Published:Updated:

பாரம்பர்ய நெல்லும் சிறுதானியமும் காலத்தின் கட்டாயம்...

பாரம்பர்ய நெல்லும் சிறுதானியமும் காலத்தின் கட்டாயம்...
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்ய நெல்லும் சிறுதானியமும் காலத்தின் கட்டாயம்...

டெல்டா மாவட்டங்களில் நேரடி கள ஆய்வு!பயணம்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: க.சதீஷ்குமார்

பாரம்பர்ய நெல்லும் சிறுதானியமும் காலத்தின் கட்டாயம்...

டெல்டா மாவட்டங்களில் நேரடி கள ஆய்வு!பயணம்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: க.சதீஷ்குமார்

Published:Updated:
பாரம்பர்ய நெல்லும் சிறுதானியமும் காலத்தின் கட்டாயம்...
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்ய நெல்லும் சிறுதானியமும் காலத்தின் கட்டாயம்...

றட்சியின் கோரத் தாண்டவத்தால், காவிரி டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நெல் சாகுபடியை இழந்ததால் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளார்கள். இதற்கான காரணம் மற்றும் தீர்வு ஆகியவற்றைத் தேடி, ஜனவரி மாதம் முதல் வாரம் திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்ட கிராமங்களில் ‘பசுமை விகடன்’ ஆய்வுப் பயணம் மேற்கொண்டது. தொடர்ந்து, முன்னோடி விவசாயிகளின் அனுபவங்கள், ஆலோசனைகள் ஆகியவை 25.1.2017, 10.2.2017 ஆகிய தேதியிட்ட இதழ்களில் பிரசுரமாயின. 

பாரம்பர்ய நெல்லும் சிறுதானியமும் காலத்தின் கட்டாயம்...

அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வெவ்வேறு வகையான மண், நீர் ஆதாரம் மற்றும் புறச்சூழல்களைக் கொண்ட பல்வேறு கிராமங்களில் பயணம் செய்து விவசாயிகளைச் சந்தித்தது, பசுமை விகடன் ஆசிரியர் குழு. அப்பயணத்தில் முன்னோடி விவசாயிகள் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே...

சந்தானகிருஷ்ணன், மங்கைநல்லூர்: “முன்னாடியெல்லாம் ஒரு தடவை லேசா மழை பேஞ்சாலே பல நாள்களுக்கு மண்ணுல ஈரப்பதம் இருந்துக்கிட்டே இருக்கும். ஆனா, இப்பெல்லாம் அப்படியில்ல. வயல்கள் கட்டாந்தரையா மாறிக் கிடக்கு. மழை பேஞ்சாலுமேகூட, தண்ணீர் உடனடியா ஆவியாகிடுது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை உளிக்கலப்பை போட்டு உழவு செஞ்சு, நிலத்துல அங்கங்க ஆழமா கீறல் போட்டால், நிலத்துக்குள்ள தண்ணீர் சேகரமாகி, வறட்சியைத் தாக்குப்பிடிக்கும். மகசூலும் அதிகமாகும்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாரம்பர்ய நெல்லும் சிறுதானியமும் காலத்தின் கட்டாயம்...

ஜெயராமன், நல்லாரை: “ரசாயன உரங்கள் போட்டு, இப்ப இருபத்தஞ்சிலிருந்து முப்பது மூட்டை அளவுலதான் மகசூல் எடுக்கிறோம். முன்னாடி, எந்தச் செலவும் இல்லாம, வெறும் எரு மட்டுமே போட்டு 25 மூட்டைக்கு மேல மகசூல் எடுத்திருக்கோம். கட்டுச்சம்பா, செம்பாலை, வாடன் சம்பானு நாட்டு ரகங்களைப் பயிர் செஞ்சோம். அதெல்லாம் வறட்சியைத் தாங்கி வளரும். கோடையில எள்ளு, கம்பு ரெண்டையும் சேர்த்து விதைப்போம்.” 

பாரம்பர்ய நெல்லும் சிறுதானியமும் காலத்தின் கட்டாயம்...

தனசேகரன், காரைக்கால்: “சுனாமியின்போது எங்கள் பகுதி நிலங்கள்ல உப்புத்தன்மை வந்துடுச்சு. அதனால வறட்சியைச் சமாளிக்க முடியலை. முன்னாடியெல்லாம் பரம்படிச்சு நிலத்தைச் சமப்படுத்துவோம். இப்பெல்லாம் டிராக்டர் பயன்படுத்துறதுனால, மண் இறுகி நிலம் மேடுபள்ளமா இருக்கு. தண்ணீர் சீரா பாயுறதில்லை. வேர் பரவ மாட்டேங்குது. இதனால் வறட்சி, வெள்ளத்தை எதிர்கொள்ளும் திறன் இல்லை. விஷத்தன்மை வாய்ந்த ரசாயன குருணை உரங்கள் பயன்படுத்துறதுனால, நிலத்துல மண்புழுக்களே இல்லை. எங்க பகுதியில முன்னாடியெல்லாம் கோடையில சோளம், மிளகாய் சாகுபடி செய்வோம். அதெல்லாம் இப்போ இல்லை.” 

பாரம்பர்ய நெல்லும் சிறுதானியமும் காலத்தின் கட்டாயம்...

ராஜசேகரன், மயிலாடுதுறை: “முன்னாடி வாய்க்கால், ஏரி, குளம் மராமத்துயெல்லாம்  விவசாயிகள் கையில இருந்துச்சு. வருஷம் தவறாம முறையா தூர்வாருவோம். இப்ப அதுக்கு வழியில்லாம போயிடுச்சு. மழை பேஞ்சாலும் தண்ணீரைச் சேமிக்க முடியலை. அப்பெல்லாம் விவசாயிகள் எல்லாருமே மாடு வளர்த்தாங்க. உரச் செலவு கிடையாது. மண்ணும் வறட்சியைத் தாங்குச்சு. இதுக்கெல்லாம் மாற்று வழி இயற்கை விவசாயம்தான். அரசாங்கம் விவசாயிகளுக்கு இலவசமா பசுந்தாள் உர விதைகள், இயற்கை இடுபொருள்கள் கொடுக்கணும். நாட்டு மாடுகள் தரணும்.” 

பாரம்பர்ய நெல்லும் சிறுதானியமும் காலத்தின் கட்டாயம்...

சம்பந்தம்பிள்ளை, முருகமங்கலம்: “அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு தரிசு நிலங்களை ஏரி, குளங்களாக மாத்தணும். இப்போ பூச்சி, நோய்த்தாக்குதல் விவசாயிகளுக்குப் பெரிய சவாலாக இருக்கு. வரப்பு ஓரத்தில் கொட்டைமுத்து, மஞ்சள் விதைக்கிறது மூலமா இதைக் கட்டுப்படுத்தலாம்.”

பாலசுப்ரமணியன்: “இந்த வருஷம் கடுமையான வறட்சி. வழக்கமா ஆடி, ஆவணியிலதான் நிலத்தடி நீர்மட்டம் குறையும். ஆனா இந்த வருஷம் புரட்டாசி, ஐப்பசியிலேயே ஆழத்துக்குப் போயிடுச்சு. எங்களை மாதிரி போர்வெல் இருக்கிற விவசாயிகளேகூட ரொம்பச் சிரமப்பட்டுத்தான் பயிரைக் காப்பாத்தினோம்.”

சம்பந்தம்: “படிச்சவங்க விவசாயத்துறையில நுழைஞ்சு ஆலோசனை சொல்ல ஆரம்பிச்சதுல இருந்துதான் எங்களுக்கு எல்லாப் பாதிப்புகளும் வர ஆரம்பிச்சுது. அரசாங்கத் தலையீடு இல்லாம இருந்தாலே விவசாயிகள் வாழ்க்கை நல்லா இருக்கும்.” 

பாரம்பர்ய நெல்லும் சிறுதானியமும் காலத்தின் கட்டாயம்...

காசிநாதன்: “எனக்கு 70 வயசாகுது. இப்பவும் கூட நானே மண்வெட்டியைப் புடிச்சி எல்லா வேலைகளையும் பார்க்குறேன். ஆனா, எல்லா விவசாயிகளும் இதுக்குத் தயாரா இல்லை. வேலையாள்களைத்தான் அதிகமா நம்பி இருக்காங்க. இதனால் செலவுகள் பல மடங்கு அதிகமாகுது. வறட்சியால விளைச்சல் பாதிக்கப்பட்டால் கடன் சுமைக்கு ஆளாகுறாங்க. நான் களைகளை அழிக்கக் கோனோ வீடர் பயன்படுத்துறேன்.”

சண்முகநாதன் : “1950-ம் வருஷத்துக்குப் பிறகு மக்கள் பெருக்கம் அதிகமாச்சு. அதனால் அதிகளவுல ரசாயன உரங்களைப் பயன்படுத்தி உணவு உற்பத்தியை அரசாங்கம் அதிகப்படுத்தியது. இது தவறான நடவடிக்கை. உணவு உற்பத்தியை அதிகப்படுத்தணும்னா, சும்மா கிடந்த தரிசு நிலங்களை விவசாய நிலமாக மாத்தியிருக்கணும். அதை விட்டுட்டு ரசாயனத்தைப் போட ஆரம்பிச்சதால, நிலம் வறட்சியைத் தாங்க மாட்டேங்குது.” 

பாரம்பர்ய நெல்லும் சிறுதானியமும் காலத்தின் கட்டாயம்...

அசோகன், நாகனாஞ்சேரி: “முன்னாடியெல்லாம் விவசாய நிலத்துல பனை, தென்னை, ஆடு, மாடு, கோழி எல்லாம் இருந்துச்சு. அது மூலமா கிடைச்ச வருமானத்தை வெச்சு வறட்சிக் காலங்கள்ல சமாளிச்சாங்க. திடல்ல காராமணி, நரிப்பயறு, காவாலை எல்லாம் பயிர் பண்ணுவாங்க. இப்ப திடல்களே இல்லாம போயிடுச்சு. வறட்சிக் காலங்கள்ல தட்டைப்பயறு மாதிரியான பயிர்களைச் சாகுபடி செய்யலாம்.”

கணேசன், குருகோவில்: “காந்திய கிராமப் பொருளாதாரத்தை அரசு வளர்த்தெடுக்கணும். ‘விவசாயிகிட்ட நாலு ஏக்கர் நிலம் இருக்குதுனா, எல்லாத்துலயுமே நெல் சாகுபடி செய்யக்கூடாது. ஒரு ஏக்கர்ல குளம், ஒரு ஏக்கர்ல களம், ஒரு ஏக்கர்ல வனம், ஒரு ஏக்கர்ல வயல்னு அமைக்கணும். இதுமாதிரி செஞ்சா விவசாயிகளுக்குப் பல வகைகள்லயும் பலன் அடையலாம். வறட்சிங்கிறது ஒரு பிரச்னையே இல்லாமப் போயிடும்.” 

பாரம்பர்ய நெல்லும் சிறுதானியமும் காலத்தின் கட்டாயம்...

ஸ்ரீராம், கதிராமங்கலம்: “நெல் சாகுபடிக்குத் தெளிப்புநீர் பாசனம் அமைச்சோம்னா, வறட்சிக் காலங்களை எளிதாகச் சமாளிக்கலாம். போர்வெல் உள்ள விவசாயிகள் கோடைக்காலத்துல கம்பு, கேழ்வரகு, தினை, சாமை மாதிரியான சிறுதானியங்களைச் சாகுபடி செய்யலாம். ஆனா, அரசாங்கம் இதற்குப் பக்கபலமா இருக்கணும். இதை அறுவடை செஞ்சு, பிரிச்சி எடுத்து சுத்தப்படுத்துறதுக்கு வேலையாட்கள் தேவை. இதைச் சமாளிக்க மானிய விலையில நவீன இயந்திரங்கள் வழங்கணும். நெல் விற்பனை செய்றது போலவே சிறுதானியங்களை எளிதாக விற்பனை செய்யக்கூடிய நிலை உருவாகணும்.”

கணபதி, நரசிங்கம்பேட்டை: “முன்னாடியெல்லாம் நிலத்தடி நீர் மேல இருந்துச்சு. ஆற்று மணல்ல நாலு விரக்கடை பள்ளம் பறிச்சாலே தண்ணீர் வந்துடும். இப்ப அதுமாதிரி இல்லையே. சிறுதானியம் சாகுபடி செய்யணும்னாலும்கூட கொஞ்சமாவது தண்ணீர் வேணும். கோடைக்காலத்துல எள்ளு மட்டும்தான் விதைக்க முடியும். இதுக்கும் மாசத்துக்கு ஒரு தடவையாவது மழை பேஞ்சாகணும்.”

சிட்டு:
முன்னாடியெல்லாம் ஆறு, ஏரி, குளங்கள்ல உள்ள வண்டலைக் கொண்டு வந்து வயல்ல போடுவோம். அதனால் மண் வளமாகி, வறட்சியையும் நல்லா தாக்குப்பிடிக்கும். வறட்சியினால் இந்தளவுக்குக் கடுமையா பாதிக்கப்பட்டுட்டோம். இனிமேலாவது விவசாயிகள் விழிச்சுக்கணும். அரசாங்கமும் இந்த விஷயத்துல ஒத்துழைக்கணும்.”

நடராஜன், சேந்தங்குடி: “பத்து ஏக்கர் நிலத்துக்கு ஒரு ஏக்கர் வீதம் குட்டை வெட்டணும். ஏக்கருக்குக் குறைஞ்சபட்சம் 400 கிலோ சாணம் போட்டு... எருக்கன், புங்கன், வேம்பு இலைதழைகளைப் போட்டாலே மண் வளமாகி வறட்சியைத் தாங்கும். எரு போட்டு உழவு ஓட்டி, காய்ச்சலும் பாய்ச்சலுமா தண்ணீர் கொடுத்தாலே போதும். பயிர் செழிப்பா வளரும்.”

ராஜாராமன்: “
வறட்சியிலயும்கூட, மாப்பிள்ளைச் சம்பா ஓரளவுக்கு நல்லா வளர்ந்து வந்துருக்கு. ஏக்கருக்கு 15 மூட்டைக்கு மேல மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறோம். கோடைக்காலத்துல சிறுதானியங்கள் சாகுபடி செய்றதுல பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். முறையா தண்ணீர் கொடுக்கலைனா, நிலம் பாலம் பாலமா வெடிச்சிடும். எங்க மண்ணோட வாகு அப்படி. ஆடு, மாடுகளையும் சமாளிக்க முடியாது.”

அம்பலவாணன், சிக்கல்: “மண்ணு பொலபொலப்பா இருந்தா கோடைக் காலத்துல சிறுதானியம் சாகுபடி செய்யலாம். நம்ம விவசாயிகள் உடனடியா இயற்கை விவசாயத்தைக் கையில எடுக்கணும். ஆரம்பத்துல குறைவான மகசூல்தான் கிடைக்கும். படிப்படியா மகசூல் அதிகரிக்கும். இது எனக்கு ஏற்பட்ட நேரடி அனுபவம். என் அப்பா சிவப்புச் சம்பாங்கற பாரம்பர்ய நெல்லைதான் சாகுபடி செஞ்சாரு. வாசனை நல்லா இருக்கும். வறட்சியைத் தாங்கி வளந்துச்சு.”

ராமலிங்கம், புலியூர்:
“இங்க நெல்லைத் தவிர வேற எதுவும் பயிர் பண்ண முடியாது. மழை கொஞ்சம் அதிகமா பேஞ்சாலே மண்ணுல தண்ணீர் கோத்துக்கும். மழையை மட்டும் நம்பி சிறுதானியங்களைச் சாகுபடி செய்ய முடியாது. நிலத்தடி நீருக்கும் இங்க வாய்ப்பில்லை. 30 அடி ஆழத்திலேயே நிலத்தடி நீர்ல உப்புத்தன்மை வந்துடுச்சு.”

சோமு இளங்கோவன், தலைஞாயிறு: “பனி கேழ்வரகு சாகுபடி செய்யலாம். பனி ஈரத்திலேயே நல்லா வளரும். அரசாங்கம் ஒவ்வொரு விவசாயிக்கும் பனி கேழ்வரகு, கம்பு, தினை, சாமை விதைகளை வழங்கலாம்.” 

பாரம்பர்ய நெல்லும் சிறுதானியமும் காலத்தின் கட்டாயம்...

சம்பந்தம்: “முன்னாடியெல்லாம் இந்தப் பகுதியில 3 மாச வயசு கொண்ட மட்டை குறுவை நெல்லையும் 6 மாச வயசு கொண்ட ஒட்டடையான் நெல்லையும் சேர்த்து விதைப்போம். 3 மாசத்துல குறுவைநெல் அறுவடைக்கு வந்துடும். 180 நாள்ல ஒட்டடையானை அறுக்கலாம். ஒரே செலவுல ரெண்டு வருமானம் கிடைச்சுடும்.”

கொற்கை வீரையன்: “இந்தப் பகுதியில சிறுதானியம் சரியா விளையாது. கோடைக் காலத்துல மழையை மட்டும் நம்பி சாகுபடி செய்ய முடியாது. இந்தப் பகுதியில மாடுகள் அதிகம். சிறுதானியங்களை மாடுகள்கிட்ட இருந்து பாதுகாக்குறது ரொம்பச் சிரமம்.”

ஜானகிராமன்: “
பாரம்பர்ய நெல் ரகங்கள் வறட்சியைத் தாங்கி, நல்லா விளையுது. விவசாயிகள் சம்பா, தாளடி பட்டங்கள்ல பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செஞ்சா கவலையே படவேண்டியதில்லை. கண்டிப்பா நஷ்டம் வராது.”

ராஜமாணிக்கம், மேலபெருமலையூர்: “
ஏரியில தண்ணீரைச் சேமிச்சு, மோட்டார் மூலம் தண்ணீர் இறைச்சுதான் சிறுதானியம் சாகுபடி பண்ணணும். தெளிப்புநீர்ப் பாசனம் மூலமா பண்ணுனா நல்லா இருக்கும். அதுக்கான வேலைகள்ல இறங்க நாங்க தயாராக இருக்கோம்.”

வேதரத்தினம், கீழப்பெருமலையூர்: “இது களிமண் பூமி. நெல்லு மட்டும்தான் சாகுபடி செய்ய முடியும். மாற்று சாகுபடி செஞ்சு ஆடு மாடுகளைச் சமாளிக்குறது ரொம்பச் சிரமம்.”

மாரிமுத்து, குன்னலூர்:
“தண்ணீர் இல்லாம எந்தப் பயிருமே சாகுபடி செய்ய முடியாது. போன வருஷம் பேஞ்ச மழையில குட்டைகள்ல தேங்கியிருந்த தண்ணீர்கூட, இப்ப இல்லை. இந்தப் பகுதி முழுக்கவே நேரடி விதைப்புதான். தண்ணீர் இல்லாம எல்லாமே கருகிப் போயிடுச்சு.”

நாம் சந்தித்த பெரும்பாலான விவசாயிகள்... கால்நடை வளர்ப்பையும் இயற்கை விவசாயத்தையும்தான் வலியுறுத்தினார்கள். 3 மாத வயதுடைய குறுவை நெல் மற்றும் ஒட்டடையான் சேர்த்து விதைத்த பழங்கால அனுபவங்களை அதிகமாகப் பகிர்ந்துகொண்டார்கள். சிறுதானியம் சாகுபடி செய்தால், கால்நடைகளிடம் இருந்து காப்பாற்றுவது பெரும் சவாலாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். மண் சரிப்பட்டு வருமா என்ற சந்தேகமும் இவர்களிடம் வெளிப்பட்டது. ஆனாலும்கூட, சிறுதானியம் மற்றும் பாரம்பர்ய நெல் சாகுபடி செய்வதென்பது காலத்தின் கட்டாயம் என்றே உணர்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism