Published:Updated:

பிரச்னை - ஹைட்ரோ கார்பன்... வேஷத்தை மாற்றிய மீத்தேன் எமன்!

பிரச்னை - ஹைட்ரோ கார்பன்... வேஷத்தை மாற்றிய மீத்தேன் எமன்!
பிரீமியம் ஸ்டோரி
News
பிரச்னை - ஹைட்ரோ கார்பன்... வேஷத்தை மாற்றிய மீத்தேன் எமன்!

தமிழகத்தைத் தாரை வார்க்கும் மத்திய அரசுகு.ராமகிருஷ்ணன், துரை.நாகராஜன் - படங்கள்: ம.அரவிந்த்

நாட்டு மக்கள் அனைவரது கவனமும் ஓரிடத்தில் குவிந்தால்... வேறு எங்கோ ஒரு மூலையில் ஆபத்தான விஷயத்தைச் சத்தமில்லாமல் செயல்படுத்தி விடுவதுதான் அதிகாரவர்க்கத்தின் அடிப்படைக் குணம். தமிழ்நாட்டின் அரசியல் சூழல் சுழற்றியடித்துக்கொண்டிருக்கும் வேளையில், தமிழக மக்களின் கவனம் அதில் இருக்க... கடந்த 15-ம் தேதி மத்திய அரசு ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. ‘இந்தியாவில் மொத்தம் 31 இடங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ எனும் இயற்கை எரிவாயு எடுக்கப் போகிறோம். அதற்காகத் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் கிராமம்’ என்பதுதான் அந்த அறிவிப்பு.

பிரச்னை - ஹைட்ரோ கார்பன்... வேஷத்தை மாற்றிய மீத்தேன் எமன்!

இந்தக் கிராமம், தஞ்சாவூர் மாவட்ட எல்லையில் டெல்டா பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதற்கு முன்னர் மீத்தேன், ஷேல்-காஸ் ஆகிய திட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுத் தமிழக அரசால் தடுக்கப்பட்ட பிறகு, வேறு ரூபத்தில் தமிழகத்தைக் குறி வைத்திருக்கிறது, மத்திய அரசு.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலூகாவில் அமைந்திருக்கும் நெடுவாசல் கிராமம், விவசாயம் செய்வதற்கேற்ற நல்ல மண்வளம் நிறைந்த ஓர் இடம். இக்கிராமத்தைச் சுற்றியுள்ள கீரமங்கலம், ஆவணம், வடகாடு, அன்னவாசல், மாங்காடு, கருக்காகுறிச்சி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களும் வளமான பூமியே. காய்கறிகள், மா, பலா, நெல், வாழை, தென்னை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் இப்பகுதியில் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்படிச் செழிப்பான ஒரு கிராமத்தைத்தான் காவு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, மத்திய அரசு.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னரே நெடுவாசல் அருகே உள்ள கருக்காகுறிச்சி எனும் கிராமத்தில் இரண்டு விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அந்த நிலங்களில் சுமார் 2 ஆயிரம் அடி ஆழத்தில் ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டு, இயற்கை எரிவாயு இருப்பது உறுதிப்படுத்தப் பட்டது. பணி ஆரம்பித்ததில் இருந்து ஆழ்துளைக்கிணறு தோண்டி முடிக்கப்படும் வரை அந்த விவசாயிக்கு ஆண்டுக் குத்தகைக்குப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் இருப்பது உறுதி செய்யப்பட்டவுடன்... கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான ‘ஜெம் லேபரட்டரீஸ்’ என்ற நிறுவனத்துக்கு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளது, மத்திய அரசு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிரச்னை - ஹைட்ரோ கார்பன்... வேஷத்தை மாற்றிய மீத்தேன் எமன்!

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நெடுவாசல் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 80 ஆயிரம் ஏக்கர் பரப்புக்கும் அதிகமான விளைநிலங்கள் கட்டாந்தரையாக மாறிவிடும். இந்தப் பாதிப்பை உணர்ந்த இப்பகுதி மக்கள், கடந்த பிப்ரவரி 16-ம் தேதி அன்று போராட்டத்தில் இறங்கினார்கள். முதல் நாள் 200 பேரோடு மட்டுமே தொடங்கிய இப்போராட்டம்... அடுத்தடுத்த நாள்களில் பேரெழுச்சியாய் மாறி, பெரும் நெருப்பாய் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. போராட்டக்களத்தில் மக்கள் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியது. அதோடு, நெடுவாசல் மக்களுக்குத் தமிழ்நாடு முழுவதும் ஆதரவு பெருகியது.

இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஆலோசகரான மருத்துவர் பாரதிச்செல்வன், சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். “பூமிக்கடியில் இருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெயின் பொதுவான பெயர் ஹைட்ரோ கார்பன். இந்த இயற்கை எரிவாயுவில் 87% முதல் 97% வரை மீத்தேனும் ஈத்தேன், புரப்பேன், பியூட்டேன், கரியமில வாயு, நைட்ரஜன், ஹைட்ரஜன் சல்பேட், ஆர்சனிக் ஆகியவையும் அடங்கியிருக்கும். ஹைட்ரோ கார்பன் எனச் சொல்லப்படும் இந்த இயற்கை எரிவாயு, பல ஆயிரம் ஆண்டுகளாகப் பூமிக்குள் புதைந்து கிடக்கிறது. பல்லாயிரம் அடிகள் ஆழத்தில் வண்டல் மண் பாறைக்குள் எண்ணெய்-எரிவாயு ஆகியவை பிணைந்திருக்கும். இவை அப்பகுதியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி பூமியை நோக்கி வரும். அப்படி வரும்போது, இடையிடையே சிறு சிறு பாறைகள் குறுக்கிட்டால் அந்தப் பாறைகளுக்கு அடியில் குளம்போல் அவை தேங்கி நிற்கும். இந்த எண்ணெய்-எரிவாயு கலவை சேறுபோல் இருக்கும். துவக்க நிலையில் மட்டும் பாறைகளை உடைத்துக் குழாய்களை இறக்கி எளிதாக இதை வெளியில் எடுத்துவிடலாம். இது வழக்கமான முறை.

பிரச்னை - ஹைட்ரோ கார்பன்... வேஷத்தை மாற்றிய மீத்தேன் எமன்!

அதே நேரத்தில், அதிக அடர்த்திக் கொண்ட எண்ணெய்-எரிவாயு கலவை, வண்டல் மண் பாறைகளுக்குள்ளேயே தங்கிவிடும். இதைத்தான் ‘ஷேல்-காஸ்’ என்கிறார்கள். இதை வழக்கமான முறையில் எடுக்க முடியாது. ‘ஹைட்ராலிக் ஃபிராக்சரிங்’ எனும் நீரியல் உடைப்பு முறையில்தான் வெளியில் கொண்டு வர முடியும். பாறைகளைத் தொடர்ச்சியாக உடைக்க வேண்டியிருக்கும். பல கோடி லிட்டர் தண்ணீர், அறுநூறுக்கும் மேற்பட்ட ரசாயனங்கள், பல நூறு டன் மணல் ஆகியவற்றைப் பயன்படுத்தி, கரைசல் தயார் செய்து அதிக அழுத்தத்தில் உள்ளே பாய்ச்சி பாறைகளை உடைப்பார்கள். இவை தவிர, நிலக்கரி படிமங்களுக்குள் உள்ள எரிவாயு ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் முறையில் எடுக்கப்படும். இது நிலக்கரி படுகை மீத்தேன் எடுக்கும் திட்டம் என அழைக்கப்படுகிறது.

முன்பு இத்திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை வழக்கத்தில் இருந்தது. ஆனால், தற்போது ‘ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம்’ என்ற பெயரில் அனைத்துக்கும் சேர்த்து பொதுவான அனுமதி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் பெயரில் ஒருமுறை அனுமதி வாங்கிவிட்டால், ஷேல் காஸ், நிலக்கரி, மீத்தேன், எண்ணெய்-எரிவாயு அனைத்தையுமே எடுத்துக் கொள்ளலாம். இதில் எதைச் செய்தாலும் இப்பகுதி மக்களுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். நிலத்தடி நீர் பாதிக்கப்படும். பல கொடிய நோய்கள் உருவாகும்” என்ற பாரதிச்செல்வன்,

பிரச்னை - ஹைட்ரோ கார்பன்... வேஷத்தை மாற்றிய மீத்தேன் எமன்!


“ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு அனுமதி தர மாட்டோம் எனத் தற்போது தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, 8.10.2015-ம் தேதி அன்று, ‘மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி தரமாட்டோம்’ என அரசாணை வெளியிட்டார். தற்போது, ‘நெடுவாசலில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் வேறு எங்குமே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்’ எனத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வேண்டும். ‘விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம்’ எனச் சொல்லும் தமிழக முதல்வர், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை அழித்துக் கொண்டிருக்கக்கூடிய ஓ.என்.ஜி.சி-யின் எண்ணெய்-எரிவாவு எடுக்கும் பணிகளையும் தடுத்து நிறுத்த வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து ஓ.என்.ஜி.சி தரப்பில் விசாரித்தபோது, பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர், “எங்களுக்கும், இப்போது எண்ணெய் எடுக்கும் நிறுவனத்துக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. இப்போது எண்ணெய் எடுக்க இருக்கும் நிறுவனம் தனியாருடையது.

அது ஆண்டுக் குத்தகைக்கு ஆயிலை எடுத்துக்கொள்ளும். இந்த ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தின் நோக்கம்... 2020-ம் ஆண்டில் இறக்குமதி அளவைக் குறைப்பதுதான். இது சம்பந்தமாக மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமானால் ‘ஹைட்ரோ கார்பனுக்கான பொது இயக்குநரகம்’ (Directorate General of Hydrocarbons) இணையதளத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.

அப்பகுதியில் எழுச்சியடைந்து வரும் போராட்டங்களைத் தொடர்ந்து, திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 19-ம் தேதி, நெடுவாசலில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட விளைநிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய முயன்றனர். ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட நெடுவாசல் கிராம விவசாயிகள், வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு, விளைநிலங்களில் ஆய்வு செய்யவிடாமல் தடுத்தனர். இந்தத் திட்டத்துக்குக் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆய்வு செய்து அறிக்கையை ஒப்படைத்து அடித்தளம் அமைத்துக் கொடுத்ததே ஓ.என்.ஜி.சி நிறுவனம்தான். இப்போது அதே நிறுவனம் எங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனக் கையை விரிக்கிறது.

வாடிவாசலுக்காக மெரினாவில் கூடிய இளைஞர்கள்தான் தற்போது நெடுவாசலுக்காகவும் கூடி நிற்கிறார்கள். ஜல்லிக்கட்டு போலவே தமிழகத்தின் கலாசாரமான விவசாயம் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை பிறக்கிறது!

குப்பையிலிருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கலாமே!

பிரச்னை - ஹைட்ரோ கார்பன்... வேஷத்தை மாற்றிய மீத்தேன் எமன்!

மெரிக்காவில் எட்டாண்டுக்காலம் பொறியாளராக இருந்துவிட்டு, சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் திரும்பியவர் பிரேமானந்த் சேதுராஜன். பெரும் அறிவியல் முடிச்சுகளை எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் வீடியோக்களாக எடுத்து, யூடியூபில் பதிந்து வருகிறார். ஹைட்ரோ கார்பன் குறித்தும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்து வருகிறார்.

‘‘எளிய முறையில் நம்மிடம் கொட்டிக்கிடக்கும் ஒரு மிகப்பெரிய பொக்கிஷத்தில் இருந்து ஹைட்ரோ கார்பனை எடுக்க முடியும். இந்த முறையில் எடுத்தால் விவசாயம் காப்பாற்றப்படுவதோடு மட்டுமல்லாமல், விவசாயத்தை வளர்க்கவும் முடியும். அந்தப் பொக்கிஷம் ‘குப்பை’.

அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் போன்ற நாடுகள் மட்கும் குப்பையிலிருந்துதான் ஹைட்ரோகார்பனை எடுக்கின்றன. ஸ்வீடன் கிட்டத்தட்ட 10 டன் அளவுக்கான குப்பைகளை இறக்குமதி செய்து ஹைட்ரோ கார்பனை எடுக்கிறது. அமெரிக்காவில் ‘லேண்ட்ஃபில்’ (LandFill) முறையில் குப்பைகளிலிருந்து ஹைட்ரோ கார்பனை எடுக்கிறார்கள்.

1 டன் குப்பை - 40 கிலோ மீத்தேன் - 2 எல்.பி.ஜி. சிலிண்டர்கள்.

சென்னையில் மட்டும் ஒருநாளைக்கு 4,500 டன் அளவிலான குப்பை கொட்டப்படுகிறது. இந்தியா முழுக்க உள்ள 200 மாநகராட்சிகளில் ஒரு லட்சம் டன் குப்பை சேர்கிறது.

1 நாள் - 1 லட்சம் டன் குப்பை - 40 லட்சம் கிலோ மீத்தேன் - 2 லட்சம்  எல்.பி.ஜி. சிலிண்டர்கள்.

அதுமட்டுமல்லாமல், மத்திய அரசு மொத்தம் 44 இடங்களில் ‘ஹைட்ராலிக் ப்ராக்சரிங்’ கொண்டுவந்து அதன் மூலமா  ஓர் ஆண்டில் 1 பில்லியன் கிலோ அளவுக்கான மீத்தேனை எடுக்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறது. ஆனால், இந்தக் குப்பைகளை சரியான விதத்தில் உபயோகப்படுத்தினால்,

ஓர் ஆண்டில் 1.5 பில்லியன் கிலோ மீத்தேனை எடுக்க முடியும். அதுமட்டுமல்லாமல், மிச்சமிருக்கும் குப்பைகளைக் கொண்டு ஓர் ஆண்டில் 90 லட்சம் டன் இயற்கை உரங்களைத் தயாரிக்க முடியும். அவற்றைக்கொண்டு 45 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை விளை நிலங்களாக நம்மால் மாற்ற முடியும்’’ என்றார்.

- இரா.கலைச்செல்வன்

பிரச்னை - ஹைட்ரோ கார்பன்... வேஷத்தை மாற்றிய மீத்தேன் எமன்!
பிரச்னை - ஹைட்ரோ கார்பன்... வேஷத்தை மாற்றிய மீத்தேன் எமன்!

இது சம்பந்தமான விரிவான கட்டுரை மற்றும் வீடியோவை இந்த லிங்கில் http://bit.ly/2mhNAWA காணலாம். அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யவும்.

பாலைவனமாக மாறிவிடும்!

பிரச்னை - ஹைட்ரோ கார்பன்... வேஷத்தை மாற்றிய மீத்தேன் எமன்!

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தன்னுடைய நிலத்தைத் தர மறுத்துப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் விவசாயிகளில் ஒருவரான சரவணக்குமாரிடம் பேசினோம். “என் நிலத்தையும் மிரட்டிக் கேட்டனர். நான் இந்தத் திட்டத்துக்காகத் தர முடியாது என்று மறுத்துவிட்டேன். ஆனால், அதற்குப் பிறகு என் தந்தையை வரச்சொல்லி 50 பேர் மாற்றி மாற்றிக் கேள்வி கேட்டு மிரட்டினர். அவரும் சம்மதிக்கவில்லை. எங்கள் நிலத்தைச் சுற்றியுள்ள நிலங்களின் உரிமையாளர்கள் சிலரிடம் ‘மண்ணெண்ணெய் எடுக்கப்போகிறோம்’ என்று ஏமாற்றி நிலத்தை வாங்கிவிட்டனர்.
 
நிலத்தை வாங்கிவிட்டுத்தான் மத்திய அரசு திட்டத்தை அறிவிக்கிறது. நான், பத்து ஆண்டுகளாக வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை வைத்துதான் விவசாய பூமியைத் தயார் செய்திருக்கிறேன். நிலத்தடி நீரை வைத்துதான் நாங்கள் விவசாயம் செய்கிறோம். இவர்கள் அதிக ஆழத்தில் போர்வெல் அமைத்து நிலத்தடிநீரை எடுத்துவிட்டால் விவசாயம் இல்லாமல் புதுக்கோட்டை பாலைவனமாக மாறிவிடும். எங்கள் உயிரைக் கொடுத்தாவது எங்கள் விவசாய பூமியைப் பாதுகாப்போம்” என்றார்.