Published:Updated:

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 3

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 3
பிரீமியம் ஸ்டோரி
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 3

சந்தையில் நடக்கும் சதியாட்டம்!சந்தைஅனந்து - தொகுப்பு: க.சரவணன்

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 3

சந்தையில் நடக்கும் சதியாட்டம்!சந்தைஅனந்து - தொகுப்பு: க.சரவணன்

Published:Updated:
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 3
பிரீமியம் ஸ்டோரி
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 3

வெகுஜன சந்தைக்குப் பின்னால் இருக்கும் அரசியல், வெற்றிகரமான இயற்கை விவசாயச் சந்தைகள் மற்றும் மாற்றுச் சந்தைகளுக்கான வாய்ப்புகள் குறித்து அலசும் தொடர் இது...

தக்காளியின் விலை திடீரெனக் குறைந்து, சந்தையில் ஒரு கிலோ ஐந்து ரூபாய் எனக் கிடைக்கும்போது, நுகர்வோர் பலரும் சந்தோஷப்படுவார்கள். ஆனால், விலை குறைவுக்கு ஆதங்கப்படுபவர்களும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். நுகர்வோரின் பார்வையில், விலை குறைந்தால் சந்தோஷம்தானே... இதில் ஆதங்கத்துக்கு என்ன இருக்கிறது எனத் தோன்றும். அதை விவசாயியின் பக்கம் இருந்து பார்த்தால்தான் புரியும். 

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 3

ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து உழுது, விதைத்து, தண்ணீர்ப் பாசனம் செய்து, உரமிட்டு, பூச்சிவிரட்டி தெளித்து 90 நாள்கள் தொடர்ச்சியாகப் பராமரித்து அறுவடை செய்து சந்தைக்குக் கொண்டு செல்கிறார்கள் விவசாயிகள். அங்கே கிலோவுக்கு இரண்டு ரூபாய்தான் விலை கிடைக்கும் எனில்... அவர் எதற்கு விவசாயத்தைச் செய்ய வேண்டும். கூலி வேலைக்குப் போயிருந்தால்கூட அதைவிட அதிகமாகச் சம்பாதித்திருக்க முடியுமே. இது தக்காளிக்கு மட்டுமில்லை. வாழை, தென்னை, காய்கறிகள், கிழங்குகள்... என அனைத்துக்கும் இதுதான் நிலை. அடிக்கடி அதலபாதாளத்துக்குச் செல்வது தக்காளிதான் என்பதால் அதை இங்கு உதாரணமாகச் சொல்லியிருக்கிறேன்.

நஷ்டம் வந்தாலும் விடாமல் மீண்டும் மீண்டும் விவசாயம் செய்து உலகுக்குச் சோறு படைக்கும் உன்னதமான தொழில் செய்பவர்கள் விவசாயிகள். அவர்களுக்கும் தம் பிள்ளைகளை சி.பி.எஸ்.சி பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என ஆசையிருக்கும். குடும்பத்தினருக்கு நோய் வந்தால் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நம் நாட்டில் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சையும் அரசு பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியும் கேவலமாக இருப்பதால் இந்த ஆசைகள் கண்டிப்பாக நியாயமானவையே.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 3இதுபோக, விவசாயிகளுக்கும் குடும்பத்தினரை காரில் அழைத்துச் செல்ல வேண்டும், சினிமாவுக்குச் செல்ல வேண்டும், ஹோட்டல்களில் சாப்பிட வேண்டும்... என்ற ஆசைகள் இருக்கத்தான் செய்யும். இது எப்படிச் சாத்தியமாகும்? தங்களது விளை பொருள்களுக்கு நியாயமான விலையை நிர்ணயிக்கும் உரிமையைக்கூட நாம் அவர்களுக்குத் தரவில்லை. அவர்களுக்கு விவசாயி என்பதால் எந்தவித சலுகையும் இல்லை. விளைபொருளுக்கு விலையில்லாமல் போதிய வருமானமும் இல்லை. இப்படி விவசாயிகளை ஒடுக்கியே வைத்திருக்கிறோம் நம் நாட்டில். ஒரு கட்டத்தில் விவசாயிகள் பொங்கி எழுந்து, இனி விவசாயம் செய்யப்போவதில்லை என்று முடிவெடுத்தால் தாங்குமா இந்தச் சமூகம்.

இந்த விலை விவகாரம் ஒருபுறம் இருக்கட்டும். தற்போதுள்ள சந்தைக் கட்டமைப்பில், ஒவ்வொரு பொருளுக்கும் பின்னால் இருக்கும் நீர் விரயம், ஆற்றல் விரயம், அவற்றைச் சந்தைக்குக் கொண்டுவரும் வரையிலான மாசு வெளியேற்றம் போன்றவற்றைப் பற்றியும் நாம் கவலைப்படுவதில்லை. நாம் நுகரும் ஒரு பொருள் எப்படி உற்பத்தியாகிறது என்பது குறித்த விழிப்பு உணர்வு இல்லையெனில் நமக்குத்தான் நஷ்டம்.

தினமும் சமையலில் உபயோகப்படுத்தும் எண்ணெயை எடுத்துக் கொள்வோம். ஒரு கிலோ எண்ணெய் ஆட்டிப் பிழிந்து எடுக்க, மூன்றரை கிலோ எள் தேவை. கடலை எண்ணெய்க்கும் இதே விகிதம்தான். ஆனால், நாம் வேர்க்கடலையின் விலையையோ எள்ளின் விலையையோ அறிந்திருந்தால், கலப்பட எண்ணெய்ச் சந்தைக்கு வந்திருக்குமா? எள் இன்ன விலை விற்கும்போது எண்ணெய் எப்படி இவ்வளவு மலிவாகக் கிடைக்கிறது என யோசிக்க ஆரம்பிக்கும்போதுதான் நாம் கலப்படத்தையும் தவறான உற்பத்தி முறையையும் உணர முடியும். 

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 3

எண்ணெய் தயாரிப்பில் ரீஃபைன்ட், எக்ஸ்ட்ராக்‌ஷன் எனப் பல தவறான தொழில்நுட்பங்கள் பெருகிவிட்டன. பருத்தி எண்ணெய், பாம் ஆயில், சோயா எண்ணெய், தவிடு எண்ணெய் எனப் பலவும், பிளெண்டிங் (Blending) எனும் பெயரில் கலப்படம் செய்யப்படுகின்றன.

சர்க்கரை, வெல்லம், ஜவ்வரிசி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள்... என ஒவ்வொன்றுமே எப்படித் தயாரிக்கப்படுகிறது... அதில் நிறத்துக்காக என்னவிதமான ரசாயனம் சேர்க்கப்படுகிறது... என்ன கலப்படம் செய்யப்படுகிறது... கெட்டுப்போகாமல் இருக்க எதைச் சேர்க்கிறார்கள்... இப்படிச் சேர்க்கப்படும் பொருள்களால் என்ன பாதிப்புகள் வரும்? இதைப்பற்றியெல்லாம் நாம் யோசிப்பதேயில்லை. நம் உடலுக்குத் தீங்கு செய்யும் பொருள்களைப் பற்றி நமக்குப் புரிதலும் இல்லை. பாரம்பர்ய நெல் வகைகள், சிறுதானியங்கள் போன்ற ஆரோக்கியம் பேணும் பொருட்களைப் பற்றிய அக்கறையுமில்லை.

அரசின் கொள்கைகளே ஆரோக்கியமான பொருள்களை ஆதரிக்கவில்லை. சந்தையானலும் சரி, நியாய விலை கடையானாலும் சரி... அங்கு விற்பனை செய்யப்படும் பொருள்கள், பெருவிவசாயிகளும், பெரிய முதலாளிகளும் லாபம் அடையும்படிதான் உருவாக்கப்படுகின்றன.

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 3

நமது அரசாங்கத்தின் கொள்கையே இப்படி இருக்கும்போது, உலக வர்த்தக நிறுவனம் (WTO) போன்ற பெருமுதலைகளின் அரசியல் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

உலக வர்த்தக நிறுவனம், நமது விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் மானியத்திலிருந்து விலை நிர்ணயம் வரை அனைத்திலும் மூக்கை நுழைக்கிறது. இந்தியாவில் இருந்து எந்தப் பொருளையும் ஏற்றுமதி செய்யக்கூடாது. அனைத்தையும் இறக்குமதி செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் நோக்கம். அதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் லாபத்தில் கொழிக்கும்.

மத்திய அரசு, கடந்த செப்டம்பர் மாதம் கோதுமைக்கான இறக்குமதிக் கட்டணத்தைப் பத்து சதவிகிதமாகக் குறைத்தது. டிசம்பர் மாதம் கட்டணத்தை முழுவதும் நீக்கிவிட்டது. இதனால் உள்ளூர் கோதுமைக்குக் கொள்முதல் விலை சரிந்துவிட்டது. சென்ற ஆண்டில் பருப்புகளுக்கும் பருத்திக்கும் பெரும் அடி விழுந்தது. இப்படித்தான் பல வழிகளிலும் விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

இப்படிப் பிரச்னைகளும் சூழ்ச்சிகளும் நிறைந்த சந்தையில் கொண்டுபோய், நமது இயற்கையாக விளைவிக்கப்பட்ட, நஞ்சில்லாத‌ விளைபொருள்களைச் சந்தைப்படுத்த வேண்டுமா என்ற கேள்வி எழத்தான் செய்யும். அதனால்தான் முற்றிலும் மாறாக யோசித்து, நமக்கான சந்தையை மாற்றி அமைக்க வேண்டும். அப்படி அமைத்தவர்கள்தான் வெற்றி கண்டு, பல பேருக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள். மாற்றுச் சந்தைக்கான வெற்றிகரமான உதாரணங்கள் நிறைய இருப்பினும், சிலவற்றைப் பற்றி மட்டும் இத்தொடரில் பேசலாம். கர்நாடக மாநிலத்தில் விவசாயிகளால் நடத்தப்படும் ஒரு சந்தையைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

- விரிவடையும்

யாருக்காக உலக வர்த்தக நிறுவனம்!

