Published:Updated:

மேடையேறினா சுற்றுச்சூழல்... கீழே இறங்கினா, சுற்றம்சூழல்!

மேடையேறினா சுற்றுச்சூழல்...  கீழே இறங்கினா, சுற்றம்சூழல்!
பிரீமியம் ஸ்டோரி
News
மேடையேறினா சுற்றுச்சூழல்... கீழே இறங்கினா, சுற்றம்சூழல்!

அரசியல் தலைவர்களைத் தோலுரிக்கும் ஜூனியர் கோவணாண்டிகடிதம்ஜூனியர் கோவணாண்டி - ஓவியம்: ஹரன்

னைத்து அரசியல்வாதிகளுக்கும் ஆயிரம்கோடி வந்தனம்.

இப்போதெல்லாம் பொதுப்பிரச்னைனு வந்துட்டாலே... அத்தனை அரசியல் கட்சித் தலைவருங்களும் என்னமா பொங்கி எழுந்துடறீங்க. உங்களோட வேகத்தைப் பார்த்தா... சும்மா புல்லரிக்குதுங்கய்யா!

தளபதி சுடாலின், பெரிய அய்யா ராமதாசு, சின்ன அய்யா அன்புமணி, இன்னொரு சின்ன அய்யா சி.கே.வாசன், கறுப்பு எம்.சி.ஆர். விசயகாந்த், போர்வாள் வைகோ, எழுச்சித் தமிழர் திருமாவளவன், செந்தமிழன் சீமான், பட்டங்கள் ஏதும் கிடைக்காத கம்யூனிஸ்ட் தலைவருங்க, தனக்குத் தானே பட்டம் போட்டுக்கிற இன்னும் இருக்கிற அத்தனை தலைவருங்களுமே நல்லாவே பொங்கறீங்க.

மேடையேறினா சுற்றுச்சூழல்...  கீழே இறங்கினா, சுற்றம்சூழல்!

அதுலயும் விவசாயிகளுக்கான பிரச்னைனு வந்ததும், ‘டேய் நாங்க தமிழணுங்கடா... தமிழணுங்கடா’னு காட்டறீங்க பாருங்க பலம்... இந்த டீலிங் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு. ஆனா, இப்ப நான் உங்கக்கூடப் போடப்போற டீலிங், உங்களுக்கும் பிடிக்குமாங்கிறதுதான் தெரியல. ஆனா, கட்டாயம் பிடிக்கணும். இல்லாட்டி இந்தச் செந்தமிழ்நாட்டைப் பிடிச்ச சனியன் விடவே விடாது. உங்க ஆட்டமும் இனி செல்லவே செல்லாது.

காவிரி பிரச்னை, பாலாறு பிரச்னை, முல்லைப்பெரியாறு பிரச்னை, அணு உலை, ஜல்லிக்கட்டு, மீத்தேன், கெயில் பைப் லைன், நியுட்ரினோ, ஹைட்ரோ கார்பன், லொட்டு, லொசுக்குனு இருக்கிற எல்லா பிரச்னைகளுக்காகவும் மத்திய அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுக்கறீங்க. உண்மையிலேயே உங்க தைரியத்தை மெச்சுக்கத்தான் தோணுது. ஆனா, தேர்தல்னு வந்துட்டா மட்டும் டாஸ்மாக் சரக்கடிச்சவங்க கணக்கா, டெல்லிக்காரனுங்ககிட்ட உங்கள்ல பலரும் மண்டிபோட்டு பம்ம ஆரம்பிச்சிடறீங்களே?!

நிஜத்தை சொல்லப்போனா இந்தக் கருணாநிதி, ஜெயலலிதா இவங்களைக்கூட மன்னிச்சிடலாம். ரெண்டுமே திட்டம் போட்டு ஸ்வாஹா பண்ற கலகக் கும்பல். அதுக்காகத்தான் ஆட்சியையே பிடிக்கறாங்க. அதுக்காகத்தான் டெல்லி சுல்தான்கள் வாஜ்பாய், மன்மோகன் சிங், மோடினு மாத்தி மாத்தி காவடி தூக்கினாங்க... தூக்கிட்டும் இருக்காங்க. ஆனா, உங்களுக்கு என்னாச்சு. நீங்கதான், ‘இந்த செந்தமிழ்நாட்டின் பஞ்சைபராரிகளையும், பாட்டாளி சொந்தங்களையும் இமயமலை உச்சியில உக்கார வைக்கிறதைத் தவிர, வேற வேலையே எங்களுக்குக் கிடையாது’னு தமிழன்னையோட தலையில அடிச்சி சத்தியம் பண்ணியிருக்கிற சத்தியவான்களாச்சே. பின்ன எதுக்காக, அந்த ரெண்டு கழகங்களோடயும் மாத்தி மாத்தி கூட்டணி போடறீங்க (சீமானைத் தவிர).

நீங்க இப்படி மாத்தி மாத்தி ஏத்திவிட்டதாலதான், அந்த ரெண்டு கட்சிகளும் டெல்லிக்குக் காவடித் தூக்கி, அந்தச் சுல்தான்களோட அடிமை தேசமா தமிழகத்தையே மாத்தி வெச்சிருக்காங்க. ரெண்டு கட்சி கொள்ளையர்களும் அடிச்ச கொள்ளைக்கான ஆதாரங்களைக் கையில வெச்சுக்கிட்டு, சி.பி.ஐ மூலமா கேஸ் போட்டு மடக்கி மடக்கி, மீத்தேன் மொதக்கொண்டு எல்லாத்தையும் தமிழ்நாட்டுல திணிச்சி சாதிச்சிட்டே இருக்காங்க அந்தச் சுல்தானுங்க. தமிழ்நாட்டுல நேரடியா ஆட்சியைப் பிடிக்கவே முடியாததாலதான் இந்தத் திராவிட அடிமைகளைக் கைக்குள்ள வெச்சுக்கிட்டு ஆட்டம் காட்டுறாங்க. இதெல்லாம் தெரிஞ்சிருந்தும், சொம்புதூக்கி கணக்கா எதுக்காகத் தொடர்ந்து கழகங்களுக்கு வால் பிடிக்கிறீங்க?
‘மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்குக்கு எதிரான போராட்டம்... வேலைவாய்ப்பைக் கொடு, உலக வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்: மணல் கடத்தல் மாஃபியாக்களைக் கட்டுப்படுத்து; காவிரி பிரச்னைக்கு உடனடி தீர்வைக் கொடு; விவசாயிகளின் பிரச்னைகளுக்கு விரைவில் விடைகொடு’னு பல குரல்ல முழங்கிட்டு, தேர்தல் தேதி அறிவிச்சதுமே... ‘தமிழகம் காக்க வந்த தனித் தமிழன் கருணாநிதி’ ‘தமிழகத்தையே வாழவைக்க வந்த காவிரித் தாய்’னு மாத்தி முழக்கம் போட ஆரம்பிச்சிடறீங்க.

தேர்தலுக்கு முதல் நாள் வரைக்கும் உங்கள ரொம்ப நல்லவங்கனு நம்பி ரோட்டுல இறங்கி போராடி, இந்தக் கருணாநிதி, ஜெயலலிதா ஏவிவிட்ட போலீஸ்கிட்டயும் ரௌடிகள்கிட்டயும், மணல் மாஃபியாக்கள் கிட்டயும் அடிஉதைபட்டு ரத்தம் சிந்தின உங்க கட்சி தொண்டனுங்களை என்னிக்காச்சும் நினைச்சுப் பார்த்திருக்கீங்களா? உங்களுக்குப் பத்துப் பதினைஞ்சு எம்.எல்.ஏ வேணும், ரெண்டு மூணு எம்.பி-ங்க வேணும் அதை வெச்சு மத்தியில மந்திரி பதவி வாங்கணும்... நல்லா சம்பாதிக்கணும். இதைத் தவிர, வேற என்ன பெருசா உங்களோட கொள்கை?

அடப்போங்கய்யா... சமயத்துல ரொம்பவே சோர்ந்துதான் போயிடுது. இவங்ககிட்ட மாரடிக்கிறதவிட, வாயை மூடிக்கிட்டு தோட்டக்காட்டுல நமக்குனு மட்டும் விளையவெச்சுக்கிட்டு, வெந்ததைத் தின்னுட்டு, விதி வந்தா சாவோம்னு நினைச்சாலும் நிம்மதியா இருக்க விடமாட்டேங்கறீங்களே. நியுட்ரினோ, கெயில், மீத்தேன்னு எதையாச்சும் சொல்லி, வெளிநாட்டுக்காரனுங்களுக்கும், உள்நாட்டு முதலாளிங்களுக்கும் எங்க நிலத்தையெல்லாம் பட்டா போட்டுக் கொடுக்கத் துடிக்கிறீங்க. ஒட்டுமொத்தமா அத்தனை அரசியல்வியாதிங்களையும் ஒரு கூண்டுல பிடிச்சிப்போட்டு செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பிடலாம்கிற அளவுக்குக் கோபம் பொங்குது. ஆனா, முடியலையே!

