Published:Updated:

மா விவசாயிகளே... பூக்கள் பூக்கும் தருணம்... பச்சைத் தத்துப்பூச்சி கவனம்!

மா விவசாயிகளே... பூக்கள் பூக்கும் தருணம்... பச்சைத் தத்துப்பூச்சி கவனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மா விவசாயிகளே... பூக்கள் பூக்கும் தருணம்... பச்சைத் தத்துப்பூச்சி கவனம்!

ஆலோசனைஆர்.குமரேசன்

மா விவசாயிகளே... பூக்கள் பூக்கும் தருணம்... பச்சைத் தத்துப்பூச்சி கவனம்!

து மா மரங்கள் பூத்துக்குலுங்கும் காலம். இந்தப் பூக்கள்தான் மகசூலை அள்ளிக்கொடுக்க இருக்கும் அட்சயப் பாத்திரங்கள். அதனால், இவற்றைப் பாதுகாக்க வேண்டியது, அவசியமான பணி. இந்தக் காலகட்டத்தில் மா மரங்களைத் தாக்கும் பூச்சி பற்றியும் அதைத் தடுக்கும் முறைகள் பற்றியும் இங்கு விளக்குகிறார்... சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன்.

“மா சாகுபடியைப் பொறுத்தவரை பூக்கும் காலத்தில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் முக்கியமான

மா விவசாயிகளே... பூக்கள் பூக்கும் தருணம்... பச்சைத் தத்துப்பூச்சி கவனம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வில்லன், பச்சைத் தத்துப்பூச்சி. மா மரங்கள் புதுத் தளிர்விடும் நேரம், பூக்கும் காலம், பிஞ்சுகள் உருவாகும் காலங்களில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதன் முக்கிய உணவு, மா மரத்தின் கொழுந்து இலைகள்தான். அந்த இலைகளில் அமர்ந்து சாறை உறிஞ்சத்தொடங்கும். டிசம்பர் மாதத்துக்கு மேல் மா, புதுத் தளிர்களை உருவாக்கும். அந்த நேரத்தில் இப்பூச்சிகள் இலைகளில் அமர்ந்து, அதன் சாற்றை உறிஞ்சிக்கொண்டே இனப்பெருக்கத்தை மேற்கொள்ளும். இலையில் அமரும் ஒரு பூச்சி சுமார் 200 முட்டைகள் வரை இடும். மூன்று, நான்கு நாள்களில் அந்த முட்டைகள் பொரியத் தொடங்கும். 200 முட்டைகளிலிருந்து கிட்டத்தட்ட 160 புழுக்கள் வரை வெளியேறும்.

அப்புழுக்கள், கொத்துக்கொத்தாக இலைகள், பூக்கள், தண்டு என அனைத்து பகுதிகளிலும் அமர்ந்து சாறு உறிஞ்சும். இதனால், பூக்கள் கருகியதைப்போல் தோன்றும். சில நாள்களில் பூக்கள் முழுவதும் உதிர்ந்துவிடும். தப்பிப் பிழைக்கும் பூக்களில் இருந்து பிடிக்கும் பிஞ்சுகளையும் இந்தப் புழுக்கள் விட்டு வைப்பதில்லை. அதனால், பிஞ்சுகள் பெருக்காத நிலையிலேயே உதிர்ந்துவிடும். இதனால், அதிகளவிலான மகசூல் இழப்பு ஏற்படும்.

மா விவசாயிகளே... பூக்கள் பூக்கும் தருணம்... பச்சைத் தத்துப்பூச்சி கவனம்!

குறிப்பாக, பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இப்பூச்சிகளின் தாக்குதல் இருக்கும். இரண்டு பருவங்களில் மா பூக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜுன், ஜுலை மாதங்களிலும் இப்பூச்சிகளின் தாக்குதல் இருக்கும். இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், சாறுகளை உறிஞ்சிவிட்டு, தனது எச்சத்தை இலைகள், பூக்கள் மீது போடும். அந்த எச்சங்கள் சில பூஞ்சணங்கள் வளரும் ஊடகமாக மாறிவிடும். இதனால், மா இலைகளில் கறுப்புப் புள்ளிகள் தோன்றும். காயிலும் கருப்புப் புள்ளிகள் இருக்கும். இதனால் சந்தைப்படுத்துவதில் சிரமம் ஏற்படும். எனவே ஆரம்பக்கட்டத்திலேயே இதனைக் கட்டுப்படுத்துவது நல்லது.

மாமரங்களில், நமது ஆள்காட்டி விரலையும் பெரு விரலையும் இணைத்து வைத்துப் பார்த்தால், தெரியும் சிறிய வட்டத்துக்குள் அடங்கும் பிஞ்சுகள்தான் மரங்களி்லிருந்து உதிரும். அந்த அளவுக்கு மேல் பெருத்துவிட்டால், உதிர வாய்ப்பில்லை. பூவில் இருந்து பிஞ்சு இறங்கி, இந்த அளவை எட்டும் வரை அதாவது, மாவடு அளவுக்குப் பெருக்கும் வரை, மரத்துக்குத் தண்ணீர் பாய்ச்சக்கூடாது. பிஞ்சு பிடிக்கும் காலங்களில் தண்ணீர் பாய்ச்சினால், புதுக் கொழுந்துகள் உருவாக ஆரம்பிக்கும். அதனால், பிஞ்சுகள் பிடிக்காமல் போய்விடும். பொதுவாக, மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான பிஞ்சு பிடிக்கும் காலகட்டத்தில் பாசனத்தை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் பஞ்சகவ்யாவையும் பயன்படுத்தக்கூடாது” என்றார்.

தொடர்புக்கு,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் நிலையம், குன்றக்குடி.
தொலைபேசி: 04577 264288.

காலை 9 மணிக்கு மேல்... பூச்சிவிரட்டி தெளிக்கக் கூடாது!

“மாமரங்களில் கொழுந்துவிடும் காலத்தில் பூச்சிவிரட்டிகளைத் தெளிக்க வேண்டும். தொடர்ச்சியாக 15 நாள்களுக்கு ஒருமுறை என டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பூச்சிவிரட்டி தெளித்து வந்தால் இப்பூச்சிகள் வருவதில்லை. தமிழகத்தில் தற்போது மா பூக்கும் காலம். இப்போது பூக்கள் பூக்கத் தொடங்கிய நிலையில் வேப்பெண்ணெய் தெளித்து பூச்சிகளாகக் கட்டுப்படுத்தலாம். இலை மற்றும் பூக்களில் உள்ள சாறுதான் இப்பூச்சிக்கான ஒரே உணவு. நாம் தெளிக்கும் பூச்சிவிரட்டிகளின் நாற்றம் இலை, பூக்களில் தொடர்ச்சியாக இருந்தால், சாறை உறிஞ்ச முடியாமல் பூச்சிகள் பட்டினியால் இறந்து விடும் அல்லது இடம்பெயர்ந்துவிடும். வேம்பில் உள்ள ‘அசாடிராக்டின்’ எனும் வேதிப்பொருள், புழுக்களைக் கட்டுப்படுத்துவதுடன், பூச்சிகள் பயிர்களை உண்ணவிடாமல் தடுக்கும் ஆற்றலையும் கொண்டது.

இதுவரை பூக்காத மா மரங்களுக்குப் பூச்சிவிரட்டியை வாரம் ஒரு முறை எனத் தொடர்ந்து தெளித்து வர வேண்டும். ஏற்கெனவே, பூத்துள்ள மரங்களுக்கு, பூச்சிவிரட்டியால் புண்ணியமில்லை. அவற்றுக்கு வேப்பெண்ணெய்தான் சரியான தீர்வு. ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி வேப்பெண்ணெய், சிறிது காதிசோப் கரைசல் என்று கலந்து தெளிக்க வேண்டும். தற்போது இலைகளில் ஒட்டும் வகையிலான பசையுடன்கூடிய வேப்பெண்ணெய் வகைகள் கடைகளிலேயே கிடைக்கின்றன.

அதிகாலையில் பனி விலகியதும், இளம் வெயிலில்தான் பூச்சிக்கொல்லி அல்லது வேப்பெண்ணெயைத் தெளிக்க வேண்டும். மரங்கள் மழையில் நனைந்தது போல் தெளிக்கக்கூடாது. தூவானம் போலத்தான் மரங்களில் பட வேண்டும். பவர் ஸ்பிரேயர் மூலமாகத் தெளிக்கும்போது, மரத்துக்கும் ஸ்பிரேயரின் முனைக்கும் ஏழு அடி தூரம் இருக்க வேண்டும். பூக்களுக்கு அருகில் ஸ்பிரேயரை வைத்து தெளித்தால், பூக்களில் உள்ள மகரந்தத் துகள்கள் உதிர்ந்துவிடும்.

மா மரங்களில் காலை வேளையில்தான் மகரந்தச்சேர்க்கை நடக்கும். காலை 10 மணிமுதல் 11 மணிக்குள் மகரந்தம் காற்று வழியாகவோ, பூச்சிகள் மூலமாகவோ சூல்முடிக்குச் சென்று, கருவுறுதல் நடந்து காய் உருவாகும். அந்த நேரத்தில் தெளித்தால், மகரந்தம் ஈரமாகி, சூல்முடிக்கு செல்ல முடியாது. அதனால், எக்காரணம் கொண்டும் காலை 9 மணிக்கு மேல் பூச்சிவிரட்டி தெளிக்கக்கூடாது” என்கிறார் செந்தூர்குமரன்.

மா விவசாயிகளே... பூக்கள் பூக்கும் தருணம்... பச்சைத் தத்துப்பூச்சி கவனம்!

விதைகளை மீட்டவர் நோயிலிருந்து மீளட்டும்!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த ‘நெல்’ ஜெயராமன் முயற்சியால், வழக்கொழிந்து போன பல பாரம்பர்ய நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. கறுப்புக்கவுனி, அறுபதாம்குறுவை, குள்ளக்கார், தூயமல்லி, குடவாலை, காட்டுயானம், கூம்பாலை, குழியடிச்சான்... போன்ற தனித்துவம் வாய்ந்த நமது பாரம்பர்ய நெல் ரகங்களை, மீட்டெடுப்பதில் முனைப்பாகச் செயல்பட்டவர் ஜெயராமன்.

2003-ம் ஆண்டு பூம்புகார் முதல் கல்லணை வரை இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டார், ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார். அந்தப் பயணத்தின்போது, பல விவசாயிகள் நம்மாழ்வாரிடம் பாரம்பர்ய நெல் விதைகளைக் கொடுத்தனர். ‘இதை உற்பத்திசெய்து விவசாயிகளிடம் பரப்புங்கள்’ என, ஜெயராமன் உள்ளிட்ட சில விவசாயிகளிடம் கொடுத்தார் நம்மாழ்வார். அந்த நிகழ்வுக்குப் பிறகு, பல பாரம்பர்ய நெல் விதைகளை மீட்டெடுத்திருக்கிறார், ஜெயராமன்.

ஆண்டுதோறும் மே மாதத்தின் கடைசியில் ஆதிரெங்கம் கிராமத்தில் விதைத் திருவிழாவை நடத்தி, பாரம்பர்ய நெல் விதைகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். இரண்டு கிலோ விதை வாங்கிச் செல்லும் விவசாயிகள், அடுத்த ஆண்டு, நான்கு கிலோ விதையாகத் திருப்பித் தர வேண்டும். இந்த ஒரே நிபந்தனையின் கீழ், இவர் கொடுத்த விதைகள், இன்றைக்குத் தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விளைந்து வருகின்றன.

இந்நிலையில், இந்தாண்டுக்கான விதைத் திருவிழா முயற்சியில் ஈடுபட்டிருந்த நேரத்தில், சிறுநீரகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுத் தற்போது சிகிச்சையில் இருக்கிறார், ஜெயராமன். மருத்துவச் செலவுக்குக்கூட பணமில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறது, அவர் குடும்பம். நண்பர்கள், இயற்கை ஆர்வலர்களின் உதவியோடு ஆரம்பக்கட்ட சிகிச்சை நகர்ந்துகொண்டு இருக்கிறது.

தொடர்புக்கு, செல்போன்: 99527 87998, 94433 83305.