்டுப்பருத்திக்கு நல்ல மழை கிடைச்சிருந்தா, இன்னும் கூடுதல் லாபம் கிடைச்சிருக்கும்” என்றார்.

நிறைவாகப் பேசிய நட்சத்திரன், “இப்போ மூணு அடி இடைவெளி விட்டு நாட்டுப் பருத்தியை நட்டிருக்கேன். ஆனா, ஒன்றரை அடி இடைவெளி போதுமாம். அது மாதிரி செஞ்சிருந்தா செடிகளோட எண்ணிக்கை ரெண்டு மடங்காகி விளைச்சலும் கூடியிருக்கும். அடுத்த முறை இடைவெளியைக் குறைச்சு நடவு பண்ணி கூடுதல் லாபம் எடுத்திடுவேன்” என்று நம்பிக்கையுடன் சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, நட்சத்திரன், செல்போன்: 75022 61622

நாட்டுப் பருத்தியில் நல்ல லாபம்...  வறட்சியிலும் செழிக்கும் விளைச்சல்!

நாட்டுப்பருத்தியை மீட்டெடுத்து பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, கர்நாடகா மாநிலத்தில் உள்ள சகஜ சம்ருதா என்கிற தொண்டு நிறுவனம். இதன் தமிழக ஒருங்கிணைப்பாளர் சாமிநாதனிடம் பேசியபோது, “சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவில் 97 சதவிகித அளவு நாட்டுப்பருத்தி ரகங்கள்தான் சாகுபடி செய்யப்பட்டன. ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட ரக நாட்டுப்பருத்தி புழக்கத்தில் இருந்தது. கர்நாடகா மாநிலத்தில், ‘ஜெயதர்’ என்ற நாட்டுப்பருத்தி ரகம் இருந்தது. தமிழ்நாட்டில் மதுரை, திருமங்கலம், விருதுநகர், கோவில்பட்டி போன்ற கரிசல் மண் பகுதிகளில் கருங்கண்ணி பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. விளாத்திகுளம், தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உப்பன் பருத்தியும் பெரம்பலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் குப்பன் பருத்தியும் சாகுபடி செய்யப்பட்டன. பசுமைப் புரட்சிக்குப் பிறகு, இந்த நாட்டுப் பருத்தி ரகங்கள் வழக்கொழிந்துவிட்டன. தற்போது இந்தியாவில் 3 சதவிகித அளவே நாட்டுப் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது.
அமெரிக்க பருத்தி ரகங்கள் நீண்ட இழைகளைக் கொண்டவை. இந்தியாவில் உள்ள நவீன நூற்பு ஆலைகள் அதற்கேற்றவாறுதான் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாட்டுப் பருத்தி ரகங்கள் குட்டையான இழைகளைக் கொண்டவை. நவீன நூற்பாலைகளில் இதை நூற்க முடியாது. அதனால் வியாபாரிகள் நாட்டுப் பருத்தியைக் கொள்முதல் செய்வதில்லை. ஆனால், நாட்டுப் பருத்தியை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நாங்கள், இதை கொள்முதல் செய்து கதர் நிறுவனங்கள், இயற்கை ஆடை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்கிறோம். விவசாயிகளுக்குத் தேவையான விதைகளையும் நாங்களே கொடுத்து வருகிறோம்” என்றார்.

தொடர்புக்கு: சாமிநாதன், செல்போன்:  90477 75429.

உயிர் பெற்ற கருங்கண்ணி!

நாட்டுப் பருத்தியில் நல்ல லாபம்...  வறட்சியிலும் செழிக்கும் விளைச்சல்!

பெரம்பலூர் பகுதியில் நாட்டு ரகப் பருத்தி சாகுபடி செய்வதற்கு உறுதுணையாக இருந்து வரும் சூழலியலாளர் ரமேஷ் கருப்பையாவிடம் பேசினோம், ‘‘குஜராத் கட்ச் வளைகுடா பகுதியில் ‘காலா’ பருத்தி, ஆந்திராவில் ‘புந்துரு’, மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘புலே தன்வந்தரி’, மேகாலயா மாநிலத்தில் ‘கோமிலா’, கர்நாடக மாநிலத்தில் ‘ஜெயதர்’, ராஜஸ்தானில் ‘வங்கப் பருத்தி’, தமிழ்நாட்டில் கருமண்ணில் விளையக்கூடிய கருங்கண்ணி, கடலோர நிலப்பகுதியில் வளரக்கூடிய ‘உப்பம்’ எனப் பல உள்நாட்டு பருத்தி துணை வகைகள் நிறைய இருக்கின்றன.

நாட்டுப் பருத்தியில் நல்ல லாபம்...  வறட்சியிலும் செழிக்கும் விளைச்சல்!

தமிழ்நாட்டுக்குரிய வெள்ளைக்கண்ணி, நாடன் பருத்தி குறித்த செய்திகள் கிடைக்கவில்லை. கோவில்பட்டியில் கருங்கண்ணி பருத்தி குறித்த ஆய்வுகள், வேளாண் ஆய்வு மையங்களில் நடைபெற்று வருகின்றன. தற்போது தமிழ்நாட்டில் பெரம்பலூர், திண்டுக்கல் பகுதிகளில் உள்நாட்டு பருத்தி வகையான கருங்கண்ணியை உயிர்ப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. உப்பம் பருத்தி வகைத் தூத்துக்குடி பகுதியில், சில இடங்களில் இருப்பதாகத் தெரிகிறது.
இந்தியாவின் புகழைப் பரப்பிய மிகவும் மெலிதான ‘மஸ்லின்’ பருத்தித் துணிகள் எடை குறைந்தவை, மேற்கு வங்கத்தில் உருவாக்கப்படுபவை. தமிழகத்தின் ஆரணியிலும் மஸ்லின் பருத்தித் துணிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மஸ்லின் துணி நமது நாட்டுப் பருத்தி வகைகளிலிருந்து உருவானது’’ என்றார்.

நாட்டுப் பருத்தியில் நல்ல லாபம்...  வறட்சியிலும் செழிக்கும் விளைச்சல்!
நாட்டுப் பருத்தியில் நல்ல லாபம்...  வறட்சியிலும் செழிக்கும் விளைச்சல்!
நாட்டுப் பருத்தியில் நல்ல லாபம்...  வறட்சியிலும் செழிக்கும் விளைச்சல்!

யற்கை இடர்பாடுகள் இல்லையென்றால் பி.டி.பருத்தியில் அரை ஏக்கரில் அதிகபட்சம் 6 குவிண்டால் மகசூல் கிடைக்கும். ஒரு குவிண்டால் 5,500 ரூபாய் வீதம் 33,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். 21,250 ரூபாய் செலவு போக 11,750 ரூபாய் மட்டுமே லாபமாக கையில் கிடைக்கும். கருங்கண்ணி ரக நாட்டுப்பருத்தி இயற்கை இடர்பாடுகளை தாக்குப்பிடித்து உத்தரவாதமான மகசூல் கொடுத்துவிடும். இதில் செலவும் குறைவு.