இத்தனை அநியாயத்தைச் செய்றவங்களும், அவங்களோட துணை நின்னவங்களும் இன்னிக்கு நாங்க போராடும்போது கொஞ்சம்கூட ஈனமானமில்லாம வந்து மைக் பிடிச்சு போராடறீங்க... வீர வசனங்களை அள்ளிவிடறீங்க. எங்க கோவணாண்டிங்க உங்களோட சுயரூபமெல்லாம் தெரியாமலும், தெரிஞ்சிருந்தாலும் வேற வழியில்லாமலும் உங்களுக்குக் காது கொடுக்கறாங்க. உங்களோட வேலை எப்படி இருக்கு தெரியுமா? ராத்திரியில வீடு புகுந்து திருடினவன், விடிஞ்சதும் திருட்டுக் கொடுத்த வீட்டுக்காரன்கூடவே சேர்ந்துகிட்டுத் திருடனைக் கண்டுபிடிக்கச் சொல்லி போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்த கதையாத்தான் இருக்கு.

என்னமோ ஹைட்ரோ கார்பன் மூலமா மட்டும்தான் விவசாயம் கெடுற மாதிரி வந்து நிக்கிறீங்க. ஆமாம், சாராய ஃபேக்டரி, மணல் கொள்ளை, ரியல் எஸ்டேட், காட்டை அழிக்கிறதுனு எல்லாத்துலயும் பங்காளிங்களா இருக்கிறதே உங்க எல்லா கட்சிகள்லயும் இருக்கிற திருடனுங்கதானே. அதனால யெல்லாம் இயற்கையும் விவசாயமும் அழியலையா? வளமான பூமியா இருந்த இந்தியாவை, கொஞ்சம் கொஞ்சமா சுரண்டி தன் நாட்டுக்குக் கொண்டுபோனான் வெள்ளைக்காரன். அதுக்குப் பிறகு, தேனாறும் பாலாறும் ஓடும்னு சொல்லிக்கிட்டே ஆட்சிக்கு வந்த கதர்க்காரங்க, அடிச்ச கூத்துகளுக்கும் கொள்ளைகளுக்கும் அளவே இல்லை. டாடா, பிர்லா, அம்பானி, அதானினு பெரும்புள்ளிங்களுக்கு நாட்டையே பட்டா போட்டுக்கொடுத்தாங்க. பாரத் மாதாகீ ஜே... வந்தே மாதரம், சுதேசி வாழ்க... பரதேசி வீழ்கனு தேசபக்தனுங்க கணக்கா வந்த காவிக் கட்சி, இப்ப வெள்ளைக்காரன், கதர்க்கொள்ளையனுங்க எல்லாரையும் தூக்கி சாப்பிடற அளவுக்குப் பயங்கர வேகத்துல போயிட்டிருக்கு. கிட்டத்தட்ட 60 வருஷத்துல கதர்க்கட்சி நடத்தின எல்லா அராஜகத்தையும், ஆறே வருஷத்துல நடத்தி முடிச்சுடுச்சு காவிக் கட்சி.

தமிழ்நாட்டுல விவசாயிங்களுக்கு எதிராவும், இயற்கைக்கு எதிராவும் நடத்தப்பட்ட நடத்தப்படுற அத்தனை அநியாயங்களுக்கும் சாட்சியா இருந்தது, இருக்கிறது தி.மு.க, அ.தி.மு.க இந்த ரெண்டு கழகங்களும்தானே! ‘மேடையேறினா சுற்றுச்சூழல்... கீழே இறங்கினா சுற்றம்சூழல்’ இதுதானே இந்தக் கட்சிகளோட ஒரே கொள்ளைக் கொள்கை! மாமன்மச்சான் குடும்பத்துக்கு, தோழியோட குடும்பங்களுக்குனு வேண்டியதையெல்லாம் டெல்லியில வாங்கிக்கிட்டு தமிழ்நாட்டையே பட்டா போட்டுக் கொடுத்திட்டாங்க. இவங்களுக்குப் பங்காளிகளா இருந்ததைத் தவிர, மத்தவங்கள்லாம் வேறென்னத்த பெருசா கிழிச்சீங்க.

அன்புக்கும் பண்புக்கும் போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் உரிய தளபதிகளே, போர்வாள்களே, எழுச்சிகளே, அய்யாக்களே, எம்.ஜி.ஆர்களே, கருணாநிதிகளே, அம்மாக்களே... இன்னும் இன்னும் இருக்கிற பற்பல ‘களே’க்களே! உங்களோட மரியாதை மட்டெல்லாம் யூடியூப் ஏறி, வாட்ஸ்அப்பில் வாந்தியா கொட்டிக்கிட்டிருக்கு. உங்களையெல்லாம் ஒருத்தரும் மதிக்கிறதே இல்ல. காரிக்காரித்தான் துப்பறாங்க. ஆனாலும், மக்கள் போராட்டம் வெடிச்சதும் அங்க போய்ச் சுத்தி சுத்தி வர்றீங்க.

உண்மையிலேயே உங்களுக்குத் தமிழ்நாட்டு மேல அக்கறை இருந்தா, அத்தனை கட்சிகளையும் அமைப்புகளையும், சாதிச்சங்கங்களையும் கலைச்சு வீசுங்க. உங்களோட பதவி வெறி, பகட்டு நடை, பந்தா பயணம், பளப்பளப்பான காருங்க எல்லாத்தையும் தூக்கி எறிங்க. தமிழ்நாட்டின் மக்களா ஒரே மனசோட ஒண்ணா கைகோருங்க. ஜல்லிக்கட்டு களத்துலயும் இப்ப நெடுவாசல் களத்துலயும் இருக்காங்க பாருங்க நிஜமான போர்க்குணம் உள்ள மனுஷங்க, அவங்க பின்னால அணி வகுத்து நில்லுங்க. தனிநபரைத் தூக்கிப் பிடிக்காம, பிரச்னைகளை மட்டும் தூக்கிப் பிடிங்க. அதையே முன்னிறுத்தி தேர்தல்ல நல்லவங்களை மட்டும் நிக்க வைங்க. ஜெயிச்ச பிறகு, அதுல ஒருத்தரை ஆட்சி நடத்துறதுக்காக முதலமைச்சர் நாற்காலியில உக்கார வைங்க. கவனம், ஆட்சி நடத்துறதுக்காக மட்டும் உக்கார வைங்க. ஆனா, கால்ல விழறதுக்காவும், கரன்ஸிகளைக் கறக்கறதுக்குமான ஆளா மாத்திடாதீங்க.

இப்பக்கூட விவசாயி பழனிசாமி முதலமைச்சரா இருக்காருனு கொஞ்ச பேரு நெகிழறாங்க. எதுக்காக அந்தப் பதவியில உக்கார்ந்தாரோ இந்த அடிமை... அந்த வேலைகளைத்தான் இப்ப அழகா செய்திட்டிருக்காரு. உண்மையிலே விவசாயியா இருந்தா... பிரதமர்கிட்ட கடுதாசி எழுதிக் கொடுத்துட்டு கெஞ்சிக் கூத்தாடிட்டா இருப்பாரு. நெடுவாசல்ல எரிவாயு குழாய் கதவை மூடுனு உத்தரவுல்ல வாங்கிட்டு வந்திருப்பாரு. இல்ல, நெடுவாசல் போராட்டத்துல முதல் ஆளால்ல போயி உக்கார்ந்திருப்பாரு. அதை விட்டுட்டு போயஸ்கார்டன் கதவும் பரப்பன அக்ரஹாரா சிறைக்கதவும் எப்ப திறக்கும்னு காத்துக்கிட்டிருக்கற இவரு எப்படி விவசாயி?

ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோங்க. இப்ப இளைஞர்கள்கிட்ட கிளம்பியிருக்கிற ஆவேசம்... நீறுபூத்த நெருப்பாத்தான் இருக்கு. அது எந்த நேரமும் எரிமலையா வெடிக்கலாம். இப்போதைக்கு அவங்க கையில எடுத்திருக்கிற போராட்டங்கள், உங்களுக்கான எச்சரிக்கை மணியில்ல, சங்கு. ஆமாம், சீக்கிரமே அத்தனை பேருக்கும் அத்தனை கட்சிகளுக்கும் சங்கு ஊதப்போறாங்க. இதை மறந்திடாதீங்க... மறந்தும் இருந்துடாதீங்க. மறந்தா இருக்கவே மாட்டீங்க!

- ஜூனியர் கோவணாண்டி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz