Published:Updated:

இயற்கை உரம் தயாரிக்க உதவும் இ.எம்!

இயற்கை உரம் தயாரிக்க உதவும் இ.எம்!
பிரீமியம் ஸ்டோரி
News
இயற்கை உரம் தயாரிக்க உதவும் இ.எம்!

சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! - உதவிக்கு வரும் உயிரியல் -3இடுபொருள்முனைவர் அ.உதயகுமார்தொகுப்பு: ரா.கு.கனல்அரசு - படங்கள்: வீ.சிவக்குமார்

இயற்கை உரம் தயாரிக்க உதவும் இ.எம்!

தாய் திரவத்திலிருந்து செறிவூட்டப்பட்ட இ.எம் தயாரிக்கும்முறை பற்றிக் கடந்த இதழில் பார்த்தோம். அப்படித் தயாரிக்கப்பட்ட இ.எம்மை பயன்படுத்தும் விதங்களைப் பார்ப்போம்.

வீடுகள், விவசாய நிலங்கள், நீர்நிலைகள், சாக்கடைகள் ஆகிய இடங்களில் பயன்படுத்த ஏற்றது செறிவூட்டப்பட்ட இ.எம். இதன் அடிப்படை குணம், துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிப்பதுதான் என்பதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். பொதுவாக, தேவையில்லாத அழுக்குகள்தான் தீமை செய்யும் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குகின்றன. கரப்பான்பூச்சி உள்ளிட்ட சில பூச்சிகளும் அதனால்தான் வருகின்றன. வீடுகளில் தேவையில்லாத அழுக்குகளை அகற்றி விட்டாலே, பெரும்பாலான பிரச்னைகள் தீர்ந்துவிடும். வீட்டுத் தரையைக் கழுவும்போது, ஒரு வாளி தண்ணீரில் 10 மில்லி செறிவூட்டப்பட்ட இ.எம் கலந்து வீட்டை துடைத்தால் அழுக்குகள், தீமை செய்யும் பாக்டீரியாக்கள் ஆகியவை காணாமல் போய்விடும். ஒவ்வொரு முறையும் வீட்டை சுத்தப்படுத்தும்போது, இ.எம் பயன்படுத்தினால், நாளடைவில் தீமை செய்யும் பாக்டீரியாக்களே இல்லாத நிலை உருவாகிவிடும்.

அதேபோல், கழிவறைகளைச் சுத்தம் செய்யும்போதும் தண்ணீரில் இ.எம் கலந்து பயன்படுத்தினால் துர்நாற்றம் இருக்காது. தீமை செய்யும் பாக்டீரியாக்களும் அழிந்துவிடும். இதை உலகின் பல நாடுகளில் பின்பற்றுகிறார்கள். கழிவறைகள் மட்டுமில்லாது, சமையலறையில் பாத்திரங்கள் கழுவும் தொட்டியைச் சுத்தம் செய்வதற்கும் இதைப் பயன்படுத்தலாம். பொதுவாக நீங்கள் வீட்டில் எந்த இடத்தைத் தண்ணீர் ஊற்றித் துடைப்பதாக இருந்தாலும், அந்தத் தண்ணீரில் ஐந்து முதல் பத்து மில்லி இ.எம் கலந்து பயன்படுத்துங்கள். ஒரு லிட்டர் தாய் திரவத்திலிருந்து 100 லிட்டர் செறிவூட்டப்பட்ட இ.எம் தயாரிக்கலாம் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அந்த அடிப்படையில் ஒரு லிட்டர் தாய் திரவத்திலிருந்து தயாரிக்கும் இ.எம்-மை நான்கைந்து குடும்பங்கள், இரண்டு மூன்று மாதங்களுக்குப் பயன்படுத்த முடியும். வீடுகளில் இருந்து சாக்கடை வெளியேறும் இடங்களிலும் அவ்வப்போது இ.எம் ஊற்றுவதன் மூலம், நமது வீட்டைச் சுகாதாரமான வீடாக மாற்றலாம்.

உலகளவில் ஆசிய நாடுகளில் உள்ள சாக்கடைகள்தான் அதிகத் துர்நாற்றம் வீசுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. காரணம், ஆசியாவில்தான் அதிகளவில் அரிசியை உணவாகப் பயன்படுத்துகிறோம். அரிசி கழுவும் தண்ணீரை அந்தக்காலத்தில் மாடுகளுக்குக் கொடுத்தார்கள். தற்போது மாடுகள் அரிதாகிவிட்ட சூழலில், அந்தத் தண்ணீரையும் கழிவுநீரோடு சேர்த்துச் சாக்கடையில்தான் கொட்டுகிறோம். அரிசி கழுவும் தண்ணீரில் உள்ள கார்போஹைட்ரேட், ஸ்டார்ச் சத்துகள், சாக்கடையில் இருக்கும் தீமை செய்யும் பாக்டீரியாக்களுக்கு உணவாக அமைந்துவிடுகிறது. அதனால், அந்தப் பாக்டீரியாக்களின் பெருக்கம் அதிகமாகிறது. இதைத் தடுக்க, அரிசி கழுவும் தண்ணீரை சாக்கடையில் ஊற்றுவதற்கு முன்பாக, அதில் பத்து மில்லி செறிவூட்டப்பட்ட இ.எம் கலந்து ஊற்றலாம்.

சாக்கடைகளில் பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை இ.எம் கலந்த தண்ணீரைத் தெளிப்பதன் மூலமாக, கொசுக்களைக் கட்டுப்படுத்தலாம். இன்றைக்கு டெங்கு, பன்றி காய்ச்சல் என அத்தனை காய்ச்சல்களுக்கும் அடிப்படையாக இருப்பவை, கொசுக்கள். கொசுக்களின் உற்பத்திக்கூடமான சாக்கடைகளில் இ.எம் தெளிக்கும்போது, கொசுக்களின் லார்வாக்கள் அழிக்கப்படுகின்றன. இ.எம், கொசுக்களின் முட்டையையோ, பெரிய கொசுவையோ அழிக்காது. லார்வா மீது, இது படியும்போது, அதன் மெல்லிய தோல் பாதிக்கப்பட்டு, அது முழுமையான கொசுவாக மாறுவதற்குள் இறந்துபோகும். எனவே சாக்கடைகளில் இ.எம் தொடர் பயன்பாடு, கொசுக்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கும். இதை ஊரில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

விவசாயத்தைப் பொறுத்தவரை, எருவை மட்கவைக்கவும், குப்பை எரு தயாரிக்கவும் இதைப் பயன்படுத்தலாம். காய்ந்த இலைதழைக் கழிவுகளை ஓர் அடி உயரத்துக்குத் தரையில் பரப்பி, அதன் மீது இ.எம் கலந்த தண்ணீரைத் தெளிக்க வேண்டும். இதற்கு ஆயிரம் லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் இ.எம் கலந்தால் போதுமானது. ஓர் அடிக்குக் கழிவுகள், அதற்கு மேலாக இ.எம் தண்ணீர் தெளிப்பு என ஐந்து அல்லது ஆறு அடுக்குகள் அமைத்து அதை, பிளாஸ்டிக் ஷீட் அல்லது தென்னை மட்டைகளைக்கொண்டு மூடிவைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் கழிவுகள் விரைவாக மட்கி எரு தயாராகிவிடும்.

பயிர்களுக்குப் பாசன நீருடன் இ.எம் திரவத்தைக் கலந்துவிடலாம். ஒரு டிரம்மில் சொட்டுச் சொட்டாக இ.எம் விழுவதைப் போல் குழாயை அமைத்துக்கொள்ள வேண்டும். அந்த டிரம்மை வாய்மடை அருகே வைத்து, அதில் 100 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் இ.எம் என்ற விகிதத்தில் தண்ணீரை ஊற்றி வைக்க வேண்டும். பாசனநீரில் இந்தத் தண்ணீர் சொட்டுச் சொட்டாக விழும்போது, அது மண்ணில் உள்ள தீமை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டை முடக்கி வைக்கும். பாசன நீரில் கொடுப்பதோடு நின்றுவிடாமல், பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை, பத்து லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி என்ற அளவில் இ.எம் கலந்த தண்ணீரைப் பயிர்கள் மீது தெளிக்க வேண்டும். இதுபோன்ற தொடர் செயல்பாடுகள் காரணமாகப் பயிரின் வளர்ச்சி சீராக இருக்கும்.

அறுவடை முடிந்த நிலங்களில் ஓரளவு ஈரப்பதம் இருக்கும்போது, இ.எம் கலந்த தண்ணீரை ஸ்ப்ரேயர் மூலமாக வயல் முழுவதும் தெளிக்க வேண்டும். நடவுக்கு முன்பாக மீண்டும் இ.எம் கலந்த தண்ணீரைத் தெளிக்க வேண்டும். இதன் மூலமாக மண்ணில் இருக்கும் ஒரு சில மட்காத பொருள்களும் மட்குவதோடு, தீமை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாடு தொடக்கத்திலேயே முடக்கப்படும்.

நீர்நிலைகளில் இ.எம் பயன்பாடு, இ.எம் பயன்படுத்தும் விவசாயிகளின் அனுபவங்கள் ஆகியவை அடுத்த இதழில்...

- பரவும்  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நன்மை செய்யும் நுண்ணுயிர்கள்

ந்த உலகம், மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் உட்பட கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். நாம்தான்,உலகை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறோம் என எண்ணிக் கொண்டிருக்கிறான் மனிதன். ஆனால், உண்மையில் உலகை ஆட்டிவைப்பவை பூச்சிகளும், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும்தாம். நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு. உண்மையில் அப்படியில்லை. தனது அனைத்து படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது, இயற்கை. ஒரு வாசல் அடைத்தால், இன்னொருவாசல் திறக்கும். அதன்படி, தீமை செய்யும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்த, சில நன்மை செய்யும் நுண்ணுயிர்களையும் படைத்துள்ளது. அப்படிப்பட்ட நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் குறித்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டதுதான், இ.எம் என அழைக்கப்படும் திரவ வடிவிலான நுண்ணுயிர் தொகுப்பு. இ.எம் உள்ளிட்ட நுண்ணுயிர்களை பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்குகிறது, இத்தொடர்.

ஜாதவ் பாயேங்...

அசாம் மாநிலத்தில் 1,360 ஏக்கர் காட்டை உருவாக்கியவர். இவரைப் பற்றிய கட்டுரை வலதுப்பக்கத்தில் இடம்பிடிக்கிறது. அதில் ஜாதவ் மாதேங் என தவறாக இடம் பெற்றுவிட்டது.