சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 2015, செப்டம்பர் 9 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு மீது, தொடர்ந்து பல அமர்வுகளில் விசாரணை நடைபெற்றது. நிறைவாக, 2017 ஜனவரி 10-ம் தேதியன்று, ‘13 மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
தொடர்ந்து, தமிழ்நாட்டின் இதர 19 மாவட்டங்களிலும் சீமைக்கருவேல மரங்களை அடியோடு வெட்டி அகற்ற ஆணை பிறப்பிக்கக்கோரி வைகோ வேண்டுகோள் விடுத்தபோது, அதற்குத் தனியாக ரிட் மனு தாக்கல் செய்யுமாறு, நீதிபதி அறிவித்தார்.

அதன்படி, வைகோ தாக்கல் செய்த ரிட் மனு 10.2.2017 அன்று நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 19 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கும் தாக்கீது அனுப்ப நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. மாவட்ட நீதிபதிகளின் மேற்பார்வையில் அந்தப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஐந்து வழக்கறிஞர்களைக் கொண்ட குழுவையும் அமைத்தது. அந்தப் பணிகள் வெகுவேகமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், ‘சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிக்குத் தடை கோரி தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குத் தொடருமானால், தனது தரப்பு வாதத்தைக் கேட்ட பிறகே, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், ‘சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக, ஐ.ஐ.டி பேராசிரியர்களைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்’ என்று வழக்கறிஞர் மேகநாதன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இது தொடர்பாக ஐ.ஐ.டி இயக்குநர் பதிலளிக்க வேண்டும், என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, சீமைக் கருவேல மரங்களை வெட்டுவதற்கு இடைக்காலத்தடையையும் விதித்துள்ளது, நீதிமன்றம். அந்தத் தடை உத்தரவில், ‘சீமைக்கருவேல் சுற்றுச்சூழலுக்குத் தீங்கானது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வழக்கை, மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றித் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அறிவியல்பூர்வமான...
ஆதாரப்பூர்வமான தகவல்கள்!
கடந்த இரண்டு இதழ்களாகச் சீமைக்கருவேல மரம் பற்றி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக, உயிராற்றல் துறையின் முன்னாள் பேராசிரியர் முனைவர் வெங்கடாசலம் தந்த கருத்துகள் ‘சீமைக்கருவேல மரத்தின் மரண வாக்குமூலம்’ என்கிற தலைப்பில் வெளியானது. இதையடுத்து, ‘சீமைக்கருவேல மரத்தை, முற்றிலுமாக அகற்ற வேண்டும்’ என்பதில் உறுதியோடு இருக்கும் அமைப்பினரின் கருத்துகள் அடுத்த இதழில் வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தோம்.
சீமைக்கருவேல மரம் தொடர்பாக அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு அறிவியல்பூர்வமான மற்றும் ஆதாரப்பூர்வமான தகவல்களை அவர்களிடம் கேட்டிருக்கிறோம். அவை கிடைத்ததும் நம் இதழில் வெளியிடுவோம்.