‘வளர்ச்சி’, ‘உலகமயமாக்கல்’ மற்றும் ‘சுதந்திர வர்த்தகம்’ என்று மாயமானைக் காட்டி வறுமை மற்றும் வேலையின்மை போன்ற கொடுமைகளுக்குப் பரவலாக வித்திட்ட உலக வர்த்தக நிறுவனத்தின் ஆட்டம் கொஞ்ச‌மும் குறையவில்லை. வளரும் நாடுகளுடன் இந்நிறுவனம் ஏற்படுத்தும் ஒப்பந்தங்கள், சமநிலையற்றவை. அவை, மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமே நன்மை பயக்கும்.

இன்றுவரை, விவசாயத்துக்கு வளரும் நாடுகள் அளித்து வரும் மானியங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதுதான் உலக வர்த்தக நிறுவனத்தின் நோக்கம். மானியம் அளித்தால் அது, உலக வர்த்தகத்தையும் உலக விலைவாசியையும் பாதிக்குமாம். ஆனால், மேற்கத்திய வளர்ந்த நாடுகள் தங்கள் விவசாயிகளுக்குப் பல்வேறு மானியங்கள் கொடுக்கிறார்களே என்று கேட்கக்கூடாது. அவர்கள் அவற்றை வேறு பெயரில் கொடுப்பார்கள்.

இந்த வர்த்தக ஒப்பந்தங்கள் வந்ததிலிருந்தே, நமது நாட்டில் விவசாயம், வாழ்வாதாரம், பணியாளர்கள் நலன், மானியங்கள் ஆகியவற்றைக் காவு கொடுத்தே முன்னேற்றம் கொண்டு வர முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. இவை சட்டபூர்வமாகவே நடக்கின்றன என்பதுதான் வேதனையான விஷயம்.

உலகில் முதன்முறையாக, ‘பன்முனை ஒப்பந்தம்’ என்றும் அதற்கு கட்டுப்படத் தவறினால், கடும் நடவடிக்கை என்ற நிலையும் உருவாக்கப்பட்டது, உலக வர்த்தக நிறுவனத்தால்தான். வளர்ந்த நாடுகளின் பொருள்கள், நமது நாட்டுக்குள் பரவ இறக்குமதி வரிக் குறைப்பு மற்றும் பிற சலுகைகள் பெறப்படுகின்றன. நமது உணவு பாதுகாப்புச் சட்டம், விவசாய மானியங்கள், விவசாயிகளுக்கு அளிக்கும் கொள்முதல் விலை, இருப்பு... எல்லாவற்றையும் தொலைத்து நாம் வாட, அவர்கள் வர்த்தகம் பெருத்து கொழிக்கிறார்கள்.

உலகிலேயே அதிக அளவில் வேளாண் மானியம் வழங்கும் நாடு அமெரிக்கா. அது 2011-ம் ஆண்டு 139 பில்லியன் டாலர் அளவுக்கு வேளாண் மானியம் அளித்துள்ளது. 2012-ம் ஆண்டில் அதைவிட அதிகமாக மானியம் அளித்துள்ளதால் அவர்கள் உலக வர்த்தக நிறுவனத்தின் ஷரத்துகள் படி தவறிழைத்தவர்கள். அதனால் தங்களைக் கட்டுப்படுத்தும் தோஹா விதிகளைப் புதைக்க அவர்கள் அவசரம் காட்டினர். முன்பே பருத்தி விஷயத்தில் அமெரிக்கா அதிக மானியம் கொடுத்ததற்காக, பிரேசில் நாடு வழக்கு தொடுக்க... மானியங்களைக் குறைப்பதற்குப் பதிலாக, பிரேசிலுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை இழப்பீடாக அளித்தது அமெரிக்கா.

உலக வர்த்தக நிறுவனத்தால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் நலன்களே பாதுகாக்கப்படுகின்றன. அப்படி ஒரு வர்த்தகமோ, வர்த்தக அமைப்போ தேவையில்லை என்று முதுகெலும்புடன் கூற முடியாத அரசும், அரசியல்வாதிகளும்தான் நமக்கு வாய்த்திருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டது, மிகப்பெரிய தவறு என்று பின்னாளில் தெரிய வரும்போது, நம்மால் உடனடி நடவடிக்கைகள் எதையும் எடுக்க இயலாமல் போய்விடும்.

நமது நாட்டில் சுற்றுச்சூழல் கேட்டினாலும், பருவ நிலை மாற்றங்களாலும் விவசாய உற்பத்தி குறையும் தருணத்தில்... இந்த மேலை நாட்டு விவசாயிகள், பெரும் மானியங்களைப் பெற்று விளைவிக்கப்படும் பொருள்கள் நம் நாட்டில் திணிக்கப்படும். அப்போது நம் விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிக்கப்படும்.

மேலைநாடுகள் மற்றும் உலக வர்த்தக நிறுவனத்தின் சதிகளை அம்பலப்படுத்தி, அவற்றைப் புறக்கணித்துத் திரள் போராட்டங்களை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism