Published:Updated:

ஒரு சென்ட் நிலம்... 8 டன் உரம் தயாரிக்கலாம்!

ஒரு சென்ட் நிலம்... 8 டன் உரம் தயாரிக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு சென்ட் நிலம்... 8 டன் உரம் தயாரிக்கலாம்!

சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! உதவிக்கு வரும் உயிரியல் - 5இடுபொருள்முனைவர் அ.உதயகுமார் - தொகுப்பு: ரா.கு.கனல்அரசு

ந்த உலகம், மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் உள்பட கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். நாம்தான் உலகை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறோம் என எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் உலகை ஆட்டிவைப்பவை பூச்சிகளும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும்தான். நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு. உண்மையில் அப்படி இல்லை. தனது அனைத்துப் படைப்புகளிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது, இயற்கை. ஒரு வாசல் அடைத்தால், இன்னொரு வாசல் திறக்கும். அதன்படி, தீமை செய்யும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்த, சில நன்மை செய்யும் நுண்ணுயிர்களையும் படைத்துள்ளது. அப்படிப்பட்ட நுண்ணுயிர்களைப் பற்றிய புரிதலே இந்தத் தொடர். 

ஒரு சென்ட் நிலம்... 8 டன் உரம் தயாரிக்கலாம்!

யிர்ச்சங்கிலியில் யானை, சிங்கம், மனிதன் எல்லோரும் இருப்பதைப்போல நுண்ணுயிர்களும் முகவும் முக்கியமானவை. உயிரற்று மண்ணில் விழும் அத்தனை பொருள்களையும் மட்கவைக்கும் அவசியமான பணியைச் செய்யும் உலகின் துப்புரவாளனான நுண்ணுயிர்கள், நம்மைச் சுற்றி எப்போதும் இருந்துகொண்டேதான் உள்ளன. நுண்ணுயிர்கள் இல்லையெனில், இந்த உலகமே சில நாள்களில் குப்பை மேடாகப் ஆகிவிடும். அதற்கு உதாரணம் பிளாஸ்டிக். நுண்ணுயிர்களால் மட்க வைக்க முடியாத நிலையில் பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பதால்தான், அவை குவிந்துகிடக்கின்றன.

நன்மை செய்யும் நுண்ணுயிர்களைக் கண்டறிந்து, அதை மனிதகுல மேம்பாட்டுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆராய்ச்சிகள் உலகெங்கும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. பிளாஸ்டிக் பொருள்களை மட்கவைக்கும் நுண்ணுயிர்களைக் கண்டறிவதற்கான ஆராய்ச்சிகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இன்னமும் அதில் வெற்றி பெற முடியவில்லை.  அதே நேரம், கடலில் கலக்கும் எண்ணெய்க் கசிவுகள், கிரீஸ் போன்றவற்றைச் சுத்திகரிக்கும் நுண்ணுயிர்களை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டறிந்திருக்கிறார்கள்.

இறந்துபோன விலங்குகள், மனித உடல்கள் மற்றும் தாவரங்கள் எதையும் நுண்ணுயிர்கள் மட்க வைக்கவில்லை என்றால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள். நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்குகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆக, உலகம் உயிர்த்திருப்பதற்காக ஓயாது உழைத்துக்கொண்டே இருக்கும் நுண்ணுயிர்களும் பல்வேறு காரணிகளால் அழிந்து வருகின்றன. அவற்றைக் காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு சென்ட் நிலம்... 8 டன் உரம் தயாரிக்கலாம்!நுண்ணுயிர்களைக் காப்பதற்காக விவசாயிகள், தங்கள் நிலங்களில் ரசாயன இடுபொருள்கள் பயன்பாட்டைக் குறைத்து, தொழுவுரம், குப்பை உரம் போன்ற இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்த வேண்டும். ‘தொழுவுரம், குப்பை உரங்களை நிலத்தில் கொட்ட நாங்கள் தயார். ஆனால், குப்பை உரங்கள் கிடைப்பதில்லையே...’ என்ற ஆதங்கம் விவசாயிகளிடம் இருக்கிறது. கால்நடைகளின் அழிவு, நிலங்களுக்கும் தொழுவுரங்களுக்குமான தொலைவை அதிகப்படுத்திவிட்டது.

தொழுவுரம் கிடைக்கவில்லையே எனக் கவலைப்படும் விவசாயிகளின் விசனத்தைப் போக்க, குறுகிய காலத்தில் உரம் தயாரிக்கும் முறை ஒன்று இருக்கிறது. மிக வேகமாக மட்கக்கூடிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித் தொழுவுரம் தயாரிக்கும் முறையைப் பற்றிச் சொல்லப்போகிறேன். உங்களிடம் ஒரு சென்ட் நிலமும், குறைந்தளவு கால்நடைக் கழிவு, தாவரக்கழிவு ஆகியவை இருந்தால் போதும், ஆண்டுக்கு 8 டன் உரத்தைத் தயாரிக்க முடியும்.
 
இந்த உரத்தயாரிப்புக்கு இலைதழைகள், தென்னைநார்க் கழிவு, மர அரவை ஆலைகளில் கிடைக்கக்கூடிய தூள், நெல் உமி, சாம்பல், வீணான தானியங்கள், மாவு... போன்ற அனைத்துத் தாவரக் கழிவுகளையும் பயன்படுத்தலாம். ஆடு, கோழி, மாடு என எந்தக் கால்நடைக் கழிவுகளாக இருந்தாலும், அவற்றைத் தனித்தனியாகவோ, மொத்தமாகச் சேர்த்தோ பயன்படுத்தலாம்.

தொழுவுரம் கிடைக்கவில்லை எனக் கவலைப்படாமல், குறைந்த அளவில் கால்நடைக்கழிவுகளைப் பயன்படுத்தி இம்முறையில் தொழுவுரம் தயாரித்துப் பயன்படுத்தலாம். இதன்மூலம் மண்ணில் நுண்ணுயிர்கள் அதிகளவில் பெருகும். இதனால் மண் வளமாவதோடு, பயிர்களுக்குத் தேவையான ஊட்டச் சத்துகளும் அதிக அளவில் கிடைத்து மகசூல் பெருகும்.

 குறைந்த செலவில் உரத்தைத் தயாரிக்க முடிவதோடு இடுபொருள்களின் தேவை குறைகிறது. நிலமும் காலப்போக்கில் மேன்மேலும் வளமாகிக்கொண்டே வரும்.

நுண்ணுயிர்கள் விவசாயத்துக்குச் செய்யும் நன்மைகள் குறித்துத் தொடர்ந்து பார்ப்போம்...

- பரவும்

ஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?

ஒரு சென்ட் நிலம்... 8 டன் உரம் தயாரிக்கலாம்!

நான்கடி அகலம், ஆறடி நீளம், மூன்றடி ஆழத்தில் அருகருகே 10 குழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இக்குழி ஒரு டன் கழிவுகளைக் கொள்ளும் அளவில் இருக்கும். 750 கிலோ தாவரக்கழிவுகள், 250 கிலோ கால்நடைக் கழிவுகள் ஆகியவற்றை எடுத்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். 36 லிட்டர் தண்ணீரில் 36 மில்லி இ.எம் ஊற்றி நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இ.எம் கிடைக்காத நிலையில் ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 36 லிட்டர் தண்ணீரில் கலந்துகொள்ளலாம்.

கழிவுகள் கலந்த கலவையை முதல் குழிக்குள் அரையடி ஆழத்துக்கு நிரப்ப வேண்டும். நுண்ணுயிர்கள் கலந்த தண்ணீரை 6 லிட்டர் அளவுக்கு எடுத்து, கழிவுகள் மீது தெளிக்க வேண்டும். மீண்டும் அரையடி உயரத்துக்குக் கழிவுகள், அதன் மீது 6 லிட்டர் நுண்ணுயிர்கள் கலந்த நீர் என அடுக்கடுக்காக அமைக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது, மூன்றடி ஆழமுள்ள குழியில் ஆறு அடுக்குகள் வரை போடலாம். இப்படிக் குழியை நிரப்பி, ‘வினைல் ஷீட்’ கொண்டு மூடி, ஷீட் நகராத அளவுக்கு அதன் மீது மண்ணைப் போட்டு விட வேண்டும். அதாவது, குழிக்குள் காற்று புகாதவாறு மூடிவிட வேண்டும். இதே முறையில், மொத்தம் ஒன்பது குழிகளை நிரப்ப வேண்டும். பத்தாவது குழி காலியாக இருக்க வேண்டும்.

15 நாள்கள் கழித்து, ஒன்பதாவது குழியில் இருக்கும் கழிவுகளை வெட்டி எடுத்து பத்தாவது குழியில் நிரப்பி, காற்றுப்போகாமல் மூடி வைக்க வேண்டும். அடுத்து எட்டாவது குழியில் இருக்கும் கழிவை ஒன்பதாவது குழியில் கொட்டி மூட வேண்டும். இப்படி அனைத்துக் குழிகளிலும் உள்ள கழிவுகளையும் குழி மாற்றும்போது அவை புரட்டப்பட்டுவிடும். அடுத்த 15 நாள்களில் இந்தக் குழிகளில் இருக்கும் கழிவுகள் நன்றாக மட்கி உரமாக மாறிவிடும்.

நாம் மொத்தம் 9 ஆயிரம் கிலோ (9 டன்) கழிவுகளைக் கொட்டியிருந்தாலும், உரமாக எடுக்கும்போது, 8,100 கிலோ (8.1 டன்) அளவில் உரம் கிடைக்கும்.