Published:Updated:

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 5

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 5
பிரீமியம் ஸ்டோரி
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 5

விவசாயிக்கு நல்ல விலை நுகர்வோருக்கும் நியாயமான விலை!சந்தைஅனந்து - தொகுப்பு: க.சரவணன்

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 5

விவசாயிக்கு நல்ல விலை நுகர்வோருக்கும் நியாயமான விலை!சந்தைஅனந்து - தொகுப்பு: க.சரவணன்

Published:Updated:
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 5
பிரீமியம் ஸ்டோரி
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 5

வெகுஜன சந்தைக்குப் பின்னால் இருக்கும் அரசியல், வெற்றிகரமான இயற்கை விவசாயச் சந்தைகள் மற்றும் மாற்றுச் சந்தைகளுக்கான வாய்ப்புகள் குறித்து அலசும் தொடர் இது...

ந்தப் பொருளாக இருந்தாலும், அதை உற்பத்தி செய்பவர்கள்தான் விலையை நிர்ணயிக்கிறார்கள். ஆனால், விவசாயப் பொருள்களுக்குச் சந்தைதான் விலையை நிர்ணயிக்கிறது. தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை விவசாயிக்கு இல்லை. வியாபாரி வைக்கும் விலைக்கு விற்பனை செய்யநிர்பந்திக்கப்படுவதால்தான், கடன் சுமைக்கு ஆளாகிறார்கள், விவசாயிகள். 

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 5

அரசின் உதவிகள் இல்லாததால், இயற்கை முறையில் விளைவிக்கும் விவசாயிகளும் தங்களது விளைபொருள்களைச் சூழ்ச்சிகள் நிறைந்த வெகுஜன சந்தையிலேயே விற்பனை செய்யவேண்டிய அவலநிலை உள்ளது. அரசாங்கம், சேமிப்புக் கிடங்குகளை அதிகமாக அமைத்துக் கொடுக்காமல் போவதாலும், விவசாயிகள் உடனுக்குடன் விளைபொருள்களை விற்கவேண்டிய நிலைமைக்கு ஆளாகின்றனர். அதனால், வந்த விலைக்கு விற்கவேண்டிய நிலை இருக்கிறது.

உணவு என்பது அத்தியாவசியத் தேவை. அதனால், அதன் விலை குறைவாக இருக்கவேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், அதற்காக விவசாயியின் மடியில் கைவைப்பது எப்படி நியாயமாகும்? நுகர்வோரின் வருமானம் அதிகரித்தால்கூட, மற்ற செலவுகளை ஒப்பிடும்போது அவர்கள் உணவுப் பொருள்களுக்காகச் செலவிடும் தொகை மிகக் குறைவுதான். உணவுப் பொருள்கள் மலிவான சமாசாரமாக இருப்பதால்தான், விவசாயிகள் பெரும்பாலும் ஏமாற்றப்படுகிறார்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 5

மண்ணின் மீதும், சூழலின் மீதும் வன்முறையை நிகழ்த்தாத இயற்கை விவசாய உற்பத்தி மற்றும் அது தொடர்பான சந்தை, அதிக லாபத்தை முன்னிறுத்தவில்லை என்றாலும்கூட, சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தையாவது உறுதிப்படுத்த வேண்டும் என்பது அவசியம். அதற்கு, இயற்கை விவசாயிகள் மற்றும் அவர்களுக்கான சந்தையை ஒருங்கிணைப்பவர்கள் மாற்றி யோசிக்க வேண்டியதும் அவசியம். வெகுஜன மக்களுக்குப் புரிதலை ஏற்படுத்தி, விவசாய உற்பத்தியிலும், சந்தையிலும் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 5

அப்படிச் சமூக ஆதரவுடன் சில இளைஞர்களால், மும்பையில் ஆரம்பிக்கப்பட்ட வித்தியாசமான முயற்சிதான் ‘ஹரி பரி டோக்ரி’ (HBT-Hari Bhari Tokri). இதற்குப் ‘பசுமைக் கூடை’ என்று அர்த்தம். மும்பையிலிருக்கும் நுகர்வோரையும், வடக்குக் கொங்கணப் பகுதி விவசாயிகளையும் இந்த முயற்சி ஒருங்கிணைத்தது. வெகுஜன சந்தையின் பிடியிலிருந்து உணவுப் பொருள்களை மீட்டெடுப்பதும், சூழலுக்குத் தீங்கு விளைவிக்காமல் அற உணர்வுடன் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருள்களை, அந்தந்தப் பகுதியிலேயே உட்கொள்ள வைப்பதும்தான் இந்த முயற்சியின் நோக்கங்கள்.

நான் அந்த இளைஞர்களை நேரில் சந்தித்தது, 2012-ம் ஆண்டில். அப்போது கிராமப்புறத்தைச் சார்ந்த 35 சிறு, குறு விவசாயிகளும், 4 நகர்ப்புற விவசாயிகளும் ஒன்றாக அந்தக் குழுவில் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். ஏறத்தாழ 8 ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் விளைவிக்கப் பட்டன. ஒவ்வொரு வாரமும் 500 முதல் 600 கிலோ காய்கறிகள் என்ற கணக்கில், வாரத்துக்கு 250 காய்கறிக் கூடைகளை (பண்ணைப் பங்குகள்) நுகர்வோருக்குக் கொடுத்து வந்தனர்.

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 5



சராசரியாக நான்கு பேரைக் கொண்ட ஒரு குடும்பத்துக்கு வாரத்துக்கு இரண்டு முதல் இரண்டரை கிலோ வரை ஆர்கானிக் காய்கறிகள் தேவைப்படும் (மார்க்கெட்டில் வாங்கும் காய்கறிகளைத் தவிர்த்து) என்பதன் அடிப்படையில் இதைக் கணக்கிட்டிருந்தனர்.

இந்தக் குழுவில் பங்குதாரராகச் சேர்ந்துகொள்ள, காய்கறிகள் பயிரிடும் பருவம் ஆரம்பிக்கும் முன்பு 3,800 ரூபாயை முதலீடாகத் தருவதுடன், அவர்கள் நடத்தும் கூட்டத்திலும் பங்கெடுக்க வேண்டும். காய்கறிகளை நுகர்வோருக்குக் கொண்டு சேர்ப்பதற்கான வாகனம் மற்றும் பேக்கேஜிங், காய்கறிகளுக்கான உணவுக் குறிப்புகள் ஆகிய அனைத்துக்கும் சேர்த்துதான் இந்த முதலீடு.

அறுவடை ஆரம்பித்தவுடன், ஒவ்வொரு வாரமும் நுகர்வோருக்குக் காய்கறிகள் தேவைப்படுகிறதா என்று குறுஞ்செய்தி அனுப்பப்படும். பதில் கிடைத்தவுடன், ஒரு பெயர்ப் பட்டியல் தயாரித்து, கூடைகளைக் கொடுக்கும் இடங்களையும் (கலெக்‌ஷன் பாயின்ட்) முடிவு செய்வார்கள். அறுவடை சமயத்தில், ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் வாகனங்கள் மூலம் காய்கறிகளை எடுத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு விவசாயியும் கொடுக்கும் காய்கறிகளின் அளவு, தரம் போன்றவற்றைக் குறித்துக்கொள்வார்கள். அதன் அடிப்படையில் வாரம் ஒருமுறை அவர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்படும். கொள்முதல் செய்யப்பட்ட காய்கறிகள், ஏதாவது ஒரு தோட்டத்திலிருந்து பிரித்தனுப்பும் மையத்துக்குக் கொண்டுவரப்படும். அங்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம், வகை வாரியாகக் காய்கறிகள் பிரிக்கப்பட்டு, தரம் சோதிக்கப்பட்டு, அவை சரிசமமாகப் பிரிக்கப்பட்டு, கூடையில் நிரப்பப்படும். 

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 5

ஒரே வகைக் காய்கறி மீண்டும் மீண்டும் அனுப்பப்படுவதைத் தடுக்க, முடிந்தவரை வாரா வாரம் காய்கறிகள் மாற்றி மாற்றி அனுப்பப்படும். 200 முதல் 250 கிராம் வரை 4 முதல் 6 வகையான காய்கறிகள் இருக்குமாறு அனுப்புவார்கள். அறுவடையைப் பொறுத்து காய்கறிகளின் அளவு மாறுபடும். காய்கறிகளைப் பெரிய பழுப்பு நிற எடை தாங்கக்கூடிய காகிதப் பைகளில் நிரப்பி, மும்பைக்கு அனுப்புவார்கள். அடுத்த நாள், அவை கலெக்‌ஷன் பாயின்ட்டுகளை வந்தடையும். இப்படி, 16 வாரங்கள் பரிசோதனை முறையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 5

இந்த முயற்சியில் ஈடுபட்டவர்கள் அனைவருமே பெரும்பாலும் தன்னார்வலர்கள்; பணத்துக்காக வேலை செய்தவர்கள் அல்ல. பொருளாதார ரீதியாக இதை ஒரு வெற்றிகரமான பரிசோதனை என்று சொல்ல முடியாவிட்டாலும், நஞ்சில்லா உணவை நுகர்வோருக்குக் கொண்டு சேர்த்த முயற்சியாக எடுத்துக் கொள்ளலாம். 

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 5

நான் இந்த முயற்சியை நேரில் சென்று பார்த்தபோது, இரண்டு முக்கியமான விஷயங்களைக் கவனித்தேன். ஒன்று, பங்குதாரர்களாக விரும்புபவர்கள் பருவத்தின் ஆரம்பத்தில் கட்டாயம் ஒரு நாள் முழுக்க நடக்கும் விவசாயிகள்-பங்கு தாரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். அப்படிப்பட்ட கூட்டமொன்றில் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலரின் செயலாளர் ஒருவர் வந்திருந்தார். கூட்டத்தின் முடிவில் அவர் தன்னுடைய தலைமைச் செயல் அலுவலருக்காக, தான் வந்திருப்பதாகச் சொன்னார். அதை இக்குழுவினர் ஏற்றுக் கொள்ளவில்லை. பங்குதாரர் ஆக வேண்டியவர்தான் கண்டிப்பாகக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டனர்.

சம்பந்தப்பட்ட பண்ணைகள், விவசாயிகள் குறித்துப் பங்குதாரர்களுக்குப் புரிதல் இருக்க வேண்டுமென மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டது அந்தக் குழு. அப்படி இல்லையென்றால், மாநகரத்தில் இருக்கும் நுகர்வோர், விவசாயிகளின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடியாது என்று அவர்கள் நம்பினர். புரிதல் உள்ள பங்குதாரர்களான நுகர்வோரின் எண்ணிக்கை பெருகி இக்குழு ஒவ்வொரு பருவத்துக்கும் வளரத் தொடங்கியது. 

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 5

இரண்டாவதாக நான் பார்த்த முக்கியமான விஷயம், அந்தந்தப் பருவத்துக்குக் கிடைக்கும் காய்கறிகள், பழங்களே பசுமைக் கூடையில் இடம்பெற்றன. நுகர்வோரின் தேவைக்கேற்ப காய்கறிகளை உற்பத்தி செய்யாமல், பருவத்துக்கு ஏற்றவாறு விளைவிக்கப்பட்ட காய்கறிகள், நுகர்வோரைச் சென்றடைந்தன. சில நாட்டு ரகக் காய்கறிகளை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாத நுகர்வோருக்கு, அதற்கான உணவுக் குறிப்புகளையும் வழங்கினர்.
 
ஹரிபரி டோக்ரியின் இந்த முயற்சியில், மும்பை இயற்கை விவசாயிகள் மற்றும் நுகர்வோர் சங்கம் (MOFCA) மற்றும் எம்.எல். தவாலே அறக்கட்டளை (MLDT) ஆகிய அமைப்புகளும் கைகோத்தன. உழவில் தொடங்கி, விதைத்தேர்வு, விதைப்பு, மண்ணை வளமாக்குதல், இயற்கை முறையிலான பூச்சிக் கட்டுப்பாடு, மழை நீர் அறுவடை, விளைபொருள் அறுவடை என அத்தனை நிலைகளிலும் விவசாயிகளுக்கு, அந்த அமைப்புகள் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கின.

நகரத்து விவசாயிகளும் நுகர்வோரும், காய்கறிப் பருவத்தில் கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளைச் சந்தித்தனர். அங்ககச் சான்றிதழ்களை நம்பாமல், விவசாயிகளை நம்பி, பங்குதாரர்-நுகர்வோர் நேரடியாக ஆதரவளித்த வகையிலும் ஹரிபரி டோக்ரியின் முயற்சி தனித்து நின்றது.

விவசாயிக்கும் நுகர்வோருக்குமான உறவு வெறும் வணிகத்துடன் சுருங்கிவிடுவதில்லை. விவசாயியின் சமூகப் பொருளாதார நிலை, விளைநிலம், பருவநிலை பாதிப்புகள் போன்றவற்றிலும் நுகர்வோர் பங்கேற்கும்போது, ஓர் உணர்வுபூர்வமான தொடர்பு உண்டாகிறது. நுகர்வோரையும் விவசாயி புரிந்துகொள்கிறார். தன்னை நம்பி முதலீடு செய்யும் நுகர்வோரை அவர் ஏமாற்றத் துணிவதில்லை. வியாபாரத்தைத் தாண்டிய ஒரு நியாய உணர்வுத்தொடர்பு அங்கே உருவாகிறது. எனவேதான், இது போன்ற உதாரணங்கள் முக்கியமானவை. 

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 5

ஹரிபரி டோக்ரி இப்போது செயல்பாட்டில் இல்லை. ஏனெனில், அதைப் பின்னின்று இயக்கிய இளைஞர்களான உபைத் உசேன், நீஷா போன்ற தன்னார்வலர்கள் பலர் தாங்களே விவசாயம் செய்யவும், இயற்கை விவசாயம் தொடர்பான பணிகளிலும் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். ஆனால், இந்த முயற்சியால் தூண்டப்பட்ட ஏறக்குறைய 75 இயற்கை விவசாயிகள், இன்று ஆசிரமங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள், இயற்கை அங்காடிகள் எனத்  தங்கள் விளைபொருள்களை விற்பனை செய்துகொண்டு இருக்கின்றனர்.

- விரிவடையும்

சமூக ஆதரவு விவசாயம்!

மூகத்தால் ஆதரிக்கப்படும் விவசாயம் (CSA-Community Supported Agriculture) என்பது, மேற்கத்திய நாடுகளில் பிரபலமாகி வரும் ஒரு விவசாய முறை. நுகர்வோரை நேரடியாக உழவர்களுடன் இணைக்கும் இந்த முறையில் நுகர்வோருக்கு, விவசாயப் பொருள்களில் ஒரு பங்கு நிர்ணயிக்கப்படுகிறது. சில நுகர்வோர் சேர்ந்து ஒரு விவசாயியுடன் கூட்டாக இயங்க, அந்த நிலத்தின் உற்பத்தியை விவசாயியின் குடும்பமும், நுகர்வோர் குடும்பங்களும் பகிர்ந்துகொள்கின்றன.

அருகில் உள்ள தெரிந்த விவசாயியுடன் சேர்ந்து விளைவிப்பதால், மகசூலில் நுகர்வோருக்கும் பங்குண்டு. முதலீடு, உழைப்பு, விளைபொருள்கள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளும், அண்மைச் சந்தையை உருவாக்கும் வழிமுறைதான் சி.எஸ்.ஏ.
 
ஒரு பக்கம் முதலீட்டுக்கு உறுதி, மறுபக்கம் சந்தைக்கும் உறுதி என அரசின் தலையீடு இல்லாமல் தற்சார்புடன் நடக்கும் இந்த முறையில் லாபமோ நட்டமோ விவசாயிகளும், நுகர்வோரும் பகிர்ந்துகொள்கின்றனர். இதனால், விவசாயிகள் கடனில் மூழ்கி தற்கொலை செய்துகொள்ளும் நிலை தவிர்க்கப்படுகிறது. தேவைக்கு மட்டுமே நடைபெறும் இந்த உற்பத்தியில் சமூக, பொருளாதார உறவுகள் பலப்படும். விவசாயம் ஒரு சமூக நிகழ்வாக மாறும். லாப வெறி பின்னுக்குத் தள்ளப்படும். இந்த முறையில் சூழலைக் கெடுக்காத, பருவத்துக்கு ஏற்ற பயிர்களே பெரிதும் பயிரிடப்படுகின்றன.

பெரும்பாலும், இயற்கை விவசாயத்தை ஒட்டியே சி.எஸ்.ஏ வளர்ந்திருக்கிறது. ரூடால்ஃப் ஸ்டைனரின் பயோ-டைனமிக் விவசாயம் பரவியபோது இந்த முறையும் பரவியது. குறிப்பாக, அமெரிக்காவில் இந்தப் பரவல் முறை அதிகம். இந்தியாவில் சி.எஸ்.ஏ அந்த அளவுக்குப் பரவவில்லை என்றாலும், அதில் குறிப்பிடத்தகுந்த சோதனை முயற்சிகள் நடைபெற்றுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism